இலங்கையில் கட்டண அதிகரிப்புக்கு மத்தியில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

2023 இல், அரசுக்கு சொந்தமான இலங்கை மின்சார சபை (இ.மி.ச.) 1,063,566 வாடிக்கையாளர்களுக்கு மின்சாரத்தை துண்டித்துள்ளது, என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் சமீபத்திய அறிக்கை கூறுகின்றது. இவர்களில், பெரும்பான்மையானவர்கள் ஏழைக் குடும்பங்ளாகும். 247,250 இணைப்புகள் துண்டிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுடன்உடன் ஒப்பிடும்போது எண்ணிக்கையில் நான்கு மடங்கு அதிகமாகும். 2021ல் 94,201 வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

2022 இல், இலங்கைப் பொருளாதாரத்தை தாக்கிய பேரழிவுகரமான பொருளாதார நெருக்கடிக்கு விடையிறுக்கும் வகையில், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது கொடூரமான முறையில் நடைமுறைப்படுத்தி வருவதன் நேரடி விளைவாகவே இந்த அத்தியாவசிய வசதி மக்களுக்குப் பறிக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா கிளனுகி தோட்டத்தில் லைன் அறையுடன் இணைக்கப்பட்ட மின்சாரம் இல்லாத தற்காலிக கொட்டகையில் தாயும் அவரது பிள்ளைகளும்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ச அரசாங்கத்தில் ஆரம்பித்த நிதி நெருக்கடிக்கு, கொழும்பின் உடனடி பிரதிபலிப்பு, நீண்டநேர மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு (போக்குவரத்து தடைகளை உருவாக்குதல்), அத்தியாவசியப் பொருட்களின் பெரும் தட்டுப்பாடு மற்றும் விண்ணைத் தொடும் விலைகள் அதிகரிப்பு உட்பட சாதாரண மக்கள் மீது சுமையை சுமத்துவதாகும்.

2022 ஏப்ரல்-ஜூலையில் இந்த சமூகத் தாக்குதல்கள் மீது கோபமான எதிர்ப்புக்கள் வெடித்து, இது மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளை உள்ளடக்கிய ஒரு வெகுஜன அரசாங்க எதிர்ப்பு எழுச்சியாக வளர்ந்தது. ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கும் அதன் ஜனாதிபதியான கோட்டபாய இராஜபக்ஷவை வெளியேற்றுவதற்கும் வழிவகுத்தது, அவர் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்று இராஜினாமா செய்தார்.

இராஜபக்ஷ மீதான அவற்றின் வாய்வீச்சுக் கண்டனங்களுக்குப் பின்னால், தொழிற்சங்கங்களும் பல்வேறு போலி-இடது குழுக்களும், , தொழிலாள வர்க்கம் அதன் சொந்த சுயாதீன சோசலிச முன்முயற்சி எடுப்பதை, இந்த நேரத்தில் தடுத்தன. இந்த அமைப்புக்கள் முதலாளித்துவ ஆட்சியை ஸ்திரப்படுத்த இடைக்கால ஆட்சிக்கு அழைப்பு விடுத்த ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உள்ளிட்ட எதிர் முதலாளித்துவக் கட்சிகளுக்கு, இந்த இயக்கத்தை அடிபணியச் செய்தன. இது மதிப்பிழந்த பாராளுமன்றத்திற்கு தீவிர வலதுசாரி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக உயர்த்துவதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் சமூகத் தாக்குதல்களை அமுல்படுத்துவதற்கும் வழி வகுத்துக் கொடுத்தது.

இந்த சிக்கன நடவடிக்கைகளின் ஒரு முக்கிய அங்கம், எரிபொருள் மானியங்களை நீக்குவதும் மின்சார கட்டணங்களில் கடுமையான அதிகரிப்பும் ஆகும். மின்சார கட்டணங்கள் 2022 ஆகஸ்ட்டில் 75 சதவீதமும், 2023 பெப்ரவரியில் மற்றொரு 66 சதவீதமும், அதே ஆண்டு ஜூலையில் மேலதிகமாக 18 சதவீதமும் அதிகரிக்கப்பட்டது.

