இலங்கை: காசா போர் குறித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மௌனம் காக்கிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரில் திகிலடைந்த உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மோதலுக்கு முடிவு கட்டக் கோரி அக்டோபர் 7 முதல், ஒவ்வொரு வாரமும் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். பல பெண்கள், குழந்தைகள் உட்பட 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனைகள், பாடசாலைகள் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகளும் அழிக்கப்பட்டுள்ளன.

உணவு, தண்ணீர், எரிபொருள், மருத்துவம் மற்றும் மின்சாரம் ஆகிய அத்தியாவசிய விநியோகங்களை இஸ்ரேலிய இராணுவம் தடுத்துள்ளதன் விளைவாக பரவலான பட்டினி, நோய் மற்றும் மேலும் மரணங்களும் ஏற்படுகின்றன. 1.5 மில்லியன் பாலஸ்தீனியர்கள் கொடூரமான சூழ்நிலையில் வாழ்ந்து வரும் ரஃபாவிற்குள் தரைமார்க்கமாக ஒரு கொலைகாரத் தாக்குதலை இப்போது இஸ்ரேல் தயார் செய்து வருகிறது.

அமெரிக்கா, அனைத்து ஏகாதிபத்திய சக்திகளுடன் சேர்ந்து, இஸ்ரேலிய ஆட்சியின் காட்டுமிராண்டித்தனமான போருக்கு அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும், பெரும் ஆயுதங்களை வழங்கியும் முடிந்தவரை ஆதரவளித்து வருகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இலங்கை அரசாங்கம், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் சேர்ந்து, ஹமாஸ் மீதான அமெரிக்க கண்டனங்களை மீண்டும் உச்சரிப்பதன் மூலம் இஸ்ரேலுடன் அணிசேர்ந்துள்ளமை புதுமையானதல்ல. ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு எதிராக ஒடுக்குமுறையாளரான இஸ்ரேலுடன் விளைபயனுடன் அணிசேர்ந்துள்ள எதிர்க்கட்சியான மக்கள் விடுலை முன்னணி (ஜே.வி.பி.), இந்த மோதலில் “எந்தப் பக்கத்திலும் நிற்கவில்லை” என்று அறிவித்துள்ளது.

வரலாற்றில் மிகப்பெரும் குற்றச்செயல்களில் ஒன்றான இந்தப் போர் பற்றிய யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (யா.ப.மா.ஒ.) அணுகுமுறை என்ன: மௌனம்!

IYSSE உறுப்பினர்கள் 2023 நவம்பரில் இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் பேசுகிறார்கள்.

உலக சோசலிச வலைத் தளம் இது குறித்து கேட்ட போது, யா.ப.மா.ஒ. தலைவர் கே. துவராகன் முனுமுனுக்கக் கூட இல்லை. “சர்வதேச முன்னேற்றங்களைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. எங்களின் பிரச்சனைகள், அதாவது தமிழ் மக்களின் பிரச்சனைகள் பற்றி மட்டுமே நாங்கள் அக்கறை கொள்கிறோம்,’' என அவர் கூறினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், “காசாவில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் பொருட்படுத்தவில்லை,” என்பதாகும்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பு நடத்திய பிரச்சாரத்தின் போது, யா.ப.மா.ஒ. உறுப்பினர் ஒருவர், “இப்போது பாலஸ்தீனியர்களுக்கு ஆதவாக பரந்தளவில் உலகளாவிய எதிர்ப்பு இயக்கம் உள்ளது, ஆனால் இலங்கை அரசாங்கம் யுத்தத்தில் தமிழர்களை படுகொலை செய்த போது எங்களை ஆதரிக்க அத்தகைய உலகளாவிய இயக்கம் எதுவும் இருக்கவில்லை?” என்று அப்பட்டமாக அறிவித்தார்:

இந்தக் கருத்துக்களில் உள்ள வஞ்சத்தனம் திகைக்க வைக்கிறது.

2009 ல் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அதன் இரத்தக்களரிப் போரின் இறுதி மாதங்களில் இலங்கை இராணுவம் தமிழர்களுக்கு எதிராக நடத்திய படுகொலைக்கும் இஸ்ரேல் பாலஸ்தீனியர்களை இனப்படுகொலை செய்வதற்கும் இடையே தெளிவான ஒற்றுமைகள் உள்ளன.

2009 ஜனவரியில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சி, ஆனையிறவு மற்றும் முல்லைத்தீவு வீழ்ந்த பின்னர், இலங்கை இராணுவம் எஞ்சியிருந்த விடுதலைப் புலி படைகளையும் கிட்டத்தட்ட அரை மில்லியன் தமிழ் பொதுமக்களையும் வடகிழக்கு கடற்கரையில் சுருங்கிக்கொண்டே போன நிலப்பகுதிக்குள் விரட்டியது.

