முன்னோக்கு

இருகட்சி செனட் மசோதாவின் தோல்வி

போர் நிதியுதவியை கோரும் பைடென், அதிவலது புலம்பெயர்ந்தோர்-விரோத கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

ஜனாதிபதி ஜோ பைடென் செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 6, 2024 அன்று வாஷிங்டனில் வெள்ளை மாளிகையின் அரச வரவேற்பு அறையில் அவசரகால தேசிய பாதுகாப்பு கூடுதல் ஒதுக்கீட்டுச் சட்டம் குறித்த கருத்துக்களை வழங்குகிறார். [AP Photo/Evan Vucci]

கூடுதல் போர் நிதியாக 118 பில்லியன் டாலர்கள் கொடுக்கப்படுவதற்கும் அமெரிக்க-மெக்சிக்கோ எல்லையைக் கடந்து வரும் புலம்பெயர்ந்தோர் மீது ஒரு பெரும் ஒடுக்குமுறையை நடத்துவதற்குமான அவரது முன்மொழியப்பட்ட சட்ட மசோதா பொறிந்து போவதற்கு மத்தியில், செவ்வாய்கிழமை பிற்பகல் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், ஜனாதிபதி ஜோ பைடன், “இப்போது முதல் நவம்பர் வரை ஒவ்வொரு நாளும்” குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிவின் தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார்.

உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமிப் போரை 2024 தேர்தல்களில் ஜனநாயகக் கட்சி பிரச்சாரத்தின் மையத்தில் வைக்கவிருப்பதாகவும், அத்துடன் புலம்பெயர்ந்தோரை கையாளும் விதம் குறித்து உறுதியாக வலதை நோக்கி நகர்வதாகவும் பைடென் தெளிவுபடுத்தி சுட்டிக்காட்டினார், புலம்பெயர்ந்தோருக்கு எதிராக தெற்கு அமெரிக்க எல்லையை இராணுவமயமாக்க சூளுரைப்பதில் பாசிசவாத ட்ரம்புக்கு இணையாக செயல்பட முனைகிறார்.

“இந்த மசோதாவை நிறைவேற்றி உடனடியாக எனது மேசைக்கு கொண்டு வருமாறு காங்கிரஸை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று பைடென் கூறினார். “ஆனால் இந்த மசோதா தோல்வியுற்றால், நான் ஏதோவொன்றைப் பற்றி முற்றிலும் தெளிவாக இருக்க விரும்புகிறேன்: அது ஏன் தோல்வியடைந்தது என்பதை அமெரிக்க மக்கள் தெரிந்து கொள்ளப் போகிறார்கள்... இப்போது மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் ஒவ்வொரு நாளும், எல்லை பாதுகாப்பாக இல்லாததற்கு ஒரே காரணம் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது MAGA (அமெரிக்க மகத்துவத்தை மீண்டும் மீட்டெடுங்கள், Make America Great Again, MAGA) குடியரசுக் கட்சி நண்பர்கள் என்பதை அமெரிக்க மக்கள் அறிந்து கொள்ளப் போகிறார்கள்.”

ஜனவரி 6, 2021 அன்று கேப்பிடல் ஹில் மீதான தாக்குதல் மற்றும் ஜனநாயக உரிமைகளை அச்சுறுத்தும் பிற நடவடிக்கைகளில் ட்ரம்ப் வகித்த பாத்திரத்தின் காரணமாக, அமெரிக்க ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலை பிரதிநிதித்துவப்படுத்தும் ட்ரம்ப் என்ற அடிப்படையில் அவர் தேர்தலில் போட்டியிடுவார் என்று சில வாரங்களுக்கு முன்னர் தான் பைடென் கூறி வந்தார். ட்ரம்ப் ஒரு எதிர்கால சர்வாதிகாரி என்றும் அவர் அறிவித்தார்.

ஆனால் இப்போது பைடென் திடீரென தனது போக்கை மாற்றிக் கொண்டு, எல்லையை ஒரு விட்டுக்கொடுக்காத பாதுகாவலராக தன்னைக் காட்டிக் கொண்டுள்ளார். முன்னர் ட்ரம்ப்பின் முதன்மை நடைமுறையாக இருந்தநிலையில், ட்ரம்ப் புலம்பெயர்ந்தோரை கற்பழிப்பாளர்கள் மற்றும் கொலைகாரர்கள் என்று கண்டனம் செய்துடன், ஹிட்லரின் வார்த்தைகளில் அவர்களை அமெரிக்க மக்களின் “இரத்தத்தில் நஞ்சூட்டும் புழுக்கள்” என்று அவதூறு செய்தார். 

