லெபனானுக்கு எதிரான இஸ்ரேலிய-அமெரிக்க போரின் நிகழ்ச்சி நிரல்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

பைடென் நிர்வாகத்தின் முழு ஆதரவுடன் காஸா மற்றும் மேற்குக் கரையில் இருந்து தெற்கு லெபனான் வரை தனது போரை விரிவுபடுத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது.

கடந்த வாரம் காஸா எல்லையில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரிடம் பேசிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட், லெபனானுடனான நாட்டின் வடக்கு எல்லையில் இஸ்ரேலிய துருப்புக்கள் “மிக விரைவில் நடவடிக்கை” எடுக்கும் என்றார். “எங்களுக்கு நெருக்கமான படைகள், களத்தை விட்டு வெளியேறி வடக்கு நோக்கி நகர்ந்து வருவதற்கு தயாராகி வருகின்றன” என்றும் அவர் குறிப்பிட்டார். பல்லாயிரக்கணக்கான துருப்புக்கள் மற்றும் சுமார் 60,000ம் பாதுகாப்பு படையினர் ஏற்கனவே வடக்கு இஸ்ரேலில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டெல் அவிவில் உள்ள கிரியா இராணுவ தளத்தில் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் மற்றும் அமைச்சர் பென்னி காண்ட்ஸுடன் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.  Israel, Saturday, October 28, 2023. [AP Photo/Abir Sultan]

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த ஆண்டு இறுதியில், ஹிஸ்புல்லா (லெபனானில் கணிசமான ஆதரவைக் கொண்ட, ஈரானுடன் கூட்டு சேர்ந்த முதலாளித்துவ மதக் குழு) இஸ்ரேலுக்கு எதிராக ஒரு முழுமையான போரைத் தொடங்கினால், “இஸ்ரேல் இங்கிருந்து வெகு தொலைவில் இல்லாத பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனானை காஸாவாகவும், கான் யூனிஸாகவும் [காஸாவின் இரண்டாவது பெரிய நகரம்] மாற்றும்” என்று எச்சரித்தார். அத்தோடு, ஹிஸ்புல்லா தனது படைகளை லிட்டானி ஆற்றின் வடக்கே நகர்த்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க தலைமையிலான இராஜதந்திர முயற்சிகள் இதை அடையத் தவறினால், இஸ்ரேல் ஹெஸ்பொல்லா மீதான தாக்குதல்களை விரிவுபடுத்தத் தொடங்கும்.

இஸ்ரேலின் வடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை உள்ளடக்கிய அல்மா ஆராய்ச்சி மற்றும் கல்வி மையத்தின் நிறுவனரும் மற்றும் தலைவருமான சரித் ஜெஹாவி, எந்தவொரு இராஜதந்திர பேச்சுவார்த்தைகளும் போர்நிறுத்தத்திற்கு இட்டுச்செல்லும் முன், இஸ்ரேலிய தலைவர்கள் இராணுவ வெற்றியை அடைவதற்கும் ஹெஸ்பொல்லாவுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்திலும் தாக்குதல்களின் எண்ணிக்கையையும் “தரத்தையும்” அதிகரித்துள்ளனர் என்று பாதுகாப்பு செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சியைக் கவிழ்க்க முயன்ற சி.ஐ.ஏ, வளைகுடா நாடுகள், துருக்கி மற்றும் இஸ்ரேலின் ஆதரவுடன் இஸ்லாமிய பினாமி படைகளைத் தோற்கடிக்க உதவுவதில் ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் இணைந்து ஹிஸ்புல்லா முக்கிய பங்கு வகித்தது. ஈராக்கில் உள்ள ஷியைட் போராளிகள், ஹமாஸ் மற்றும் யேமனில் உள்ள ஹவுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஈரானிய “எதிர்ப்பு அச்சின்” ஒரு பகுதி, தெற்கு லெபனானில் உள்ள பல்வேறு பாலஸ்தீனிய பிரிவுகளையும், பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியான தஹியேவில் உள்ள ஹமாஸ் பணியகத்தையும் ஆதரிக்கிறது.

லெபனானுக்குள் இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை மீறி பொதுமக்கள் வாழும் பகுதிகளில் வெள்ளைப் பொஸ்பரஸைப் பயன்படுத்துதல் மற்றும் வடக்கு இஸ்ரேலில், அதன் படைகள் மீது ஹிஸ்புல்லாவின் தாக்குதல்கள் ஆகியவை கிட்டத்தட்ட தினசரியாக நடந்து வருகின்றன. ஆனால் இதுவரை, ஹிஸ்புல்லா இஸ்ரேலுடன் ஒரு முழு அளவிலான போரைத் தடுக்க அதன் நடவடிக்கைகளை அளவீடு செய்துள்ளது. அதன் தலைவர் ஹசன் நஸ்ரல்லா மோதல் தீவிரமடைவதைத் தவிர்க்க தனது பொது அறிக்கைகளில் கவனமாக இருந்தார். ஜனவரி மாதம் பெய்ரூட்டில் உள்ள ஹமாஸின் அரசியல் அலுவலகத்தின் மூத்த அதிகாரியும் அதன் இராணுவப் பிரிவின் தளபதியுமான சலே அல்-அரூரி மற்றும் ஒரு முக்கிய ஹிஸ்புல்லா பிரமுகரும் அதன் ரத்வான் உயரடுக்குப் படையின் உறுப்பினருமான விஸ்ஸாம் தவில் ஆகியோரைக் கொன்ற இஸ்ரேலின் இலக்குத் தாக்குதல்கள் இருந்தபோதிலும் இது நடந்துள்ளது.

