ரஃபாவில் தாக்குதல் சதித்திட்டமிடலுக்கு வாஷிங்டனில் அமெரிக்க-இஸ்ரேல் பேச்சுவார்த்தை

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம். 

இஸ்ரேலிய இராணுவம் தெற்கு நகரமான ரஃபாவில் நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட தாக்குதலுடன் காஸாவில் அதன் இனப்படுகொலையை தீவிரப்படுத்த தயாராக இருக்கையில், பாதுகாப்பு மந்திரி யோவ் கேலண்ட் வாஷிங்டனில் உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைக்கு புறப்பட்டுள்ளார். கடந்த வெள்ளியன்று, இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்ஜமின் நெத்தன்யாகு, 1.5 மில்லியன் பாலஸ்தீன அகதிகளால் நெரிசலுக்குள் சிக்கியுள்ள அந்நகருக்குள் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையைத் தொடரும் என்பதை தெளிவுபடுத்தினார்.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்டுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், நவம்பர் 30, 2023. [AP Photo/Saul Loeb]

இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிராக நடந்து வரும் சர்வதேச சீற்றம் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், பைடென் நிர்வாகமானது ரஃபா மீதான தாக்குதல் குறித்து கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேலில் நெத்தன்யாகுவை சந்தித்து, இந்த நடவடிக்கை “உலகெங்கிலும் இஸ்ரேலை மேலும் தனிமைப்படுத்தும் மற்றும் அதன் நீண்டகால பாதுகாப்பை ஆபத்திற்கு உட்படுத்தும் அபாயம் உள்ளது” என்று எச்சரித்தார். துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஞாயிறன்று ABC இன் “திஸ் வீக்” நிகழ்ச்சியில் ரஃபா மீதான எந்த இராணுவ நடவடிக்கையும் “ஒரு பெரிய தவறாக” இருக்கும் என்று கூறியதுடன், இஸ்ரேலுக்கு “விளைவுகள்” இருக்கும் என்ற குறிப்பையும் விட்டிருந்தார்.

இந்த அர்த்தமற்ற கவலை வெளிப்பாடுகள், காஸா மீதான இஸ்ரேலியப் போரானது ரஃபாவில் இரத்தம் தோய்ந்த உச்சக்கட்டத்தை எவ்வாறு எட்டப் போகிறது என்பதில் குவிமையப்படுத்தும் திரைக்குப் பின்னால் நடக்கும் பேச்சுவார்த்தைகளுக்கான முன்னோடி மட்டுமே ஆகும். ஈரானை இலக்கு வைக்கும் மத்திய கிழக்கில் ஒரு பரந்த போரின் பாகமாக இந்த மோதலைக் கருதும் பைடென் நிர்வாகம், பெரும் அளவிலான ஆயுதங்களை விநியோகிப்பதன் மூலமாக அரசியல்ரீதியாகவும், நிதிரீதியாகவும் மற்றும் இராணுவரீதியாகவும் இஸ்ரேலை முழுமையாக ஆதரித்துள்ளது.

பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின், வெளியுறவுத்துறை செயலர் பிளிங்கன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஆகியோருடன் வரவிருக்கும் பேச்சுவார்த்தைகளின் தன்மையை மட்டுமே அவர் புறப்படுவதற்கு முன்னதாக கேலண்டின் கருத்துக்கள் அடிக்கோடிட்டுக் காட்டின. “எனது பயணத்தின் போது, இஸ்ரேலின் உயர்வான இராணுவ பலத்தைப் பாதுகாப்பது மற்றும் எங்கள் பொதுவான இலக்குகளை அடைவதற்கான வழிகளில் கவனம் செலுத்துவேன் மற்றும் ஹமாஸை வென்று பணயக் கைதிகளை நாட்டிற்கு திருப்பிப் பெறுவது” என்று அவரது அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

இஸ்ரேலின் “தளங்கள், தளவாடங்கள் ஆகியவற்றைப் பெறும் திறன்” மீது குவிப்புக் காட்டியதுடன், தானும் அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகளும் தெற்கு லெபனானில் ஈரானிய ஆதரவுடைய ஹிஸ்புல்லாவிற்கு எதிராக ஒரு புதிய இராணுவ முன்னணியைத் திறப்பது பற்றி விவாதிப்பார்கள் என்றும் கேலண்ட் அடையாளம் காட்டினார். காஸாவில் இஸ்ரேலியப் போர் தொடங்கியதில் இருந்தே இந்த மோதல் நடந்து வருகிறது, மற்றும் விரிவடைந்து வருகிறது இதில் லெபனானுக்கு உள்ளேயும் இஸ்ரேலுடனான எல்லைப் பகுதியிலும் இஸ்ரேலிய தாக்குதல்கள் உள்ளன. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துமுள்ளனர்.

