நைஜர் இராணுவ ஆட்சி அமெரிக்காவுடனான இராணுவ ஒப்பந்தத்தை ரத்து செய்தது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

நைஜரில் உள்ள இராணுவ ஆட்சிக்குழு, கடந்த ஜூலையில் பிரெஞ்சு இராணுவ பிரசன்னத்திற்கு எதிரான வெகுஜன எதிர்ப்புக்களுக்கு மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. இந்த நிலையில், மார்ச் 16 அன்று, நைஜரில் அமெரிக்க ராணுவத்தினர் மற்றும் ஒப்பந்ததாரர்களை செயல்பட அனுமதிக்கும் வகையில், கடந்த ஆண்டு கையெழுத்தான ராணுவ ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக இராணுவ ஆட்சிக்குழு ரத்து செய்துள்ளது. ​​கடந்த ஆண்டு பிரான்சின் வெளியேற்றத்துக்கு பின்பு, இப்போது சுமார் 1,100 அமெரிக்க ராணுவத்தினர் நைஜரை விட்டு வெளியேற உள்ளனர். [image]

ஏப்ரல் 16, 2018 திங்கட்கிழமை எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில், நைஜரின் அகாடெஸில் உள்ள நைஜர் விமான தளம் 201 ஐ நிர்மாணிப்பதை ஆதரிக்கும் விமானப்படைகள் மற்றும் பிற பணியாளர்களுக்கான அடிப்படை முகாமில் அமெரிக்க மற்றும் நைஜர் கொடி அருகருகே உயர்த்தப்பட்டுள்ளது [AP Photo/Carley Petesch]

நைஜர் இராணுவ ஆட்சிக்குழுவின் செய்தித் தொடர்பாளர் கேர்னல் மேஜர் அமடோ அப்ட்ரமனே தேசிய தொலைக்காட்சியில் கூறுகையில், “நைஜர் அரசாங்கம், அதன் மக்களின் அபிலாஷைகளையும் நலன்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, நைஜர் குடியரசின் பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவத்தினர் மற்றும் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் சிவிலியன் ஊழியர்களின் அந்தஸ்து தொடர்பான உடன்பாட்டை உடனடியாக கண்டிப்பதற்கு முழு பொறுப்புடன் முடிவு செய்கிறது.”

மார்ச் 12-14 தேதிகளில் நைஜீரிய தலைநகரான நியாமியில் நைஜீரிய அதிகாரிகளுக்கும் ஆபிரிக்க விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி வெளியுறவு செயலாளர் மோலி பீ தலைமையிலான உயர்மட்ட அமெரிக்க தூதுக்குழுவிற்கும் இடையே நடந்த அறிவிக்கப்படாத சந்திப்பை தொடர்ந்து, இராணுவத்தின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. அமெரிக்க ஆபிரிக்க கட்டளைத் தளபதி ஜெனரல் மைக்கேல் லாங்லியும் இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.

அமெரிக்க தூதுக்குழு “மரியாதையற்றது” மற்றும் “இராஜதந்திர நடைமுறைகளை அவமதிக்கிறது” என்று அப்ட்ரமனே குற்றம் சாட்டினார். அமெரிக்க தூதுக்குழுவின் விவரங்கள், அவர்களின் வருகைக்கான தேதி அல்லது பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரல் பற்றிய தகவல்கள் நியாமிக்கு தெரிவிக்கப்படவில்லை என்று அவர் கூறினார். எனவே, “இந்த ஒப்பந்தம் அதன் சாராம்சத்தில் ஆழமாக நியாயமற்றது மட்டுமல்ல, ஆனால் இது நைஜீரிய மக்களின் அபிலாஷைகளையும் நலன்களையும் பூர்த்தி செய்யவில்லை” என்று அவர் கூறினார்.

“நைஜீரிய அரசாங்கம் மற்றும் மக்களை நோக்கி அமெரிக்க தூதுக்குழுவின் தலைவரிடம் இருந்து பதிலடி கொடுக்கப்படும் என்ற அச்சுறுத்தலுடன் இணைந்த இணக்கமற்ற அணுகுமுறையை நைஜர் அரசாங்கம் பலமாக கண்டிக்கிறது” என்று அப்ரமேன் மேலும் கூறினார்.

