சிங்களப் பேரினவாத ஜே.வி.பி. தொடர்பான இரண்டு நூல்களை வெளியிட இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி நடத்தும் கூட்டம்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும் இணைந்து மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தொடர்பாக இரண்டு புத்தகங்களை வெளியிடுவதற்காக, கொழும்பு பொது நுாலக கேட்போர் கூடத்தில், ஏப்ரல் 4 அன்று மாலை 4 மணிக்கு பகிரங்க கூட்டமொன்றை நடத்தவுள்ளன.

முதலாவது, சோ.ச.க.யின் முன்னோடியான புரட்சிக் கம்யுனிஸ்ட் கழகத்தின் (பு.க.க) ஸ்தாபக பொதுச் செயலாளர் மறைந்த தோழர் கீர்த்தி பாலசூரிய சிங்கள மொழியில் எழுதிய, மக்கள் விடுதலை முன்னணியின் அரசியலும் வர்க்கப் பண்பும்” என்ற நூலின் நான்காது பதிப்பு ஆகும். மற்றையது, உலக சோசலிச வலைத் தளத்தில் ஆங்கில மற்றும் சிங்கள மொழிகளில் கே. ரட்நாயக்க சமீபத்தில் எழுதிய கட்டுரைகளின் ஒரு தொகுப்பான, மக்கள் விடுதலை முன்னணியின் வலதுநோக்கிய நகர்வு ஆகும்.

ஜே.வி.பி. 1960களில் குட்டி முதலாளித்துவ தீவிரவாத இயக்கமாக உருவாகி, சிங்கள ஜனரஞ்சகவாத, மாவோவாத மற்றும் காஸ்ரோவாத விவசாய கெரில்லாவாதத்தினதும் நச்சுக் கலவையை தளமாக கொண்டு, அதிருப்தியடைந்த கிராமப்புற சிங்கள இளைஞர்களை ஆட்சேர்ப்பு செய்தது.

1980களில் வலது நோக்கி நகர்ந்த ஜே.வி.பி., ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி (ஐ.தே.க.) ஜே.ஆர். ஜயவர்தன அரசாங்கத்தால் துாண்டிவிடப்பட்ட பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்திற்கு கடுமையான ஆதரவாளராக மாறியது.

கடந்த 30 ஆண்டுகளில், தனது வெற்று சோசலிச வாய்ச்சவடால்களை கைவிட்டு, கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தின் ஒரு பாராளுமன்ற கட்சியாக தன்னை மாற்றியமைத்த ஜே.வி.பி., வலது நோக்கி துரிதமாக நகர்ந்தது. 2004 இல், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் முதலாளித்துவ அரசாங்கத்தில் இணைந்தது. அதில் ஜே.வி.பி. தலைவர்கள் நான்குபேர் அமைச்சர் பதவிகளை வகித்தனர்.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களால் பரந்தளவில் வெறுக்கபட்ட ஜே.வி.பி., 2015 இல் தேசிய மக்கள் சக்தியை (தே.ம.ச.) உருவாக்கியது. ”நாட்டை காப்பாற்றுவதற்கு”, அதாவது முதலாளித்துவ முறைமைக்கு முன்டுகொகொடுக்க தற்போது அரசியல் அதிகாரத்திற்கான போட்டியில் பரந்த தேர்தல் முன்னணியாக வந்துள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில், ஜே.வி.பி./தே.ம.ச., பெரு நிறுவனங்களின் நலன்களுக்கு சேவை செய்ய உறுதியளிக்கும் அதே வேளை, அமெரிக்கா, பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட ஏகாதிபத்திய நாடுகளுடனும் ஏனையை சக்திகளுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துள்ளது. அது, ஆட்சிக்கு வருமாயின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தால் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்ற சர்வதேச நாணய நிதியத்தின் பேரழிவுகரமான சிக்கன நடவடிக்கை வேலைத்திட்டத்தை தொடர்ந்து அமுல்படுத்தப்போவதாக ஜே.வி.பி. நாணய நிதியத்திடம் உறுதியளித்துள்ளது.

ஜே.வி.பி.யின் வலதுநோக்கிய பரிணாம வளர்ச்சியானது தனித்த மற்றும் தேசிய ரீதியிலான நிகழ்வு கிடையாது. மாறாக, சிலவற்றை பெயர் குறிப்பிட்டால், தென் ஆபிரிக்காவில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், நிகரகுவாவில் சன்டினிஸ்டா இயக்கம் மற்றும் நோபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிச மையம்) உட்பட மாவோயிச குழுக்கள் போன்ற அமைப்புகள் ஏகாதிபத்தி-சார்பு துணைக்குழுக்காக மாற்றம்பெற்றதன் வெளிப்பாடு ஆகும். இந்த சர்வதேச மாற்றத்திற்கு பின்னால் இருப்பது, இந்த அமைப்புகள் உட்பட அவை அடித்தளமாகக் கொண்டுள்ள தேசியவாத வேலைத்திட்டங்களுக்கு சாவுமணி அடித்துள்ள பூகோளமயமாக்கலே ஆகும்.

சோ.ச.க./ஐ.வை.எஸ்.எஸ்.இ. கூட்டத்தில், ஜே.வி.பி.யின் வலதுநோக்கிய நகர்வு மற்றும் குறிப்பாக இலங்கையில் கூர்மையான வெளிப்பாட்டை கண்ட உலக முதலாளித்துவத்தின் அடிப்படை நெருக்கடியைப் பற்றி கலந்துரையாடப்படும். தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் தமது ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்கான போராட்டத்திற்கு அவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டிய இன்றியமையாத சர்வதேச சோசலிச முன்னோக்கை இந்த கூட்டம் கலந்துரையாடும்.

தொழிலாளர்கள், இளைஞர்கள், பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் என அனைவரையும் முக்கியமான இந்தக் கூட்டத்திற்கு வருகை தந்து கலந்துரையாடலில் பங்கேற்குமாறு நாம் அழைப்புவிடுக்கின்றோம்.

இடம்: கொழும்பு பொது நுாலக கேட்போர் கூடம்

காலம், நேரம்: ஏப்ரல் 4, மாலை 4 மணி.

Loading