மே 2000 இல் இஸ்ரேலிய பின்வாங்கலுக்குப் பிறகு நஸ்ரல்லா உரை நிகழ்த்துகிறார். [Photo by Khamenei.ir / CC BY 4.0]

குண்டு வீச்சுக்களால் எல்லைக்கு அருகில் வசிக்கும் சுமார் 76,000ம் லெபனானியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஹிஸ்புல்லாவின் கோட்டையாக இருக்கும் தெற்கு லெபனானில், வறுமையான ஷியா மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களினால், குறைந்தது 426 கிராமப்புறங்கள் சேதமடைந்தும், விவசாய நிலங்களின் பெரும் பகுதிகள் எரிந்தும் உள்ளன. விவசாயிகள் தங்கள் பயிர்களை அறுவடை செய்ய முடியாத நிலையில் உள்ளனர். அக்டோபர் 8 முதல் 170 க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா போராளிகளும் குறைந்தது 25 பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். 80,000ம் இஸ்ரேலியர்கள் வடக்கு இஸ்ரேலில் உள்ள நகரங்களை விட்டு வெளியேறியுள்ளனர். ஒன்பது படையினர்கள் மற்றும் ஆறு பொதுமக்கள் இஸ்ரேல் தரப்பில் கொல்லப்பட்டனர்.

ஈரானுக்கு எதிரான போருக்கான அதன் பரந்த தயாரிப்புகளின் ஒரு பகுதியாக, லெபனானில் ஒரு இராணுவ மற்றும் அரசியல் சக்தியாக இருக்கும் ஹிஸ்புல்லாவை அகற்றுவதே நெதன்யாகு மற்றும் கேலன்ட்டின் குறிக்கோள் ஆகும். 30,000ம் முதல் 50,000ம் போராளிகள் மற்றும் தாக்குதல் ட்ரோன்கள், சிறிய ஆயுதங்கள், பீரங்கிகள், டாங்கிகள் மற்றும் துல்லியமாக வழிநடத்தும் ஏவுகணைகள் ஆகியவற்றின் ஆயுதக் களஞ்சியத்தைக் கொண்ட ஹிஸ்புல்லா, ஹமாஸை விட மிகப் பெரிய இராணுவ எதிரியாகும்.

லெபனானின் துண்டாடப்பட்ட குழுவாத அரசியல் அமைப்பில், ஷியா மற்றும் பாலஸ்தீனிய கூட்டாளிகளுடன், ஹிஸ்புல்லா மிகப்பெரிய கூட்டமாக உள்ளது. ரியாத் சலாமே உட்பட 1990 இல் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததில் இருந்து நாட்டை ஆட்சி செய்த ஒரு சில பில்லியனர்கள் நாட்டின் செல்வத்தை கொள்ளையடிப்பதன் மூலம் ஏழைகள் மற்றும் வறுமைக்குள் தள்ளப்பட்ட மக்களின் ஆதரவை அது பெற்றுள்ளது. மூன்று தசாப்தங்களாக லெபனானின் மத்திய வங்கியை நடத்தி வந்த சலாமே, நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் பணமோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் பல ஐரோப்பிய நாடுகளால் தேடப்படுகிறார். லெபனான் பவுண்ட் 2019 முதல் அதன் மதிப்பில் 98 சதவீதத்திற்கும் மேலாக இழந்துள்ளது, அதன் கருப்புச் சந்தை விலை மார்ச் நடுப்பகுதியில் அமெரிக்க டாலருக்கு 140,000 ஐ எட்டியது, இது உலகின் மிக உயர்ந்த உணவு விலை பணவீக்கத்திற்கு வழிவகுத்தது. பிப்ரவரி 2022 மற்றும் 2023 க்கு இடையில், லெபனான் மூன்று இலக்க பணவீக்கத்தைத் தொடர்ந்து 261சதவீதம் விலை உயர்வைக் கண்டது.

லெபனானின் பெய்ரூட்டில், “வங்கியின் ஆட்சி வீழ்க” என்று அரபு மொழியில் எழுதப்பட்ட பதாகையை ஒரு எதிர்ப்பு போராட்டக்காரர் வைத்திருக்கின்றார். Friday, Feb. 26, 2021.

ஹிஸ்புல்லாவை ஒழிப்பது என்பது, முதல் உலகப் போரில் ஒட்டோமான் பேரரசு தோற்கடிக்கப்பட்ட பின்னர், அகண்ட சிரியாவில் இருந்து பிரான்சால் உருவாக்கப்பட்ட இந்த சிறிய லெபனான் அரசின் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு எதிரான அனைத்து வெகுஜன எதிர்ப்பையும் இல்லாது ஒழிப்பதாகும். ரஷ்யா மற்றும் சீனாவுடனான அதன் இருத்தலியல் போராட்டத்தின் முக்கிய அங்கமாக, தெஹ்ரான் மீது முழு அளவிலான போரைத் தொடங்குவதற்கு முன்னர், ஈரான் மற்றும் அதன் நட்பு போராளிகள் மற்றும் ரஷ்யாவை சிரியாவிலிருந்து வெளியேற்றுவதை நோக்கமாகக் கொண்ட அதன் பரந்த தாக்குதலின் வேட்டையாடும் குதிரையாக இஸ்ரேலுடன் பைடென் நிர்வாகத்தின் தொடக்க நடவடிக்கை இருக்கிறது.