2023 ஆண்டின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிக்கையின்படி, மாதமொன்றுக்கு 60 கிலோவோட் வரை மட்டும் பயன்படுத்தும், நாட்டின் மிகக் குறைந்த மின் நுகர்வுக் குழுவில் 3 மில்லியன் இலங்கை மக்கள் உள்ளனர். இந்த குழுவில், பலர் இப்போது துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாதத்திற்கு 61-90 கிலோவோட் அலகுகள் வரை பயன்படுத்தும் சுமார் 600,000 வாடிக்கையாளர்கள் தங்கள் பயன்பாட்டைக் குறைத்து, கடந்த ஆண்டின் குறைந்த நுகர்வோர் குழுவில் இணைந்துள்ளனர்.

இந்தத் தரவை மதிப்பாய்வு செய்த பாராளுமன்றக் குழு, 2023 ஆம் ஆண்டில் இலங்கையில் 250,000 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், அவற்றில் பல சிறிய நிறுவனங்கள் என்றும், அதிக மின்சாரக் கட்டணங்கள் இந்த மூடல்களுக்கும் அடுத்தடுத்த வேலை அழிவுகளுக்கு முக்கிய காரணமாகும், என சுட்டிக்காட்டியுள்ளது.

வெரிடே ஆய்வு நிறுவனத்தின் சமீபத்திய கணக்கெடுப்பின்படி, தற்போது, தெற்காசியாவிலேய இலங்கையர்கள்தான் அதிக மின்சாரக் கட்டணத்தைச் செலுத்துகின்றனர். 100 முதல் 300 கிலோவாட் வரையிலான அலகுகளைப் பயன்படுத்தும் நுகர்வோர், பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளை விட மூன்று மடங்கு அதிக கட்டணத்தை செலுத்துவதாக அது தெரிவித்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளுக்கு இணங்க, விக்கிரமசிங்க அரசாங்கம் இலங்கை மின்சார சபை (இ.மி.ச.) உட்பட நூற்றுக்கணக்கான அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றுவதற்கு நகர்கிறது. உண்மையில், மின்சாரக் கட்டண அதிகரிப்பானது, 2022ம் ஆண்டுவரை நட்டத்தில் இயங்கிய இ.மி.ச. நிறுவனத்தை 61.2 பில்லியன் ரூபா (199 மில்லியன் டொலர்) இலாபத்துடன் கூடிய இலாபகரமான நிறுவனமாக மாற்றியுள்ளது.

அதன் விலையேற்றம் மீதான கோபம் அதிகரித்து வரும் நிலையில், செவ்வாயன்று இ.மி.ச.. நிர்வாகம் 21 சதவீத கட்டணங்களை குறைப்பதாக அறிவித்தது. எவ்வாறாயினும், மின்சாரக் கட்டணத்தைச் செலுத்துவதற்கு சிரமப்படும் மில்லியன் கணக்கான இலங்கை மக்களுக்கு இது சிறிதும் உதவாது.

கொழும்பில் கொம்பனித் தெருவில் உள்ள கலனி பாசேஜில் ரொட்டி சுடும் சிறுவன். நிலுவைத் தொகையை செலுத்தத் தவறியதால் அவரது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சமையல் அறையில் சிட்டி விளக்கு எரிகிறது.

பல ஏழைக் குடும்பங்கள் அதிக தண்ணீர் கட்டணத்தை செலுத்த முடியாததால் குழாய் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் வாய்ப்பையும் எதிர்கொள்கின்றனர். மாத்தறை மாவட்டத்தில் உள்ள 5 தேசிய பாடசாலைகள் உட்பட 22 பாடசாலைகளுக்கு மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கு அரசாங்கம் போதிய நிதியை வழங்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் டிசம்பர் மாதம் குற்றஞ்சாட்டியது.

