முன்னோக்கு

பைடென் நாட்டுக்கு வழங்கிய செய்தி: மூன்றாம் உலகப் போருக்கு தயாராகுங்கள்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கேபிட்டலில் நடந்த காங்கிரஸின் கூட்டு அமர்வில் ஜனாதிபதி ஜோ பைடென் உரை நிகழ்த்துகிறார். வியாழன், மார்ச் 7, 2024, வாஷிங்டன். [AP Photo/Shawn Thew]

வியாழக்கிழமை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் கூடியிருந்த உறுப்பினர்கள் முன் நாட்டிற்கான தனது வருடாந்திர உரையை ஆற்றினார். பைடெனின் கருத்துக்கள் பலவிதமான வன்மையான வலியுறுத்தல்களைக் கொண்டிருக்கின்றன, மற்றும் ஒரு முக்கிய முன்னுரிமையில் கவனம் செலுத்துகின்றன: அது ரஷ்யாவுடனான போரின் விரிவாக்கம் ஆகும்.

பைடெனின் பேச்சு பகுத்தறிவு வாதத்தின் சாயல் இல்லாமல், மிகவும் அப்பட்டமான முரண்பாடுகளால் கந்தலானது. “ஜனாதிபதி லிங்கன் மற்றும் உள்நாட்டுப் போருக்குப் பிறகு, இன்றுபோல் சுதந்திரமும் ஜனநாயகமும் உள்நாட்டில் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை” என்று அவர் ஆரம்பத்தில் கூறினார். பின்னர், “எங்கள் எதிர்காலம் ஒளிமயமானது... எங்கள் ஒன்றியத்தின் நிலை வலிமையானது மேலும் வலுவடைந்து கொண்டே இருக்கிறது என்று பெருமையுடன் கூறலாம்” என்று அவர் அறிவித்தார்.

“எனது முன்னோடியும், உங்களில் சிலரும் ஜனவரி 6 பற்றிய உண்மையைப் புதைக்க முற்படுகிறார்கள்” என்று, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பைடெனின் சொந்தத் தேர்தலை முறியடிக்கும் முயற்சியை ஆதரித்த ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சி காங்கிரஸ் உறுப்பினர்களைப்பற்றி குறிப்பிடுகிறார். பின்னர், அமெரிக்க வரலாற்றில் புலம்பெயர்ந்தோர் மீதான மிகப் பெரிய தாக்குதலையும் புகலிட உரிமையையும் செயல்படுத்தும் சட்டத்தை இயற்றுவதில் தன்னுடன் சேருமாறு “குடியரசுக் கட்சி நண்பர்களுக்கு” வேண்டுகோள் விடுத்தார்.

அமெரிக்காவின் சமூக மற்றும் பொருளாதார நிலைமையை பைடென் முன்வைத்தது ஒரு கற்பனையாக இருந்தது. “ஊதியம் உயர்ந்து கொண்டே செல்கிறது, பணவீக்கம் குறைந்து கொண்டே வருகிறது” என்று அவர் குறிப்பிடும்போது, மில்லியன் கணக்கான மக்கள் இதற்கு நேர்மாறானதை அனுபவிக்கின்றனர். அத்தோடு, “தொற்றுநோய் இனி நம் வாழ்க்கையை கட்டுப்படுத்தாது” என்று அவர் அறிவித்தார். பைடெனின் இந்த விசித்திரக் கதைக்கு மாறாக, அமெரிக்கா தனது இரண்டாவது மோசமான வெகுஜனத் தொற்றை JN.1 மாறுபாட்டின் மூலம் அனுபவித்தது. இது 100 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களை மீண்டும் பாதித்துள்ளதோடு, பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றும், நீண்ட கோவிட் விகிதங்களை புதிய உச்சத்திலும் உயர்த்தியுள்ளது.

ஆனால் பைடெனின் பேச்சின் மையமானது போருக்கான ஒரு பைத்தியக்காரத்தனமான வேண்டுகோளாக இருந்தது. அவரது உரையின் முதல் நிமிடத்தில், அவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எதிராக கூச்சலிட்டார். இது போரின் கட்டுப்பாடற்ற உக்கிரமடைதல் ஆபத்தை பெரிதாக்குவதைத் தவிர வேறு எந்த நோக்கத்துக்கும் உதவாது. பைடென் மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயன்றார் என்பதைக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, போர் தொடரும் மற்றும் இன்னும் இரத்தக்களரியாக மாறும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.

