முன்னோக்கு

அகாடமி விருதுகளில் ஓப்பன்ஹைய்மரின் வெற்றி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

அகாடமி விருதுகளில் கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹைய்மர் திரைப்படத்தின் ஒட்டுமொத்த வெற்றியானது உண்மையான மற்றும் தொலைநோக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, “அணுகுண்டின் தந்தை” என்று அழைக்கப்படும் தத்துவார்த்த இயற்பியலாளரான ஜே. ராபர்ட் ஓப்பன்ஹைய்மரின் (1904-1967) வாழ்க்கை மற்றும் அவரது தொழில் குறித்த வரலாற்றை மையப்படுத்திய திரைப்படமானது, சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், முன்னணி மற்றும் துணை நடிகர், ஒளிப்பதிவு, சிறந்த இசைக்கான விருது, படத்தொகுப்பு (எடிட்டிங்) மற்றும் தயாரிப்பு ஆகியவற்றிற்கு ஏழு முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளது.

ஓபன்ஹைய்மரில் சிலியன் மர்பி

இந்தத் திரைப்படத்தின் நோக்கத்தின் பரிமாணங்கள் சமூக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கிறது. நோலனின் படைப்பானது இப்போது டசின் கணக்கான நாடுகளில் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பார்க்கப்பட்டு, சுமார் $1 பில்லியன் டாலர்கள் பாக்ஸ் ஆபிஸ் விற்பனை வருவாயை ஈட்டி, சர்வதேச அளவில் 333 திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளது. 

மிகையான, புரிந்துகொள்ள புலமைத் தேவையுடய மற்றும் கலைத்துவ ரீதியில் செறிவான படைப்புகளைப் பொறுத்தளவில், இப்பெருமளவிலான சாதனை ஏறக்குறைய கேள்விப்பட்டிராத ஒன்றாக இருக்கிறது. கலை அல்லது கலாச்சாரத்தின் அழகியலை சகிக்காத பிலிஸ்தீனிய வர்ணனையாளர்கள் “எதிர்பார்த்திராத” மற்றும் அவர்களை “வியக்கவைக்கும்” வகையில், வெகுஜனங்கள் மத்தியில் ஓபன்ஹைய்மர் பெற்ற வெற்றியானது, பல தசாப்த கால யுத்தம், சமூகச் சிதைவு மற்றும் ஜனநாயக சீரழிப்பு, அதே போல் அனுவாயுத மோதல்கள் உட்பட மிகவும் பரந்த மற்றும் ஆகவும் அழிவுகரமான மோதல்கள் தொடர்பாக மக்களின் சிந்தனையிலும் உணர்விலும் ஏற்படும் மூலக்கூறு மாற்றங்களை பிரதிபலிக்கிறது. இது கலைஞர்கள் மத்தியிலோ அல்லது பொது மக்களிடையேயோ அரசியல் ரீதியாக வெளிப்படுத்தப்பட்ட உணர்வு அல்ல, ஆனால் இது சந்தேகத்திற்கு இடமின்றி பரவலான பதற்றம் மற்றும் சக்திவாய்ந்த ஸ்தாபன-விரோத அதிருப்தியைப் பற்றிப் பேசுகிறது.

எதிர்பாராத விதமாக, நோலனின் திரைப்படம் பல்வேறு பாராட்டுகளைப் பெற்றுக்கொண்டிருக்கும் தருணத்தில், பைடென் நிர்வாகமும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் எவ்வளவு பொறுப்பற்ற முறையில் பேரழிவுகரமான அணு ஆயுதப் போருக்கான திட்டமிடல் மற்றும் தயாரிப்புகளை மேற்கொண்டு, ரஷ்யாவுடன் மோதலில் ஈடுபடுகிறார்கள் என்பதையிட்டு மக்கள் விழிப்படைந்துள்ளனர். ஓப்பன்ஹைய்மர் மீதான ஆர்வம் அத்தகைய கொடூரமான, இரத்தம் தோய்ந்த முன்முயற்சிகளுக்கு எந்த ஆதரவும் இல்லை என்பதற்கான குறிகாட்டிகளில் ஒன்றாகும்.

