சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான மாணவர் போராட்டங்கள் மீது இலங்கை பொலிஸ் தாக்குதல் நடத்தியது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

கடந்த வாரம் கொழும்பில் நடந்த இரண்டு மாணவர் போராட்டங்கள் மீது, இலங்கை பொலிஸ் தாக்குதல் நடத்தியது. இந்த பொலிஸ் தாக்குதல்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் அதன் கொடூரமான சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான எதிர்ப்பை நசுக்குவதற்கு உத்தரவிடப்பட்ட அடக்குமுறை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.

6 மார்ச் 2024 அன்று மாணவர்களின் பேரணி மீதான தாக்குதலின் போது கலகத் தடுப்பு பொலிஸ் மற்றும் அதிரடிப் படையும் மாணவர்களைத் துரத்துகிறது [Photo: Facebook IUSF]

கடந்த செவ்வாய்கிழமை, பல மாணவர் குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டம் பொலிஸ் அடக்குமுறை மூலம் நிறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள், விடுதி மற்றும் பிற நலன்புரி பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும், மருத்துவப் பட்டங்கள் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும், வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவாறு உதவித்தொகை நிதியை அதிகரிக்க வேண்டும், பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மற்றும் பிற அடக்குமுறைச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரினர்

1,000 பேர் கொண்ட ஆர்ப்பாட்டம், கொழும்பு பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து பிரதான வீதிக்குள் நுழைந்தபோது பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவை எதிர்கொண்டது. நீர் பீரங்கி மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளுடன் ஆயுபாணிகளாயிருந்த மற்றொரு பொலிஸ் படைப் பிரிவு மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் பின்வாங்கும் வரை அவர்களைத் தாக்கத் தொடங்கியது. இதையடுத்து பல்கலைக்கழகத்திற்குள் திரண்டிருந்த மாணவர்கள் மீது பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்காக பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்களை ஏற்றிச் சென்ற பேரூந்துகளை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் தடுத்து நிறுத்தினர். வாகனங்களை சோதனை செய்த போலீசார், மாணவர்கள் எங்கு செல்கின்றனர் என விசாரித்த பின்னர், மாணவர்களை செல்ல அனுமதித்தனர்.

இரண்டாவது போராட்டமும் புதன்கிழமை மத்திய கொழும்பிலேயே நடைபெற்றது. பல பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்களின் பங்கேற்புடன் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (அ.ப.மா.ஒ.) இதனை ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திலும் முந்தைய நாள் எழுப்பப்பட்ட அதே கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கொழும்பில் புஞ்சி பொரளையில் போராட்டம் ஆரம்பமான இடத்தில் நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். மாணவர்கள் பேரணியைத் தொடங்கும் போது, பொலிசார் அவர்கள் மீது தண்ணீர் பீரங்கி, கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தடிகளால் ஈவிரக்கமின்றி தாக்கினர். போராட்டக்காரர்கள் தப்பிச் செல்ல முயன்றபோது, அவர்களை அருகில் உள்ள சாலைகள் வழியாக பொலிசார் விரட்டியடித்தனர். தண்ணீர் பீரங்கி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளால் தாக்கப்பட்ட சில மாணவர்கள் சக செயற்பாட்டாளர்களால் தூக்கிச் செல்லப்பட்டனர்.

அருகிலுள்ள கொழும்பு தேசிய வைத்தியசாலையைச் சேர்ந்த டசின் கணக்கான ஊழியர்கள் வீதிக்கு அருகில் கூடி பொலிஸாரின் தாக்குதலைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

அ.ப.மா.ஒ. ஒருங்கிணைப்பாளர் மதுஷன் சந்திரஜித் உட்பட இரண்டு மாணவர்களை பொலிஸ் கைது செய்தது. தாக்குதலுக்கு எதிர்ப்பு வளர்ந்து வந்த நிலைமையில், கொழும்பு நீதவான் நீதிமன்றம் வியாழன் அன்று தலா 500,000 ரூபா தனிப்பட்ட சரீரப் பிணையில் அவர்களை விடுவித்தது.

6 மார்ச் 2024 அன்று மாணவர் போராட்டத்தின் போது அ.ப.மா.ஒ. ஒருங்கிணைப்பாளர் மதுஷன் சந்திரஜித்தை பொலிஸ் கைது செய்த போது [Photo: Facebook IUSF]

பட்டம் பெறவிருக்கும் மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர தாங்க முடியாத நிலைமைகளால் மேலும் தீவிரமாக்கப்பட்டு, பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டங்கள் ஏறக்குறைய ஒவ்வொரு வாரமும் நடத்தப்பட்டு வருகின்றன. விக்கிரமசிங்கவின் அரசாங்கம், சர்வதேச நாணய நிதியம் (IMF) சுமத்தியுள்ள சிக்கனத் திட்டத்தின் ஒரு பகுதியாக கல்விக்கான செலவினங்களைக் குறைத்து வருகிறது.

