முன்னோக்கு

ரஷ்ய பயங்கரவாத தாக்குதலில் உக்ரைன் உளவுத்துறைக்கு தொடர்பு இருப்பதாக உடனடியாக மறுப்பது நம்பத்தகுந்ததல்ல

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

மாஸ்கோவில் உள்ள குரோகஸ் நகர மண்டபத்தில் (Crocus City Hall) கடந்த வெள்ளிக்கிழமை நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் குறைந்தது 137 பேர்கள் கொல்லப்பட்டும் மற்றும் 180 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இது ரஷ்யாவிற்கு எதிரான ஏகாதிபத்திய போரில் ஒரு ஆபத்தான புதிய கட்டமாகும்.

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில், மாஸ்கோ தாக்குதலில் பலியானவர்களின் நினைவாக தன்னெழுச்சியாக அமைக்கப்பட்ட நினைவிடத்தில் மக்கள் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தினர். Sunday, March 24, 2024. [AP Photo/Dmitri Lovetsky]

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் கூற்றுப்படி, உக்ரேனிய எல்லைக்கு செல்லும் வழியில் பிடிபட்ட குற்றவாளிகள், உக்ரேனுக்குள் நுழைவதற்கு “ஒரு ஜன்னல்” தயார் செய்யப்பட்டிருக்கிறது. ஏழ்மையான முன்னாள் சோவியத் குடியரசான தஜிகிஸ்தானில் இருந்து குடியேறியவர்கள் என அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் மற்றும் பணத்திற்கு ஈடாக இதுவரை அடையாளம் காணப்படாத இடைத் தரகர்கள் சார்பாக செயல்பட்டதாகக் கூறினர். இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ISIS-K என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கிய ஊதுகுழல்களான நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட், இந்த தாக்குதலில் அமெரிக்கா மற்றும் உக்ரேனின் தலையீட்டை மறுக்கும் பிரச்சாரத்தை உடனடியாக ஆரம்பித்துள்ளன. இந்த சம்பவத்தில், உக்ரேன் சம்பந்தப்பட்டது தொடர்பான புட்டினின் அறிக்கையை, பெயரிடப்படாத “அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளை” மேற்கோள் காட்டி இரு ஊடகங்களும் உடனடியாக நிராகரித்தன. இது தொடர்பாக, எந்த ஆதாரத்தையும் வழங்காமல், கிட்டத்தட்ட தாக்குதல் நடந்த உடனேயே, அமெரிக்காவோ அல்லது உக்ரேனோ இதில் ஈடுபடவில்லை என்ற வெள்ளை மாளிகை மற்றும் கியேவின் கூற்றுக்களை வெறுமனே அவை எதிரொலித்தன.

இந்த தாக்குதலுக்கும், ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையே கணிசமான அமெரிக்க ஈடுபாட்டுடன் நடக்கும் போருக்கும் இடையேயான தொடர்பை முக்கிய அமெரிக்க ஊடகங்கள் எவ்வாறு உடனடியாக நிராகரிக்க முடியும்?

உண்மையில், ஜேர்மன்-ரஷ்ய நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயுக் குழாய் மீதான குண்டுத்தாக்குதலில், அமெரிக்க மற்றும் உக்ரேனிய ஈடுபாட்டை அவர்கள் முன்னர் மறுத்ததை விட, அவர்களின் கூற்றுக்கள் நம்பகத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை. அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுத்த பல நிகழ்வுகள் பின்னர் பொய் என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. இது, அவர்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்கும் சுமையை அவர்கள் மீது சுமத்துகிறது. இந்த தாக்குதல் தொடர்பான சி.ஐ.ஏ மற்றும் அதன் பினாமிகளின் அடையாளங்களை கியேவில் எங்கும் கொண்டுள்ளது.