மூன்று மணிநேர வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தினை பார்க்கும் பார்வையாளர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். நீல்சன் மீடியா ஆராய்ச்சி அறிக்கையின்படி, பெப்ரவரி நடுப்பகுதியில் பீகொக்கில் திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்ட முதல் வாரத்தில் 821 மில்லியன் நிமிடங்கள் பார்க்கப்பட்டது. இந்த ஏழு நாள் காலப்பகுதியில், ஓபன்ஹைய்மர்  ஆனது வரலாற்றில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படமாக மாறியது என்று  ஸ்ட்ரீமிங் தளம் அறிவித்தது.

நோலனின் திரைப்படம் உண்மையான பரந்த அடிப்படையிலான பார்வையாளர்களைக் கொண்டுள்ளது பெப்ரவரி பிற்பகுதியில் நடத்தப்பட்ட யூகோவ் (YouGov) கணக்கெடுப்பில், அமெரிக்க மக்கள் தொகையில் 22 சதவீதம் பேர் (அதாவது 50 மில்லியனுக்கும் அதிகமான முதிர்ந்தோர்) நோலனின் திரைப்படத்தைப் பார்த்துள்ளனர் என்றும், 90 சதவீதம் பேர் அதை “நேசித்துள்ளனர்” அல்லது “விரும்பினார்கள்” என்றும், மேலும் கருத்துக்கணிப்பாளர்களின் கூற்றுப்படி, அதிகமான அமெரிக்கர்கள் இத்திரைப்படம் “மற்ற போட்டி திரைப்படங்களைவிட (சிறந்த படத்திற்கான விருது) வெற்றிபெற வேண்டும் என்றும் கூறுகின்றனர்”. மேலும் “யார் வெற்றி பெறுவார்கள்” என்பதற்கும் இது பொருந்தும். அத்தோடு, ஓப்பன்ஹைய்மர்  திரைப்படம் பற்றியோ அல்லது திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வுகள் பற்றியோ பரவலான அறிவு இல்லாதிருந்த போதிலும், இந்த விஷயத்துடன் போராடுவது அவசியம் மற்றும் அவசரமானது என்ற ஆழமான உணர்வு மட்டும் மக்களிடம் தெளிவாக உள்ளது.

அகாடமி விருதுகள் என்பது கலைத்துவத் திறனுக்கு அல்லது தொடர்ச்சியான முற்போக்கான சமூகக் கண்ணோட்டங்களுக்கு ஒரு மோசமான நம்பகத்தன்மையற்ற அளவுகோளாகும். வாக்களிப்பானது இன மற்றும் பாலின அரசியல் உட்பட பல காரணிகளால் திசைதிருப்பப்படக்கூடிய, ஒரு குறிப்பிட்ட குட்டி முதலாளித்துவ சமூக அடுக்கின் கருத்துக்களை வெளிப்படுத்துகிறது. இந்த முறைமையானது 10,000ம் அல்லது அதற்கு மேற்பட்ட அகாடமி உறுப்பினர்களின் வாக்களிப்பின் முடிவை மட்டுமே கூறுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த விருதுகள் எட்டு மாத செயல்முறையை உறுதிப்படுத்தி ஒருங்கிணைக்கின்றன. இந்த காலகட்டத்தின் போது ஓபன்ஹைய்மர் ஒரு உலகளாவிய கலாச்சார மற்றும் சமூக நிகழ்வாக மாறியது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை விவகாரம் ஒப்பீட்டளவில் தணிந்து இருந்தது. முதல் இடத்தில், “இனப்படுகொலையின் போது ஆஸ்கார் விருதுகள் வேண்டாம்”, “இப்போதே போர்நிறுத்தம் செய்!” என்று கோஷமிட்டபடி, காஸாவில் இஸ்ரேலிய படுகொலைகளை எதிர்த்து ஆத்திரமடைந்த மக்கள் கூட்டத்தை, பங்கேற்பாளர்கள் எதிர்கொண்டனர். “ரஃபாவைப் பார்,” “நீங்கள் பார்க்கும் போது, ​​​​குண்டுகள் வீசப்படுகின்றன”, “காஸாவை வாழ விடுங்கள்” மற்றும் “இனப்படுகொலையை புறக்கணிக்கும் கலையால் என்ன பயன்?” என்ற வாசகங்கள் பதாகைகளில் எழுதப்பட்டிருந்தன. லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிசாரால், போராட்டக்காரர்கள் பின்னுக்குத் தள்ளப்படுவதற்கு முன், அவர்கள் போக்குவரத்தை தற்காலிகமாகத் தடுத்து, விருது வழங்கும் விழா தொடங்குவதைத் தாமதப்படுத்தினர். அறைக்குள் நுழைந்த நடிகர் மார்க் ருஃபாலோ, “பாலஸ்தீன எதிர்ப்பால் இன்று இரவு ஆஸ்கர் விருதுகள் நிறுத்தப்பட்டன, மனிதநேயம் வெல்லும்!”என்று கத்தினார். 

