முன்னோக்கு

உக்ரேனுக்கு துருப்புக்களை அனுப்பும் நேட்டோவின் திட்டத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

நேட்டோவின் ஜேர்மன் படையினர் லிதுவேனியாவில் முன்னேறி தமது நிலைகளை பலப்படுத்துகின்றனர்.

கடந்த திங்கள் இரவு, உக்ரேனுக்கு ஐரோப்பிய துருப்புக்களை அனுப்புவது “நிராகரிக்கப்படவில்லை” என்ற பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வெளியிட்ட அறிக்கையானது, நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளின் போர் திட்டமிடலின் அளவை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளது. மக்களின் முதுகுக்குப் பின்னால், நேட்டோ கூட்டணி ரஷ்யாவுடன் ஒரு முழு அளவிலான போரையும் அணுவாயுத பேரழிவின் ஆபத்தையும் தூண்டுகிறது.

உக்ரேனுக்கு துருப்புக்களை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என்று பல்வேறு நேட்டோ தலைவர்களின் அறிக்கைகளுக்கு எந்த நம்பகத்தன்மையும் கொடுக்கப்படக்கூடாது. மக்ரோன் தனக்காக மட்டும் பேசவில்லை. அத்தகைய தலையீட்டிற்கான மூலோபாய மற்றும் தந்திரோபாயத் திட்டங்கள் ஏற்கனவே பரிசீலனையில் உள்ளன என்பதையும், உக்ரேனுக்கு துருப்புக்களை அனுப்புவதை நோக்கி நேட்டோ தவிர்க்கமுடியாமல் நகர்கிறது என்பதையும் அவரது கவனமாக வார்த்தைகள் கொண்ட அறிக்கை தெளிவாக்குகிறது. நேட்டோவின் முக்கிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு, ரஷ்யாவுடன் வெளிப்படையான போர் நடக்குமா என்பது கேள்வி அல்ல, ஆனால் எப்போது என்பதுதான் கேள்வியாகும்.

“செவ்வாயன்று கிரெம்ளின் இதுதொடர்பாக எச்சரித்தது. நேற்றைய நியூயோர்க் டைம்ஸில் முதல் பக்கக் செய்தியின்படி, “எந்தவொரு நேட்டோ நாடும் தரைவழியாக தலையீடு செய்வது, மேற்கத்திய இராணுவக் கூட்டணிக்கும் ரஷ்யப் படைகளுக்கும் இடையே நேரடி மோதலுக்கு வழிவகுப்பதுடன், சாத்தியமான ஆபத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும், அத்தகைய நடவடிக்கை தொடர்பாக வெளிப்படையான விவாதம், ஒரு மிக முக்கியமான புதிய கூறு” என்று குறிப்பிட்டது.

சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவர் டேவிட் நோர்த் 2024 ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் தலையீட்டை அறிவிக்கும் தனது அறிக்கையில் விடுத்த எச்சரிக்கையை, மக்ரோனின் அறிக்கை உறுதிப்படுத்துகிறது:

சீனாவுடன் வரவிருக்கும் மோதலுக்கான தயாரிப்பில், ரஷ்யாவை பலவீனப்படுத்தும் மற்றும் யூரேசியா மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் நேட்டோ கூட்டணிகளின் பிடியை இறுக்கும் நோக்கத்துடன் பைடென் நிர்வாகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேண்டுமென்றே தூண்டிவிட்ட உக்ரேனிய போர், ஒரு அணுஆயுத மோதலாக தீவிரமடைய அச்சுறுத்துகிறது. ஜேர்மனி மீண்டும் போர்ப் பாதையில் இறங்கியுள்ளது. அணுஆயுத தாக்குதல் பரிமாற்ற அச்சுறுத்தலால் போரைத் தொடர்வதில் இருந்து தாங்கள் தடுக்கப்பட மாட்டோம் என்று நேட்டோ சக்திகள் பலமுறையும் கூறியுள்ளன. தந்திரோபாய மற்றும் மூலோபாய அணுஆயுதங்களை வேண்டுமென்றே பயன்படுத்துவது, அதாவது இது பைத்தியக்காரத்தனத்திற்கு ஒத்ததாக பல தசாப்தங்களாக நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது ஏகாதிபத்திய புவிசார் அரசியல் மூலோபாயத்தின் ஒரு சட்டபூர்வமான அங்கமாக “இயல்பாக்கப்பட்டு வருகிறது”.

