பிரெஞ்சு-ரஷ்ய போட்டி சஹேலில் வளர்ந்து வரும் நிலையில், புர்கினா பாசோ படுகொலையில் 170 பேர் கொல்லப்பட்டனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

புர்கினா பாசோவில் கடந்த இரண்டு வாரங்களாக நடந்த தொடர் படுகொலைகளில் 170க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அண்டை நாடான மாலியில் பிரான்ஸ் 2013-2022ல் மேற்கொண்ட போரினால் ஒரு முன்னாள் பிரெஞ்சு காலனியான புர்கினா பாசோ இரத்தக்களரியில் மூழ்கியுள்ளது.

புர்கினா பாசோவில் நடந்த சமீபத்திய படுகொலைகளால் கொல்லப்பட்டவர்கள். மார்ச் 2024.

பிப்ரவரி 25 அன்று, புர்கினா பாசோவின் வடக்கு யாதெங்கா பிராந்தியத்திலுள்ள கொம்சில்கா, நோடின் மற்றும் சோரோ ஆகிய நகரங்களில் 170 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அத்தோடு, நைஜரின் எல்லைக்கு அருகில், கிழக்கு புர்கினா பாசோவின் கொமண்ட்ஜாரி மாகாணத்தில் உள்ள பிக்போ மற்றும் சோவாலிமோ கிராமங்களிலும் புதிதாக படுகொலைகள் நிகழ்ந்துள்ளன என்று மார்ச் 4 அன்று, RFI (ரேடியோ பிரான்ஸ் இன்டர்நேஷனல்) அறிவித்துள்ளது.

“எங்களது தலைமை செய்தியாளர்களால் சேகரிக்கப்பட்ட பல வீடியோக்கள் டசின் கணக்கான சடலங்களைக் காட்டுகின்றன: ஆண்கள், பெண்கள், குழந்தைகள், தரையில் வீழ்ந்து கிடக்கின்றனர். இதே காட்சிகளில், ஆயுதமேந்திய சிவிலியன் உடையில், மோட்டார் சைக்கிள்களில் சில மனிதர்களைப் பார்க்கிறோம். அவர்கள் வெளிப்படையாக படுகொலையில் இருந்து தப்பிய குழந்தைகளுக்கு தண்ணீர் சேகரித்து கொடுத்துக்கொண்டிருந்தனர்” என்று RFI கூறியது.

நாடியாபோனியில் உள்ள ஒரு மசூதியும் தாக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 25 அதிகாலை 5:00 மணியளவில் (உள்ளூர் GMT நேரம்) நாடியாபோனியில் உள்ள ஒரு மசூதியை ஆயுதமேந்திய நபர்கள் தாக்கியதில், அங்கிருந்த பல டசின் பேர் கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் முஸ்லிம்கள், முக்கியமாக மசூதியில் கூடியிருந்த ஆண்கள் என்று சாட்சி ஒருவர் AFPக்கு (Agence France-Presse) தெரிவித்தார். பெப்ரவரி 25 இல் தொடர்ச்சியான பிற தாக்குதல்கள் தங்காலு (கிழக்கு), கொங்கூசி மற்றும் வடக்கில் ஓவாஹிகோயா பகுதியின் இராணுவப் பிரிவுகள் மீதும் தாக்குதல்கள் நடந்தன.

ஓவாஹிகோயா பிராந்திய வழக்கறிஞர் அலி பெஞ்சமின் கூலிபாலி, இந்த சம்பவத்தை வெளியிட்ட பிறகு, பிப்ரவரி 25 ஆம் தேதி நடந்த கொடூரமான படுகொலை சர்வதேச செய்திகளில் வெளிவந்தது. பலியானவர்களில் டசின் கணக்கான பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளும் உள்ளதாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே நாளில், வடக்கு புர்கினா பாசோவில் உள்ள எஸ்சகானே கிராமத்தில் உள்ள தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த குறைந்தது 15 பேர்களைக் கொன்றனர் மற்றும் இருவர் காயமடைந்தனர் என்று பாதிரியார் ஜோன்-பியர் சவடகோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். சவடகோ இந்தப் படுகொலைகளை ஜிஹாதி குழுக்கள் மேற்கண்டதாக குற்றம் சாட்டினார்.