பிரமாண்டமான உள் சமூக முரண்பாடுகளால் சூழப்பட்ட ஏகாதிபத்திய சக்திகள், இந்த உள் பதட்டங்களை வெளிப்புற எதிரியை நோக்கி செலுத்த முயற்சிக்கின்றன. இந்தப் போர்கள் ஜனநாயக உரிமைகள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களுக்கும் உள்நாட்டு அரசியல் எதிர்ப்பை சட்டவிரோதமாக்குவதற்கும் அடிப்படையை வழங்குகின்றன.

சவூதி அரேபியா, எகிப்து, கத்தார் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன், ஈரானிய ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லாவிற்கு எதிராக தங்கள் கரத்தை வலுப்படுத்தும் முயற்சியில், லெபனானில் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக உள்ள சில பாசிச கிறிஸ்தவ மற்றும் சுன்னி பிரிவுகள் மற்றும் ஆயுதப் படைகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. அவர்களின் நோக்கங்கள் இஸ்ரேலுக்கான ஆதரவைத் திரட்டுவது, பங்கேற்பாளர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய லெபனான் ஜனாதிபதியின் தேர்வை ஒப்புக்கொள்ளும்படி ஹிஸ்புல்லாவை கட்டாயப்படுத்துவது மற்றும் தெற்கு லெபனானில் இருந்து ஹிஸ்புல்லாவின் படைகளை அகற்றுவதாகும்.

2022 அக்டோபரில் மைக்கேல் அவுன் தனது பதவிக் காலத்தின் முடிவில் பதவியை விட்டு வெளியேறியதில் இருந்து, நாட்டில் ஒரு ஜனாதிபதி இல்லை. இது மே 2022 தேர்தலுக்குப் பிறகு அரசாங்கத்தை ஒன்றிணைக்க முடியாத லெபனானின் செல்வந்தரான நஜிப் மிகாட்டி தலைமையிலான லெபனானின் காபந்து அரசாங்கத்தை முடக்கியது. நாடு தனது சர்வதேசக் கடன்களைத் திருப்பிச் செலுத்தாத நிலையில், சட்டம் அல்லது வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற அவருக்கு அதிகாரம் இல்லை. அதன் கடன்களை மறுசீரமைப்பதற்காக சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச வங்கிகள் கோரும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு மிகவும் குறைவான உடன்பாடே உள்ளது.

2013 உலகப் பொருளாதார மன்றத்தில் நஜிப் மிகாதி [Photo by World Economic Forum from Cologny, Switzerland - Transformations in the Arab World: Najib Mikati/Uploaded by January / CC BY-SA 2.0]

இஸ்ரேலில் பிறந்து, இஸ்ரேல் தற்காப்புப் படையில் கவச வாகனப் பிரிவில் பணியாற்றிய அமெரிக்கத் தூதர் அமோஸ் ஹோச்ஸ்டீன், இஸ்ரேலுடனான எல்லையிலிருந்து வடக்கே 18 மைல் தொலைவில் உள்ள லிட்டானி ஆற்றின் தொலைவில் உள்ள ஹிஸ்புல்லா போராளிகளை, அங்கிருந்து அகற்றுவதை கட்டாயப்படுத்தும் முயற்சியில் அவர் பெய்ரூட்டுக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், ஆக்கிரமிக்கப்பட்ட லெபனான் நிலங்களில் இருந்து (இஸ்ரேல், லெபனான் மற்றும் சைரா எல்லையில் 13 சர்ச்சைக்குரிய பகுதிகள் உள்ளன) இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்றும், லெபனான் இறையாண்மையை மீறுவதை நிறுத்த வேண்டும் என்றும் லெபனான் வலியுறுத்தியுள்ளது.

லெபனான் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பாலஸ்தீனிய சார்பு மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான உணர்வுகளை அடக்குவதற்கு, லெபனான் மீதான இஸ்ரேலின் போர், நாட்டின் அரசியல் மறுசீரமைப்பை முன்தள்ளுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் வறுமையில் வாழ்கின்றனர். மேலும் வலதுசாரி, அமெரிக்க சார்பு சக்திகளான கிறிஸ்டியன் ஃபாலாஞ்சே மற்றும் லெபனான் படைகள் மற்றும் சுன்னி மதக் கட்சிகள் சிரிய/சவுதி அரேபியாவிற்கு ஆதரவான மார்ச் 14 கூட்டணியின் பலத்தை இந்தப் போர் வலுப்படுத்துகின்றது.

