முன்னோக்கு

ஜேர்மன் ரயில் ஓட்டுனர்களின் வேலைநிறுத்தத்தின் உலகளாவிய முக்கியத்துவம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

2021 இல் பேர்லினில் GDL ரயில் ஓட்டுநர்கள் சங்கத்தின் வேலைநிறுத்த உறுப்பினர்கள்

கடந்த செவ்வாய் கிழமை, ஜேர்மனியில் ரயில் ஓட்டுநர்களின் வேலைநிறுத்தம் நீண்ட தூர மற்றும் பிராந்திய போக்குவரத்தின் பெரும்பகுதியை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. அனைத்து ரயில்களிலும் 80 சதவீதம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நாளில், லுஃப்தான்சா விமான ஊழியர்களின் வெளிநடப்பு நடந்தது. இந்தப் போராட்டம் புதன்கிழமையும் தொடரும்.

ஜேர்மனியில் நடைபெற்றுவரும் வேலைநிறுத்தங்கள் வர்க்கப் போராட்டத்தில் சர்வதேச எழுச்சியின் ஒரு பகுதியாகும். துனிசியாவில், உத்தியோகபூர்வமாக 50 சதவீதத்திற்கும் அதிகமான மோசமான வாழ்க்கை நிலைமைகள் மற்றும் அதிக வேலையின்மைக்கு எதிரான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். பணவீக்கம் 30 சதவீதத்தை தாண்டியுள்ள நைஜீரியாவில், தொழிலாளர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை நடத்தியுள்ளனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் விவசாயிகளின் பாரிய எதிர்ப்பு போராட்டங்களை கண்ட பிரான்சில், பாரிஸ் ஒலிம்பிக் இடம்பெற இருக்கும் நேரத்தில் ஒரு பொதுச் சேவை வேலைநிறுத்தத்திற்கு தொழிலாளர்கள் அழுத்தம் கொடுக்கின்றனர். அமெரிக்காவில், கடந்த ஆண்டு பெரிய வேலைநிறுத்தங்களின் எண்ணிக்கை 238 சதவீதம் உயர்ந்ததுள்ளது. அதே நேரத்தில் வேலைநிறுத்தங்களில் ஈடுபட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரித்தது. இந்த வாரம், அமெரிக்காவில் உள்ள 7,000ம் டெய்ம்லர் பார ஊர்தி தொழிலாளர்கள் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அங்கீகாரம் அளிக்க 96 சதவீதம் பேர் வாக்களித்தனர்.

வர்க்கப் போராட்டத்தின் புயல் வீசுகிறது. உண்மையான ஊதியத்தில் குறைப்பு மற்றும் பணிச்சுமை அதிகரிப்பு ஆகியவற்றை எதிர்ப்பின்றி ஏற்க தொழிலாளர்கள் தயாராக இல்லை. ஜேர்மனியில் பல வாரங்களாக ரயில் சாரதிகள், விமான நிலைய மற்றும் பொதுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பல சந்தர்ப்பங்களில், ரயில்கள், பேருந்துகள் மற்றும் விமான போக்குவரத்து ஒரே நாளில் முடக்கப்பட்டது.

பொதுப் போக்குவரத்து, விமான நிலையங்கள் மற்றும் லுஃப்தான்சா விமான ஊழியர்கள் மற்றும் சார்லூயிஸில் உள்ள ஃபோர்டு விநியோக நிலையம் ஆகியவற்றில் நாடு தழுவிய வேலைநிறுத்தங்கள் நடந்தன. சில்லறை வர்த்தகத்தில் உள்ள விற்பனை ஊழியர்களும் பல மாதங்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வாகனத்துறை, எஃகு மற்றும் இரசாயனத் துறைகளில் ஆட்குறைப்பு அலை பல்லாயிரக்கணக்கான மக்களை போராட்டத்துக்கு அணிதிரட்டத் தள்ளும். ஜேர்மன் கூட்டாட்சி அரசாங்கத்திற்கு எதிரான போர்க்குணமிக்க விவசாயிகளின் எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் ஜேர்மனிக்கான அதிதீவிர வலதுசாரி மாற்று (AfD) கட்சிக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டங்களும் இப்போராட்டங்களுடன் இணைந்துள்ளன.

மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் கூட கொந்தளிப்பில் உள்ளன. தொழில்துறையிலும், நிர்வாகத்திலும், வர்த்தகத்திலும் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்புப் படுகொலைகள் நடைபெற்று வருகின்றன. மிகவும் திறமையான வேலைகள் உட்பட நூறாயிரக்கணக்கான வேலைகள், குறிப்பாக வாகனம் மற்றும் விநியோக துறையில் வெட்டப்படுகின்றன. அத்தோடு, இரசாயனம், எஃகு, கட்டுமானம், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மென்பொருள் தொழில்கள் மற்றும் சில்லறை வர்த்தகம் ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளன.

ஜேர்மனியில் இடம்பெற்றுவரும் வேலைநிறுத்தங்கள் அனைத்து தொழிலாளர்களுக்கும் முக்கியமான பிரச்சினைகளை முன்வைக்கின்றன. பணவீக்கம் உண்மையான ஊதியத்தில் வெட்டுக்கள் மற்றும் அதிகரித்து வரும் பணிச்சுமை ஆகியவற்றுக்கு எதிரான போராட்டம், தொழிற்சங்கங்களின் தலைமையின் கீழ் நடத்தப்பட முடியாது. மேலும், இது போர் மற்றும் இராணுவ மறுஆயுதமயப்படுத்தலுக்கு எதிரான போராட்டத்துடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகின்றன.

பெருநிறுவனங்களும் அரசாங்கங்களும் சண்டையிடாமல் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. ஜேர்மன் பங்குச் சந்தை நேற்று மற்றொரு சாதனையை எட்டியது. பங்கு விலைகளின் உயர்வு தொழிலாள வர்க்கத்திடம் இருந்து இன்னும் அதிக சுரண்டலைக் கோருகிறது.

பாரிய அளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை அனுப்பிய பிறகு, நேட்டோ இப்போது உக்ரேனுக்கு தரைப்படைகளை அனுப்ப விரும்புகிறது. அதாவது, இது அணுவாயுத ரஷ்யாவுடன் நேரடி மோதலை குறிக்கிறது. மத்திய கிழக்கில், ஜேர்மன் ஆதரவுடன் பாலஸ்தீனியர்களின் இனப்படுகொலை ஒரு பிராந்திய தீயாக மாறி வருகிறது. மூன்றாம் உலகப் போரின் ஆபத்து இன்று இருப்பதை விட அதிகமாக இருந்ததில்லை.

ஜேர்மனியை “போருக்குத் தகுதியுடையதாக” மாற்றுவதற்கு, பாதுகாப்பு மந்திரி பிஸ்டோரியஸ் (சமூக ஜனநாயகக் கட்சி, SPD) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒப்புக்கொண்டபடி, ஜேர்மன் இராணுவத்துக்கு 100 பில்லியன் யூரோக்களின் “சிறப்பு நிதிக்கும்” கூடுதலாக நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களைக் கோருகிறார்.

ஜேர்மன் ரயில்வே மற்றும் மத்திய அரசின் நிர்வாகத்தின் பிடிவாதமான அணுகுமுறைக்கு இதுவே காரணமாகும். அனைத்து தொழிலாளர்களும் தங்கள் இடுப்பு பட்டிகளை இறுக்கிக் கொள்ள வேண்டும் என்பதைப் தெளிவுபடுத்துவதற்காக, ரயில் ஓட்டுநர்களுக்கு ஒரு முன்மாதிரியை வைப்பதற்கு அவர்கள் விரும்புகிறார்கள்.

எல்லா இடங்களிலும் ஒரே அடிப்படைக் கொள்கை பின்பற்றப்படுகிறது. அமெரிக்காவில் தனது பிரச்சார உரைகளில், இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க தொழில்துறையை அணிதிரட்ட வேண்டும் என்று தொடர்ந்து பைடென் அழைப்பு விடுத்து வருகிறார். ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிராக அமெரிக்கா போரை நடத்துவதற்கு இதே போன்ற நடவடிக்கைகள் தேவை என்று அவர் வாதிடுகின்றார். இதற்கு தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் முழு ஆதரவும் உள்ளது, ஐக்கிய வாகன தொழிலாளர் சங்கத் தலைவர் தனது அமைப்பு ஜனாதிபதிக்காக “போருக்கு செல்ல” தயாராக இருப்பதாக அறிவித்தார்.