அக்டோபரில் ஒரு பகிரங்க கடிதத்தை வெளியிட்ட நடிகர்கள் மற்றும் பலர், போர்நிறுத்தத்துக்கான கலைஞர்களுக்கு ( Artists4Ceasefire) ஆதரவளிக்கும் பங்கேற்பாளர்கள், படுகொலையை உடனடியாக நிறுத்துமாறு அழைப்பு விடுத்து ஆஸ்கார் விழாவில் அடையாளத்திற்கு சிவப்பு பட்டிகளை அணிந்திருந்தனர். சிறந்த அசல் பாடலை வென்ற பாடகர் பில்லி எலிஷ், அவரது சகோதரர் ஃபின்னியாஸ், ருஃபாலோ, மஹெர்ஷாலா அலி, ரமி யூசெப், அவா டுவெர்னே, ரிஸ் அகமது, ஸ்வான் அர்லாட் மற்றும் பிறருடன் சிவப்பு பட்டிகளை அணிந்திருந்தார்கள்.

மேடையில், நடிகர் சில்லியன் மர்பி, ஓப்பன்ஹைய்மருக்கான சிறந்த நடிகருக்கான விருதை ஏற்றுக்கொண்டு, “நாம் அனைவரும் ஓப்பன்ஹைய்மர் உலகில் வாழ்கிறோம் - உலகெங்கிலும் உள்ள சமாதானத்தை உருவாக்குபவர்களுக்கு நான் அதை அர்ப்பணிக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.

இயக்குனர் ஜொனாதன் கிளேசர், ஆவுஷ்விட்ஸில் உள்ள தளபதியைப் பற்றிய தனது  The zone of interest (ஆர்வ வலயம்) என்ற திரைப்படத்திற்காக விருதைப் பெற்றதுடன் மேடையில் தனக்கும் தனதுது சகாக்களுக்கும் சார்பாக எழுதப்பட்ட அறிக்கையைப் படித்தார்:

எங்கள் தேர்வுகள் அனைத்தும் நிகழ்காலத்தில் நம்மைப் பிரதிபலிக்கவும் நம்மை எதிர்கொள்ளவும் உருவாக்கப்பட்டவை. “அப்போது அவர்கள் செய்ததைப் பாருங்கள்” என்று சொல்வதற்காக அல்ல. மாறாக, ‘நாம் இப்போது என்ன செய்கிறோம் என்பதைப் பாருங்கள்.’ மனிதாபிமானம் மிக மோசமாக எங்கு செல்கிறது என்பதை எங்கள் திரைப்படம் காட்டுகிறது. அது நமது கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் வடிவமைத்தது.

இப்போது, பல அப்பாவி மக்களின் மோதலுக்கு வழிவகுத்த ஒரு ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த யூதத்தன்மையையும் (ஹிட்லரின்) இனப்படுகொலையையும் தூக்கிப்படிப்பதை எதிர்க்கும் மனிதர்களாக நாங்கள் இங்கே நிற்கிறோம். இஸ்ரேலில் அக்டோபர் 7 அன்று பாதிக்கப்பட்டவர்கள் அல்லது காஸா மீதான தற்போதைய தாக்குதலால் பாதிக்கப்படுபவர்கள், மொத்தத்தில் மனிதாபிமானமற்ற முறையில் இந்த மனிதர்கள் பாதிக்கப்படுவதை எப்படி எதிர்த்து நிற்பது? 