நவம்பர் 2022 தேர்தலில் சியோனிசப் பிரிவுகளின் மிகத் தீவிர வலதுசாரிகள் ஆட்சிக்கு வருவதால், இஸ்ரேல் அரசியல் தீர்வுகளுக்கான அனைத்து முயற்சிகளையும் நிராகரித்து, தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களை விரிவுபடுத்துதல் மற்றும் பயங்கரவாதத்தை ஒழித்தல் போன்ற அதன் நீண்டகால இலக்குகளை அடைய இராணுவ சக்தியை விரும்புகிறது. இது ஈரானுக்கு எதிரான எதிர்கால இராணுவத் தலையீட்டிற்கான பைடென் நிர்வாகத்தின் தயாரிப்புகளுடன் ஒத்துப்போகிறது.

லெபனானில் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தலையீடுகள்

இஸ்ரேலின் முதல் பிரதம மந்திரி டேவிட் பென்-குரியன் காலத்திலிருந்து, லெபனானில் ஒரு கிறிஸ்தவ அரசை ஸ்தாபிப்பதை ஆதரிப்பதில் ஆர்வத்துடன் லெபனானை ஒரு மெய்நிகர் பாதுகாப்பாளராக மாற்ற இஸ்ரேல் நீண்ட காலமாக முயன்று வருகிறது. பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான 1948 அரபு-இஸ்ரேல் போரின் போது, சியோனிஸ்டுகளுடன் நீண்டகாலமாக இணைந்திருந்த வலதுசாரி மரோனைட் கட்சிகள், குறுகிய காலத்தில் ஒரு படையை அனுப்பியது.

லெபனான் பங்கேற்காத 1967 அரபு இஸ்ரேலியப் போருக்குப் பிறகு, யாசிர் அராபத் மற்றும் அவரது ஃபத்தா இயக்கம் பாலஸ்தீன விடுதலை அமைப்பின் (PLO) தலைமையை ஏற்றுக்கொண்ட பிறகு, லெபனானில் இருந்து இஸ்ரேலுக்குள் தாக்குதல்களை நடத்தத் தொடங்கிய PLO, லெபனானில் இருந்த பாலஸ்தீனிய அகதிகள் முகாம்களைக் கட்டுப்படுத்தியது. ஆதலால், PLO க்கு எதிராக லெபனான் மக்களைத் தூண்டுவதற்காக, லெபனான் கிராமங்களுக்கு எதிராக, இஸ்ரேல் பழிவாங்கும் தாக்குதலை தொடுத்தது. 1970 இல், இஸ்ரேலின் உதவியுடன் ஜோர்டானிலிருந்து வெளியேற்றப்பட்ட PLO, அதன் தளத்தை லெபனானுக்கு மாற்றிய பின்னர் இந்த தாக்குதல்கள் தீவிரமடைந்தது.

யாசர் அராபத் 1997 இல் [Photo by Government Press Office (Israel) / CC BY-SA 3.0]

ஒரு ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற தேசத்தை நோக்கிய ஆயுதப் போராட்டத்திற்கான அதன் உறுதிப்பாட்டைத் தவிர, பாலஸ்தீனிய மற்றும் லெபனான் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு PLO எந்த அரசியல் அல்லது சமூக வேலைத்திட்டத்தையும் உருவாக்கவில்லை. அத்தோடு, சர்வதேச தொழிலாள வர்க்கத்திடம் இருந்து அல்ல மாறாக, பாலஸ்தீனியர்களுக்கு மீண்டும் மீண்டும் துரோகம் செய்து வருகின்ற முதலாளித்துவ அரபு ஆட்சிகளின் ஆதரவை PLO நாடியது. PLO ஒரு உண்மையான மக்கள் இயக்கமாக இருந்தும், அதன் அணிகளில் பல்வேறு சமூகப் போக்குகளைக் கொண்டிருந்தாலும், அதன் முதலாளித்துவ வேலைத்திட்டத்தால் அது சார்ந்திருந்த அரபு ஆட்சிகளின் துரோகத்தால், பாலஸ்தீனிய மக்கள் வழிநடத்தப்பட்ட அரசியல் முட்டுக்கட்டையிலிருந்து ஒருபோதும் தப்ப முடியவில்லை.

1978 ஆம் ஆண்டு, இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் (மிக முக்கியமான அரபு நாடு) இடையிலான சமாதான உடன்படிக்கையின் மூலம் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி இஸ்ரேல் லெபனானை ஆக்கிரமிப்பதன் மூலம் மத்திய கிழக்கில் ஒரு புதிய ஒழுங்கை உருவாக்கத் தொடங்கியது. PLO தலைமையை அழிப்பதும், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை இஸ்ரேலுடன் நிரந்தரப் பொருளாதார ஒருங்கிணைப்பு செய்வதும், அப்பகுதியில் சிரியாவின் பலத்தை அழித்து, லெபனானில் வலதுசாரி கிறிஸ்தவ அரசாங்கத்தை நிறுவுவதும் அதன் இலக்காக இருந்தது.

