முன்னோக்கு

போயிங் பற்றிய தகவலை அம்பலப்படுத்திய ஜோன் பார்னெட்டின் சந்தேகத்திற்குரிய "தற்கொலை"

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

போயிங் பற்றிய தகவலை அம்பலப்படுத்திய 62 வயதான விண்வெளி நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஜோன் “மிட்ச்” பார்னெட்டினுடைய மரணம், அவர் தங்கியிருந்த ஹோட்டல் லாபியில் நிறுத்தப்பட்டிருந்த டிரக்கில் இறந்து கிடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் தற்கொலை செய்துகொண்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தக் கதையை கேள்வி கேட்க ஏராளமான காரணங்கள் உள்ளன.

அவர் தகவலை வழங்கிய காலத்தில், தென் கரோலினாவின் சார்லஸ்டனில், போயிங்கிற்கு எதிராக அவர் தொடர்ந்த ஒரு சிவில் வழக்கிற்கு சாட்சியமளித்துக்கொண்டிருந்தார். பார்னெட் தனது 32 ஆண்டுகால வாழ்க்கையில் ஒரு தரக் கட்டுப்பாட்டு மேலாளராக போயிங்கில் பணிபுரிந்தார். இதன் போது அவர் போயிங்கின் 787 ட்ரீம்லைனர் வணிக விமானத்தின் பாதுகாப்பு குறித்து பல தீவிரமான கேள்விகளை எழுப்பினார். பணியில் இருக்கும் போது அவரை துன்புறுத்தியதாகவும், பதவி உயர்வுகளை நிறுத்தியதாகவும், இறுதியில் அவர் ஓய்வு பெறுவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே நிறுவனத்தை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தியதாகவும் இந்த வழக்கில் போயிங் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2022 Netflix ன் ஆவணப்படத்தில் ஜோன் பார்னெட், “Downfall: போயிங்கிற்கு எதிரான வழக்கு.” [Photo: Netflix]

பார்னெட் தனது வாக்குமூலத்தின் இரண்டு நாட்களை, மார்ச் 7 மற்றும் மார்ச் 8 ஆகிய தேதிகளில் முடித்தார். மேலும் அவரது வழக்கறிஞர்கள் ராப் டர்க்விட்ஸ் மற்றும் பிரையன் நோல்ஸ் ஆகியோரின் கூற்றுப்படி, அவர் சோர்வாக இருந்ததாகவும், ஆனால் அவரது மூன்றாவது மற்றும் கடைசி நாள் சாட்சியத்தை வழங்குவதில் உறுதியாக இருந்ததாகவும் தெரிகிறது. மார்ச் 9 அன்று, அவர் நீதிமன்றத்திற்கு வரவில்லை மற்றும் அவர்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காததால், பார்னெட்டின் வழக்கறிஞர்கள் அவரைப்பற்றி அறிந்துகொள்ள, அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அழைப்பை எடுத்தனர். ஹோட்டல் ஊழியர்கள் பார்னெட் அவரது தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் இறந்து கிடப்பதைக் கண்டனர்.

சார்லஸ்டன் கவுண்டி பிரேதப் பரிசோதகர் மரணத்திற்கான காரணம் “சுயமாக ஏற்பட்ட காயம்” என்று தீர்ப்பளித்தார். மேலும், ஒரு போலீஸ் அறிக்கை, பார்னெட்டின் உடலுக்கு அருகில் “குறிப்பைப் போன்ற ஒரு வெள்ளை காகிதத்தை” அதிகாரிகள் கண்டுபிடித்ததாகக் கூறியது. இருப்பினும், பார்னெட்டின் வழக்கறிஞர்கள் தங்கள் வாடிக்கையாளரின் மரணம் தற்கொலை என்று கூறுவதை உடனடியாக மறுத்தனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கை:

அவர் தற்கொலை செய்து கொள்வதற்கான எந்த அறிகுறியையும் நாங்கள் காணவில்லை. இதனை யாராலும் நம்ப முடியாது. சார்லஸ்டன் போலீசார் இதை முழுமையாகவும் துல்லியமாகவும் விசாரித்து பொதுமக்களிடம் கூற வேண்டும். எந்த விவரத்தையும் விட்டுவிட முடியாது.

