இலங்கைப் பொலிஸ் பேச்சுச் சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதலில் இரண்டு ஊடகவியலாளர்களை கைது செய்துள்ளது


இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை பொலிஸ், இந்த மாத தொடக்கத்தில் போலியான குற்றச்சாட்டின் பேரில் இரண்டு ஊடகவியலாளர்களை கைது செய்துள்ளது. சமூக ஊடக தளங்களை தணிக்கை செய்வதற்கான அதன் நிகழ்நிலை காப்புச் சட்டம் (OSA) உட்பட, பேச்சு சுதந்திரம் மற்றும் ஏனைய ஜனநாயக உரிமைகள் மீதான விக்கிரமசிங்க அரசாங்கத்தின் உக்கிரமடைந்து வரும் தாக்குதலின் ஒரு பகுதியாக இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மார்ச் 5 அன்று, ராவணா லங்கா நியூஸ் இணைய தள ஆசிரியர் ஜி.பி. நிஸ்ஸங்க, கொழும்பில் இருந்து 130 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பல்லேபெத்தவிலுள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டு, கொழும்பில் உள்ள கோட்டை நீதவான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு மார்ச் 20 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த இணையத்தளம் பிரதான ஊடகங்களில் பொதுவாகக் கிடைக்கும் செய்திகள் பற்றிய கட்டுரைகளை வெளியிடுகிறது.

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, பொலிஸில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்தே நிஸ்ஸங்க கைது செய்யப்பட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இராணுவத் தளபதியின் வீட்டு சமையல் அறையில் இருந்து அரசியல்வாதி ஒருவரின் இல்லத்திற்கு இராணுவ சமையல்காரர்களை வழங்கியதாகக் கூறப்படும் செய்தி தொடர்பாகவே அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை வெளிப்படையாகத் தெரிகிறது.

பிமல் ருஹுனகே, இலங்கையின் சுயாதீன ஊடகவியலாளர் [Photo by Bimal Ruhunage]

மார்ச் 6 அன்று, பிமல் ருஹுனகே என்ற சுதந்திர ஊடகவியலாளர் குருநாகலிலுள்ள அவரது வீட்டில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். ஹிரு டிவி, சியத மற்றும் நியூஸ் சென்டர் மற்றும் அமெரிக்காவின் பொஸ்டன் லங்கா இணையத்தளத்திலும் அவரது செய்திகள் வெளியிடப்படுகின்றன. ருஹுனகே உலக சோசலிச வலைத் தளத்திற்கு தான் கைது செய்யப்பட்ட சூழ்நிலையை விளக்கினார்.

“ஒரு தாய் தனது [பொருளாதார] கஷ்டங்கள் காரணமாக தனது பிள்ளையை தத்தெடுக்க ஒருவரைத் தேடுவதற்காக தனது இரண்டு வயது சிறுவனுடன் [குருநாகல்] பேருந்து நிலையத்திற்கு வருவதாக எனக்கு தகவல் கிடைத்தது. அவள் சனிக்கிழமை [மார்ச் 3] பேருந்து நிலையத்திற்கு வந்திருப்பதை அறிந்தேன். அதனால், நான் அங்கு சென்று, பேருந்து நிலையத்திற்கு வெளியே ஒரு நாற்காலியில் அவள் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். அங்கே ஒரு பொலிஸ் காவல் அரனும் உள்ளது” என்று அவர் கூறினார்.

ருஹுனகே, தாயாரின் சமூக சூழ்நிலைகள் பற்றி பேட்டி எடுக்க திட்டமிட்டதாகவும், ஆனால் பொலிசார் அதை தடுத்ததாகவும் உலக சோசலிச வலைத் தளத்திற்குத் தெரிவித்தார். “நான் தாய் மற்றும் குழந்தையை வீடியோ எடுக்கும்போது, ​​ஒரு பொலிஸ் அதிகாரி என்னிடம் வந்து, என்னால் எந்த வீடியோ பதிவும் செய்ய முடியாது என்று கூறினார். நான் ஒரு பத்திரிகையாளர் என்று அவரிடம் சொன்னேன்.”

நான்கு நாட்களுக்குப் பின்னர், அவரது வீட்டில் காலை 6 மணியளவில் பொலிசார் நடத்திய சோதனையைத் தொடர்ந்து ருஹுனகே கைது செய்யப்பட்டார். “ஒரு பாதாள உலகக் கும்பல் தலைவன் கைது செய்யப்படுவதைப் போல சுமார் 25 முதல் 30 பொலிசார் மூன்று அல்லது நான்கு வாகனங்களில் வந்து எனது வீட்டைச் சுற்றி வளைத்தனர்,” என்று அவர் கூறினார்.