போரைத் தடுப்பதற்கான ஒரே வழி, போருக்கு சதி செய்யும் நேட்டோ அரசாங்கங்களுக்கு எதிரான நேரடிப் போராட்டத்தில் திரளான தொழிலாளர்களின் தலையீடாகும்.

பிரெஞ்சு ஜனாதிபதியின் பதிவு, பொது மக்களின் கருத்துக்கு ஐரோப்பிய அரசாங்கங்களின் மொத்த விரோதம் மற்றும் ஊடுருவ முடியாத தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு, அடுத்த ஆறு ஆண்டுகளில் 100 பில்லியன் யூரோக்களை இராணுவ செலவினங்களுக்காக ஒதுக்குவதற்காக, பெரும் மக்கள் எதிர்ப்பு மற்றும் பாரிய வேலைநிறுத்தங்களை மீறி, பாராளுமன்ற வாக்கெடுப்பு இல்லாமல் ஓய்வூதிய வெட்டுக்களை அவர் திணித்தார். மக்ரோனுக்கு எதிரான வேலைநிறுத்தங்களை முடக்கிய தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மக்ரோனின் மனசாட்சிக்கு விடுத்த வேண்டுகோள்கள் கவனிக்கப்படாமல் போயின. மக்களுக்கு எதிராக ஆட்சி செய்வதற்காக மக்ரோன் இப்போது பிரான்சில் தொழிலாளர்கள் மத்தியில் பரவலாக வெறுக்கப்படுகிறார்.

இதர ஐரோப்பிய நேட்டோ அரசாங்கங்களின் பாத்திரம், இப்போது சிடுமூஞ்சித்தனமான முறையில் மக்ரோனின் அறிக்கையிலிருந்து தங்களைத் தூர விலக்கிக் கொள்ள முயல்கின்றன. ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் நேற்று மக்ரோனின் அறிக்கையை பேர்லின் ஆதரிக்கவில்லை என்று அறிவித்தார். “நாங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ போரில் பங்கு பெற மாட்டோம்” என்று கூறினார்.

இது ஒரு வெட்கக்கேடான பொய்யாகும். முதலாவதாக, அனைத்து முக்கிய நேட்டோ சக்திகளைப் போலவே பேர்லினும் ஏற்கனவே உக்ரேனில் ரஷ்யாவுடனான போரில் ஒரு கட்சியாக உள்ளது. “இராணுவ ஆதரவு சேவைகளின்” அதிகாரப்பூர்வ பட்டியலின்படி, பேர்லின் 30 லியோபார்ட் 1 ரக முக்கிய போர் டாங்கிகள், 18 லியோபார்ட் 2 ரக முக்கிய போர் டாங்கிகள், 90 மார்டர் காலாட்படை சண்டை வாகனங்கள், 52 Gepard விமான எதிர்ப்பு டாங்கிகள் மற்றும் சுமார் 250 கவச போர் வாகனங்களை உக்ரேனுக்கு வழங்கியுள்ளது. மேலும் 30 மார்டர், 105 லியோபார்ட் 1 மற்றும் 15 கெபார்ட் டாங்கிகள் “தயார் நிலையில்” உள்ளன.

“ஐரோப்பிய அல்லது நேட்டோ நாடுகளில் இருந்து தரைப்படைகள் இருக்காது” என்று ஷால்ஸ், X இல் அறிவித்த அதே இடுகையில், “உக்ரேனுக்காக அனைவரும் அதிகம் செய்ய வேண்டும் என்று நேற்று பாரிஸில் ஒப்புக்கொண்டோம். உக்ரேனுக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் வான் பாதுகாப்பு தேவை. அதற்கான வேலைகளை செய்து வருகிறோம்” என்று அவர் எழுதினார்.