பார்னெட்டின் குடும்ப நண்பர்களில் ஒருவரான ஜெனிஃபர், மார்ச் 15 அன்று ஏபிசி துணை நிறுவனத்திடம், “எனக்கு ஏதாவது நேர்ந்தால், அது தற்கொலை அல்ல” என்று பார்னெட் எச்சரித்ததாகக் கூறினார்.

ஜெனிஃபரின் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் அறிக்கையானது, பகுத்தறிவு, நீதி மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்ட உலகில், பார்னெட்டின் மரணத்திற்கான பிற காரணங்கள் பற்றிய விசாரணைகளுக்கான தொடக்க புள்ளியாக இருக்கும். மாறாக, கடந்த பல மாதங்களாக போயிங் விமானங்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு நெருக்கமான பேரழிவுகள் குறித்து தொடர்ந்து செய்திகளை வெளியிட்டாலும், பெருநிறுவன ஊடகங்கள் பெரும்பாலும் ஜெனிஃபரின் அறிக்கையைப் புகாரளிக்கத் தவறிவிட்டன.

பார்னெட்டின் மரணம் மற்றும் அதன் விளைவுகள் என்பன, ரஷ்ய எதிர்க்கட்சி அரசியல்வாதியான அலெக்ஸி நவல்னி கடந்த பிப்ரவரியில் அவரது சிறை அறையில் இறந்து கிடந்த மரணத்துடன் ஒப்பிடப்பட வேண்டும். நவல்னியின் மரணம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் செயல் என்று எந்த ஆதாரமும் இல்லாமல் ஊடகங்களும், ஜனாதிபதி ஜோ பைடெனும் கூறுவதற்கு நேரத்தை வீணடிக்கவில்லை.

ஆயினும்கூட, போயிங்கிற்கு எதிராக தகவலை அம்பலப்படுத்திய ஒருவர், போயிங் தவறு செய்ததாக பரிந்துரைக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாக கூறும்போது, ​​​​அந்த ஆதாரம் புறக்கணிக்கப்படுகிறது.

2017 இல் நிறுவனத்தை விட்டு வெளியேறிய பிறகு, போயிங்கின் ஆபத்தான மற்றும் அலட்சியமான நடைமுறைகளைப் பற்றி பார்னெட் பேசிய வரலாற்றைக் கொண்டிருந்தார். பல்வேறு நேர்காணல்களில், போயிங் விமானங்களில் பயணிகளுக்கு “பேரழிவை” ஏற்படுத்தக்கூடிய தரக் கட்டுப்பாட்டை போயிங் எவ்வாறு சமரசம் செய்தது என்பதை விவரித்தார். பார்னெட்டின் கூற்றுப்படி, “லாபம் எடுப்பதே” நிறுவனத்தின் முக்கிய குறிக்கோளாகும்.

கோர்ப்பரேட் கிரைம் பத்திரிகை செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், 1997 இல் மெக்டோனல் டக்ளஸ் நிறுவனத்துடன் இணைந்ததன் மூலம் போயிங்கின் இராணுவ தொடர்புகளின் பங்கை பார்னெட் அம்பலப்படுத்தினார். நிர்வாகத்தின் “ஒட்டுமொத்த குழுவும் இராணுவத் தரப்பிலிருந்து வந்தது,” என்று அவர் கூறினார். “அவர்களின் குறிக்கோள் என்னவென்றால், நாங்கள் சார்லஸ்டனில் இருக்கிறோம், நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். குறைபாடுகளை ஆவணப்படுத்தக் கூடாது, நடைமுறைகளுக்கு வெளியே வேலை செய்ய வேண்டும் மற்றும் குறைபாடுள்ள உபகரணங்களை சரிசெய்யாமல் உபயோகிக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் எங்களுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர்” என்று அவர் தெரிவித்தார்.