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கான ஒதுக்கீடு 242 பில்லியன் ரூபாவாகும். இது கடந்த ஆண்டை விட 5 பில்லியன் ரூபா மட்டுமே அதிகரித்துள்ளது. 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பணவீக்க விகிதம் முறையே 46 மற்றும் 18 சதவிகிதமாகும். இந்த பொருளாதார நிலைமை குறைந்த அளவிலான பல்கலைக்கழக மற்றும் பொதுக் கல்வியை பராமரிக்க கூட போதுமானதாக இல்லை.

பல்கலைக்கழக மாணவர்களில் பெரும்பாலோர் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியாலும், சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான சிக்கன நடவடிக்கைகளாலும் பாதிக்கப்பட்டுள்ள வறுமையில் வாடும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர். அரசாங்கத்தினால் வழங்கப்படும் மஹாபொல புலமைப்பரிசில் உதவித் திட்டத்தின் கீழ் மாணவர்கள் பெறும் சொற்பத் தொகை, அன்றாடச் செலவுகளுக்குப் போதுமானதாக இல்லை.

பல மாணவர்கள் வாழ்வதற்கு மட்டுமன்றி, தங்கள் ஏழை பெற்றோருக்கு கொஞ்சம் பணம் அனுப்பவும் பகுதி நேர வேலைகளை நாடுகின்றனர். வேலை செய்வதற்காக சில பிரதான விரிவுரைகளை தவறவிட வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். சுமார் 1,000 ஆசிரியர்கள், பொருளாதார நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்களில் பலர் சிறப்பு விரிவுரையாளர்களாக இருப்பதால், பல்கலைக்கழகங்களில் பிரச்சனைகள் அதிகரித்துள்ளன.

இந்த சகிக்க முடியாத நிலைமைகள், மாணவர்கள் மத்தியில் அமைதியின்மையை அதிகரித்துள்ளன. சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பு பொலிசின் அடக்குமுறையை கண்டிக்கிறது. தொழிலாளர் வர்க்கம் மாணவர்களின் பாதுகாப்பிற்கு வர வேண்டும் மற்றும் இலவச பொதுக் கல்வியைப் பாதுகாக்க போராட வேண்டும்.

6 மார்ச் 2024 அன்று கொழும்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீதான பொலிஸ் தாக்குதலின் போது மாணவர்கள் தரையில் விழுந்தனர் [Photo: Facebook IUSF]

கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களின் போராட்டங்கள் மீது பொலிஸ் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. இது தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான தாக்குதலின் ஒரு பகுதியாகும். இந்தத் தாக்குதல்களின் கூர்மையான வெளிப்பாடுகளில் ஒன்று இலங்கை மின்சார சபையில் (இ.ம.ச.) சில தொழிலாளர்கள் பலிகடா ஆக்கப்பட்டதாகும். இ.மி.ச.யை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியமைக்காக, அரசாங்கம் கடுமையான அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்ட விதிமுறைகளை மீறியதற்காக 66 ஊழியர்களுக்கு அபராதம் விதிக்க தயாராகி வருகிறது.

கல்வி மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு எதிராக போராடுவதற்கு, மாணவர்கள் ஒரு சாத்தியமான வேலைத்திட்டத்தையும் முன்னோக்கையும் பின்பற்ற வேண்டும் என்று ஐ.வை.எஸ்.எஸ்.இ. வலியுறுத்துகிறது.

கடந்த வார போராட்டங்கள் இரண்டு போட்டி குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்டன. புதன்கிழமை எதிர்ப்புக்கு அ.ப.மா.ஒ. அழைப்பு விடுத்திருந்த அதே நேரம், எதிர்க்கட்சியான மக்கள் விடுதலை முன்னிணியை (ஜே.வி.பி.) ஆதரிக்கும் மற்றொரு மாணவர் குழு, முந்தைய நாள் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. கொரில்லாவாதத்தைப் போதிக்கும் தீவிர சிங்கள ஜனரஞ்சகக் கட்சியாகத் தொடங்கிய ஜே.வி.பி, கடந்த மூன்று தசாப்தங்களாக கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தின் பாராளுமன்றக் கட்சியாக மாறியுள்ளது.

அ.ப.மா.ஒ. முன்பு ஜே.வி.பி.யால் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், 2012ல் ஜே.வி.பி. அதிருப்திக் குழுவினால் உருவாக்கப்பட்ட போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சிக்கு (மு.சோ.க.) அதன் விசுவாசத்தை மாற்றிக்கொண்டது. அதிலிருந்து, ஜே.வி.பி.யைப் போலவே, அ.ப.மா.ஒ. முன்னிலை சோசலிசக் கட்சியால் அதிகாரத்துவமாக கட்டுப்படுத்தப்படுகிறது.