கடந்த மாதம், ஜேர்மன் இராணுவம் அடுத்த 5-8 ஆண்டுகளுக்குள் ரஷ்யாவுடன் போருக்கான திட்டங்களை வெளியிட்டது. ஜேர்மன் போர் திட்டம் வெளியிடப்பட்ட நிலையில், பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் “ரஷ்ய ஆக்கிரமிப்பு” ஐந்தாண்டுகளுக்குள் நிகழலாம் என்று அறிவித்தார். அடுத்த மூன்று முதல் ஐந்து வருடங்கள், “நம்மை நாமே தீவிரமாக ஆயுதமாக்கிக் கொள்ளப் பயன்படுத்த வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

மேலும், இதர முக்கிய ஐரோப்பிய அரசாங்கங்கள் தாங்களும் ரஷ்யாவுடன் போருக்குத் தயாராகி வருகிறோம் என்பதற்கான தெளிவான பொது சமிக்ஞைகளை அனுப்பியுள்ளன. கடந்த மாதம், பிரிட்டனின் தலைமை அதிகாரி ஜெனரல் சர் பேட்ரிக் சாண்டர்ஸ், “போருக்கு தேசத்தை அணிதிரட்ட” அழைப்பு விடுத்தார், உக்ரேனில் நடந்து வருகின்ற போர் பிரிட்டனில் இராணுவ ஆட்சேர்ப்பு மற்றும் “குடிமக்கள் இராணுவத்தின்” அவசியத்தை காட்டுகிறது என்று கூறினார்.

மக்ரோனின் போர்த் திட்டத்தை ஷோல்ஸ் மறுத்ததில் எந்த அர்த்தமும் இல்லை: உக்ரேனில் நேட்டோ போர் தீவிரமடையும் ஒவ்வொரு கட்டத்திலும் இத்தகைய மறுப்புகள் மீண்டும் மீண்டும் வெளியிடப்பட்டு வருகின்றன. உக்ரேனுக்கு ஆயுதங்கள், பின்னர் கனரக பீரங்கி, பின்னர் டாங்கிகள், பின்னர் நீண்ட தூர ஏவுகணைகளை அனுப்ப நேட்டோ சக்திகளின் திட்டங்கள் அனைத்தும் முதலில் மறுக்கப்பட்டன, பின்னர் விவாதிக்கப்பட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

உக்ரேனுக்கு நேட்டோவின் துருப்புக்கள் அனுப்பப்படுவது, உலகின் இரண்டு பெரிய அணு ஆயுத வல்லரசுகளான நேட்டோ கூட்டணிக்கும், ரஷ்யாவிற்கும் இடையிலான அணுசக்தி மோதலாக நிச்சயமாக விரிவடையும். இறப்புகள் மற்றும் உயிரிழப்புகள் பல்லாயிரக்கணக்கான அல்லது நூற்றுக்கணக்கான மில்லியன்கள் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும்.

மூன்றாம் உலகப் போரை நோக்கிய முதலாளித்துவ அமைப்புமுறையின் அணிவகுப்பை நிறுத்த ஒரே வழி, முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை சர்வதேச அளவில் அணிதிரட்டுவது அவசியமாகும். ஐரோப்பிய ஆளும் வர்க்கங்களுக்கு தார்மீக அழுத்தம் மற்றும் முறையீடுகள் செய்வது தோல்வியிலேயே முடியும். ரஷ்யாவைக் கைப்பற்றி அதன் பரந்த இயற்கைச் செல்வத்தைக் கொள்ளையடிப்பதற்கான அவர்களின் போர், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஆழ்ந்த தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்போடு பேரழிவு மற்றும் மோதலுக்குப் பாதையில் தள்ளுகிறது என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். ஆனாலும் அவை தொடர்கின்றன.

“வாக்காளர்கள் தங்களுடைய ஓய்வூதியத்தை குறைத்து அதிக டாங்கிகளை வாங்குவதை எதிர்க்கலாம்” என்று பிரிட்டிஷ் நிதி மூலதனத்தின் நன்கு அறியப்பட்ட பத்திரிகையான தி எகனாமிஸ்ட் அப்பாவித்தனமாக எழுதுகிறது. மேலும் கூறுகையில், “ஐரோப்பியத் தலைவர்கள் இதர சேவைகள், வரிகள் மற்றும் கடன்கள் ஆகியவற்றில் வெட்டுக்கள் மூலம் நிதி திரட்ட வேண்டும் என்றால், அவர்கள் தியாகங்கள் மதிப்புக்குரியது என்று வாக்காளர்களை வற்புறுத்த வேண்டும்” என்று அது மேலும் எழுதியது.