இ.மி.ச.யை இலாபகரமாக ஆக்கிய பிறகு, சிலவற்றை தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்க அல்லது மற்றவற்றை முழுமையாக வணிகமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டு, நிறுவனத்தை 14 வெவ்வேறு பிரிவுகளாக உடைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த மறுசீரமைப்புக்காக தயாரிக்கப்படும் சட்டம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இந்த நடவடிக்கைகளுக்கு இணங்க, விக்கிரமசிங்க ஆட்சியானது தனியார்மயமாக்கலை எதிர்க்கும் இ.மி.ச. ஊழியர்கள் மீது ஒடுக்குமுறையை தூண்டியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மூன்று நாள் தனியார்மயமாக்கலுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட 66 ஊழியர்களை இடைநீக்கம் செய்துள்ளதுடன், இலங்கையின் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தை மீறியதற்காக அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க தயாராகி வருகிறது.

உத்தியோகபூர்வ கணக்கீடுகளின்படி, 2022 இல் சராசரி பணவீக்க விகிதம் 46 சதவீதத்தையும், 2023 இல் 19 சதவீதத்தையும் எட்டியது. இப்போது விகிதம் 5.9 சதவீதமாகக் குறைந்திருந்தாலும், இது வெகுஜன வறுமையைப் போக்காது.

உலக வங்கியின் கூற்றுப்படி, 2023 ஆம் ஆண்டில் 27.9 சதவிகித மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். இது 2021 ஆம் ஆண்டில் 13.1 சதவிகிதத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும். “நிதி மறுசீரமைப்பால் ஏற்படும் குறுகிய கால பின்னடைவின் தாக்கங்கள் காரணமாக” இது மேலும் அதிகரிக்கும் என்று சமீபத்திய அறிக்கையில் கணிப்புகள் கூறுகின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தனியார்மயமாக்கல், வரி அதிகரிப்பு மற்றும் சுகாதாரம், கல்வி மற்றும் பிற சமூகநலத் திட்டங்களுக்கான அரசாங்க செலவினக் குறைப்பும் வறுமை மற்றும் சமூக அவலத்தை கடுமையாக அதிகரிக்கும்.

எதிர்கால “பொருளாதார மீட்சி” பற்றிய விக்கிரமசிங்க அரசாங்கத்தின் தொடர்ச்சியான கூற்றுக்கள் முற்றிலும் பொய்யானவை. பூகோள முதலாளித்துவத்தின் ஆழமடைந்துவரும் நெருக்கடியானது இலங்கையிலும் ஏனைய அனைத்து நாடுகளிலும் நெருக்கடியை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள், மின்சார விலை உயர்வை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பது பற்றி சமீபத்தில் தொழிலாளர்களிடம் பேசினர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகள் ஆவர்.

மத்திய மலைநாட்டில் உள்ள பூனாகலை தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளியான வி. முத்தையா உலக சோசலிச வலைத் தளத்திற்கு கூறுகையில், மின் கட்டண உயர்வால் தோட்டத் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர், என்றார். இதய நோயால் தனது மனைவி வேலை செய்ய முடியவில்லை என்றும், இதனால் நான்கு மாதங்களாக மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் அவர்களின் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். மின் இணைப்பை மீண்டும் பெறுவதற்கு அவர்கள் கடன் வாங்க வேண்டியிருந்தது.

“எனக்கு சரியான வேலை இல்லை, சிறு சிறு வேலைகளைச் செய்துதான் வருமானம் ஈட்டுகிறேன். என் மனைவியின் மருந்துகள், எங்கள் குழந்தைகளின் படிப்பு மற்றும் உணவுக்கு செலவு செய்த பிறகு, மின்சாரப் பட்டியலைக் கட்ட மீதி எதுவும் இல்லை. நாங்கள் கடினமான சூழ்நிலையில் வாழ்கிறோம்,” என அவர் கூறினார்.