அல் கொய்தாவுடன் தொடர்புடைய உள்ளூர் ஆயுதக் குழுவான அன்சரோல் இஸ்லாம் (Ansaroul Islam) மற்றும் சாஹேல் இஸ்லாமிய அரசு (EIS) ஆகிய அமைப்புக்களே இந்த தாக்குதலை நடத்தியதாக புர்கினா பாசோவின் இராணுவ ஆட்சிக்குழு குற்றம் சாட்டியது.

அண்டை மாகாணமான குர்மாவின் தலைநகரான Fada N’gourma இல் தஞ்சம் புகுந்திருந்த குடியிருப்பாளர்கள், கொமெஞ்சரி மாகாணத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளில் புதிய விரைவான தலையீட்டு பட்டாலியன் (rapid Intervention Battalion-BIR) ஈடுபட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். கடந்த அக்டோபரில் புர்கினா பாசோவின் இராணுவ ஆட்சிக்குழுவின் தலைவரான கேப்டன் இப்ராஹிம் ட்ரேயரால் உருவாக்கப்பட்ட BIR, படுகொலைகள் நடந்த கயேரி பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று புர்கினாபே தகவல் நிறுவனம் இரண்டு வாரங்களுக்கு முன்பு தெரிவித்தது.

2013 இல் மாலியில் பிரெஞ்சு தலையீடு தொடங்கியதில் இருந்து, சஹேல் பகுதி முழுவதும் சண்டை தீவிரமடைந்துள்ளது. புர்கினா பாசோவில், ஜிஹாதிக் குழுக்களுக்கும் அரசாங்கப் படைகளுக்கும் இடையேயான மோதல்கள் 2015 இல் தொடங்கியதில் இருந்து கிட்டத்தட்ட 20,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். உலகம் முழுவதும் ஆயுத மோதல்களில் இறப்புகளைக் கண்காணிக்கும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஒரு அரசு சாரா அமைப்பான Acled, புர்கினா பாசோவில் கடந்த ஜனவரி மாதம் மட்டும் நடந்த வன்முறையில் 439 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

புர்கினா பாசோவின் பல மாகாணங்கள் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளன மற்றும் நாட்டின் பெரும் பகுதிகள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. நவம்பர் 2 ஆம் தேதி, “மரணம் எங்களுக்காக காத்திருக்கிறது” என்ற தலைப்பிலான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்ட அறிக்கையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையை பிரதிநிதித்துவப்படுத்தும் 46 வட்டாரங்கள் ஜிஹாதிக் குழுக்களால் முற்றுகைக்கு உட்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து ஐ.நா புள்ளிவிவரங்கள் புர்கினா பாசோவில் 2.6 மில்லியனுக்கும் அதிகமான பொதுமக்கள் (நாட்டிலுள்ள 22 மில்லியன் மக்களில்) கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிடுகிறது. ஐந்து புர்கினாபே மக்களில் ஒருவருக்கு அல்லது 4.7 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது.

மாலி மீதான பிரெஞ்சுப் போர், பிரெஞ்சுப் படைகளால் பாரிய இரத்தக்களரி படுகொலைகளுக்கு வழிவகுத்தது மட்டுமல்லாமல், 2021 ஆம் ஆண்டு மாலியின் நகரமான பவுண்டியில் ஒரு திருமணத்தின் மீது 22 பேரைக் கொன்ற இழிபுகழ்பெற்ற குண்டுவீச்சு வழிவகுத்தது. இது ஆப்பிரிக்காவின் பிற இடங்களில் ஆயுதக் குழுக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையே இரத்தக்களரி சண்டைக்கு வழிவகுத்தது.

ஆகஸ்ட் 2023 இல், வாஷிங்டன் டி.சி-யை தளமாகக் கொண்ட மூலோபாய ஆய்வுகளுக்கான ஆபிரிக்கா மையத்தின் அறிக்கை, “கடந்த தசாப்தத்தில் தீவிரவாத இஸ்லாமிய குழுக்களுடன் தொடர்புடைய வன்முறை நிகழ்வுகளில் ஆபிரிக்கா கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரிப்பைக் கண்டுள்ளது (2014 இல் 1,812 நிகழ்வுகளிலிருந்து 2023 இல் 6,756 நிகழ்வுகள்). இந்த வளர்ச்சியில் கிட்டத்தட்ட பாதி கடந்த மூன்று ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டுப் போரைத் தூண்டுவதற்கும் பிராந்தியத்தில் புதிய படையெடுப்புகளைத் தயாரிப்பதற்கும் ஜிஹாதிப் படைகளைப் பயன்படுத்துவதாக பாரிஸ் மீது பரந்த அளவிலான தொழிலாளர்கள் மற்றும் சஹேல் பிராந்தியத்தின் மூத்த அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். பாரிஸ் மற்றும் அதன் ஏகாதிபத்திய நேட்டோ கூட்டாளிகள் பாரசீக வளைகுடா எண்ணெய் எமிரேட்களால் நிதியளிக்கப்பட்ட அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஆயுததாரிகளை, 2011 இல் லிபியா மற்றும் சிரியாவிற்கு எதிராக அவர்கள் தொடங்கிய ஆட்சி மாற்றப் போர்களில் ஆதரித்தனர் என்பது அனைவரும் அறிந்ததே.