PLOவின் பயங்கரவாத நடவடிக்கைக்கு ஒரு பிரதிபலிப்பாக அதன் நடவடிக்கைகளை நியாயப்படுத்தி, மார்ச் 1978 இல், லெபனான் உள்நாட்டுப் போரின் போது, ​​இஸ்ரேல் ராணுவப் படைகளை எல்லை தாண்டி அனுப்பியது. 2,000 க்கும் மேற்பட்ட லெபனான் மக்களுக்கு மரணங்களை விளைவித்த, அதன் இராணுவ நடவடிக்கைகள், சர்வதேச அழுத்தத்தால் திரும்பப் பெறப்பட்டாலும், அதன் பினாமியான மேஜர் சாத் ஹடாட்டின் தலைமையின் கீழ், தெற்கு லெபனான் இராணுவம் என்று அழைக்கப்பட்ட வலதுசாரி ஆயுததாரிகளுக்கு நிதியளிப்பதன் மூலம் எல்லைக்கு வடக்கே 12 மைல் தூரத்தை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 1982 இல், இஸ்ரேலிய பிரதம மந்திரி மெனகெம் பெகின் மற்றும் அவரது பாதுகாப்பு மந்திரி ஏரியல் ஷரோன், லெபனான் முழுவதையும் அரசியல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும், PLO வை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கும் ஒரு லட்சிய திட்டத்தைத் தொடங்கினர்.

மீண்டும் ஒருமுறை, ஜூன் 1982 இல் ஒரு பாலஸ்தீனிய கொலையாளியால் லண்டனில் இஸ்ரேலிய தூதர் காயமடைந்தபோது ஒரு சாக்குப்போக்கு கண்டுபிடிக்கப்பட்டது. PLO க்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உளவுத்துறை நிபுணர்கள் ஒப்புக்கொண்டாலும், பெகின் அரசாங்கம் லெபனானை ஆக்கிரமித்தது. “கலிலிக்கு அமைதி” என்று தலைப்பிடப்பட்ட இராணுவ நடவடிக்கையில், வடக்கே தலைநகர் பெய்ரூட்டின் புறநகர்ப் பகுதிகளை நோக்கிச் சென்ற இஸ்ரேலிய துருப்புக்கள், லெபனான் மீது தொடர்ச்சியான குண்டுவீச்சு தாக்குதலை மேற்கொண்டன. இந்தப் போர் லெபனானில் இருந்து PLO வை வெளியேற்ற கட்டாயப்படுத்தியதோடு, இஸ்ரேலின் ஆதரவுடன் லெபனான் பாசிச குண்டர்கள், 1982 இல் சப்ரா மற்றும் ஷட்டில்லா அகதிகள் முகாமில் இருந்த 3,500 பாலஸ்தீனிய அகதிகளை படுகொலை செய்தனர்.

சப்ரா மற்றும் ஷதிலா அகதிகள் முகாம்களில் கிறிஸ்டியன் ஃபாலாங்ஜிஸ்டுகள் மற்றும் தெற்கு லெபனான் இராணுவத்தின் உறுப்பினர்களால் படுகொலைகள் நடத்தப்பட்டது. இஸ்ரேலிய அமைச்சரவை மற்றும் பாதுகாப்புப் படைகளின் மூத்த தளபதிகளின் உடந்தையுடன் லெபனான் படைகளால் பாலஸ்தீனியர்கள் மீது படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டன. [Photo: Robin Moyer, USA, Black Star for Time. Beirut, Lebanon, 18 September 1982. ]

பெய்ரூட்டில் கடற்படையினரை ரீகன் நிர்வாகம் நிறுத்தியதன் மூலம், அமெரிக்கா லெபனானை அடிபணியச் செய்வதில் ஈடுபட்டது. பெய்ரூட்டின் ஏழ்மையான சுற்றுப்புறங்கள் மீதான தாக்குதல்களில் அமெரிக்கா ஈடுபட்டதின் காரணமாக, (இப்பகுதிகளை அமெரிக்க போர்க்கப்பல்கள் குண்டு வீசித் தாக்கின) ஆழ்ந்த விரோதத்தை உருவாக்கியது, 1983 இல், பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் 52 லெபனான் மற்றும் தூதரக ஊழியர்கள் உட்பட 63 பேர் கொல்லப்பட்டனர். ஒரு மாதத்திற்குப் பிறகு, இரண்டு டிரக் குண்டுகள் அமெரிக்க கடற்படையினரைத் தாக்கியதில், 307 பேர் கொல்லப்பட்டனர். சிறிது காலத்திற்குப் பிறகு, ரீகன் நிர்வாகம் அதன் இழப்புகளை குறைப்பதற்காக லெபனானில் இருந்து தமது படைகளை விலக்குவதற்கு முடிவு செய்தது.

அரசியல் மற்றும் இராணுவ சக்தியாக ஹிஸ்புல்லாவின் எழுச்சி

இஸ்ரேலிய ஆட்சி தெற்கு லெபனானின் கணிசமான பகுதியை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க முயன்றது. ஆக்கிரமிப்பிற்கு எதிரான மக்கள் எதிர்ப்பில் இருந்துதான் ஹிஸ்புல்லா ஒரு இராணுவ மற்றும் அரசியல் சக்தியாக உருவெடுத்தது. ஹிஸ்புல்லா தலைமையிலான கெரில்லா போர் இறுதியில் 2000 ஆம் ஆண்டில் இஸ்ரேலை அதன் படைகளை விலக்கிக் கொள்ள நிர்ப்பந்தித்தது. இருப்பினும் எல்லை தாண்டிய தாக்குதல்கள் தொடர்ந்தன.