அணு ஆயுத யுத்தத்தை நோக்கிய நகர்வை ஆதரிக்க ஐரோப்பிய தொழிலாளர்களை வற்புறுத்தவும் முடியாது. இராணுவச் செலவினங்களானது, (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதத்தை பிஸ்டோரியஸ் இதற்கு முன்மொழிந்தார், இது ஆண்டுக்கு யூரோ மண்டல இராணுவ செலவினத்தை 500 பில்லியன் யூரோக்களுக்கு மேல் இரட்டிப்பாக்குகிறது) சமூகச் செலவுகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை உள்ளடக்கியதாகக் கருதப்படுகிறது. கடந்த ஆண்டு பிரான்சில் மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான போராட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கருவிகளைக் கொண்டு தொழிலாளர்களை “வற்புறுத்துவதற்கு” முதலாளித்துவம் நோக்கமாகக் கொண்டுள்ளது: அது, போலீஸ் தடியடி, ரப்பர் தோட்டாக்கள் மற்றும் வெகுஜன கைதுகள் ஆகும்.

உத்தியோகபூர்வ ஐரோப்பிய அரசியலில் ஒரு கூர்மையான வலதுசாரி மாற்றத்தை ஆளும் வட்டங்கள் பரிசீலித்து வருகின்றன. “ஐரோப்பிய தலைவர்கள் சோவியத்துக்கு பிந்தைய மனநிறைவை அவசரமாக கைவிட வேண்டும். அதாவது பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு பாதுகாப்பு செலவினங்களை அதிகரிப்பது, ஐரோப்பாவின் புறக்கணிக்கப்பட்ட இராணுவ மரபுகளை மீட்டெடுப்பது, அதன் ஆயுதத் தொழில்களை மறுசீரமைப்பது மற்றும் சாத்தியமான போருக்குத் தயார் செய்வதாகும். இப்போதுதான் அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன” என்று எகனாமிஸ்ட் எழுதியுள்ளது.

ஐரோப்பாவின் புறக்கணிக்கப்பட்ட இராணுவ மரபுகளின் மறுமலர்ச்சி என்பது வெகுஜன அடக்குமுறை மற்றும் பாசிசத்திற்கு திரும்புவதாகும்.

போர் மற்றும் அதனுடன் இணைந்த சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் ஏற்கனவே வர்க்கப் போராட்டத்தின் தீவிரத்தை தூண்டிவிட்டுள்ளன. பல ஐரோப்பிய நாடுகளில் விவசாயிகளின் போராட்டங்கள், ஜேர்மனியில் ரயில் ஓட்டுனர்கள், விமான நிலையம் மற்றும் பொதுத்துறை ஊழியர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் பிரான்சில் தேசிய ரீதியிலான ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் ஆகியவற்றுடன் இந்த ஆண்டு தொடங்கியுள்ளது. ஜேர்மனியில் அதிதீவிர வலதுசாரிகளான ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சிக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு, காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன.

ஏகாதிபத்தியம் போரில் மூழ்கடிப்பதில் இருந்து எழும் பணிகள் பற்றிய புரிதலுடன், ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் வளர்ந்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை ஆயுதமாக்குவதே முக்கியமான பணியாகும். முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு சோசலிச வேலைத்திட்டத்துடன் ஆயுதம் ஏந்திய ஒரு அரசியல் நனவான, சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கம் தொழிலாள வர்க்கத்தில் கட்டியெழுப்பப்படவேண்டும். அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரமும், ஜூன் மாதம் நடக்கவிருக்கும் ஐரோப்பியத் தேர்தல்களில் அதன் ஐரோப்பிய சகோதர கட்சிகளுடன் சேர்ந்து ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (SGP)

தலையீடு செய்வது முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

SGPயின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “பாரிய மரணம், போர் மற்றும் வங்கிகள், பெருநிறுவனங்களின் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிராக, தொழிலாளர்கள் ஐரோப்பாவின் ஐக்கிய சோசலிச அரசுகளின் முன்னோக்கில் அணிதிரள வேண்டும். வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் அதிகாரத்தை உடைத்து அவற்றை ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்காமல் நாம் போரை முடிவுக்குக் கொண்டு வரவோ, உயிர்களைக் காப்பாற்றவோ, ஊதியங்களைப் பாதுகாக்கவோ முடியாது. ஒருவரையொருவர் சுடுவதற்குப் பதிலாக, ரஷ்யா மற்றும் உக்ரேன் தொழிலாளர்கள் மற்றும் அனைத்து ஐரோப்பாவின் தொழிலாளர்களும் இந்த முன்னோக்கில் உள்நாட்டில் உள்ள போர்வெறியர்களுக்கு எதிராக போராட வேண்டும்”.

Loading