முன்னோக்கு

உலகப் போருக்கான பைடெனின் வரவு-செலவுத் திட்டம்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

கடந்த சனியன்று ஜனாதிபதி ஜோ பைடென் கையெழுத்திட்ட வரவு-செலவுத்திட்ட சட்ட மசோதாவானது, அமெரிக்க இராணுவ செலவினங்களுக்கு வரலாற்றிலேயே மிகப் பெரிய தொகையை வழங்குகிறது. ஆறு கூட்டாட்சி துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட 1.2 ட்ரில்லியன் டாலர்களில், பென்டகன் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான, சுமார் 825 பில்லியன் டாலர்களைக் கோரியுள்ளது. இதர ஆறு கூட்டாட்சி துறைகளுக்காக மார்ச் 8 அன்று பைடென் கையெழுத்திட்ட தனி வரவு-செலவுத் திட்ட மசோதாவில், எரிசக்தித் துறையால் (Department of Energy) நடத்தப்படும் அமெரிக்க அணு ஆயுத திட்டங்களுக்கான 23.8 பில்லியன் டாலர்களும் இதில் உள்ளடங்குகிறது.

விமானத் தாங்கி கப்பலான USS Dwight D. Eisenhower மற்றும் விரைவான போர் ஆதரவு கப்பலான USNS விநியோகக் கப்பல் ஆகியவை டிசம்பர் 14, 2023 அன்று ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்கின்றன. [Photo: Navy Petty Officer 2nd Class Keith Nowak]

மொத்தத்தில், இதர துறைகள் மற்றும் முகவர்கள் மூலமாக இராணுவ-உளவுத்துறை நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட ஏனைய அனைத்து பணங்களும் கணக்கிடப்பட்டால், ஒட்டுமொத்தத் தொகை 1 ட்ரில்லியன் டாலர்களைத் தாண்டக்கூடும். இருப்பினும் உண்மையான தொகை இரகசியமாகவே உள்ளது, ஏனென்றால் உளவுபார்ப்பு, இராணுவ செயற்கைக்கோள் ஏவுதல்கள் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கான இராணுவம் தொடர்பான செலவுகளில் பெரும்பாலானவை இரகசியமானவையாகும்.

பொதுவில் கிடைக்கக்கூடிய புள்ளிவிவரங்களை மட்டுமே கருத்தில் கொள்ளும்போது கூட, அமெரிக்கா தனது இராணுவத்திற்காக செலவழிக்கும் மொத்த தொகை எந்தவொரு சாத்தியமான நாடுகளின் ஒருங்கிணைந்த இராணுவ செலவினங்களையும் விட அதிகமாகும். மொத்த உலக இராணுவச் செலவினங்களில் அமெரிக்கா மட்டுமே 39 சதவீதத்தைக் கொண்டுள்ளது, இது அதற்கு அடுத்துள்ள 11 நாடுகளின் கூட்டு மொத்தச் செலவுக்கு சமமாகும். விரிவான உலகளாவிய புள்ளிவிவரங்கள் கிடைக்கக்கூடிய கடைசி ஆண்டான 2022 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மொத்தம் 877 பில்லியன் டாலர்களுடன் ஒப்பிடுகையில், சீனா 292 பில்லியன் டாலர்கள் மற்றும் ரஷ்யா 86.4 பில்லியன் டாலர்களை செலவிட்டது என்று ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

ரஷ்ய இராணுவ செலவினம் என்பது அமெரிக்க நேட்டோ நட்பு நாடுகளின் 300 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான அமெரிக்க ஆசிய நட்பு நாடுகளான குவாட் (இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா, 160 பில்லியன் டாலர்களாகும்) மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க வாடிக்கையாளர் அரசுகள் (சவுதி அரேபியா, இஸ்ரேல், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், 130 பில்லியன் டாலர்களாகும்) ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செலவினங்களில் ஒரு சிறிய பகுதியாகும். அமெரிக்கா மற்றும் அதன் முக்கிய நட்பு நாடுகளின் ஒருங்கிணைந்த இராணுவ செலவினம் 1.5 டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக உள்ளது, இது உலக மொத்தத் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மற்றும் ரஷ்யா மற்றும் சீனாவை விட நான்கு மடங்கு அதிகமாகும்.