பொதுமக்கள் இடைவிடாத பீரங்கி மற்றும் வான்வழி குண்டுவீச்சுக்கு உட்பட்டனர். பாதுகாப்பு அமைச்சு மக்கள் பாதுகாப்பாக இருக்க “பாதுகாப்பு வலயங்களை” அறிவித்திருந்தாலும் அந்தப் பகுதிகளிலும் குண்டுவீசப்பட்டது. பெப்ரவரி 1 அன்று, “பாதுகாப்பு வலயம்” என்று அழைக்கப்படும் பகுதிக்குள் இருந்த புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் மீது இராணுவம் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதில், ஒன்பது பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 20 பேர் காயமடைந்தனர்.

பெப்ரவரி 6 அன்று, அதே ஊரில் உள்ள பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை தாக்கப்பட்டதில் சுமார் 75 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலைப் போலவே, மறுநாள், இந்த மருத்துவமனையை விடுதலைப் புலிகளின் தலைவர் சூசையின் மறைவிடம் என்று பொய்யாக அறிவித்த விமானப்படை, இந்தப் போர்க்குற்றத்தை நியாயப்படுத்தியது.

2008 டிசம்பரில் இருந்து போர் வலயத்தில் மருத்துவ வசதிகள் மீதான 30 தாக்குதல்களை மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆவணப்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய இராணுவம் பாலஸ்தீனிய மக்களைப் பட்டினியில் ஆழ்த்த முற்படுவதைப் போலவே, இலங்கைப் படைகளும் போர் வலயத்தில் சிக்கியுள்ள தமிழ் மக்களுக்கான விநியோகங்களை கடுமையாகக் கட்டுப்படுத்தின.

2009 மே 18 அன்று, விடுதலைப் புலிகளின் படைகளின் இறுதி வீழ்ச்சிக்குப் பின்னர் யுத்தம் முடிவுக்கு வந்தது. சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டனர். சுமார் 300,000 தமிழ் பொதுமக்கள் வவுனியாவில் அமைக்கப்பட்ட இராணுவ கட்டுப்பாட்டில் நடத்தப்பட்ட தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்தனர். சுமார் 11,000 பேர், முக்கியமாக இளைஞர்கள், இரகசிய “புனர்வாழ்வு மையங்களுக்கு” இழுத்துச் செல்லப்பட்டனர். பலர் வெறுமனே “காணாமல் போய்விட்டனர்.”

எல்லா அட்டூழியத்தையும் நேர்மையீனமாக மறுத்த கொழும்பு அரசாங்கம், பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று திட்டவட்டமாக அறிவித்தது. எவ்வாறாயினும், போரின் இறுதி வாரங்களில் மட்டும் 40,000 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐ.நா. மதிப்பிட்டுள்ளது.

2006 ஜூன் 21, இலங்கையின் கொழும்பிலிருந்து வடகிழக்கே சுமார் 300 கிலோமீட்டர் (186 மைல்) தூரத்தில் உள்ள யாழ்ப்பாணத்தில் இலங்கைப் படையினர் ரோந்து செல்கின்றனர். [AP Photo/Eranga Jayawardena]

சந்தேகத்திற்கு இடமின்றி இன்று தமிழ் இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில், ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனியர்களின் அவல நிலை குறித்து கணிசமான அனுதாபம் உள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவர்களில் எவருக்கும் அனுதாபம் கிடையாது.

மேலும், 2009 இல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கொடூரத் தாக்குதலுக்கு எதிராக உலகளாவிய போராட்டங்கள் எதுவும் நடக்கவில்லை என்பது வெறும் பெய்யாகும். இலங்கையில் மனிதாபிமானப் பேரழிவுக்கு எதிராக டொரன்டோ, பாரிஸ், லண்டன் மற்றும் பெர்லின் நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.

எவ்வாறாயினும், எதிர்ப்புக்கள் கொழும்பின் இனவாதப் போருக்கு எதிராக பரவலான கோபத்தை வெளிப்படுத்திய அதே வேளை, ஆர்ப்பாட்டங்களில் மேலாதிக்கம் செலுத்திய தமிழ் கட்சிகளும் அமைப்புகளும் போரை நிறுத்துவதற்கு மேற்கத்திய சக்திகளும் இந்தியாவும் தலையிட வேண்டும் என கோருவதற்கே அந்த போராட்டங்களை மட்டுப்படுத்தின. கொழும்பின் கொடூரமான இராணுவத் தாக்குதலுக்கு ஆதரவாக இருந்த சக்திகளிடம் வேண்டுகோள் விடுப்பது முற்றிலும் பயனற்றதாக இருந்தது.