பத்திரிகையாளரின் எதிர்ப்பையும் மீறி, சோதனைக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி அவர் கைது செய்யப்பட்டதை வீடியோ பதிவு செய்தார். “பொலிஸ் கடமைகளைத் தடுத்ததற்காக [மார்ச் 3 அன்று] தண்டனைச் சட்டத்தின் பிரிவு 341 இன் கீழ் என் மீது குற்றம் சாட்டப்பட்டது. அப்படி இருந்திருந்தால், நான்கு நாட்களுக்குப் பிறகு அல்ல, உடனடியாக என்னைக் கைது செய்திருக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

மார்ச் 11 அன்று ருஹுனகே பிணையில் விடுவிக்கப்பட்டதோடு, மே 13 அன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), நிஸ்ஸங்க மற்றும் ருஹுனகே கைது செய்யப்பட்டமை கருத்துச் சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதல் என வெளிப்படையாகக் கண்டிப்பதுடன் அனைத்து குற்றச்சாட்டுகளையும் விலக்கிக்கொள்ளக் கோருகிறது.

இந்த கைதுகள், அரசாங்கம் தன்னையோ அல்லது இராணுவ உயரடுக்கின் உறுப்பினர்களையோ விமர்சிப்பதை சகித்துக் கொள்ளாது என்பதையும், அதன் பேரழிவுகரமான சிக்கன நடவடிக்கைகளால் உருவாக்கப்பட்ட கொடூரமான சமூக நிலைமைகள் அம்பலப்படுத்தப்படுவதையிட்டும் அது மிகவும் விழப்புடன் உள்ளது என்பதையும் காட்டுகிறது. உண்மையில், ஏழைக் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை தத்தெடுப்பதற்காக விற்க முயற்சிப்பது பற்றி பல ஊடக அறிக்கைகள் உள்ளன.

நிஸ்ஸங்க மற்றும் ருஹுனகே ஆகியோரின் கைதுகளை கண்டித்து இலங்கை ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பு மார்ச் 7 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் ஊடக அமைப்பு, தமிழ் ஊடகக் கூட்டமைப்பு, இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் ஆகியன இந்தக் கூட்டமைப்பில் உள்ளடங்குகின்றன.

நிகழ்நிலை காப்புச் சட்டம் மற்றும் அரசாங்கத்தின் திட்டமிட்ட பயங்கரவாத எதிர்ப்பு மசோதா ஆகியவை “இலங்கையில் பேச்சு சுதந்திரத்தை நசுக்குவதற்கான சட்டக் கட்டமைப்பாகும்” என்று அந்த அறிக்கை கூறியது. “ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல் மூலம் அவர்களை மௌனமாக்கும் ஒரு அப்பட்டமான முயற்சியில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்... இது சுதந்திரமான அறிக்கையிடலில் ஈடுபட்டுள்ள மற்ற ஊடகவியலாளர்களை மிரட்டுவதன் மூலம் சுய-தணிக்கையை கட்டாயப்படுத்தும் முயற்சியாகும்”, என அது மேலும் கூறியது.

உண்மையில், நிஸ்ஸங்க மற்றும் ருஹுனுகே மீதான துன்புறுத்தல், ஊடகவியலாளர்கள் மீதான பொலிஸ் தாக்குதல்களின் அதிகரித்து வரும் ஒரு பகுதியாகும்.

மார்ச் 6 அன்று, கொழும்பில் போராட்டம் நடத்திய பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கியை பயன்படுத்தி போலீசார் நடத்திய தாக்குதலை வீடியோ எடுக்க முயன்ற யூடியூப் ஊடகவியலாளரான லால் பெரேரா பொலிசாரால் தாக்கப்பட்டார்.

31 மார்ச் 2023 அன்று, ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்துவதை புகைப்படம் எடுக்க முயன்றபோது, ஊடகவியலாளர் சாந்த விஜேசூரிய பொலிஸாரால் தாக்கப்பட்டார். 2022 இல் மிரிஹானவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இதுவாகும். அந்த எதிர்ப்புக்கள் விரிவடைந்து, ஏப்ரல்-ஜூலையில் தீவு முழுவதும் வெகுஜன இயக்கமாக வளர்ச்சியடைந்தது, அது இராஜபக்ஷவையும் அவரது அரசாங்கத்தையும் வெளியேற்ற வழிவகுத்தது.

2023 ஜூலையில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் அரசாங்கம் மேற்கொள்ளும் வெட்டுக்களுக்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சி அழைப்பு விடுத்திருந்த ஆர்ப்பாட்டத்தில் செய்தி சேகரித்த மற்றொரு ஊடகவியலாளரான தரிந்து உடுவரகெதரவை பொலிசார் கைது செய்து கொடூரமான முறையில் தாக்கினர்.