பயங்கரவாதத் தாக்குதலைச் சுற்றி ஊடகங்களினால் வெளியிடப்படும் போர்ப் பிரச்சாரம் அதன் அரசியல் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. “தேசப் பாதுகாப்புக்கு மிக முக்கியமான ஒரு தலைவராக இருக்கும் திரு புட்டினின் ஒளிக்கு இந்தத் தாக்குதல் ஒரு அடியாகும்” என்று டைம்ஸ் மிகவும் உள்மகிழ்ச்சியுடன் எழுதியது. இப்போது, ​​டைம்ஸ் மேலெழுந்தவாரியாக, ரஷ்யர்கள் “திரு. புட்டின், மேற்கத்திய படையெடுப்பு மற்றும் மேற்குலகுடனான அவரது மோதலுடன், உண்மையிலேயே நாட்டின் பாதுகாப்பு நலன்களை இதயத்தில் வைத்திருக்கிறாரா - அல்லது அவரது எதிரிகள் பலர் சொல்வது போல், அவர் அவற்றை பரிதாபமாக கைவிடுகிறாரா என்று கேட்கலாம்” என்றும் குறிப்பிட்டது.

ஏறக்குறைய ஒரே மாதிரியான வாக்கியத்தை எடுத்துக்கொண்டு, வாஷிங்டன் போஸ்ட், “ரஷ்யாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் புட்டினின் ஆட்சியின் பாதிப்புகளை அம்பலப்படுத்துகிறது” என்ற தலைப்பின் கீழ் ஒரு கட்டுரையை வெளியிட்டது. அத்துடன், “ரஷ்யாவை வலிமையான, ஒன்றுபட்ட மற்றும் உறுதியானதாகக் காட்ட எடுக்கும் புட்டினின் முயற்சியினை இந்த தாக்குதல் சிதைத்துவிட்டது” என்று அது மகிழ்ச்சியுடன் எழுதுகிறது. புட்டினின் கீழ் நடைபெறும் “பெரிய பொது நிகழ்வுகளில் பாதுகாப்பிற்கான பொறுப்பு இல்லை” என்று விமர்சித்த ஒரு மாஸ்கோ தொழிலதிபரை அது மேற்கோள் காட்டியது.

இதே நிலைப்பாட்டை எடுத்த பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையும், உக்ரேனிய பொறுப்பு பற்றிய ரஷ்ய குற்றச்சாட்டுகள் “மாஸ்கோவின் பாதுகாப்பு அமைப்பில் உள்ள இடைவெளிகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப இவை உதவுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உக்ரேன் மீதான புட்டினின் முழு அளவிலான ஆக்கிரமிப்பிலிருந்து இது விரிவடைந்தது” என்று அறிவித்தது.

உக்ரேன் போரினால் புட்டின் “திசைதிருப்பப்பட்டார்” என்ற கூற்று, மொஸ்கோ தாக்குதலில் அமெரிக்க-உக்ரேனிய தலையீட்டை மறுக்காது. மாறாக, நேட்டோ சதிகாரர்கள் ஒரு தாக்குதல் வெற்றிக்கான அதிக வாய்ப்பை கொண்டிருப்பதாக நம்புவதற்கு இது ஒரு காரணியாக இருந்திருக்கலாம்.

அமெரிக்கா மற்றும் உக்ரேன் “இதில் ஈடுபடவில்லை” என்று கூறப்படும் ஏகாதிபத்திய பிரச்சாரத்தின் நடுவிலேயே இந்த தாக்குதலுக்கு ISIS-K பொறுப்பேற்று கொண்டது. ஆனால் ISIS-K ஈடுபாடு, உக்ரேனிய மற்றும் அமெரிக்க ஈடுபாட்டை நிராகரிக்காது.