இரண்டு வருடங்கள் கழித்து, அல்-கொய்தா, இஸ்லாமிய அரசு மற்றும் போகோ ஹராம் போன்ற இஸ்லாமிய சக்திகளிடமிருந்து மாலியைக் காப்பாற்ற வேண்டும் என்ற சாக்குப்போக்கின் கீழ் பிரான்ஸ் மாலியில் இராணுவத் தலையீடு செய்தது. பிரான்ஸ், அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் பிற முக்கிய நேட்டோ சக்திகள் இந்த அடிப்படையில் ஆப்பிரிக்காவின் வளமான வளங்களை தொடர்ந்து சூறையாடின. 2013 மற்றும் 2022 க்கு இடையில், ஆயிரக்கணக்கான பிரெஞ்சு துருப்புக்கள் மாலி மற்றும் அருகிலுள்ள புர்கினா பாசோ, நைஜர் மற்றும் சாட் ஆகிய நாடுகளில் சேர்வல் (Serval) (2013-2014) மற்றும் பர்கேன் (Barkhane) (2014-2022) இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன.

பர்கேன் இராணுவ நடவடிக்கை மீது மக்களின் கோபம் அதிகரித்ததால், 2021 இல் மாலியிலும், பின்னர் கடந்த ஆண்டு புர்கினா பாசோ மற்றும் நைஜரிலும் பிரெஞ்சு இராணுவ இருப்பை ஆதரித்த அரசாங்கங்களில் ஆட்சிக்கவிழ்ப்புகள் முதலிடம் பிடித்தன. அக்டோபர் 2021 இல், மாலியின் பிரதம மந்திரி சோகுவெல் கோகல்லா மைகா, மாலியில் மோதலைத் தக்கவைக்கவும் பிரெஞ்சு இராணுவ ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்கும் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு இரகசியமாக ஆயுதம் வழங்குவதாக பிரெஞ்சு அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டினார். கடந்த ஆண்டு பாரிஸ் மீது நைஜர் அதிகாரிகள் இதே போன்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

1960 இல் பிரான்சில் இருந்து சுதந்திரம் என்பதை பெற்றதில் இருந்து எட்டு ஆட்சிக் கவிழ்ப்புகளைக் கண்ட புர்கினா பாசோவில், 2022 செப்டம்பரில் இப்ராஹிம் ட்ராரே தலைமையிலான இராணுவ அதிகாரிகள் ஆட்சியைக் கைப்பற்றினர். பிரான்சில் இராணுவப் பயிற்சி பெற்று, பர்கான் இராணுவ நடவடிக்கையை ஆதரித்த இராணுவ ஆட்சித் தலைவர் சண்டாவோகோ டமிபா, தலைநகர் ஓவாகடூகுக்கு அருகிலுள்ள கம்போயின்சினில் உள்ள பிரெஞ்சு இராணுவத் தளத்தில் பதுங்கியிருப்பதாக சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளால் பிரெஞ்சு எதிர்ப்பு உணர்வு தூண்டப்பட்டது. போர் மற்றும் சமூக அவலங்களுக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பாரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 2023 இல் புர்கினா பாசோவிலிருந்து பிரெஞ்சு துருப்புக்கள் வெளியேறின.