கிளேசரின் கருத்துக்கள் பெரும்பாலும் தவறாக மேற்கோள் காட்டப்பட்டு, அல்லது சூழ்நிலையில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டு சியோனிச சார்பு ஆதரவாளர்களின் ஆவேசமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

ஒட்டுமொத்தமாக, இந்த விருது வழங்கும் விழாவானது பெரும் சமூக மற்றும் உளவியல் பதற்றம் வெளிப்படாமல் அடைக்கப்பட்டது என்ற அபிப்பிராயத்தை பார்வையாளருக்கு ஏற்படுத்தியது. பார்வாயாளர்களில் பெரும்பாலானோர் விடயங்களை அடக்கியே வாசித்தனர். (நடுவர் ஜிம்மி கிம்மலால் கேலிக்குள்ளாக்கப்பட்ட) ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சி பாசிஸ்டுகளுக்கு மட்டுமன்றி, போர்வெறியர் பைடெனுக்கும் பரவலான எதிர்ப்பு உள்ளது. ஆனால், அந்த எதிர்ப்புத் தன்மையானது இன்னும் தெளிவான அரசியல் வெளிப்பாட்டைக் காணவில்லை.

வழக்கத்தை விட அலங்காரப்படுத்தலும் சுய-ஈடுபாடும் குறைவாகவே காணப்பட்டன. முதிர்ச்சியற்ற அம்சங்களும் இருந்த போதிலும், நடப்பு நிகழ்வுகளும் ஓபன்ஹைய்மரின் மையநிலையும், ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு Poor Things (எளிய விடயங்கள்) என்ற திரைப்பமும் (இந்த இரண்டு திரைப்படங்களும் அவை சாத்தியமான தகமைபெற்றிருந்த 17 விருதுகளில் 11 விருதுகளைப் பெற்றன) பொதுவாக விழாவை உயர்த்துவதற்கு செயல்பட்டன. எல்லா உரையாடல்களுக்கும் பிறகு, (எலிஷின் பாடலைத் தவிர), பார்பி  (Barbie) திரைப்படம் எந்த விருதுகளையும் வெல்லவில்லை.

ஓபன்ஹைய்மரில் உள்ள பிரச்சினைகள் மிகவும் அழுத்தமானவை மற்றும் வெளிப்படையாக பார்வையாளர்களிடமிருந்து இதுபோன்ற ஒரு வலுவான பிரதிபலிப்பைத் தூண்டிவிட்டன. அடையாள அரசியல் வெறியர்கள் ஞாயிற்றுக்கிழமை நிகழ்வுக்குப் பிறகு ஒப்பீட்டளவில் அமைதியாக இருந்தனர் அல்லது அவர்களின் பிற்போக்குத்தனமான கூக்குரலுக்கு ஏற்ற சூழல் இல்லை என்று உணர்ந்தனர். ஹாலிவுட்டின் புதிய “பன்முகத்தன்மை” விதிகள் மற்றும் ஒதுக்கீடுகள் இப்போது நடைமுறையில் உள்ள போதிலும், இந்தக் கட்டத்தில், திரைப்படத் தயாரிப்புகள் அவற்றைச் சுற்றி வருவதற்கான வழிகளைக் கண்டுபிடிக்கின்றன. இது எப்போதும் அப்படியே இருக்காது.

நோலனின் திரைப்படத்தின் உதாரணமானது, திரைப்படத் தயாரிப்பின் நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான பெரிய தயாரிப்பின் முயற்சிகள் மற்றும் திறன்களைக் கொண்ட ஒரு பரந்த, சிக்கலான, கூட்டுக் கலை வடிவம் என்பதை மீண்டும் சுட்டிக்காட்டுகிறது. அழுத்தமான மற்றும் ஒத்திசைவான அர்த்தமுள்ள ஒரு படைப்பை உருவாக்குவது, கலைத்துவமாகப் படைப்பது ஒரு மகத்தான முயற்சியாகும்.