ISIS-K என்பது, பெரும்பாலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் அதன் பல தசாப்த கால போர்களின் உருவாக்கம் ஆகும். 2021 இல், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், அமெரிக்காவினால் பயிற்சி பெற்ற உளவுத்துறை முகவர்களும், உயரடுக்கு எதிர்ப்பு கிளர்ச்சித் துருப்புகளும் ஆப்கானிஸ்தானில் ISIS-K உடன் இணைந்து செயற்படுவதாக தெரிவித்தது. பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் வந்திருக்ககூடிய தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நீண்ட காலமாக ஆயுத மோதல்களில் சிக்கியுள்ளது. 1980களில் சோவியத் யூனியனுக்கு எதிரான அதன் போரில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு அமெரிக்கா பயிற்சி அளித்து நிதியுதவி அளித்தது.

இந்த சூழலில், மார்ச் 7 அன்று, மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகம் ரஷ்யாவில் ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதல் பற்றி எச்சரிக்கை விடுத்தது. அமெரிக்காவிற்கு, அதன் பினாமிகளின் செயல்பாட்டிற்கு முன்னோடியாக ஒரு சாக்குப்போக்கை உருவாக்கும் முயற்சியாக மட்டுமே இந்த எச்சரிக்கையை விளக்க முடியும்.

உக்ரேனிய உளவுத்துறை சேவைகளின் ஈடுபாடு, அதன் அன்றாட நடவடிக்கைகளை நேட்டோ மற்றும் அமெரிக்காவுடன் நெருக்கமாக ஒருங்கிணைக்கிறது என்பது கிட்டத்தட்ட வெளிப்படையானது. ஜனவரி 2023 இல், ரஷ்யாவின் வடக்கு காகசஸ் மற்றும் மத்திய ஆசியா உட்பட முன்னாள் சோவியத் யூனியன் முழுவதிலும் இருந்து தேசியவாத மற்றும் அதிதீவிர வலதுசாரி கூறுகள் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போரில் போராட உக்ரேனுக்கு திரண்டதாக டைம்ஸ் தெரிவித்துள்ளது.

டைம்ஸ் எழுதியது போல், “அவர்களில் பெரும்பாலோர் தாயகம் திரும்புவதற்கும் ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய அரசாங்கங்களை கவிழ்ப்பதற்கும் நீண்டகால அரசியல் அபிலாஷைகளை கொண்டுள்ளனர். … உக்ரேனிய இராணுவம் மற்றும் உளவுத்துறையின் உத்தரவுப்படி, முழு அறிவும் பெற்று அவர்கள் செயல்படுவதாக தன்னார்வலர்களே கூறுகின்றனர். ரஷ்ய எல்லைகளுக்குப் பின்னால் ஆபத்தான உளவு அல்லது நாசவேலைகள் உட்பட அவர்களின் பல நடவடிக்கைகள் இரகசியமாக உள்ளடக்கப்பட்டுள்ளன”.

மாஸ்கோ பயங்கரவாதத் தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்பு, ரஷ்ய ஜனாதிபதித் தேர்தல்களின் போது, நாட்டில் ஊடுருவியதற்காக “உக்ரேனின் இராணுவ புலனாய்வு அமைப்பால் வெளிப்படையாக ஆதரிக்கப்பட்ட” ரஷ்ய நவ-நாஜிக்களை டைம்ஸ் “கிளர்ச்சியுள்ள ரஷ்யர்கள்” என்று பாராட்டியது. அவர்களின் “துணிச்சலான தாக்குதல்கள், ரஷ்யாவின் ஸ்திரத்தன்மை உணர்வைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் மற்றும் நாட்டின் இராணுவ வளங்களை உக்ரேனிலிருந்து திசைதிருப்பவும்” உதவக்கூடும் என்று டைம்ஸ் எழுதுகிறது.

டைம்ஸ் உருவாக்கிய, உலக பத்திரிகைகளில் மறுபிரசுரம் செய்யப்பட்ட வாதம், பயங்கரவாத நடவடிக்கையின் அரசியல் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. உக்ரேனில் நேட்டோவின் பினாமிப் படைகள் ஒரு இராணுவத் தோல்வியை எதிர்கொண்டுள்ள நிலையில், மாஸ்கோவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல், ரஷ்யாவிற்குள்ளேயே இரண்டாவது போர்முனையைத் திறக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.

