ட்ரொட்ஸ்கியின் காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி நூலின் அறிமுக விரிவுரையை IYSSE கொழும்பில் நடத்துகிறது

சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பு, லியோன் ட்ரொட்ஸ்கியின் நிலைபேறான படைப்பான காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, இப்போது விற்பனையில் இருக்கிறது என்பதைத் தொழிலாளர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்களுக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஏனைய ஐரோப்பிய பிரிவுகளின் உறுப்பினர்களுடன் இணைந்து பிரான்சில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சியின் தோழர்களால் இந்த வரலாற்றுத் தமிழாக்கம் பூர்த்தியாக்கப்பட்டது.

புதிய புத்தகத்தை அறிமுகம் செய்ய ஹட்டனிலும் யாழ்ப்பாணத்திலும் விரிவுரைகள் நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக கொழும்பில் மார்ச் 7, வியாழன் மாலை 4 மணிக்கு, கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் IYSSE இந்த அறிமுக விரிவுரையை ஏற்பாடு செய்துள்ளது.

ட்ரொட்ஸ்கியின் மிகவும் அறிவுக்கூர்மை மிக்க மார்க்சிச படைப்புகளில் ஒன்றான காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி, 1936 இல் சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் அவர் நோர்வேக்கு வலுக்கட்டாயமாக அரசியல் நாடுகடத்தல் செய்யப்பட்டிருந்த போது எழுதப்பட்டதாகும். பூமியில் முதல் சோசலிச அரசை நிறுவிய, 1917 இல் ரஷ்யாவில் நடந்த அக்டோபர் புரட்சியின் போது விளாடிமிர் லெனினுடன் ட்ரொட்ஸ்கி இணைத் தலைவராக இருந்தார்.

சுற்றியுள்ள பல நாடுகளில் சோசலிச ரஷ்யாவைப் பின்பற்ற முயன்ற தொழிலாள வர்க்க எழுச்சியின் மத்தியில், 1922 இல் சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் நிறுவப்பட்டது. எவ்வாறாயினும், ஜேர்மனி போன்ற பிரதான முதலாளித்துவ நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகளின் தோல்விகளால் சோவியத் ஒன்றியம் தனிமைப்படுத்தப்பட்டமை, தொழிலாள வர்க்கத்திடம் இருந்து அரசியல் அதிகாரத்தை திட்டமிட்டு அபகரித்த ஒரு அதிகாரத்துவ எந்திரம் தோன்றுவதற்கு வழி வகுத்தது. இந்த அதிகாரத்துவத்தின் உருவகமாக ஜோசப் ஸ்டாலின் இருந்ததோடு அவர் 1924 இன் இறுதியில் 'தனி நாட்டில் சோசலிசம்' என்ற தனது பிற்போக்கு தேசியவாத கோட்பாட்டை அறிவித்தார்.

ட்ரொட்ஸ்கியும் போல்ஷிவிக் கட்சியில் உள்ள அவரது சக-சிந்தனையாளர்களும் 1923ல் இடது எதிர்ப்பு அணியை உருவாக்கி, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தையும் அக்டோபர் புரட்சி அடிப்படையாகக் கொண்டிருந்த சோசலிச அனைத்துலகவாதத்தை அது நிராகரிப்பதையும் அரசியல் ரீதியில் அம்பலப்படுத்தும் வேலையை ஆழமாக்கினர். ட்ரொட்ஸ்கியை அல்மா-அட்டாவிற்கு நாடுகடத்திய ஸ்ராலின், பின்னர் அவரை சோவியத் ஒன்றியத்தில் இருந்து நாடு கடத்தியதுடன், நாட்டுக்கு நாடு அவரை வேட்டையாடினார்.

இந்த நிலைபேறான படைப்பில், சோவியத் அதிகாரத்துவத்தின் தோற்றம், வளர்ச்சி மற்றும் தவிர்க்க முடியாத அழிவையும் இயக்குவித்த விதிகளை ட்ரொட்ஸ்கி வெளிக்கொணர்ந்துள்ளார். இந்த அதிகாரத்துவத்திற்கு எந்த முற்போக்கான பாத்திரத்தையும் காட்ட அவர் மறுத்துவிட்டார்.

ஒரு அரசியல் புரட்சியின் மூலம், முதல் தொழிலாளர் அரசில் தோன்றிய ஒட்டுண்ணி அடுக்கை தொழிலாள வர்க்கம் தூக்கியெறியவில்லை என்றால், சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவத்தை மறுஸ்தாபிதம் செய்வதற்கான களத்தை இந்த அதிகாரத்துவம் தயார் செய்யும் என்று மாபெரும் புரட்சித் தலைவர் எச்சரித்தார்.

இந்த எச்சரிக்கைகள், ஸ்ராலினிச அதிகாரத்துவம் 1985 இல் பெரெஸ்ட்ரொய்காவில் தொடங்கி டிசம்பர் 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு வழிவகுத்த முதலாளித்துவ மறுஸ்தாபித நடவடிக்கைகளில் உறுதிப்படுத்தப்பட்டன. இந்த அபிவிருத்திகள் ட்ரொட்ஸ்கியின் எச்சரிக்கைகளை சக்திவாய்ந்த முறையில் நிரூபித்தன.

சர்வதேச அளவில் ஆளும் வர்க்கங்களின் எதிர்ப்புரட்சித் தயாரிப்புகளைத் தோற்கடிப்பதன் பேரில், சோசலிசப் புரட்சிக்காகப் போராடுவதற்குத் தேவையான புரட்சிகரத் தலைமையை கட்டியெழுப்பும் வேலைகளில் இந்த மாபெரும் படைப்பைப் பற்றிய ஆய்வு இன்றியமையாததாகும்.

இந்த வரலாற்று விரிவுரையில் பங்கேற்குமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் சோசலிச சிந்தனை கொண்ட புத்திஜீவிகளுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.

நாள் மற்றும் நேரம்

* மார்ச் 7, வியாழன் மாலை 4 மணிக்கு.

வெள்ளவத்தையில் அமைந்துள்ள கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில்

Loading