இஸ்ரேலின் ஆளும் உயரடுக்கிற்கு, ஹிஸ்புல்லாவும் லெபனானும் முடிவுறாத வணிகமாகும். 1980 களில் இஸ்ரேலுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட இஸ்லாமிய எதிர்ப்பாக ஹிஸ்புல்லா என்ற கடவுள் கட்சி உருவாக்கப்பட்டது. 1975-90 களில் லெபனானை இஸ்ரேல் ஆக்கிரமித்த போது, போட்டியிடும் பிராந்திய சக்திகளான பிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு லெபனானின் உள்நாட்டுப் போர் பினாமப் போராக செயல்பட்டது.

வெறுக்கப்பட்ட அமெரிக்க ஆதரவுடைய ஷா ரெசா பஹ்லேவி சர்வாதிகாரத்தை அகற்றிய 1979 ஈரானியப் புரட்சியைத் தொடர்ந்து அதிகாரத்திற்கு வந்த ஈரானின் மத ஆட்சி மற்றும் சிரியாவினால் ஹிஸ்புல்லா ஆதரிக்கப்பட்டது. இது, லெபனானுக்குள், வரலாற்று ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் கிறிஸ்தவ, சன்னி மற்றும் ட்ரூஸ் பிரிவுகளால் பாகுபாடு காட்டப்பட்ட ஏழ்மையான மற்றும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களில் ஒன்றான ஷியா மக்களிடம் இருந்து ஆதரவை பெற்றது.

தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா போராளிகள், மே 2023 [Photo by Tasnim News Agency / CC BY 4.0]

அத்தோடு, லெபனானில் இருந்து அமெரிக்க, பிரெஞ்சு மற்றும் நட்பு நாடுகளின் நலன்களை வெளியேற்றவும், அவர்களின் அடிமைகளின் அதிகாரத்தை மட்டுப்படுத்தவும் (சில கிறிஸ்தவ கட்சிகள்) ஹிஸ்புல்லா அழைப்பு விடுத்ததோடு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக கொரில்லா தாக்குதலையும் தொடங்கியது. லெபனான் வணிகக் குழுக்கள் மற்றும் முதலாளித்துவப் பிரமுகர்கள், லெபனானில் இருந்து புலம்பெயர்ந்தோர் மற்றும் ஈரான் மற்றும் சிரியாவில் இருந்து கிடைத்த பணம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, இதர மதக் குழுக்களைப் போல வசதிகள் மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத ஷியாக்களுக்கு முக்கிய நலன்புரி சேவைகளையும் ஹிஸ்புல்லா வழங்கியது. இது வர்க்கப் போராட்டத்திற்கு எதிர் எடையாக கார்ப்பரேட்டிசம் மற்றும் தந்தைவழி வாதத்துடன் இதை இணைத்தது.

இந்த பிற்போக்குத்தனமான சித்தாந்தமானது, மத அறியாமை மற்றும் ஆயுதப் போராட்டத்தை இணைத்து, லெபனான் மக்களுக்கு எந்த வழியையும் வழங்கவில்லை. மதச்சார்பற்ற அரபு முதலாளித்துவ தேசியவாதத்தின் தோல்வி மற்றும் ஸ்ராலினிசத்தால் ஏற்படுத்தப்பட்ட திணறல் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கான உண்மையான சோசலிச அரசியலுக்கு மாற்றாக, அதன் கருத்தியல் கிளைகள் ஆகியவற்றால் மட்டுமே ஹிஸ்புல்லாவால் முக்கியத்துவம் பெற முடிந்தது.

ஹிஸ்புல்லாவின் செல்வாக்கு வளர்ந்தது, குறிப்பாக தைஃப் உடன்படிக்கைகள் 1990 இல் சிரிய ஆட்சியின் கீழ் லெபனானின் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. லெபனான் மீதான சிரிய ஆதிக்கத்தை ஒழிப்பதற்காகவே, அமெரிக்கா 2005 இல் சிடார் புரட்சியை ஏற்பாடு செய்தது. இது, மரோனைட் கிறிஸ்தவப் படைகள் மற்றும் வாஷிங்டன், சவுதி அரேபியா மற்றும் பிரான்சுடன் இணைந்த பிற லெபனான் கட்சிகளை நம்பியிருந்தது.

பிப்ரவரி 14, 2005 அன்று முன்னாள் லெபனான் பிரதம மந்திரி ரஃபிக் ஹரிரி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து லெபனானில் ஆர்ப்பாட்டங்கள் தூண்டப்பட்டன. [Photo by Elie Ghobeira / CC BY-SA 3.0]

பிப்ரவரி 2005 இல், முன்னாள் பிரதம மந்திரி ரஃபிக் ஹரிரியின் படுகொலையைப் பயன்படுத்திய புஷ் நிர்வாகம், இப்படுகொலை சிரியாவால் திட்டமிடப்பட்டதாக குற்றம் சாட்டியதோடு, 1976 முதல் லெபனானை ஆக்கிரமித்திருந்த சிரிய துருப்புக்களை அகற்றி, அமெரிக்க சார்பு அரசாங்கத்தை உருவாக்க ஏற்பாடு செய்தது. 1984 இல் லெபனானில் இருந்து அமெரிக்கா வெளியேறியதைத் தொடர்ந்து, அமெரிக்கக் குடிமக்களைக் கடத்துவதையும் படுகொலை செய்வதையும் நிறுத்திக் கொண்ட ஹிஸ்புல்லாவை பயங்கரவாத அமைப்பாக புஷ் நிர்வாகம் அறிவித்தது. புதிய அரசாங்கம் தனது அமைச்சரவையில் ஹிஸ்புல்லாவையோ அல்லது அதன் வேட்பாளர்களையோ இணைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதால், ஹிஸ்புல்லாவின் பலம் இன்றுவரை தொடர்கிறது.