உண்மையில், இத்தகைய கொள்கைகளை எந்த நாட்டிலும் ஜனநாயக ரீதியாக செயல்படுத்த முடியாது. இந்தக் கட்டத்தில், வாஷிங்டனின் விருப்பமான மூலோபாயம் வேலைநிறுத்தங்களை தடுப்பது மற்றும் ஊழல் நிறைந்த தொழிற்சங்க எந்திரத்தால் திணிக்கப்பட்ட விற்பனை ஒப்பந்தங்கள் மூலம் பணிநீக்கங்களை சுமத்துவது ஆகும். எவ்வாறாயினும், இத்தகைய காட்டிக்கொடுப்புகளுக்கு எதிராக தொழிலாளர்கள் அணிதிரள்வதால், அரசாங்கம் இன்னும் நேரடியான வழிமுறைகளைப் பயன்படுத்தத் தயாராக உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பைடென் நிர்வாகம் அமெரிக்க இரயில்வே தொழிலாளர்களின் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை தடை செய்ய தலையிட்டது.

கிறிஸ்தவ ஜனநாயக யூனியனின் (CDU) உறுப்பினரும், GDL ரயில் ஓட்டுநர்கள் சங்கத் தலைவருமான கிளாஸ் வெசெல்ஸ்கி, மற்ற அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களைப் போலவே, இராணுவத்தை கட்டியெழுப்புவதற்கான செலவுகளை, ஊதியங்கள் மற்றும் சமூக செலவினங்களைக் குறைப்பதன் மூலமும், சுரண்டலை அதிகரிப்பதன் மூலமும் செலுத்தப்பட வேண்டும் என்பதில் அரசாங்கத்துடன் உடன்படுகிறார். ரயில் ஓட்டுனர்கள் போராடுவதற்கான உறுதியை எதிர்கொண்ட வெசெல்ஸ்கி, மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் தோல்வியுற்ற “எச்சரிக்கை வேலைநிறுத்தங்கள்” மூலம் அவர்களின் எதிர்ப்பை உடைக்க முயன்றார்.

ரயில் ஓட்டுனர்களின் சம்பளப் பிரச்னை கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக நீடித்து வருகிறது. டிசம்பர் நடுப்பகுதியில், பாதிக்கப்பட்ட GDL உறுப்பினர்களில் 97 சதவீதம் பேர், காலவரையற்ற முழு வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். அப்போதிருந்து, ஏழு எச்சரிக்கை வேலைநிறுத்தங்கள் நடந்துள்ளன, அவை பல பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறி பொதுமக்களின் ஆதரவைப் பெற்றன.

இருப்பினும், உறுப்பினர்கள் கோரிய காலவரையற்ற முழு வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்ய GDL தலைமை மறுக்கிறது. அதன் அசல் கோரிக்கைகளை பெருமளவில் கைவிட்டு, ஒப்பந்த காலத்தை 12 முதல் 24 மாதங்கள் வரை நீட்டிக்கவும், வாராந்திர வேலை நேரத்தை 2028 வரை ஒத்திவைக்கவும் முன்வந்துள்ளது.

ஜேர்மன் ரயில்வே (DB) மேலாண்மை வாரியம், கூட்டாட்சி அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் DB குழுமத்தில் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்துள்ளன. இது ஒரு அரசுக்கு சொந்தமான பொது நிறுவனமாகும். அரசாங்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் அரச செயலாளர்கள் பல்வேறு நிர்வாக அமைப்புகளில் அமர்ந்துள்ளனர். DB நிர்வாகத்தின் உறுதியற்ற தன்மை அரசாங்கத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் போர் என்பது தவிர்க்க முடியாமல் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான வர்க்கப் போர் என்று பொருள்படும். அரசாங்கம் (SPD, தாரளவாத ஜனநாயகவாதிகள் (FDP) மற்றும் பசுமைக் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி) இரயில்வே தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து தொழிலாளர்களுக்கும், “இராணுவவாதத்தின் தீவிர அதிகரிப்புக்கு நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய தியாகம் இதுதான்”, ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸால் பிரகடனப்படுத்தப்பட்ட “சமூக-அரசியல் புதிய சகாப்தத்தின்” முக்கியத்துவமும் இதுதான்! என்று தெளிவுபடுத்த விரும்புகிறது.

இரயில் ஓட்டுனர்கள் மற்றும் முழு தொழிலாள வர்க்கமும் ஆளும் வர்க்கத்தின் “புதிய சகாப்தத்தை” போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளை, தங்களது சொந்த வர்க்கப் போராட்டத்தின் “புதிய சகாப்தத்துடன்” எதிர்கொள்ள வேண்டும். “சமரசங்கள்” என்று தொடர்ந்து விற்கப்படும் நிலைமைகளில் நடந்து வரும் வெட்டுக்கள் மற்றும் சீரழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். முதலாளித்துவத்துக்கு எதிர்ப்பு மற்றும் சோசலிச முன்னோக்கிற்காக தொழிலாளர்கள் போராட வேண்டும். முதலாளித்துவத்தின் கீழ், துன்பம், போர் மற்றும் மரணம் மட்டுமே அவர்களுக்கு காத்திருக்கிறது.