பாலஸ்தீன இனப்படுகொலை பற்றி யா.ப.மா.ஒ. மௌனம் காப்பது, அது நெருங்கிய உறவுகளைக் கொண்ட தமிழ்க் கட்சிகளின் ஏகாதிபத்திய சார்பு அரசியலின் விளைவாகும். தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் உயரடுக்கினரின் அதிகாரம் மற்றும் சலுகைகளை மேம்படுத்துவதற்காக, அதிகாரப் பகிர்வு உடன்படிக்கையை ஏற்படுத்த கொழும்பு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு அவர்கள் அனைவரும் “சர்வதேச சமூகத்திடம்”, எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்காவிடம் கெஞ்சுகின்றனர்.

வாஷிங்டனையும் புது டெல்லியையும் எதிர்த்துக்கொள்ள விரும்பாமல், இந்த தமிழ்க் கட்சிகள் அனைத்தும் காசா விஷயத்தில் யா.ப.மா.ஒ. கொண்டுள்ள அதே நிலைப்பாட்டை கொண்டுள்ளன.

அக்டோபர் 18 அன்று காசாவில் உள்ள அல்-அஹ்லி-அரபு மருத்துவமனை மீது இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடத்தியபோது, இலங்கைத் தமிழ் அரசு கட்சி செய்தித் தொடர்பாளர் எம்.ஏ. சுமந்திரன் ட்விட்டர் மூலம் ஒரு அடையாள எதிர்ப்புக் குறிப்பை வெளியிட்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, “பிராந்தியத்தில் அமைதி நிலவட்டும்” என்று அவர் பாராளுமன்றத்தில் வெற்று வேண்டுகோளை விடுத்தார்.

அக்டோபர் 20 அன்று பாராளுமன்றத்தில் பேசுகையில், இஸ்ரேல் “இனப்படுகொலையை” மேற்கொள்வதாக அறிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 2009 இல் தமிழர்கள் எதிர்கொண்ட நிலைமையை தெளிவற்ற முறையில் குறிப்பிட்ட போதிலும், அவர் காஸா போரை நிறுத்துமாறு கோரவில்லை.

இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து ஏகாதிபத்திய சக்திகளால் எதேச்சதிகாரமாக உருவாக்கப்பட்ட இஸ்ரேலின் சியோனிச அரசை அனைத்து தமிழ் கட்சிகளும் பாலஸ்தீனிய மக்களின் இழப்பில் பாதுகாக்கின்றன. மிகவும் குறிப்பிடத்தக்க வகையில், இஸ்ரேலுக்கு அமெரிக்காவும் ஐரோப்பிய சக்திகளும் ஆதரவளிப்பது பற்றியும் காசாவில் இஸ்ரேலின் படுகொலை பற்றியும் அவை எதுவும் கூறவில்லை.

யுத்தம் முடிவடைந்த பின்னர், அமெரிக்கா இலங்கையில் “மனித உரிமை” மீறல் பற்றிய கவலைகளை எழுப்பத் தொடங்கியது, தமிழ், சிங்களம் அல்லது முஸ்லீம் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஜனநாயக உரிமைகள் மீதான அக்கறையினால் அல்ல. மாறாக சீனாவுடனான தனது உறவுகளைத் துண்டிக்குமாறு கொழும்பு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கே ஆகும். தமிழ்க் கட்சிகளும் இதைப் பின்பற்றி, சீனாவுடனான போருக்கான அமெரிக்கா தலைமையிலான தயாரிப்புகளுடன் அணிவகுத்தன.

யா.ப.மா.ஒ.வும் அந்த பாதையில் விழுந்தது. 2022 செப்டம்பரில் ஒரு அறிக்கையில், “இங்கிலாந்து, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜெர்மனியும் தமிழ் மக்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றன” என்ற மோசடியை ஊக்குவித்துள்ளது. அதே நேரத்தில், பெய்ஜிங் இலங்கையில் ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதாகக் கூறி, தமிழர்களின் உரிமைகளை கீழறுப்பதில் கொழும்பை ஆதரிப்பதற்காக சீனாவை அது சாடியது.

காஸாவில் நடைபெறும் படுகொலைகள் குறித்து யா.ப.மா.ஒ. மௌனம் சாதிப்பது தமிழ் தேசியவாத அரசியலின் மீதான குற்றப் பத்திரிகையாகும். ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் உரிமைகளைப் பாதுகாக்காதவர்கள், “எங்கள் மக்கள்” என்று அழைப்பவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில்லை. ஏகாதிபத்தியத்தின் முன் பணிந்து நிற்கும் யா.ப.மா.ஒ. மற்றும் தமிழ் கட்சிகள், தமிழ் முதலாளித்துவத்தின் செல்வம் மற்றும் சலுகைகள் பற்றி மட்டுமே கவலைப்படுகின்றன.

