ஜேர்மனியில் விரைவில் புத்தகங்கள் எரிக்கப்படுமா?

பேர்லின் சர்வதேச திரைப்பட விழா மீதான தாக்குதல்கள் குறித்து ஒரு கருத்து

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

இந்த ஆண்டு பேர்லின் சர்வதேச திரைப்பட விழாவான பேர்லினேலின் (Berlinale) நிறைவு விழா பற்றிய செய்தி ஊடகங்களின் உத்தியோகபூர்வ கருத்துக்களை படிக்கையில், தவிர்க்க முடியாமல் ஜேர்மனியில் புத்தகங்கள் விரைவில் மீண்டும் எரிக்கப்படுமா? என்ற ஒரு வினா எழுகிறது. சில விருது வென்றவர்களும் விழா நடுவர்களும் அதிகாரத்தில் இருப்பவர்களின் ஊதுகுழல்களாக இருப்பதற்குப் பதிலாக, விஷயங்களை அவற்றின் சரியான பெயர்களால் அழைக்கும் தைரியத்தைக் கொண்டிருந்ததால், அவர்கள் குற்றவாளிகளைப் போல நடத்தப்படுகிறார்கள்.

மேற்குக் கரையில் பாலஸ்தீனிய கிராமவாசிகளின் மிருகத்தனமான வெளியேற்றத்தை ஆவணப்படுத்தும் வேறு நிலம் இல்லை (No Other Land) திரைப்படம் ஜூரிகளால் வழங்கப்பட்ட ஆவணப்படப் பரிசு மற்றும் ஆவணப்படங்களுக்கான பார்வையாளர் பரிசு இரண்டையும் பெற்றது என்ற உண்மை பல்வேறு ஆசிரியர் அலுவலகங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைமையகங்களில் உள்ள அறநெறி கண்காணிப்பாளர்களால் தாங்கிக் கொள்ள முடியாததாக இருந்தது.

இரண்டு திரைப்பட தயாரிப்பாளர்களான இஸ்ரேலிய யுவல் ஆபிரகாம் மற்றும் பாலஸ்தீனிய பாசல் அட்ரா ஆகியோரும் விருது வழங்கும் விழாவில் இஸ்ரேலில் நடந்துவரும் காஸா படுகொலை மற்றும் இனவெறிக்கு கண்டனம் தெரிவித்ததை அடுத்து, விழா நடுவர் மன்ற உறுப்பினர்கள் போர்நிறுத்தம் கோரினர், மேலும் ஒரு வெற்றியாளர் பாலஸ்தீனிய முக்காடு அணிந்திருந்தார். இதற்கு உத்தியோகபூர்வ வட்டாரங்களில் சீற்றத்திற்கு எல்லையே இல்லை.

திரைப்பட தயாரிப்பாளர்கள் யுவால் ஆபிரகாம் மற்றும் பாசெல் அட்ரா. [Photo by Richard Hübner / Berlinale 2024]

“வெட்கக்கேடான, அவமானகரமான, குழப்பமான பிரச்சாரம் செய்வது” என்று Tagesspiegel இன் தலைமை பதிப்பாசிரியர் கிறிஸ்டியான் ட்ரெட்பார் தெரிவித்தார். “பேர்லினின் அவமானம்,” என்று Süddeutsche Zeitung தலைப்பிட்டது. Die Welt, “எதார்த்தத்தை கண்டுகொள்ளாத ஒரு சூழலுக்கு” எதிராக சீற்றம் கொண்டது. அது “தன்முனைப்பு குடிபோதையில் அதன் யூத-விரோதத்தின் பெரும் கட்டத்தை நாடியது” என்று எழுதியது. இப்படி பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இஸ்ரேலிய இராணுவம் 30,000 க்கும் அதிகமான பாலஸ்தீனர்களை படுகொலை செய்துள்ளது, இரண்டு மில்லியன் மக்களை இடம்பெயரச் செய்துள்ளது, வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள், மசூதிகள் உட்பட நான்கரை மாதங்களாக பட்டினி போட்டு திட்டமிட்டு அழித்துள்ளது என்றாலும், இப்போது 1.5 மில்லியன் மக்கள் அடர்த்தியாக நிரம்பி வழிகின்ற ரஃபாவிற்கு எதிராக மற்றொரு தாக்குதலுக்கு திட்டமிட்டு வருகிறது. இருந்தபோதிலும், போர்நிறுத்தத்திற்கான வேண்டுகோள் மட்டுமே “யூத எதிர்ப்புவாதமாக” கருதப்படுகிறது.