இப்பயணத்தின்போது அமெரிக்கக் குழு நைஜரின் இராணுவ ஆட்சிக்குழுவின் தலைவரான தளபதி அப்துரஹமானே சியானியைச் சந்திக்க விரும்பியது. ஆனால் சியானி அமெரிக்கக் குழுவை சந்திக்க மறுத்துவிட்டார்.

செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் மற்றும் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் நிர்வாகத்தின் கீழ் மோசடியான “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” ஆகியவற்றுக்குப் பின்னர், 2003 இல் வாஷிங்டன் நியாமியுடன் இராணுவ உறவுகளை அபிவிருத்தி செய்யத் தொடங்கியது. இதற்குப் பிறகு, அமெரிக்காவிற்கும் நைஜருக்கும் இடையில் 2012 இல் கைச்சாத்திட்ட படைகளின் நிலை ஒப்பந்தத்தின் (SOFA) கீழ் சுமார் 1,100 அமெரிக்க துருப்புக்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு பணியாளர்கள் நைஜரில் செயல்படத் தொடங்கினர்.

நியாமியில் அமெரிக்க ராணுவம் ஏர்பேஸ் 101 விமானத் தளத்தை இயக்கி வருகிறது. நியாமிக்கு தென்மேற்கே 920 கிமீ (572 மைல்கள்) தொலைவிலுள்ள அகாடெஸ் நகருக்கு அருகே ஆப்பிரிக்காவில் அதன் மிகப்பெரிய விமானம் மற்றும் ட்ரோன் தளங்களில் ஒன்றான ஏர்பேஸ் 201 ஐயும் அமெரிக்கா கட்டியுள்ளது. இந்தப் பிராந்தியத்தில் “ஜிஹாதி குழுக்களுக்கு எதிரான போர்” என்ற போர்வையில், இந்த தளத்திலிருந்து ஆளில்லா விமானங்களை பறக்க விடுகிறது. அதேநேரத்தில், மேற்கு ஆபிரிக்கா மற்றும் சாஹெல் பிராந்தியத்தில் இருந்து ஐரோப்பாவிற்கு வரும் அகதிகளைத் தடுத்து, அவர்களை அகாடெஸில் உள்ள தடுப்புக்காவல் முகாம்களில் தடுத்து வைக்கும் அருவருப்பான வேலையையும் இங்கிருந்து அமெரிக்கப் படைகள் செய்கின்றன.

உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் ஆளில்லா விமான உளவு நடவடிக்கைகள் இந்த தளத்தில் இருந்து, ஆபிரிக்காவின் கிழக்கு கடற்கரையில் செங்கடலில் இருந்து அட்லாண்டிக் பெருங்கடல் வரையில், ஒட்டுமொத்த சாஹெல் பிராந்தியம் எங்கிலும் நடத்தப்படுகின்றன. இத்தளம் தற்பொழுது மேற்கு ஆபிரிக்காவில் நேட்டோ போர்களில் மட்டும் முக்கிய பங்கைக் கொண்டிருக்கவில்லை, மாறாக காஸாவில் இனப்படுகொலைக்கு பதிலடியாக செங்கடலில் இஸ்ரேலிய கப்பல்களைத் தாக்கும் யேமனில் உள்ள ஹௌதி படைகள் மீதான நேட்டோ தாக்குதல்களிலும் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.

நைஜீரிய இராணுவ செய்தித் தொடர்பாளர் அப்ட்ரமனே வாஷிங்டன் அதன் இராஜதந்திர, மூலோபாய மற்றும் வணிக பங்காளிகளை தேர்ந்தெடுக்கும் நைஜரின் உரிமையை மறுக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். “இறையாண்மை கொண்ட நைஜீரிய மக்கள் தங்கள் கூட்டாளிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையையும், பயங்கரவாதத்திற்கு எதிராக போராட உண்மையிலேயே உதவக்கூடிய கூட்டாண்மை வகைகளையும் தேர்ந்தெடுக்கும் உரிமையை மறுக்கும் அமெரிக்க தூதுக்குழுவின் நோக்கத்திற்காக நைஜர் வருத்தம் தெரிவிக்கிறது” என்று அவர் கூறினார்.