இலங்கை இராணுவம் அதன் கொடூரமான தாக்குதல்களை தீவிரப்படுத்தியபோது, 2009 பெப்ரவரியில் எழுதப்பட்ட உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு அறிக்கை, தமிழ் உயரடுக்கின் திவாலான தேசியவாத முன்னோக்கை எடுத்துக்காட்டுகிறது.

“தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பு இணையத்தளமான புதினம், பெப்ரவரி 1 அன்று ‘இந்தியா, இந்தியா, அனைத்தும் இந்தியா’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. “வெள்ளை மாளிகை, டவுனிங் தெரு, ஒட்டாவாவின் தெருக்கள் மற்றும் பிற மேற்கத்திய தலைநகரங்களின் தெருக்களுக்கு முன்னால் நாங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள் அந்தந்த அரசாங்கங்களுக்கு அசௌகரியத்தையே உருவாக்கும்” என்று அது பரிதாபமாக வாதிட்டதுடன், “அவர்களால் இப்போது எதுவும் செய்ய முடியவில்லை என்றாலும், பின்னர் எங்களுக்கு மேற்கத்திய நாடுகளின் ஆதரவு தேவை, எனவே நாங்கள் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது…” என்று கேட்டுக்கொண்டது.

எப்பொழுதும் ஏகாதிபத்திய சக்திகளையும் இந்தியாவையும் தங்களின் மீட்பராக நோக்கும் தமிழ் தேசியவாத அரசியலைப் பற்றியே புதினம் கட்டுரை பேசுகிறது. அது புலம்பெயர்ந்த தமிழ் மக்களை, தங்கள் ஏகாதிபத்திய எஜமானர்களை “சங்கடப்படுத்தாமல்” அவர்களுக்கு சேவை செய்து அவர்களின் ஆதரவைப் பெறவே அழைப்பு விடுத்தது. நிச்சயமாக அதைத்தான் இன்று அவர்கள் செய்கிறார்கள்: ஒரு சில சிறு ரொட்டித் துண்டுகளாவது தங்கள் வழியில் விழக்கூடும் என்ற வீண் நம்பிக்கையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு ஆதரவளிப்பதையிட்டு அதை சங்கடப்படுத்தாமல் இருக்கின்றனர்.

சர்வதேச ஆசிரியர் குழுவின் அறிக்கை மேலும் விளக்கியதாவது: “தமிழ் மக்களின் கூட்டாளிகள், இலங்கையிலும் புலம்பெயர்ந்தவர்கள் வாழும் ஏகாதிபத்திய நாடுகளிலும் தொழிலாள வர்க்கமே ஆகும். ஏகாதிபத்திய உலக ஒழுங்கிற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கை முதலாளித்துவ அரசைத் தூக்கியெறியவும், தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தவும் வல்லமை கொண்ட ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கமே ஆகும். அதன் வர்க்க நலன்கள், யுத்தத்துக்கு முடிவுகட்டுவதிலேயே தங்கியிருக்கின்றது.

இன்று இலங்கை, மத்திய கிழக்கு மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள், இலங்கையில் நீடித்து வரும் இனவாத யுத்தத்தின் இரத்தக்களரி முடிவில் இருந்து தேவையான அரசியல் படிப்பினைகளைப் பெற வேண்டும். காஸா, இலங்கை அல்லது வேறு எங்கும் ஏகாதிபத்தியத்திடம் கெஞ்சுவதன் மூலம் அடிப்படை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை பாதுகாக்க முடியாது. மாறாக சர்வதேச ரீதியில் முதலாளித்துவத்திற்கு முடிவுகட்டுவதற்கு ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட இயக்கத்தை கட்டியெழுப்புவதே நோக்குநிலையாக இருக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இதன் அர்த்தம் தொழிலாளர்களை இனம், மதம் அல்லது வகுப்பின் அடிப்படையில் பிளவுபடுத்த உதவுகின்ற அனைத்து வகையான தேசியவாதம் மற்றும் இனவாதத்தையும் நிராகரிப்பதாகும். யா.ப.மா.ஒ. மற்றும் தமிழ் முதலாளித்துவக் கட்சிகளால் தூக்கிப் பிடிக்கப்படும் தமிழ் தேசியவாதமும், கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தின் சிங்களப் பேரினவாதமும், தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு பேரழிவாக நிரூபிக்கப்பட்டுள்ளன.

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான சியோனிச ஆட்சியின் அமெரிக்க ஆதரவுடைய இனப்படுகொலையை எதிர்ப்பதில் எங்களுடன் இணையுமாறும் ஏகாதிபத்திய அடக்குமுறை மற்றும் உலகப் போரை நோக்கிய உந்துதலுக்கு முடிவுகட்ட தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச இயக்கத்தை கட்டியெழுப்ப உதவுமாறும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

Loading