ஜனவரி 1941 இல், இரண்டாம் உலகப் போருக்குள் அமெரிக்கா நுழைவதற்கு முன்னதாக, ஜனாதிபதி பிராங்க்ளின் டெலானோ ரூஸ்வெல்ட்டின், காங்கிரசில் ஆற்றிய உரையின் சிடுமூஞ்சித்தனமான மற்றும் கோரமான சிதைந்த அழைப்பில், பைடென் இந்த “காங்கிரஸை எழுப்ப விரும்புவதாகக்” கூச்சலிட்டார்: அதாவது, உக்ரேன் போருக்கு நிதியளிக்க கூடுதலாக 60 பில்லியன் டாலர்களை ஒதுக்குமாறு கட்டாயப்படுத்துவதாகும்.

“வெளிநாடுகளில், ரஷ்யாவினுடைய புட்டின் உக்ரேனை ஆக்கிரமித்து, ஐரோப்பா மற்றும் அதற்கு அப்பாலும் குழப்பத்தை விதைத்து வருகிறார்” என்று பைடென் அறிவித்தார். கூடுதல் உதவியாக பல்லாயிரக்கணக்கான பில்லியன் டாலர்கள், “எங்கள் உலகளாவிய தலைமையிலிருந்து நாங்கள் விலகிச் செல்ல விரும்புபவர்களால் தடுக்கப்படுகிறது” என்று அவர் கூறினார். புட்டினிடம் நேரடியாகப் பேசுகையில்,“நாங்கள் விலகிச் செல்ல மாட்டோம். தலைவணங்க மாட்டோம். நான் தலைவணங்க மாட்டேன்” என்று கூச்சலிட்டார்.

ஐரோப்பாவிலும் மற்றும் அதற்கு அப்பாலும் “ரஷ்யாவினுடைய புட்டின் அணிவகுப்பில் இருக்கிறார்” என்ற கூற்று ஒரு கட்டுக்கதையாகும். நடந்த சண்டைகள் அனைத்தும் ரஷ்ய எல்லையில் இருந்து 100 மைல்களுக்குள் நடந்தன. இரண்டு வருட மோதல் முழுவதும், பைடென் நிர்வாகம் இடைவிடாமல் போரை தீவிரப்படுத்தியுள்ளது. சமீபத்திய வாரங்களில், நேட்டோ சக்திகள் தங்கள் சொந்த துருப்புக்களை போருக்கு அனுப்ப வேண்டியதன் அவசியத்தை எழுப்பியுள்ளன, இது ரஷ்யாவுக்கு எதிரான முழுமையான போரைக் குறிக்கும்.

ரஷ்யாவிற்கு எதிரான போர், விரிவடைந்து வரும் உலகப் போரின் ஒரு பகுதியாகும், இதில் சீனாவுடனான மோதலை அதிகரிப்பது (”சீனாவிற்கு எதிரான 21 ஆம் நூற்றாண்டின் மோதலில் வெற்றி பெறுவதற்கு நாங்கள் மற்றவர்களை விட வலிமையான நிலையில் இருக்கிறோம்”) மற்றும் காஸாவில் இனப்படுகொலை ஆகியவை அடங்கும்.

அவர் பேச்சின் நடுவே, பைடென் இஸ்ரேலின் படுகொலைக்கு வெளிப்படையான பாதுகாப்பைக் கொடுத்தார். இது, அமெரிக்காவின் தீவிரமான நிதி, இராணுவ மற்றும் அரசியல் ஆதரவுடன் மட்டுமே சாத்தியமானது. “ஹமாஸைத் தாக்க இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது, ஆனால் அதற்கு கூடுதல் சுமை உள்ளது, ஏனெனில் ஹமாஸ் பொதுமக்கள் மத்தியில், மருத்துவமனைகள், தினசரி பராமரிப்பு மையங்கள் மற்றும் பலவற்றின் கீழ் கோழைகளைப் போல ஒளிந்துகொண்டு செயல்படுகிறது”என்று அவர் கூறினார். காஸாவில் கொல்லப்பட்ட பொதுமக்களுக்காக முதலைக் கண்ணீர் சிந்தும் அதே வேளையில், பைடென் 30,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றதற்கு அரசியல் நியாயத்தை வழங்கினார்.