ஆபிரிக்காவில் நடந்த இந்தப் போர்கள், உக்ரேனில் ரஷ்யா மீது நேட்டோ தொடுத்த உலகளாவிய போருடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன. ஏனெனில் சஹேலில் புதிதாக உருவாக்கப்பட்ட இராணுவ ஆட்சிகள், பாரிசுடனான உறவுகளை உடைத்து, மாஸ்கோவிடம் இருந்து இராணுவ உதவியை நாடின. ரஷ்ய அரசுடன் தொடர்புடைய வாக்னர் குழு, மாலிக்கு படைகளை அனுப்பியுள்ளனர் மற்றும் நைஜீரிய மற்றும் புர்கினாபே அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், உக்ரேன் மோதலில் ரஷ்யாவிற்கு எதிராக பாரிஸ் இன்னும் கூடுதலான ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுத்ததால், அது சஹேலில் இழந்த இராணுவ நிலைகளை மீட்பதற்கும் ஆக்ரோஷமாக நகர்ந்தது. மாலி, புர்கினா பாசோ மற்றும் நைஜர் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் மற்றும் படையெடுக்கத் தயாராகவும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகத்தில் (ECOWAS) முக்கிய பிராந்திய சக்திகளுக்கு அழுத்தம் கொடுத்தது. உயர்மட்ட பிரெஞ்சு அதிகாரிகள் இப்பகுதியில் இஸ்லாமிய ஆயுதக் குழுக்களின் செயல்பாடுகளை நன்கு அறிந்துள்ளனர் மற்றும் சுரண்ட முற்படுகின்றனர் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆபிரிக்க தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் வளர்ந்து வரும் இயக்கம், ஆபிரிக்காவில் பிரெஞ்சு மற்றும் உலக ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நேரடிப் போராட்டத்தை நாளுக்கு நாள் நிகழ்ச்சி நிரலில் வைக்கிறது.

ஆயினும்கூட, ஆபிரிக்க தொழிலாளர்கள் அத்தகைய போராட்டத்தில் மாஸ்கோவுடன் இராணுவக் கூட்டணியை நம்ப முடியாது என்பதை கசப்பான வரலாற்று அனுபவம் காட்டுகிறது. சோவியத்திற்குப் பிந்தைய, ரஷ்யாவின் ஊழல் நிறைந்த முதலாளித்துவ தன்னலக்குழு, அது தனது “மேற்கத்திய பங்காளிகள்” என்று அழைக்கும் ஏகாதிபத்திய சக்திகளுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்வது மட்டுமல்லாமல், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் ஆளும் வர்க்கங்களுக்குள் ஆழமான வேரூன்றிய எதிர்ப்பை எதிர்கொள்கிறது.

இது 1987ம் ஆண்டு பிரெஞ்சு ஆதரவுடன் பிளேஸ் கம்போரே என்பவரால் புர்கினாபே ஜனாதிபதி தோமஸ் சங்கரா படுகொலை செய்யப்பட்டதில் இருந்து முக்கியமான பாடம் இதுதான். சோவியத் அதிகாரத்துவத்தை நோக்கிய சங்கராவின் அரசியல் பிரவேசங்களுக்கு விரோதமாக, சங்கராவை அகற்றுவது என்பது, ஆளும் வட்டங்களிலும் குறிப்பாக கம்போரே வழிநடத்தும் இராணுவ ஆட்சிக்கு பாரிஸின் ஆதரவின் தளத்தை வளர்ப்பதற்கான ஒரு வழியாக, கம்போரே கண்டு கொண்டார். 27 ஆண்டுகளுக்குப் பிறகு, 2014 இல், இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் பாரிய எதிர்ப்பு போராட்டங்களால் கம்போரே தூக்கி வீசப்பட்டார்.

இந்த அனுபவங்கள் லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை உறுதிப்படுத்தின. வளர்ச்சியடையாத நாடுகளில் உள்ள முதலாளித்துவ வர்க்கம் அடிப்படை ஜனநாயகப் பணிகளைத் தீர்க்கவோ அல்லது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்தவோ இலாயக்கற்று உள்ளது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்திற்கு, முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் பொருளாதார சக்தியைத் தூக்கியெறியும் நோக்கில், ஒரு புரட்சிகர மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தைச் சுற்றி, ஆபிரிக்கா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் அணிதிரட்டப்பட வேண்டும்.

நேட்டோவிலுள்ள ஏகாதிபத்திய நாடுகள் மற்றும் முன்னாள் சோவியத் யூனியனின் நாடுகளில் உள்ளதைப் போலவே, ஆபிரிக்காவில் தொழிலாளர்களுக்கு முன்னோக்கி செல்லும் வழி, ஏகாதிபத்தியப் போருக்கு எதிராகவும் சோசலிசத்திற்காகவும் தொழிலாள வர்க்கத்தில் ஒரு சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதாகும்.

Loading