இந்த புள்ளிவிபரங்களின் அடிப்படையில், அமெரிக்க இராணுவ நிலைப்பாட்டை உலகப் போருக்கான ஒரு வேலைத்திட்டம் என்பதற்கு சற்றும் குறைந்ததாக மதிப்பிடுவதற்கு இங்கே வேறு எந்த வழியும் இல்லை.

அமெரிக்க ஏகாதிபத்தியமானது அதன் பொருளாதார நிலையில் நீடித்த வரலாற்றுச் சரிவைக் கண்டுள்ளது. இரண்டாம் உலகப் போரின் முடிவில் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டதட்ட 50 சதவீதமாக இருந்த அமெரிக்கா, 1960 வாக்கில் 40 சதவீதமாகவும், 1971 வாக்கில் 27 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்தது, அப்போது ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சன் டாலரை தங்கமாக மாற்றுவதை நிறுத்தினார், ஏனெனில் சென்மதி நிலுவைப் பற்றாக்குறை அதிகரித்தது. அமெரிக்காவின் பங்கு கடந்த ஆண்டு உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவிகிதம் என்று சரிந்தது வரவிருக்கும் ஆண்டுகளில் இன்னும் சரிவு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

ஆனால் துல்லியமான சுட்டிக்காட்டலுடன் மில்லியன் கணக்கான எண்ணிக்கையில் மனித வாழ்க்கையை அழிக்கக்கூடிய போர் தளவாட ஆயுதங்களின் உற்பத்தியில், அமெரிக்காவிற்கு இணையாக யாருமில்லை.

வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதார அடித்தளத்திற்கும் பாரிய இராணுவக் கட்டமைப்பிற்கும் இடையிலான இந்த முரண்பாடானது, அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் மூர்க்கத்தனத்தை விளக்குகிறது. சீனாவின் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை —சீனாவின் பொருளாதாரம் அமெரிக்காவினுடையதை விஞ்சும் பாதையில் உள்ளது— நசுக்குவதற்கும், ரஷ்யா, ஈரான் மற்றும் வட கொரியாவில் உள்ள சீனாவின் சாத்தியமான கூட்டாளிகளை அடிபணிய வைக்கும் தேவை மீது, ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரண்டு பிரதான முதலாளித்துவ கட்சிகளின் ஒருமித்த கருத்தில் இது வெளிப்படுகிறது. வோல் ஸ்ட்ரீட் மற்றும் வாஷிங்டனைப் பொறுத்த வரையில், அவைகள் சீனாவுடன் விரைவில் மோதலைத் தூண்ட வேண்டும், ஏனென்றால் அடிப்படை போக்குகள் அவற்றுக்கு எதிராக உள்ளன. அவர்களுக்கு இழக்க நேரமில்லை.

பைடென் நிர்வாகம் மற்றும் பெருநிறுவன செய்தி ஊடகத்தில் உள்ள அதன் அனுதாபிகளின் இடைவிடாத கூற்றுக்களான அமெரிக்க அரசாங்கம் இராணுவ வலிமையைப் பயன்படுத்துவதை வெறுக்கிறது, அல்லது உக்ரேனில் மோதல் விரிவடைவதைத் தடுக்க முற்படுகிறது அல்லது காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையைத் தடுக்க முற்படுகிறது, இவைகள் சிறிதளவும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உண்மையான காட்டுமிராண்டித்தனம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட பென்டகன் வரவு-செலவு திட்டத்தின் ஒரு முக்கிய ஏற்பாட்டில் எடுத்துக்காட்டப்படுகிறது. காஸாவில் உள்ள 2.3 மில்லியன் மக்களில் பெரும்பான்மையினர் உட்பட, அன்றாடம் மில்லியன் கணக்கான பாலஸ்தீன அகதிகளுக்கு உணவளிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் பணிகள் அமைப்பிற்கு (UNRWA) அமெரிக்க உதவியில் ஒரு பைசா கூட கொடுப்பதைத் தடை செய்ய காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் உடன்பட்டனர். பைடென் மற்றும் டொனால்ட் ட்ரம்புக்கு இடையே தேர்தல் ஆண்டில் ஆளுக்கு ஆள் சேற்றை வாரி இறைத்தாலும், ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் பாரிய பட்டினியை ஒரு போர் ஆயுதமாக ஆதரிப்பதில் ஒன்றுபட்டுள்ளனர்.

சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் கிஷோர் திங்களன்று ட்விட்டர்/எக்ஸ் இல் பதிவிட்ட ஒரு பதிவில் இவ்வாறு அறிவித்தார், “காங்கிரசின் வாக்களிப்பானது யதார்த்தத்தை அம்பலப்படுத்துகிறது: அதாவது காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலை வாஷிங்டனால் நடத்தப்படுகிறது, அதற்கு அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ நட்பு நாடுகளிடம் இருந்து ஆயுதங்களும் நிதியும் வழங்கப்பட்டு வருகின்றன. இது ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரால் ஆதரிக்கப்படுகிறது. பைடென் நிர்வாகமும் ஜனநாயகக் கட்சியும் ஒருபோதும் அவர்களின் கைகளில் இருந்து இரத்தத்தை கழுவவோ அல்லது பாரிய படுகொலையில் அவர்களின் குற்றத்தை மூடிமறைக்கவோ முடியாது.”

கிஷோர் பின்வருமாறு நிறைவு செய்தார், “இனப்படுகொலைக்கு எதிரான போராட்டமானது ஜனநாயக கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிவற்றுக்கு எதிரான ஒரு போராட்டமாகவும், ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் உட்பட விரிவடைந்து வரும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான ஒரு போராட்டமாகவும், ஆளும் வர்க்கம் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு போராட்டமாகவும் தொடுக்கப்பட வேண்டும்.”

WSWS நேற்று அறிவித்ததைப் போல, போர் விமானங்கள், அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் அனைத்து வகையான ஏவுகணைகளையும் உற்பத்தி செய்யும் லோக்ஹீட் மார்ட்டின், ஜெனரல் டைனமிக்ஸ், போயிங், ரேதியோன் மற்றும் ஏனைய போர் இலாபமீட்டுபவர்கள் உட்பட மிகப்பெரும் ஆயுத உற்பத்தியாளர்களுக்கு இந்த வரவு-செலவு திட்டம் பல பத்து பில்லியன்களை வழங்குகிறது.

உக்ரேனுக்கான இராணுவ மற்றும் நிதி ஆதரவில் 60 பில்லியன் டாலர்களையும், இஸ்ரேலுக்கு இன்னும் கூடுதலாக 14 பில்லியன் டாலர்களையும் சேர்க்கும் ஒரு துணை ஒதுக்கீடுகள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கியேவுக்கு ஆயுதங்கள் அனுப்புவதற்கான பென்டகன் ஒப்பந்தங்களின் பெருக்கத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் உக்ரேனிய பாதுகாப்பு உதவி முன்முயற்சிக்கான 300 மில்லியன் டாலர்களும் இந்த மசோதாவில் உள்ளடங்கும். ட்ரம்பின் வற்புறுத்தலின் பேரில் இந்த மசோதா காங்கிரஸின் குடியரசுக் கட்சியினரால் தடுக்கப்பட்டுள்ளது, ஆனால் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் ஈஸ்டருக்குப் பிறகு சட்டத்தை வாக்கெடுப்புக்கு கொண்டு வருவதாக உறுதியளித்துள்ளார், விரைவான இருகட்சி ஒப்புதலின் எதிர்பார்ப்புடன் இது நடக்கவிருக்கிறது.

ஜனநாயகக் கட்சி மீது அழுத்தம் கொடுப்பதன் மூலமாகவோ அல்லது ஐக்கிய நாடுகள் சபை போன்ற ஏகாதிபத்தியத்தின் சர்வதேச முகமைகளுக்கு முறையீடு செய்வதன் மூலமாகவோ மூன்றாம் உலகப் போரைத் தடுக்க முடியும் என்று வாதிடுபவர்கள் அனைவருக்கும் இருகட்சிகளும் சேர்ந்து நிறைவேற்றப்பட்ட சாதனையளவிலான இராணுவ வரவு-செலவு திட்டமானது, ஒரு விவாதத்திற்கிடமற்ற பதிலாக உள்ளது. ஏகாதிபத்திய போரை எதிர்ப்பதற்கு பலமும் சமூகக் கட்டாயமும் இரண்டையும் கொண்டுள்ள ஒரே சமூக சக்தி உலகத் தொழிலாள வர்க்கமாகும்.

உலக சோசலிச வலைத் தளமும் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளும், ஏகாதிபத்தியப் போருக்கு எதிராகவும், அதற்கு காரணமான முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராகவும், ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தின் ஒரு உலகளாவிய பாரிய போராட்ட இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்காக போராடி வருகின்றன.

Loading