பைடெனுடைய உரையில் விருந்தினராகப் பங்கேற்று, முதல் பெண்மணி ஜில் பைடெனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த, ஐக்கிய வாகன தொழிற்சங்க (UAW) தலைவர் ஷான் ஃபைனை, “ஒரு சிறந்த நண்பராகவும், ஒரு சிறந்த தொழிற்சங்க தலைவராகவும்” கருதி பைடென் அழைத்ததில், முதலாளித்துவம் மற்றும் அரசாங்கத்தின் போர் நிகழ்ச்சி நிரலைப் பாதுகாப்பதில் தொழிற்சங்க அதிகாரத்துவம் ஆற்றிய இன்றியமையாத பாத்திரம் வெளிப்பட்டது. ஃபைன் கடந்த ஆண்டு, வாகனத் தொழிலாளர்களின் எதிர்ப்பை அடக்குவதிலும், ஆயிரக்கணக்கான வேலை வெட்டுக்களுக்கு வழி வகுத்த ஒப்பந்தங்களைத் திணிக்கவும் பைடெனுடன் நெருக்கமாக பணியாற்றினார். “ஜனநாயகத்தின் ஆயுதக் களஞ்சியத்தில்” தொழிற்சங்கங்கள் ஈடுபட வேண்டியதன் அவசியத்தை, அதாவது தொழிலாள வர்க்கத்தை போர்க்கால உற்பத்திக்கு அடிபணிய வைப்பதன் அவசியத்தை ஃபெயின் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் வர்க்கம் வெளிநாட்டில் உலகப் போரை தீவிரப்படுத்துகையில், ஜனநாயகக் கட்சி வர்க்கப் போராட்டத்தை நசுக்க தொழிற்சங்க எந்திரத்தை நம்பியுள்ளது. “போர் அல்லது புரட்சியின் காலங்களில், முதலாளித்துவம் விதிவிலக்கான சிரமங்களுக்குள் மூழ்கும்போது, தொழிற்சங்கத் தலைவர்கள் பொதுவாக முதலாளித்துவ அமைச்சர்களாக மாறுகிறார்கள்” என்று ட்ரொட்ஸ்கி 1938 இல் குறிப்பிட்டார்.

UAW தலைவர் ஃபேனை அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) ஆதரிக்கின்றனர். DSA, ஜனநாயகக் கட்சியின் ஒரு பிரிவான உயர்-நடுத்தர வர்க்கத்தின் சலுகை பெற்ற பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஃபைன் பற்றிய பகுதிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக பைடெனின் பேச்சு, DSA க்கு நெருக்கமானவர்களால் தெளிவாக தயாரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது. கடுமையான ரஷ்ய-எதிர்ப்பு வெறியில் இருந்து, தொழிற்சங்க எந்திரத்தை மகிமைப்படுத்துவது உட்பட, அர்த்தமற்ற ஜனரஞ்சக வெற்று சொற்றொடர்கள் வரை, இது அவர்களின் சொற்பொழிவாக இருந்தது.

பைடென் காங்கிரசில் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் விதமாக, சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் கிஷோர் பின்வருமாறு எச்சரித்தார்:

கார்ப்பரேட் நிர்வாகத்தின் இரு கட்சி அமைப்பு (ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக்கட்சி) அமெரிக்காவையும் உலகையும் பேரழிவிற்கு இட்டுச் செல்கிறது என்பதற்கான ஒலிக்கப்பட வேண்டிய எச்சரிக்கைதான் உண்மையான விழிப்புணர்வு அழைப்பாகும். ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் காட்டுமிராண்டித்தனத்திற்கு இரண்டு வெட்டும் பாதைகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். டிரம்ப் பாசிச சர்வாதிகாரத்தை நிறுவ ஓடுகிறார். பைடென் ரஷ்யாவிற்கு எதிரான போர், அணுவாயுத மோதலின் அளவிற்கும் தொடர்வதை உறுதி செய்ய ஓடுகிறார்.

அவர்களின் குறிக்கோள்கள் ஒன்றையொன்று பூர்த்தி செய்கின்றன. பாசிச சர்வாதிகாரம் போருக்கான களத்தை தயார்படுத்துகிறது, மேலும் போரால் கோரப்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள் மீதான மிருகத்தனமான தாக்குதல் ஒரு பாசிச சர்வாதிகாரத்தின் தேவையை உருவாக்குகிறது.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

நிதி மற்றும் பெருநிறுவன தன்னலக்குழுவின் வெவ்வேறு பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த இரண்டு கட்சிகளால் வழிநடத்தப்படும் அரசியல் அமைப்பின் முழு பிற்போக்கு கட்டமைப்பையும் தொழிலாளர்களும் இளைஞர்களும் தகர்க்க வேண்டும். இது, அமெரிக்காவிலும் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கத்திற்குள், வர்க்கப் போராட்டம் மற்றும் சமூகப் புரட்சியின் முறைகள் மூலம் ஏகாதிபத்திய போர், சர்வாதிகாரம் மற்றும் முதலாளித்துவ சுரண்டலை எதிர்ப்பதற்கான ஒரு சோசலிச தலைமையை வளர்ப்பதற்கான போராட்டமாகும்.

உலக சோசலிச வலைத் தள வாசகர்கள் சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் பற்றிய கூடுதலான தகவல்களை socialism2024.org இல் காணலாம்.

Loading