இஸ்ரேலில் உள்ள சியோனிச ஆட்சியின் உயர்மட்டப் பிரமுகர்கள் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக அதன் போராளிகள் படைகளை எல்லையில் இருந்து விரட்ட இராணுவத் தாக்குதல் நடத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகின்றனர். “இஸ்ரேலின் வடக்கு சமூகங்களை அவர்களின் வீடுகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டியதன் அவசியம் குறித்தும், மற்றும் இது இராணுவ நடவடிக்கை மூலமாகவோ அல்லது ஒப்பந்தத்தின் மூலமோ அடைய வேண்டும்” என்பதைக் குறித்தும் நாங்கள் விவாதிப்போம், என்று கேலண்ட் கூறினார். ஹிஸ்புல்லா எல்லையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் பின்வாங்க வேண்டும் என்ற அதன் கோரிக்கைகள் முற்றிலும் ஏற்கத்தக்கவை அல்ல என்பதை இஸ்ரேல் அறியும் நிலையில், விவாதிக்கப்படுவது வியத்தகு முறையில் மோதலை லெபனானுக்குள் விரிவுபடுத்துவதை குறிக்கும்.

இஸ்ரேலிய இராணுவம் அதன் தாக்குதலை முடுக்கிவிட்டதோடு, ஐ. நா. அகதிகள் நிறுவனமான UNRWA அமைப்பானது இனி வடக்கு காஸாவுக்கு உணவுக் குழுக்களை அனுப்ப அனுமதிக்கப்படாது என்று இஸ்ரேலிய அதிகாரிகள் ஐ.நா. வில் தெரிவித்ததால், காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கான அவநம்பிக்கையான நிலைமை ஞாயிற்றுக்கிழமை மேலும் தீவிரமடைந்தது. “இன்றைய நிலவரப்படி, பாலஸ்தீன அகதிகளின் முக்கிய உயிர்நாடியான UNRWA, வடக்கு காஸாவுக்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்க மறுக்கப்படுகிறது” என்று அதன் ஆணையர் ஜெனரல் பிலிப் லாஸ்ஸாரினி ட்டுவிட்டர் / எக்ஸ் இல் ஒரு பதிவில் தெரிவித்தார்.

கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்று கோரிய லாஸ்ஸாரினி, இவ்வாறு அறிவித்தார்: “இது மூர்க்கத்தனமானது மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பட்டினியின் போது உயிர்காக்கும் உதவிக்கு இடையூறை வேண்டுமென்றே செய்கிறது... காஸாவில் UNRWA அமைப்பு தனது ஆணையை நிறைவேற்றுவதைத் தடுப்பதன் மூலம், கடிகாரம் பட்டினியை நோக்கி வேகமாக ஓடுகிறது, அத்தோடு இன்னும் பலர் பசி, நீரிழப்பு + தங்குமிடம் இல்லாமையால் இறப்பார்கள். இது நடக்காது, இது நமது கூட்டு மனிதநேயத்தை மட்டுமே கறைபடுத்தும்.”

பாலஸ்தீனிய அகதிகளின் அவலநிலை குறித்த பைடென் நிர்வாகத்தின் அக்கறையின் சிடுமூஞ்சித்தனம், UNRWA க்கு நிதி இல்லாததில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. புதிதாக நிறைவேற்றப்பட்ட அமெரிக்க வெளிநாட்டு உதவி செலவின மசோதாக்கள் குறைந்தபட்சம் மார்ச் 2025 வரை ஐ.நா அமைபிற்கு நிதியளிப்பதில் கடுமையான வரம்புகளை விதிக்கின்றன. பட்டினியைத் தவிர்ப்பதற்காக மனிதாபிமான அமைப்புக்கள் நேரத்துடன் போட்டியிடுகின்றன என்று அறிவித்து உதவிக்கான அவசரத்தை லாஸ்ஸாரினி வலியுறுத்தினார். நிதியுதவியில் எந்த இடைவெளியும் உணவு, உறைவிடம், ஆரம்ப சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகியவற்றிற்கான அணுகலை மிகவும் கடினமான நேரத்தில் குறைமதிப்பிற்கு உட்படுத்தும்.