பென்டகன் துணை செய்தித்துறை செயலர் சப்ரினா சிங், ரஷ்யா மற்றும் ஈரானுடனான நைஜரின் உறவுகள் பற்றிய அமெரிக்க கவலைகள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் இராணுவ ஆட்சிக்குழு உறுப்பினர்களுடன் “நீண்ட, நேரடி” பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக விடையிறுத்தார். “நைஜர் செல்கின்ற பாதையால் நாங்கள் கலக்கமடைந்தோம்,” என்று சிங் கூறினார்.

“பணியாளர்கள், அமெரிக்க நலன்கள் மற்றும் அதன் சொத்துக்களுக்கு ஏற்படக்கூடிய அபாயங்களை மதிப்பிடுவதற்கும் தணிப்பதற்கும்” ஆபிரிக்காவில் ரஷ்ய இராணுவ நடவடிக்கைகளை வாஷிங்டன் கண்காணித்து வருவதாக வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரினே ஜோன்-பியர் கூறினார்.

வாஷிங்டன், பாரிஸ் மற்றும் பிற நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள் ஆபிரிக்க அரசாங்கங்களை கவிழ்ப்பதிலும், தங்கள் மேலாதிக்கத்திற்கு தடைகளாக அவை காணும் அரசியல் பிரமுகர்களை படுகொலை செய்வதிலும் இழிபுகழ் பெற்றவை. சீனா, ரஷ்யா, ஈரான் இன்னும் பிற நாடுகளுடன் நைஜர் உட்பட ஆபிரிக்க நாடுகள் வளர்த்து வரும் பொருளாதார, இராணுவ உறவுகளை, அவர்கள் பொறுத்துக்கொள்ள முடியாத அச்சுறுத்தல் என்று காண்கின்றனர்.

நைஜர், பிரான்சின் முன்னாள் காலனித்துவ நாடாகும். பிரான்சின் பெருநிறுவனங்கள் நைஜரின் பரந்த இயற்கை செல்வத்தை, குறிப்பாக அதன் யுரேனியச் சுரங்கங்களை கொள்ளையடிக்கின்றன. “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற பொய்யான சாக்குபோக்கில் 2013 இல் அண்டை நாடான மாலி மீது படையெடுத்ததன் மூலமாக அது நைஜரையும் ஒட்டுமொத்த சாஹெல் பிராந்தியத்தையும் இரத்தக்களரியில் மூழ்கடித்தது. எவ்வாறிருப்பினும், சஹேல் எங்கிலும் படுகொலைகள் அதிகரித்த நிலையில், பாரிஸ் அதன் முன்னாள் சாம்ராஜ்யத்தில் துருப்புகளை வைத்திருப்பதை நியாயப்படுத்த இஸ்லாமிய பயங்கரவாத குழுக்களுக்கு இரகசியமாக ஆயுதமளித்து வருவதாக மக்களிடையே பரவலான குற்றச்சாட்டுக்கள் —உயர்மட்ட அரசு அதிகாரிகளாலும் கூட எதிரொலிக்கப்பட்டன— இருந்தன.

நைஜரில் உள்ள ஒரு யுரேனிய சுரங்கம். [Photo by Korea Open Government License/Korea Aerospace Research Institute]

பிரெஞ்சு இராணுவ பிரசன்னத்திற்கு எதிராக சாஹெல் மற்றும் நைஜர் எங்கிலும் பாரிய போராட்டங்களுக்கு மத்தியில், முன்னர் பிரெஞ்சு மேலாதிக்க ஆட்சியின் ஒரு பகுதியாக இருந்த நைஜர் இராணுவத்தின் ஒரு கன்னை, ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு சதியைத் தொடங்கி கடந்த ஜூலையில் அதிகாரத்தைக் கைப்பற்றியது. பிரான்சின் விடையிறுப்பு இரக்கமற்றதாக இருந்தது: அது வேண்டா வெறுப்புடன் அதன் துருப்புக்களை திரும்பப் பெற முற்பட்டபோது, பாரிஸ் மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகத்தின் (ECOWAS) நாடுகளை நைஜர் மீது பொருளாதாரத் தடைகளை சுமத்த அழுத்தம் கொடுத்தது. பிரான்ஸ் கடந்த டிசம்பரில் நைஜரில் இருந்து அதன் இராணுவ மற்றும் தூதரக அதிகாரிகளை முற்றிலுமாக திரும்பப் பெறும் கட்டாயத்திற்கு உட்பட்டது.