முக்கியமான படைப்புகள் ஏற்கனவே சிருஷ்டிக்கப்பட்டு வருகின்றன. சிறந்த கலைஞர்கள் சில பெரிய சமூகப் பிரச்சினைகளைப் பற்றிய ஆர்வமான மற்றும் உள்ளுணர்வுப் புரிதலைக் கொண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக, ஓபன்ஹைய்மரில் ஹாரி ட்ரூமன் (கேரி ஓல்ட்மேன்) சம்பந்தப்பட்ட சுருக்கமான அந்த திரைப்படக் காட்சியானது, நோலன் சொந்தமாகக் கருதிய பார்வைக்கு அப்பாற்பட்ட வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஒரு கொடூரமான போர்க் குற்றவாளி என்பதை வெளிப்படுத்துகிறது. இந்தக் கட்டத்தில் அவர்களின் கலைத்துவத்திறன் கலைஞர்களின் சொந்த புரிதலை மீறுகிறது, இருப்பினும் இது சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு அடித்தளத்தைப் பெறுகிறது.

பல கலைஞர்களுக்கு முதலாளித்துவம்தான் பிரச்சனை என்ற உணர்வு அதிகரித்து வருகின்ற போதிலும், அதன் தீர்க்க முடியாத முரண்பாடுகளின் நிச்சயமான பண்பு மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, தீர்வின் தன்மையானது அவர்களின் நனவுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது என்று ஒருவர் கூறலாம்.

லியோன் ட்ரொட்ஸ்கி சுட்டிக்காட்டியது போல், கலையானது “இருண்ட மற்றும் தெளிவற்ற மனநிலைகளுக்குத் தேவையான வடிவங்களைக் கண்டறிந்து, சிந்தனையையும் உணர்வையும் நெருக்கமாகக் கொண்டுவருகிறது அல்லது ஒன்றோடொன்று அவற்றின் முரண்பாடுகளை முன்னிலைப்படுத்துகிறது, இது தனிமனிதனதும் சமூகத்தினதும் ஆன்ம அனுபவத்தை வளப்படுத்துகிறது, உணர்வைச் செழுமைப்படுத்துகிறது, மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள உலகத்திற்கு மிகவும் பொருந்தக்கூடியதாகவும் பதிலளிக்கக்கூடியதாகவும் ஆக்குகிறது. இது சிந்தனையின் அளவை முன்கூட்டியே விரிவுபடுத்துகிறது. அது அவ்வாறு செய்வது, இது தனிநபர், சமூகக் குழு, வர்க்கம் மற்றும் தேசத்திற்கு கல்வி அளிப்பதற்கே அன்றி, தனிப்பட்ட அனுபவ திரட்டல் முயற்சியாக அல்ல.” (நூல்: கலையும் புரட்சியும்)

நிகழ்வுகள், புதிய தூண்டுதல்களை உருவாக்குவதால், “ஆழ் மனதின் கூடுகளை” உடைக்கிறது. திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் பிற கலைஞர்கள் உலகத்தைப் பற்றிய அவர்களின் புரிதலை இன்னும் துல்லியமான அரசியல் அடிப்படையில் உருவாக்காவிட்டாலும் கூட, காஸாவின் பயங்கரங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி பலரின் கண்களைத் திறக்கும். இது மிகவும் சிக்கலான மற்றும் நீடித்த செயல்முறையாகும். இது எல்லாவற்றிற்கும் மேலாக வெகுஜன மக்களின் அரசியல் வளர்ச்சி மற்றும் தொழிலாள வர்க்கத்தில் முதலாளித்துவத்தின் அடித்தளங்களை நேரடியாகவும் தெரிந்தும் தாக்கும் ஒரு இயக்கத்தின் எழுச்சியைப் பொறுத்தது. அது வரும். அந்தவகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்வானது ஒரு குறிப்பிடத்தக்க அடையாள நிகழ்வாக அமைந்தது.

Loading