அக்டோபர் 2018 மற்றும் மார்ச் 2019 இல் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களின் கொடிய விபத்துக்கள் போயிங் விமானத்தின் மிகவும் இழிவான பேரழிவுகளாக உள்ளன. விபத்துக்குள்ளாகிய இரண்டு விமானங்களில் இருந்த 346 பயணிகள் மற்றும் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். இரண்டு விபத்துகளும் ஒப்பீட்டளவில் அறியப்படாத ஒரு வன்பொருள் மற்றும் மென்பொருள் சாதனமான MCAS (The Maneuvering Characteristics Augmentation System) கருவி மூலம் ஏற்பட்டது.

கசிந்த ஆவணங்கள் மற்றும் காங்கிரஸின் விசாரணைகள், விமானியின் கட்டுப்பாட்டையும் மீறி, விமானத்தை தலைகுப்புற செய்ய கட்டாயப்படுத்துவதன் மூலம் MCAS கருவி விபத்துக்களை ஏற்படுத்தக்கூடும் என்பதை போயிங் நிர்வாகிகள் அறிந்திருந்தனர். கோர்ப்பரேட் நிறுவனமானது அதன் அனைத்து புதிய விமானங்களிலும் மென்பொருளை நிறுவுவதில் தொடர்ந்து முன்னேறியது. உயர் நிர்வாகம், விமானிகள், விமான நிறுவனங்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களிடமிருந்து இந்த அமைப்பின் இருப்பை மறைக்க, முதல் விபத்துக்குப் பிறகு கட்டாயப்படுத்தப்படும் வரை அனைத்தையும் செய்தது. ஆனால் அதற்குப் பிறகும், இரண்டாவது விபத்து வரை, Max 8 ரக விமானங்கள் பாதுகாப்பாக இருப்பதாக போயிங் வலியுறுத்தியது- இது உலகளவில் விமானம் பறக்காமல் தரையில் இருப்பதற்கு தூண்டியது.

குறைபாடுள்ள மற்றும் மரணத்தை விளைவிக்கும் ஆபத்தான விமானத்தை உருவாக்கி பயன்படுத்திய குற்றத்திற்காக எந்த ஒரு நிர்வாகியும் இதுவரை விசாரிக்கப்படவில்லை. கூட்டாட்சியின் விசாரணைகள், அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி டென்னிஸ் முய்லன்பேர்க் மற்றும் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் கால்ஹவுகன் ஆகியோரை விடுவித்தது. முய்லன்பேர்க் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த காலத்தில் 80 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக சம்பாதித்தார். மேலும் கால்ஹவுகன் 2022 இல் மட்டும் 22.5 மில்லியன் டொலர்களை சம்பாதித்தார்.

அமெரிக்க பொருளாதாரம் மற்றும் அமெரிக்க இராணுவ-தொழில்துறை வளாகத்தில் போயிங் பாரிய பங்கு வகிக்கிறது. இது நாட்டின் மிகப்பெரிய உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களில் ஒன்றாகும், மேலும் இது அமெரிக்க அரசாங்கத்தால் வாங்கப்பட்ட பரந்த அளவிலான போர் உபகரணங்களுக்கு முக்கிய விநியோகஸ்தர் ஆகும். அது தனது இலாபங்களையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களையும் தேவையான எந்த வகையிலும் பாதுகாக்கும் திறன் கொண்டது என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.

அமெரிக்க முதலாளித்துவத்தில் உள்ள ஒரு முக்கியமான சக்திக்கு எதிராக சாத்தியமான மோசமான ஆதாரங்களை வழங்குவதற்கு சற்று முன் சந்தேகத்திற்கிடமான முடிவை சந்தித்த முதலாவது நபர் பார்னெட் அல்ல.