அதே மாதம், ரஷ்ய துணை பாதுகாப்பு மந்திரி கேர்னல் ஜெனரல் யூனுஸ்-பெக் யெவ்குரோவ் தலைமையிலான ஒரு தூதுக்குழு நைஜீரிய இராணுவ ஆட்சிக்குழுவின் தலைவரான தியானியால் வரவேற்கப்பட்டது. இந்த கூட்டத்தின் முடிவில், இரு நாடுகளும் “நைஜர் குடியரசுக்கும் ரஷ்ய கூட்டமைப்பிற்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் ஒரு பகுதியாக ஆவணங்களில் கையெழுத்திட” ஒப்புக்கொண்டதாக நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்தனர். நியாமியில் நடந்த பேச்சுக்களுக்கு பின்னர், ரஷ்ய தூதுக்குழு மாலியின் தலைநகரான பமாகோவிற்கு இதேபோன்ற பேச்சுக்களுக்காக சென்றது.

ஜனவரி மாதம் நைஜரின் பிரதம மந்திரி அலி மஹாமன் லாமின் ஜீன், பாதுகாப்பு மந்திரி சாலிஹோ மோடி மற்றும் பெட்ரோலிய, வணிக மந்திரிகள் ரஷ்யா மற்றும் ஈரானுக்கு ஒரு நீண்ட இராஜதந்திர பயணத்தை மேற்கொண்டனர். இரு நாடுகளின் பொருளாதார மற்றும் இராணுவ உறவுகளை ஆழப்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தைகளுக்காக அவர்கள் ரஷ்ய துணை பிரதம மந்திரி அலெக்ஸி ஓவர்சுக்கை மாஸ்கோவில் சந்தித்தனர்.

பேச்சுவார்த்தைகளின் போது, ஓவர்சுக் அறிவித்தார், “ரஷ்ய கூட்டமைப்பு நைஜர் குடியரசை ஒரு நட்பு அரசாக கருதுகிறது, அதனுடன் அது நீண்ட காலமாக பரஸ்பர நன்மை பயக்கும் மற்றும் ஆக்கபூர்வமான உறவுகளை கட்டியெழுப்பியுள்ளது. நமது வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவுபடுத்துவதிலும், வர்த்தகத்தை ஊக்குவிப்பதிலும் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். இதற்காக, விவசாயம், எரிசக்தி, உள்கட்டமைப்பு மற்றும் புவியியல் ஆய்வு போன்ற நம்பிக்கைக்குரிய துறைகளில் நமது கூட்டாண்மையை மேம்படுத்த மேலும் கூட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்”.

தெஹ்ரானில், நைஜீரிய தூதுக்குழு ECOWAS பொருளாதாரத் தடைகளை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி விவாதித்ததாகக் கூறப்படுகிறது; ஏனெனில், ஈரான் நீண்டகாலமாக அமெரிக்க-ஐரோப்பிய பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா, சீனா மற்றும் அவற்றின் கூட்டாளிகள் மீது நேட்டோ கூட்டணி நடத்தி வருகின்ற உலகளாவிய போருக்குள் சாஹெல் மற்றும் ஒட்டுமொத்த ஆபிரிக்காவும் எவ்வாறு இழுக்கப்பட்டுள்ளன என்பதை இந்த சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ரஷ்யாவை எதிர்த்துப் போரிட உக்ரேனுக்கு ஐரோப்பிய தரைப்படை துருப்புகளை அனுப்ப அழைப்பு விடுத்து வருகின்ற பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் போர் வெறி, ஏகாதிபத்திய சக்திகள் அவற்றின் மேலாதிக்கத்திற்கு எந்த சவாலையும் பொறுத்துக் கொள்ளாது என்பதை எடுத்துக்காட்டுகிறது. ஆபிரிக்காவிற்கும் உலகின் மற்ற பகுதிகளுக்கும் இடையே உலகப் பொருளாதாரத்தில் தங்கள் மேலாதிக்கத்தை கேள்விற்கு உட்படுத்தும் எத்தகைய பொருளாதார உறவுகளையும் வெட்டுவதில் அவை உறுதியாக உள்ளன.

ஆகையால், ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் சோசலிசத்திற்காகவும் போராடும் ஒரு சர்வதேச, போர்-எதிர்ப்பு இயக்கத்தை ஆபிரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் கட்டியெழுப்புவதே இதற்கு விடையிறுப்பாக உள்ள ஒரே நம்பகமான மூலோபாயமாகும்.

Loading