அரசு தலைமையிலான இணக்கம் மற்றும் ஒடுக்குமுறைக்கான அழைப்பு எங்கும் நிறைந்துள்ளது. கலைக்கான பொது நிதியளிப்பு தணிக்கையின் ஒரு கருவியாக மாற்றப்பட உள்ளது. “இது தெளிவுபடுத்தப்பட வேண்டும்: யூத-எதிர்ப்புவாதத்திற்கு அரசு பணம் இல்லை” என்று பசுமைக் கட்சி அரசியல்வாதி வோல்கர் பெக் வலியுறுத்தினார். “வரி செலுத்துவோரின் பணம் இதற்காக செலவிடப்படுகிறது என்ற உண்மை மன்னிக்க முடியாதது” என்று Die Welt உளறியது.

மத்திய நீதித்துறை மந்திரி மார்கோ புஷ்மான் (சுதந்திர ஜனநாயகவாதிகள்) குற்றவியல் சட்டத்தின் கீழ் தொடர்புடைய அறிக்கைகள் ஏதேனும் வெளியிடப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து வருகிறார். பேர்லின் மேயர் கை வெக்னர் எக்ஸ்/ட்விட்டரில், “இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதை பேர்லினேலின் (Berlinale) புதிய நிர்வாகம் உறுதி செய்யும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்று எச்சரித்தார்.

இது வெறுமனே பேர்லினேல் பற்றிய விடயம் மட்டுமல்ல, எந்த கலை நடவடிக்கையின் சுதந்திரத்தையும் நசுக்குவது பற்றியது என்பது தெளிவு. கலை உண்மையைச் சொல்வது தடை செய்யப்பட்டால், அது கலை அல்ல, மாறாக அரசின் பிரச்சாரம்.

பிரச்சாரத்தின் விளைவுகள் இன்னும் அதிகமாக செல்கின்றன. இது பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிருக்கு ஆபத்தானது. வேறு நிலம் இல்லை இணை இயக்குனரான ஆபிரகாம், விருது வழங்கும் விழா முடிந்த மறுநாளே, இஸ்ரேலுக்குத் திரும்பும் பயணத்தைத் தாமதப்படுத்த வேண்டியதாயிற்று. ஏனென்றால் “ஒரு வலதுசாரி இஸ்ரேலிய கும்பல் நள்ளிரவில் வேறொரு நகரத்திற்கு ஓடிப்போன எனது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களை அச்சுறுத்தி, என்னைத் தேடி நேற்று எனது குடும்பத்தாரின் வீட்டிற்கு வந்தது” என்று அவர் தனது எக்ஸ் கணக்கில் குறிப்பிட்டதைப் போல, அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருகின்றன.

ஆபிரகாமின் கூற்றுப்படி, இதற்கான காரணம், அவரது பேர்லினேல் பரிசு உரையை “யூத எதிர்ப்பு” என்று அபத்தமாக விவரிப்பதாகும். “இஸ்ரேலை விமர்சிப்பவர்களை மௌனமாக்குவதற்கு மட்டுமல்ல, காஸாவில் படுகொலைகளை முடிவுக்குக் கொண்டுவரும் மற்றும் இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்க அனுமதிக்கும் ஒரு போர்நிறுத்தத்தை ஆதரிக்கும் என்னைப் போன்ற இஸ்ரேலியர்களை மௌனமாக்குவதற்கும், ஜேர்மனியர்கள் இந்த வார்த்தையை திகைப்பூட்டும் வகையில் தவறாகப் பயன்படுத்துவது, யூத எதிர்ப்புவாதம் என்ற வார்த்தையின் அர்த்தத்தை வெறுமையாக்குகிறது, இதனால் உலகெங்கிலும் உள்ள யூதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்” என்று அவர் குறிப்பிட்டார்.