கொழும்பில் உள்ள கட்புல மற்றும் அரங்கேற்றல்கலைப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் கூறியதாவது: “பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட பாரியளவில் அதிகரித்த மின் கட்டணத்தை எனது பெற்றோர் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அப்பாவின் வருமானத்திலேயே எனக்கும் என் சகோதரிக்கும் கல்விச் செலவு செய்ய வேண்டியுள்ளது.

“பல்கலைக்கழக விடுதியில் தண்ணீரை கொதிக்க வைப்பதற்கும், உணவு சமைப்பதற்கும் மின்சாரத்தைப் பயன்படுத்த எங்களுக்கு அனுமதி இல்லை, எனவே நாங்கள் எரிவாயு சிலிண்டர் மற்றும் கேஸ் குக்கரைப் பயன்படுத்துகிறோம். மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் அதிக விலையை எங்களால் செலுத்த முடியாது.”

கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள சீஃப்வே மெனுபெக்ஷரிங் ஆடைத்தொழிற்சாலையில் ஆறு வருடங்களாக பணிபுரியும் ஒரு பெண்தொழிலாளி பின்வருமாறு கூறினார்: “நான் தங்கும் விடுதியின் ஒற்றை அறையில் வசிக்கிறேன், எனது மாதச் செலவு [மின்சாரத்திற்காக] சுமார் 3,600 ரூபாயாகும். (12 அமெரிக்க டொலர்). நாங்கள் விடுதியில் வசிப்பதால் எங்கள் மின்சாரக் கட்டணங்கள் வணிக வகைக்குள் அடங்கும்.” அவளுடைய ஒற்றை அறையில் ஒரு மின்விளக்கு, ஒரு சிறிய குளிர்சாதன பெட்டி மற்றும் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி உள்ளது என்று அவள் விளக்கினாள்.

சிலாபத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளி உலக சோசலிச வலைத் தளத்திடம், இரண்டு மாத மின்சாரக் கட்டணமாக 13,000 ரூபாய் ($US42) பாக்கியிருந்ததால், தனது மின் இணைப்பைத் துண்டிக்க மின்சாரசபை தொழிலாளர்கள் வந்ததாகக் கூறினார். “அவரது முந்தைய மாதாந்த மின்சார பட்டியல் 500 ரூபாயாக இருந்தது, ஆனால் இது சமீபத்திய ஆண்டுகளில் 6,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. “எனது அயலவர்கள் [இ.மி.ச. ஊழியர்களிடம்] நான் பில் செலுத்துவதில் உள்ள சிரமங்களை விளக்கினர், ஆனால் அடுத்த நாளுக்குள் நான் தாமதமான தொகையை செலுத்த வேண்டும் என்று எச்சரித்தனர். நான் சில தொகை பணத்தை கடன் வாங்கி பணத்தைக் கட்டினேன்,’' என அவர் தெரிவித்தார்.


மூன்று பிள்ளைகளுடன் விதவையான பண்டாரவளையைச் சேர்ந்த அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் ஒருவர், “எனது மின்சாரக் கட்டணம் திடீரென இரட்டிப்பாக்கப்பட்டதால் நாங்கள் எதிர்பாராத சிரமங்களை எதிர்கொண்டோம்” என்றார்.

ஒரு விறகு அடுப்பை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று அவள் சுட்டிக் காட்டினார். ஆனால் அவர் வேலை செய்யும் இடத்தில் முழு நாளையும் கழித்த பிறகு, விறகு அடுப்பை பாவிப்பது மிகவும் சிரமத்தைக் கொடுக்கின்றது. மின்சாரத்தின் விலை அதிகமாக இருப்பதால், தனது ரைஸ் குக்கர், தண்ணீரை சூடாக்கும் ஹீற்றர் மற்றும் எலக்ட்ரிக் அயர்ன் ஆகியவற்றை தவிர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். அவர் இப்போது தன் ஆடைகளை தேய்ப்பதற்கு சிரட்டைகளை பயன்படுத்துகிறாள்.


Loading