இது மூன்று குறிக்கோளைக் கொண்டிருக்கிறது: முதலாவதாக, தன்னலக்குழு மற்றும் அரசு எந்திரத்திற்குள் புட்டின் ஆட்சிக்கு எதிர்ப்பை ஊக்குவித்து வலுப்படுத்துதல், இரண்டாவதாக, கிரெம்ளினின் பதிலடி இராணுவ தாக்குதலைத் தூண்டிவிடுதல், அது நேட்டோவினால் போரை மேலும் தீவிரப்படுத்துவதற்கான சாக்குப்போக்காகச் செயல்படும்; மூன்றாவதாக, ரஷ்யாவிற்குள் இன மற்றும் மத பதட்டங்களை வளர்த்தல், அது ஆட்சியை சீர்குலைக்கும் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளால் முழு பிராந்தியத்தையும் துண்டாடுவதற்கு வசதியாக இருக்கும்.

இந்த மூலோபாயம் ஒரு நீண்ட மற்றும் மோசமான பாரம்பரியத்தில் உள்ளது. இரண்டாம் உலகப் போரில் நாஜிக்கள் சோவியத் யூனியனை ஆக்கிரமித்தபோது, கிழக்கு ஐரோப்பா மற்றும் காகசஸ் முழுவதும் இன்டர்மேரியம் (Intermarium) கூட்டணி என்று அழைக்கப்படும் தேசியவாத மற்றும் அதிதீவிர வலதுசாரி சக்திகளை நாஜிக்கள் அணிதிரட்டினர். பனிப்போரின் போது, ​​சோவியத் யூனியனுக்கு எதிரான அதன் இரகசியப் போரில், அமெரிக்கா இந்த பாசிச வலைப்பின்னல்களை நிலைநிறுத்தியது. சோவியத் யூனியனின் ஸ்ராலினிச அழிவு மற்றும் முதலாளித்துவ மீட்சி, ஏகாதிபத்திய சக்திகளுக்கு இந்த பிற்போக்கு மூலோபாயத்தை இதுவரை முன்னெப்போதும் இல்லாத அளவில் தொடர்வதற்கு உதவியது.

இது குறிப்பாக ரஷ்யாவிற்கு பொருந்தும். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, ஏகாதிபத்திய சக்திகள் ரஷ்ய தன்னலக்குழுவிற்குள்ளும், மறைந்த அலெக்ஸி நவல்னியைச் சுற்றிலும் புட்டின் எதிர்ப்புப் பிரிவை திட்டமிட்டு கட்டமைத்துள்ளன. நவல்னியை டைம்ஸ் ஒரு “ஜனநாயகவாதி” என்று புகழ்ந்தாலும், அவர் பல ஆண்டுகளாக ரஷ்யாவின் மிகப்பெரிய வருடாந்திர பாசிச நிகழ்வான “ரஷியன் அணிவகுப்பின்” இணை ஏற்பாட்டாளராக இருந்தார். காகசஸ் மற்றும் மத்திய ஆசியாவில் இருந்து குடியேறியவர்களை “கரப்பான் பூச்சிகள்” என்று கண்டித்த அவர், பிரிவினைவாத போக்குகளுடன் நெருங்கிய உறவுகளைப் பேணி வந்தார். மற்ற முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களான முன்னாள் தன்னலக்குழு மிகைல் கோடர்கோவ்ஸ்கி மற்றும் இலியா பொனோமரியோவ் ஆகியோர் ரஷ்ய கூட்டமைப்பை தொடர்ச்சியான தனி நாடுகளாக உடைப்பதற்கு வெளிப்படையாக வாதிடுகின்றனர்.