அதன் அழைப்பாளர் சந்திரஜித் உட்பட அ.ப.மா.ஒ. தலைவர்கள், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பது என்ற பெயரில் ஒரு பிற்போக்கு கூட்டணியை உருவாக்குவது குறித்து ஜே.வி.பி. மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர் அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க தலைவர்களுடன் தற்போது கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அதன் தாக்குதல்களை மாணவர்களால் பின்னுக்குத் தள்ள முடியும் என்ற மாயையை அ.ப.மா.ஒ. பரப்புகிறது. அடுத்தடுத்த ஆட்சிகள் இலவச பொதுக் கல்வி மீதான தாக்குதலை மட்டுமே ஆழப்படுத்தி வருகின்ற நிலையில், பல தசாப்தங்களாக அ.ப.மா.ஒ. மேற்கொள்ளும் எதிர்ப்பு நடவடிக்கைகள் மாணவர்களுக்கு ஒரு முட்டுச் சந்தாகவே இருந்து வருகின்றன.

வியாழன் அன்று பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், சந்திரஜித் ஊடகங்களிடம் தனது குழுவின் மந்திரத்தை மீண்டும் கூறினார்: 'இவற்றை [பிரச்சினைகளை] நாம் தெருக்களில் தீர்க்க வேண்டும்.' அதாவது, விக்கிரமசிங்க ஆட்சியின் போக்கை மாற்ற முயற்சிக்கும் மாணவர்களின் கோபத்தை திசை திருப்புவதன் பேரில் அதிக போராட்டங்களை ஏற்பாடு செய்வதாகும்.

அ.ப.மா.ஒ. இன் கட்டுப்பாட்டை மீளக் கைப்பற்ற முயற்சித்த பின்னர், ஜே.வி.பி., கொழும்பு பல்கலைக்கழகம் உட்பட சில மாணவர் சங்கங்களில் செல்வாக்கைக் கொண்டுள்ளது. அக்டோபர் நடுப்பகுதிக்கு முன்னர் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில், அதன் தேர்தல் முன்னணியான தேசிய மக்கள் சக்தியின் (தே.ம.ச.) வேட்பாளர் வெற்றி பெற்றவுடன், மாணவர்கள் உட்பட வெகுஜனங்கள் எதிர்கொள்ளும் அனைத்து சமூகப் பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என்று அது வலியுறுத்துகிறது. ஜே.வி.பி. தலைமையிலான தொழிற்சங்கங்களும் இதே மாயையை பரப்பி, தொழிலாளர்களின் போராட்டங்களை தடுக்கின்றன.

இது வெகுஜன எதிர்ப்பை பாராளுமன்ற மாயைகளுக்குள் திசைதிருப்பவும், தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களின் வாக்குகளைப் பெறவதற்குமான ஒரு அப்பட்டமான உந்துதல் ஆகும். ஜே.வி.பி./தே.ம.ச. கூட்டமைப்பு சர்வதேச நாணய நிதிய சிக்கன திட்டத்திற்கும் கல்வியை தனியார்மயமாக்குவதற்கும் முழு அர்ப்பணிப்புடன் உள்ளது.

அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு மாணவர்களிடமிருந்து உண்மையான எதிர்ப்பு இருந்தாலும், அவர்களால் ஜே.வி.பி. தேர்தல் அரசியலையோ அல்லது முன்னிலை சோசலிசக் கட்சியின் எதிர்ப்பு அரசியலையோ முன்னெடுத்துச் செல்ல முடியாது. இது கல்வி மீதான முதலாளித்துவத் தாக்குதலின் போக்கையோ அல்லது மக்கள் எதிர்கொள்ளும் அவலத்தையோ மாற்றப்போவதில்லை.

இந்த தாக்குதல்கள், இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆழமான பொருளாதார நெருக்கடியின் விளைவாகும். உலகளாவிய கோவிட்-19 தொற்றுநோய், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் மற்றும் அமெரிக்காவினதும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளதும் ஆதரவுடன் இஸ்ரேலிய ஆட்சி காஸாவில் முன்னெடுக்கும் இனப்படுகொலையாலும் இந்த நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உட்பட பல நாடுகளில், முதலாளித்துவத் தாக்குதலுக்கு முதன்முதலாகப் பலியாகியுள்ள கல்வி உரிமையைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களில் ஆசிரியர்களும் மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு தீர்வுகள் இல்லை. நெருக்கடி நிறைந்த முதலாளித்துவ அமைப்பை தூக்கி எறிந்து சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான புரட்சிகர பணியை நிறைவேற்ற தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே தலைமைத்துவம் வழங்க முடியும்.

அனைத்து முதலாளித்துவக் கட்சிகள், முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்கள் மற்றும் போலி-இடது பொறிகளில் இருந்தும் தனது அரசியல் சுயாதீனத்தை நிலைநாட்டுவதற்கு தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்புமாறும் போராடுமாறும் மாணவர்களை ஐ.வை.எஸ்.எஸ்.இ. கேட்டுக்கொள்கிறது. இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக உங்கள் பல்கலைக்கழகங்களில் ஐ.வை.எஸ்.எஸ்.இ. கிளைகளை உருவாக்குங்கள்.

Loading