ஆபிரகாமின் பாட்டி லிபியாவில் ஜேர்மனியின் இத்தாலிய பாசிச கூட்டாளிகளால் நடத்தப்பட்ட வதை முகாமில் பிறந்தார். ஆபிரகாமின் தாத்தாவின் குடும்பம் பாரியளவில் ஜேர்மனியர்களால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையில் (Holocaust) கொல்லப்பட்டனர். “2024 ஆம் ஆண்டில் ஜேர்மன் அரசியல்வாதிகள் எனது குடும்பத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இந்த வார்த்தையை எனக்கு எதிராக ஆயுதமாக்க துணிச்சலைக் கொண்டிருப்பது குறிப்பாக மூர்க்கத்தனமாக இருக்கிறது. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த நடத்தை பாலஸ்தீனிய இணை இயக்குனர் பாசெல் அட்ராவின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது, அவர் மஸர் யாட்டாவில் வன்முறை குடியேற்றங்களால் சூழப்பட்ட இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வாழ்கிறார். அவர் என்னை விட பெரிய ஆபத்தில் இருக்கிறார்” என்று அவர் குறிப்பிட்டார்.

வேறு நிலம் இல்லை என்ற அவர்களின் திரைப்படம் இந்த பிரச்சினையில் ஒரு முக்கியமான சர்வதேச விவாதத்தைத் தூண்டியதில் தான் மகிழ்ச்சியடைவதாகவும், மில்லியன் கணக்கான மக்கள் படத்தைப் பார்ப்பார்கள் என்று நம்புவதாகவும் ஆபிரகாம் எழுதினார். விருது வழங்கும் விழாவில் அவரது கருத்துக்களை பூதாகரமாக சித்தரிக்காமல் விமர்சிக்கலாம் என்று குறிப்பிட்ட அவர், “ஹோலோகாஸ்டுக்கான உங்கள் குற்ற உணர்ச்சியுடன் நீங்கள் இதைத்தான் செய்கிறீர்கள் என்றால் - உங்கள் குற்றத்தை நான் விரும்பவில்லை” என்று அவர் மேலும் கூறினார்.

உண்மையில், பேர்லினேலில் பாலஸ்தீன-சார்பு அறிக்கைகள் மீதான கண்டனத்திற்கும் யூத இனப்படுகொலைக்கான ஜேர்மன் பொறுப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 1945க்குப் பின்னர் பத்தாயிரக் கணக்கான நாஜி குற்றவாளிகளை அவர்களின் அரசு அலுவலகங்களிலும், நீதிமன்ற இருக்கைகளிலும் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர் பதவிகளிலும் விட்டுவிட்டு, பெரும் எண்ணிக்கையிலான யூதர்களைக் கொன்ற பாரிய படுகொலையாளர்கள் தப்பிச் செல்ல அனுமதித்த ஜேர்மன் ஆளும் வர்க்கம், யூத இனப்படுகொலையுடன் உடன்படுவதற்கு ஒருபோதும் தீவிர முயற்சி எடுக்கவில்லை. முற்றிலும் பூகோள மூலோபாய காரணங்களுக்காக, மத்திய கிழக்கில் அதன் ஏகாதிபத்திய நலன்களுக்கு ஒரு பாலமாக சேவை செய்யும் இஸ்ரேலை அது ஆதரிக்கிறது.

காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலை பற்றிய எந்த விமர்சனத்தையும் அது கசப்புடன் தொடர்வது வேறு நோக்கங்களைக் கொண்டுள்ளது. ஜேர்மன் ஏகாதிபத்தியம் உத்தியோகபூர்வ பிரச்சாரத்தை ஆபிரகாம், அட்ரா மற்றும் பிற கலைஞர்களுடைய தைரியத்தை அதன் போர் கொள்கைக்கு ஒரு பரந்த எதிர்ப்பின் முன்னறிவிப்பாகவும் வெளிப்பாடாகவும் காண்கிறது.