ஜனவரியில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விக்கிரமசிங்கவின் அடக்குமுறை நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம், சமூக ஊடக தளங்களை ஒடுக்குவதற்கான பரந்த அதிகாரங்களை கொழும்பு அரசாங்கத்துக்கு வழங்கும். அபராதங்களுக்கு உள்ளாகக்கூடிய பெருநிறுவன ஜாம்பவான்களின் விமர்சனத்தைத் தொடர்ந்து, நிகழ்நிலை காப்புச் சட்டத்தை செயல்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எவ்வாறாயினும், சமூக ஊடக நிறுவனங்களுக்கு சலுகைகளை வழங்கும் பல திருத்தங்களைச் சேர்த்ததைத் தொடர்ந்து, சட்டம் திணிக்கப்பட்டு, பொது பாதுகாப்பு அமைச்சகத்தால் இயக்கப்படும்.

இலங்கையிலும் சர்வதேச அளவிலும் நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் மீதான பரவலான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ், “நான் இந்த அமைச்சர் பதவியை வகிக்கும் வரை... இந்த குழுக்களின் அல்லது சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகளுக்கு அடிபணிய மாட்டேன்” என்று உறுதியாக அறிவித்தார்.

பாதாள உலகம் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளை ஒடுக்கும் சாக்குப்போக்கில் “யுக்திய (நீதி)” என்ற பாரிய பொலிஸ் நடவடிக்கையையும் அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இராணுவத்தின் உதவியுடன் சுமார் 60,000 பேர் கைது செய்யப்பட்டதைக் காணும் இந்த நடவடிக்கை உண்மையில் ஏழைகளுக்கு எதிரான ஒரு பயங்கரவாதப் பிரச்சாரமாகும். பிடி ஆணை இன்றி பொலிசாரல் நபர்கள், வீடுகள் மற்றும் வாகனங்களைச் சோதனை செய்ய முடியும்.

கொழும்பின் அரசு இயந்திரத்தை வலுப்படுத்துவதும் அதன் அடக்குமுறை நடவடிக்கைகள், அதன் சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட கடுமையான சிக்கன திட்ட நிரலுக்கு எதிராக வளர்ந்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை நசுக்குவதற்கான பிரதிபலிப்பாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் குழுக்கள், அதன் சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்துவது மற்றும் 3 பில்லியன் டொலர் பிணை எடுப்பு கடனின் அதன் அடுத்த தவணையை வழங்க முடியுமா என்பதை மதிப்பிடுவதற்காக, ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இலங்கைக்கு வருகை தருகின்றன. மிக சமீபத்தில் மார்ச் 7 அன்றும் வந்திருந்தன.

சமீபத்திய வாரங்களில் பல்லாயிரக்கணக்கான சுகாதார, தபால் மற்றும் மின்சாரத் துறைகளில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் கல்விசாரா பல்கலைக்கழக ஊழியர்களால் தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும் ஊதிய உயர்வு கோரியும் எதிர்ப்புகள் மற்றும் வேலைநிறுத்தங்கள் நடத்தப்பட்டன.

கொழும்பின் நிகழ்நிலை காப்புச் சட்டம் மற்றும் ஏனைய அடக்குமுறை நடவடிக்கைகள், சமூக ஊடகங்களில் அரசாங்கத்திற்கு எதிரான குரல்களை மௌனமாக்குவதற்கான முதலாளித்துவ ஆட்சிகளின் முயற்சிகளை பிரதிபலிக்கின்றன. இந்தியாவில், நரேந்திர மோடியின் தீவிர வலதுசாரி ஆட்சி, ஊடகங்களை ஒடுக்க அதன் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துகிறது. கடந்த அக்டோபரில், நியூஸ் கிளிக் வலைத் தளத்தின் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா மற்றும் பிரபல தளத்தின் சிரேஷ்ட நிர்வாகிகளில் ஒருவரும், “பயங்கரவாதம்” என்ற சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டின் கீழ் பொலிசால் கைது செய்யப்பட்டனர்.

வீடியோ பகிர்வு செயலியான டிக் டொக்கை மூடுவது அல்லது விற்பனையை கட்டாயப்படுத்தும் மசோதாவை கடந்த வாரம் அமெரிக்க பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியது. இது பிரபலமான சமூக ஊடக தளத்தை கட்டுப்படுத்தும் முயற்சி மட்டுமல்ல, சீனாவை அரக்கத்தனமானதாக சித்தரிப்பதை நோக்கமாகக் கொண்டதாகும். சீனாவிற்கு சொந்தமான டிக்டோக் அமெரிக்காவின் “தேசிய பாதுகாப்பிற்கு” அச்சுறுத்தல் என்று வாஷிங்டன் பொய்யாக கூறுகிறது.

Loading