அப்போதைய சிஐஏ இயக்குநர் ஜோன் ப்ரென்னனை விசாரிக்கும் போது பத்திரிகையாளர் மைக்கேல் ஹேஸ்டிங்ஸ் மணிக்கு 100 மைல் வேகத்தில் பயணித்த வாகனம் மரத்தில் மோதி இறந்து கிடந்தார். “ஏன் ஜனநாயகவாதிகள் அமெரிக்கர்களை உளவு பார்க்க விரும்புகிறார்கள்” என்ற அவரது கடைசி கட்டுரை, அவர் இறப்பதற்கு 11 நாட்களுக்கு முன்பு ஜூன் 7, 2013 அன்று BuzzFeed ஆல் வெளியிடப்பட்டது.

ஹிலாரி கிளிண்டனின் பிரச்சாரத்திற்கு ஆதரவாக அசாதாரண ஊழலை வெளிப்படுத்தும் 20,000 ஜனநாயக தேசியக் குழு மின்னஞ்சல்கள் கசிந்ததன் பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட ஜனநாயகக் கட்சி உறுப்பினர் சேத் ரிச், ஜூன் 2016 இல் வெளிப்படையான தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நிதியாளர் மற்றும் பாலியல் கடத்தல்காரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆகஸ்ட் 2019 இல் அவரது சிறை அறையில் இறந்து கிடந்தார். அவரது வணிகம் தொடர்பான விசாரணைகள் அமெரிக்காவிலும் உலகிலும் உள்ள உயர் மட்ட நிர்வாகிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் மோசமான உறவுகளை வெளிப்படுத்துவதாக அச்சுறுத்தியது.

எல்லா சந்தர்ப்பங்களிலும், பிரதான ஊடகங்கள் முதலாளித்துவ வர்க்கத்திற்கு அரசியல் ரீதியாக சுவையான ஒரு கதையை, குறிப்பாக, கார் விபத்து, கொள்ளை தவறாக நடந்தது, தூக்குப்போட்டு தற்கொலை போன்றவற்றை உருவாக்குகின்றன. பொலிசாரோ அல்லது தங்களை “பத்திரிக்கையாளர்கள்” என்று கூறிக்கொள்பவர்களிடமோ, இது தொடர்பாக தீவிர விசாரணையோ அல்லது பின்தொடர்வோ இல்லை.

போயிங்கின் தலைமை நிர்வாகிகள் மற்றும் ஒட்டுமொத்த அமெரிக்க முதலாளித்துவத்தின் குற்றத்தன்மையை பார்னெட் மேலும் அம்பலப்படுத்தி கூறியிருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. கூட்டாட்சி கட்டுப்பாட்டாளர்களால் ஒவ்வொரு மட்டத்திலும் பாதுகாக்கப்படுவதால் மட்டுமே வணிக மற்றும் இராணுவ விமான நிறுவனமானது வணிகத்தில் உள்ளது. அதன் கொடிய நடைமுறைகளுக்கான தண்டனைகள் மணிக்கட்டு கையால் அறைவதை விட குறைவாக இருக்கும். மேலும், விமானம் போன்ற சிக்கலான இயந்திரங்களை உற்பத்தி செய்ய அனுமதிக்கும் சட்டங்களை வடிவமைக்கும் அரசியல்வாதிகளால் அடிப்படையில் எந்த மேற்பார்வையும் மேற்கொள்வது கிடையாது.

இந்த சக்திகள் தாங்களாகவே அமெரிக்காவிலும் உலகெங்கிலும் தன்னலக்குழுவை உருவாக்கும் வோல் ஸ்ட்ரீட் வங்கியாளர்கள் மற்றும் பெருநிறுவன நிர்வாகிகளுக்கு சேவை செய்கின்றன. அவர்களைப் பொறுத்தவரை, பாதுகாப்பு மற்றும் மனித உயிரினை காப்பாற்றுவது பற்றிய கேள்விகளுக்கு அப்பால், போரை நடத்துதல் மற்றும் கோபுரமளவு இலாபங்களை கறந்தெடுப்பதில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

Loading