சிடார் புரட்சியின் வரையறுக்கப்பட்ட முடிவுகளை மாற்றியமைக்கும் முயற்சியில் இஸ்ரேல் ஜூலை 2006 இல் லெபனான் மீது போரை அறிவித்தது. இரண்டு வருட தயாரிப்புகள் மற்றும் 160 இஸ்ரேலியர்களுடன் ஒப்பிடும்போது லெபனானின் சிவிலியன் உள்கட்டமைப்பின் பெரும்பகுதியை அழித்து 1,200 லெபனான் மக்களைக் கொன்ற ஆயுத பலத்தின் பாரிய பயன்பாடு இருந்தபோதிலும், கைப்பற்றப்பட்ட இரண்டு படையினர்களை விடுவிப்பது மற்றும் ஹிஸ்புல்லாவை இஸ்ரேலுக்குள் ராக்கெட்டுகளை வீசுவதை நிறுத்துவது போன்ற அதன் அறிவிக்கப்பட்ட நோக்கங்களை இஸ்ரேலால் அடைய முடியவில்லை. லெபனானுக்குள் ஒரு சண்டை மற்றும் அரசியல் சக்தியாக இருக்கும் ஹிஸ்புல்லாவை ஒழித்தல் என்பது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அடிமையாக லெபனானை வைத்திருப்பதுடன், இறுதியில் சிரியா மற்றும் ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதை இலக்காக கொண்டிருக்கிறது.

ஹிஸ்புல்லா லெபனான் மக்களில் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவினரிடையே போருக்கான பரந்த ஆதரவைத் திரட்ட முடிந்ததன் மூலம், இஸ்ரேலிய இராணுவம் முன்னேறுவதையோ அல்லது வடக்கு இஸ்ரேலிய நகரங்களுக்கு எதிரான பதிலடி குண்டு வீச்சுக்களை நிறுத்துவதையோ சாத்தியமற்றதாக்கியது. ஒரு மாதப் போருக்குப் பிறகு, இஸ்ரேலும் புஷ் நிர்வாகமும் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் ஆதரவு போர்நிறுத்தத்திற்கு உடன்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், இது இஸ்ரேலுக்கு ஒரு தோல்வியாக பரவலாகக் காணப்பட்டது.

பிராந்தியத்தில் அமெரிக்காவின் போர் திட்டங்கள்

லெபனானுக்கு எதிரான இஸ்ரேலின் அச்சுறுத்தல்கள், பிப்ரவரி 2 முதல் ஈராக், சிரியா மற்றும் யேமனில் உள்ள 100க்கும் மேற்பட்ட ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவலர் குட்ஸ் படை (IRGC) மற்றும் ஈரானிய ஆதரவு போராளிகளின் இலக்குகளை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தாக்கியுள்ள நிலைமையில் வந்துள்ளது.

IRGC மற்றும் ஈரானிய ஆதரவு போராளிக் குழுக்களின் செயல்பாடுகள் மற்றும் உளவுத்துறை மையங்கள், ராக்கெட்டுகள், ஏவுகணைகள், ட்ரோன் சேமிப்பு வசதிகள் மற்றும் “தளவாடங்கள் மற்றும் வெடிமருந்து விநியோகச் சங்கிலி வசதிகள்” ஆகியவற்றை அமெரிக்கா குறிவைத்துள்ளது.

இஸ்ரேலின் வடக்கே, லெபனானின் எல்லைக்கு அருகில், தானியங்கி ஹோவிட்ஸர் பீரங்கியால் இஸ்ரேலிய படையினர்கள் சுடுகின்றனர். திங்கட்கிழமை, ஜன. 15, 2024. [AP Photo/Ohad Zwigenberg]

இந்த தாக்குதல்கள் அரபு உலகின் ஏழ்மையான நாடான யேமன் மீது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நடத்திய முந்தைய தாக்குதல்களைத் தொடர்ந்து வந்துள்ளது. 2014 இல் ஹவுதிகளால் வெளியேற்றப்பட்ட பின்னர், ரியாத்தின் பாதுகாப்பில் இருப்பவரை மீண்டும் நாட்டின் மீது திணிப்பதை நோக்கமாகக் கொண்டு, வாஷிங்டன் மற்றும் லண்டனின் உதவி மற்றும் ஆதரவுடன், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பேரழிவுகரமான போருக்கு யேமன் உட்பட்டுள்ளது. டிசம்பரில், பைடென் நிர்வாகம், செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் யேமனில் உள்ள ஹவுதிகளைக் குறிவைத்து, ஆபரேஷன் ப்ராஸ்பெரிட்டி கார்டியன் (Prosperity Guardian) என்ற கடற்படை நடவடிக்கையின் தொடக்கத்தை அறிவித்தது. அமெரிக்கா இரண்டு விமானம் தாங்கி போர்க் கப்பல் அணிகளின் தலைமையில் ஏறக்குறைய 20 போர்க் கப்பல்களை மத்திய கிழக்கிற்கு அனுப்பியது.