GDL ரயில் ஓட்டுநர்கள் சங்க அதிகாரத்துவத்திற்குள் முன்னேற வழி இல்லை. தொழிற்சங்க அலுவலகங்களில் நல்ல ஊதியம் பெறும் அதிகாரிகள், நிறுவன வாரியங்களின் மேலாளர்கள், பங்கு ஊக வணிகர்களின் அதே கண்ணோட்டத்தில் பொருளாதார நிகழ்வுகளைப் பார்க்கின்றனர். இவர்கள் அனைவரும், தொழிலாளர்கள் மற்றும் சமூகத்தின் தேவைகளை பெருநிறுவன இலாபங்களுக்கான தீராத தாகத்திற்கு அடிபணியச் செய்கிறார்கள்.

சமூகத்தின் அடிப்படை மறுநோக்குநிலை மற்றும் மறுசீரமைப்பு அவசியம். DB இயக்குநர்கள் குழுவின் உறுதியற்ற தன்மை மற்றும் மத்திய அரசாங்கத்தின் கட்டளைகளுக்கு எதிரான போராட்டம், வேலைகளை பாதுகாத்தல் மற்றும் போருக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றிற்கு ஒரு சோசலிச முன்னோக்கு மற்றும் ஒரு சர்வதேச மூலோபாயம் தேவை. பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் இலாப நலன்களை விட உழைக்கும் மக்கள் மற்றும் சமூகத்தின் தேவைகள் முன்னுரிமை பெற வேண்டும்.

அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றும் மற்றும் அதன் போர்-சார்பு கொள்கைகளை ஆதரிக்கும் தொழிற்சங்கங்களின் தேசியவாத அரசியலை, தேசியம், இனம் மற்றும் தோல் நிறம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஒத்துழைப்பால் எதிர்க்க வேண்டும்.

அதனால்தான் சுயாதீனமான சாமானிய தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை நிறுவுவது மிகவும் முக்கியமானது மற்றும் அவசரமானது. உலகம் முழுவதும், ஐரோப்பாவில் இருந்து வட அமெரிக்கா முதல் ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா வரை, நிர்வாகம், அரசாங்கம் மற்றும் ஊழல் நிறைந்த தொழிற்சங்க எந்திரத்தின் தாக்குதல்களை எதிர்த்துப் போராட, சாமானிய தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை தொழிலாளர்கள் கட்டியெழுப்பி வருகின்றனர்.

இந்த வழியில் மட்டுமே அனைத்து தொழிலாளர்களும், தொழிற்சங்க உறுப்பினர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், இலாபப் பொருளாதாரம் மற்றும் தொழிற்சங்க எந்திரத்தின் சர்வாதிகாரத்தின் முதலாளித்துவ தர்க்கத்தை எதிர்ப்பது சாத்தியமாகும். இந்த வழியில் மட்டுமே தொழிலாளர்கள் தொழில்துறை நடவடிக்கை அமைப்பை தங்கள் கைகளில் எடுக்க முடியும்.

ரயில் ஓட்டுனர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம், உண்மையான ஊதியக் குறைப்புக்கு எதிராக, பாரிய ஆட்குறைப்புகளுக்கு எதிராக மற்றும் அரசாங்கத்தின் போர்க் கொள்கை மற்றும் சமூக வெட்டுக்களுக்கு எதிராக, ஒரு பரந்த அணிதிரட்டலுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும். தொழிலாளர் போராட்டங்கள் உக்ரேனில் போர் மற்றும் காஸாவில் இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்போடு ஒன்றுபட்டு, முதலாளித்துவம், போருக்கான காரணம், இனப்படுகொலை, வேலை வெட்டுக்கள் மற்றும் ஊதியக் குறைப்புகளுக்கு எதிராக இயக்கப்பட வேண்டும். இந்த வளர்ந்து வரும் இயக்கம் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei, SGP) மற்றும் நான்காம் அகிலத்தில் உள்ள அதன் சகோதர அமைப்புகளும் இந்த வேலைத் திட்டத்திற்காகப் போராடுகின்றன.

Loading