ஜேர்மன் அரசாங்கம் ஒரு கொலைகார போரை ஆதரிக்கும் மற்றும் எரியூட்டுகின்ற ஒரு போர்முனை மட்டுமே காஸா ஆகும். உக்ரேனில் ரஷ்யாவுடனான மோதலில், அது கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 22 பில்லியன் யூரோக்களை [24 பில்லியன் அமெரிக்க டாலர்] முதலீடு செய்துள்ளது – ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பாய்ச்சப்பட்ட பில்லியன்களை இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

போர்முனையில் நிலைமை எவ்வளவுக்கு எவ்வளவு மூர்க்கமாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமாக அது போரைத் தீவிரப்படுத்துகிறது, ரஷ்யாவை அடிமைப்படுத்தி துண்டுதுண்டாக வெட்டுவதும் அதன் விலைமதிப்பற்ற மூலப் பொருட்களைக் கட்டுப்படுத்துவதுமே போரின் இலக்காகும். தரைப்படை துருப்புக்களின் பயன்பாடு மற்றும் ஜேர்மனியின் சொந்த அணுகுண்டை தயாரிப்பது கூட இப்பொழுது விவாதத்தின் கீழ் உள்ளன. பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் ஜேர்மனியை “போருக்கு பொருத்தமானதாக” ஆக்க விரும்புகிறார். இதற்கு இராணுவ செலவினங்களில் மேலதிக அதிகரிப்பும் அதையொட்டிய சமூக வெட்டுக்களும் அவசியப்படுகின்றன.

இதை ஜனநாயக வழிமுறைகளால் அடைய முடியாது. போர் கொள்கைக்கு பொதுமக்களிடையே எந்த ஆதரவும் இல்லை. பரந்த பெரும்பான்மை இளைஞர்கள் தங்கள் முப்பாட்டன்மார்களைப் போல் ஜேர்மனிய பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் நலன்களுக்காக பீரங்கிக்கு இரையாக பயன்படுத்தப்படுவதற்கு தயாராக இல்லை. தொழிலாள வர்க்கம் மேலதிக சிக்கன நடவடிக்கைகளின் மூலமாக மீள்ஆயுதமயமாக்கல் மற்றும் போருக்கான செலவுகளைத் தாங்க மறுக்கிறது.

மே 10, 1933 அன்று நாஜி தலைவர் ஜோசப் கோயபல்ஸும் அவருக்கு விசுவாசமான மாணவர்களும் பேராசிரியர்களும் கார்ல் மார்க்ஸ், லியோன் ட்ரொட்ஸ்கி, கார்ல் லீப்னெக்ட், கார்ல் வொன் ஒசியெட்ஸ்கி, பெர்டோல்ட் பிரெக்ட், ஹென்ரிச் மான் மற்றும் டசின் கணக்கான ஏனையோரின் புத்தகங்களை நெருப்பில் வீசிய போது, அவர்கள் போர் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிரான எந்த எதிர்ப்பையும் முளையிலேயே கிள்ளி எறியப் போவதாக ஒரு சமிக்ஞையை அனுப்பினர். விமர்சனரீதியான கலைஞர்கள், இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களை யூத-எதிர்ப்புவாதம் என்ற பொய்யான குற்றச்சாட்டின் கீழ் துன்புறுத்தப்படுவது —இந்த துன்புறுத்தலை AfD (ஜேர்மனிக்கான மாற்றீடு) கட்சியின் கீழ் உள்ள உண்மையான யூத-எதிர்ப்புவாதிகள் உற்சாகமாக ஆதரிக்கின்றனர்— இன்றும் அதே நோக்கத்திற்கே சேவையாற்றுகிறது.

கலைக்கான சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சமூக நலன்களின் சுதந்திரத்தை இன்று பாதுகாத்தல் என்பது போர், இராணுவவாதம் மற்றும் அதன் காரணமான முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்துடன் நேரடியாக பொருந்தி உள்ளது.

Loading