இது, ஈரானுக்கு எதிரான ஒரு நடைமுறைப் போராகும். இது, மத்திய கிழக்கு முழுவதிலும் உள்ள ஈரானின் இராணுவக் கூட்டாளிகளை அகற்றுவதையும், அதனைச் சுற்றி வளைப்பதையும், தெஹ்ரானுக்கு எதிரான முழு அளவிலான போரை நியாயப்படுத்தப் பயன்படும் வகையில், அமெரிக்கப் படைகளுக்கு எதிராக பதிலடியைத் தூண்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மத்திய கிழக்கில் ஒரு பரந்த அமெரிக்க யுத்தக் கப்பல் அணிவகுப்பின் ஒரு பகுதியாக, விமானம் தாங்கி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் டுவைட் டி. ஐசன்ஹோவர் மற்றும் பிற போர்க்கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து பாரசீக வளைகுடாவுக்குள் செல்கின்றன. on Sunday, Nov. 26, 2023 [AP Photo/Information Technician Second Class Ruskin Naval/U.S. Navy ]

கடந்த செப்டம்பர் மாதம், அமெரிக்க வெளியுறவுத்துறை 85 மில்லியன் டாலர் எகிப்துக்கான உதவியை மீளெடுத்து, 55 மில்லியன் டாலர் தைவானுக்கும், 30 மில்லியன் டாலர் லெபனானின் ஆயுதப் படைகளுக்கும் கொடுத்தது. “நாடு எதிர்கொள்ளும் சிக்கலான நெருக்கடிகளிலிருந்து உருவாகும் பாதுகாப்பு சவால்கள் காரணமாக அதன் இயல்பான பணிகளுக்கு அப்பால் பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட” லெபனான் ஆயுதப் படைகளுக்கு ஆதரவளிப்பது மிகவும் “முக்கியமானது” என்று வெளியுறவுத்துறை கூறியது. ஆகஸ்ட் 2020 இல் பேரழிவுகரமான பெய்ரூட் துறைமுக வெடிப்பில் சேதமடைந்த லெபனானின் கடற்படைத் தளத்தை புனரமைப்பதில் அமெரிக்க இராணுவம் ஏற்கனவே ஈடுபட்டுள்ளது.

வாஷிங்டனின் நோக்கங்களை யாரும் சந்தேகிக்காத வகையில், ஒரு சிறிய நாடான லெபனானில் இரண்டாவது பெரிய அமெரிக்க தூதரகத்தை வாஷிங்டன் கட்டி வருகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெய்ரூட் நகரத்திலிருந்து எட்டு மைல் தொலைவில் அமைந்துள்ள இந்த தூதரகத்தின் புதிய வளாகம், 43 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து, $1.2 பில்லியன் டொலர் செலவில் விமான நிலையம், பொழுதுபோக்கு இடங்கள், தூதரக கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு அலகுகளைக் கொண்டுள்ள ஒரு நகரம் போல் காட்சியளிக்கிறது. “பயங்கரவாதத்தின் மீதான உலகளாவிய போரைப்” போன்று, “எதிர்ப்பின் அச்சை” எதிர்கொள்வதற்கான அமெரிக்காவின் குறிக்கோளானது, இப்பிராந்தியத்தை கட்டுப்படுத்துவதற்கான அமெரிக்கத் திட்டங்களின் ஒரு வெளிப்பாடாகும்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

மத்திய கிழக்கு முழுவதும் அதன் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் விருப்பமான கருவியாக இப்போது யுத்தம் உள்ளது. இதற்கு, இஸ்ரேலிய தொழிலாளர்கள் உட்பட மத்திய கிழக்கு மக்கள் இரத்தம் தோய்ந்த விலையை கொடுக்கின்றனர். இந்த அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு, ஏகாதிபத்திய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுப்பதற்கு, அனைத்து வகையான தேசியவாதத்தின் தோல்வி மற்றும் பிராந்தியத்தை போட்டி தேசிய-அரசுகளாகப் பிரித்ததில் இருந்து அடிப்படைப் பாடங்களைக் கற்றுக்கொள்வது அவசியமாகும்.

மத்திய கிழக்கின் ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டத்திற்கு, ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் ஏகாதிபத்திய மையங்களில் உள்ள தொழிலாளர்களுடன் ஒரு கூட்டணியை உருவாக்கி, தேசிய, இன மற்றும் மதப் பிளவுகளுக்கு அப்பால் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த வேண்டும். இத்தகைய நடவடிக்கை கொள்ளையடிக்கும் ஏகாதிபத்திய சக்திகளை வெளியேற்றி, பிராந்தியத்தின் அற்புதமான வளங்களை ஏழை தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் சேவையில் வைக்கும். இது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் மட்டுமே முன்வைக்கப்பட்ட முன்னோக்கு ஆகும்.

Loading