ரஷ்யாவின் 140 மில்லியன் மக்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் ரஷ்ய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்றாலும், நாட்டில் 190 க்கும் மேற்பட்ட இனக்குழுக்கள் வாழ்கின்றன. மக்கள் தொகையில் முஸ்லிம்கள் பத்தில் ஒரு பங்கையாவது பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். அவர்களில் பலர், ஒரு சில முஸ்லீம்-பெரும்பான்மை குடியரசுகள் மற்றும் வடக்கு காகசஸில் வாழ்கின்றனர். அங்கு கிரெம்ளின், செச்சென் பிரிவினைவாதிகளுக்கு எதிராக 1994 மற்றும் 2009 க்கு இடையில் இரண்டு கொடூரமான போர்களை நடத்தியது. கூடுதலாக, சுமார் 17 மில்லியன் குடியேறியவர்கள் ரஷ்யாவில் வாழ்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் தஜிகிஸ்தான் போன்ற முன்னாள் சோவியத் குடியரசுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மிகவும் சுரண்டப்படும் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

புட்டினின் தன்னலக்குழு ஆட்சியின் சமூக மற்றும் அரசியல் அடிப்படையானது, ஏகாதிபத்திய சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது. மாபெரும் ரஷ்ய பேரினவாதம் மற்றும் தேசியவாதத்திற்கான அதன் அழைப்பு, தொழிலாள வர்க்கத்தை திசைதிருப்பவும், பிளவுபடுத்தவும் மற்றும் சிதறடிக்கவும் உதவுகிறது மற்றும் இறுதியில் ஏகாதிபத்திய போர் நோக்கங்களுக்கு பங்களிக்கிறது.

புட்டின் ஆட்சியும் மற்ற வலதுசாரி சக்திகளும் அரசு அடக்குமுறையை தீவிரப்படுத்தும் அதே வேளையில், பல்வேறு தேசிய மற்றும் இன சமூகங்களை இலக்காகக் கொண்டு, அதிர்ச்சிக்குள்ளான மக்களை திசை திருப்ப முயற்சிக்கும் உண்மையான ஆபத்தும் உள்ளது. ஏற்கனவே கடந்த சனிக்கிழமையன்று, மாஸ்கோ பொலிசார் புலம்பெயர்ந்தோர் வசிக்கும் குடியிருப்புகளில் சோதனைகளை மேற்கொண்டனர், மேலும் சமூக ஊடகங்கள் பெரும்பாலும் தாஜிக் டாக்சி ஓட்டுநர்கள் புறக்கணிக்கப்படுவதை சுட்டிக்காட்டுகின்றன.

மாஸ்கோவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் என்பது ஏற்கனவே நூறாயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்ட ஒரு போரின் ஆபத்தான மற்றும் குற்றவியல் விரிவாக்கம் ஆகும். ஏகாதிபத்திய சக்திகளின் பொறுப்பற்ற தன்மை திகைக்க வைக்கிறது. காஸாவில் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் இரத்தத்தை உறைய வைக்கும் இனப்படுகொலையை ஆதரிக்கும் அதே வேளையில், ஏகாதிபத்திய சக்திகள் ரஷ்யாவில் வன்முறை தேசிய மற்றும் இன மோதல்களை ஊக்குவிக்கிறார்கள் மற்றும் புட்டின் ஆட்சியால் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தும் அபாயத்தை ஏற்படுத்துகின்றனர். இந்த ஆபத்தான சூழ்நிலையில் இருந்து வெளியேறுவதற்கு தொழிலாள வர்க்கத்திற்கு ஒரே சாத்தியமான பாதை ஒரு சக்திவாய்ந்த போர்-எதிர்ப்பு சோசலிச இயக்கத்தின் வளர்ச்சியில் உள்ளது. இது, புரட்சிகர மார்க்சிசம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தின் மரபுகளில் வேரூன்றி இருக்க வேண்டும்.

Loading