சனிக்கிழமையன்று ரஃபா கடவையில் காஸாவுடனான எகிப்தின் எல்லையை பார்வையிட்ட பின்னர், ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் போர் நிறுத்தத்திற்கான தனது அழைப்பை மீண்டும் இவ்வாறு வலியுறுத்தினார். அதாவது “காஸாவைப் பார்க்கும்போது, போர், பஞ்சம், வெற்றி மற்றும் மரணம் ஆகியவற்றின் நான்கு குதிரை வீரர்கள் அதன் குறுக்கே பாய்ந்து வருவது போல் தோன்றுகிறது,” என்று கூறிய அவர், பாலஸ்தீனியர்களை கூட்டாக தண்டிப்பதன் மூலம் எதையும் நியாயப்படுத்த முடியாது என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

காஸாவிற்குள் நுழைய இஸ்ரேலிய ஒப்புதலுக்காக சுமார் 7,000 உதவி டிரக்குகள் காத்திருக்கும் எல்லையில் இருந்த குட்டெரெஸ், பாலஸ்தீனியர்கள் மீது சுமத்தப்படும் பட்டினி ஒரு “தார்மீக சீற்றம்” என்று அறிவித்தார். “நிவாரணத்திற்கான தடைகள் மற்றும் மூச்சுத் திணறல் புள்ளிகளை” அகற்றுமாறு அவர் இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்தார். “காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட உதவிகள் அவசரமாக தேவைப்படுகிறது. அதாவது வெள்ளமென உதவி கிடைக்க வேண்டும்... துளிகள் அல்ல, துளிகள் அல்ல” என்று அவர் குறிப்பிட்டார்.

வாஷிங்டனில் கேலண்ட்டின் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்னரே, இஸ்ரேலிய இராணுவம் தெற்கு காஸாவில் அதன் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இஸ்ரேலிய இராணுவம் ரஃபாவின் வடக்கே உள்ள கான் யூனிஸில் உள்ள அல்-அமல் சுற்றுப்புறத்தில் சுமார் 40 தாக்குதல்களை நடத்தியது, அதே நேரத்தில் அதன் துருப்புக்கள் “அப்பகுதியை சுற்றி வளைத்து ஹமாஸ் போராளிகள் என்று கூறப்படுபவர்களை தொடர்ந்து அகற்றி வருகின்றன”. வான்வழித் தாக்குதல்களின் ஆதரவுடன் வடக்கு கான் யூனிஸில் உள்ள அல்-கராரா பகுதிக்கு டாங்கிகளையும் அனுப்பியது.

கான் யூனிஸில் உள்ள அல்-அமல் மருத்துவமனையை இஸ்ரேலிய படைகள் “முற்றுகையிட்டதாக” பாலஸ்தீன செம்பிறை சங்கம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. ஆஸ்பத்திரியைச் சுற்றி இராணுவம் புல்டோசர்கள் மற்றும் புகை குண்டுகளைப் பயன்படுத்துவதாகவும் உள்ளே இருக்கும் அனைவரையும் வெளியேறுமாறு கோருவதாகவும் அது கூறியது. இந்த நிலையத்தில் உள்ள பி.ஆர்.சி.எஸ் அவசர சேவை தன்னார்வலர் ஒருவர் “தீவிரமான மற்றும் தொடர்ச்சியான ஷெல்வீச்சு” மற்றும் “தொடர்ச்சியான துப்பாக்கிச் சூடு” பற்றி தெரிவித்தார். பின்னர் அவர் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.

காஸா நகரில், அல்-ஷிஃபா மருத்துவமனைக்கான அணுகலை துண்டித்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை நிறுத்துமாறு உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வியாழனன்று அழைப்பு விடுத்த போதிலும், ஞாயிற்றுக்கிழமையும் அல்-ஷிஃபா மருத்துவமனை மீதான இஸ்ரேலிய முற்றுகை தொடர்ந்தது. “நாங்கள் மீண்டும் கூறுகிறோம்: மருத்துவமனைகள் போர்க்களங்கள் அல்ல. சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு ஏற்ப அவை பாதுகாக்கப்பட வேண்டும்.” இஸ்ரேலிய இராணுவம் சுகாதாரப் பணியாளர்கள் உட்பட 480 “சந்தேகத்திற்குரியவர்களை” விசாரணைக்காக தடுத்து வைத்திருப்பதாக அறிவித்தது.

காஸா சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, போர் தொடங்கியதிலிருந்து காஸாவில் குறைந்தது 32,226 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 74,518 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலியப் படைகள் ரஃபாவில் தங்கள் தாக்குதலை அதிகரிக்கையில் இந்த எண்ணிக்கை மாபெரும் அளவில் அதிகரிக்கும்.

Loading