போர் செலவினங்கள் மீதான இருகட்சி உடன்படிக்கையை தகர்க்க ட்ரம்ப் தலையிட்டதைக் குறிப்பிட்டு, “இந்த நச்சு அரசியலைக் கடந்து செல்லுமாறு” குடியரசுக் கட்சியினருக்கு பைடென் முறையிட்டார். “அற்பமான பக்கச்சார்பான அரசியலை எங்கள் பொறுப்பின் வழியில் நாங்கள் தொடர்ந்து அனுமதிக்க முடியாது. நாங்கள் ஒரு பெரிய தேசத்தைப் போல செயல்படாத ஒரு பெரிய தேசம்.”

ஆனால் பைடென் இருகட்சி முறைக்கு வேண்டுகோள் விடுக்கையில், அவரது “குடியரசுக் கட்சி சகாக்கள்” உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் அலெஜான்ட்ரோ மயோர்காஸை பதவி நீக்கம் செய்ய வாக்களித்துள்ளனர், மேலும் ஒரு சமமான வாக்குகளின் முட்டுக்கட்டையால், அவர்கள் வரும் வாரத்தில் இந்த விஷயத்தை மீண்டும் எடுக்க திட்டமிட்டுள்ளனர். சபையில் குடியரசுக் கட்சியினரின் நிகழ்ச்சி நிரலில் அடுத்ததாக பைடென் மீது அவரது மகன் ஹண்டரின் ஊழல் வணிக நடைமுறைகள் மீது பதவி நீக்க விசாரணை உள்ளது.

டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட் தலைமையிலான குடியரசுக் கட்சி ஆளுநர்கள், புலம்பெயர்வு மீதான கூட்டாட்சி அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு எதிராக பகிரங்க கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள நிலைமைகளின் கீழ், பைடென் “குறுகிய கட்சி அரசியல்” குறித்து புலம்புகிறார்.

முன்னதாக, பைடென் பாரிய வெகுஜன இடம்பெயர்விற்கான காரணங்கள், குறிப்பாக வன்முறை, வறுமை மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் பரவியுள்ள அடக்குமுறை பற்றி அக்கறை காட்டுவதாகக் காட்டிக் கொண்டார். துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை அவர் அந்த நாடுகளுக்கு அனுப்பி வைத்தார், அப்பிராந்தியத்தில் நிலவும் கொடூரமான வாழ்க்கை நிலைமைகளைத் தணிக்க உதவி வழங்குவது அவரது பணியாக இருக்கவில்லை, மாறாக வலதுசாரி அரசாங்கங்களுக்கு கலவரத்தை அடக்கும் சட்டத்தை கற்பித்துக் கொடுத்து, அவற்றின் அமெரிக்க தூதரகங்களில் இருந்து வரும் துருப்புகளுக்கான அறிவுறுத்தல் உத்தரவுகளைப் பெறுமாறும், வடக்கு நோக்கி நகரும் அகதிகளைத் தடுக்குமாறும் கூறியிருந்தார்.

இப்போது பைடென் ட்ரம்பின் நிலைப்பாட்டைத் தழுவியுள்ளார், அவர் செய்தியாளர்களிடம் உரையாற்ற வெளியே வந்தபோது சிவப்பு MAGA தொப்பியை அணிந்திருந்தது உட்பட எல்லாவற்றையும் செய்தார். “மிக நீண்டகாலமாக,” “புலம்பெயர்வு அமைப்புமுறை உடைக்கப்பட்டுள்ளது,” என்றார். செனட்டில் நீடித்த இருகட்சி பேச்சுவார்த்தைகளின் விளைவு, “எல்லையைப் பாதுகாப்பதற்கான சீர்திருத்தங்களின் மிகக் கடினமான தொகுப்பு” என்று அவர் வாதிட்டார். இந்த மசோதா “இந்த நாடு இதுவரை கண்டிராத மிக வலுவான எல்லை மசோதா” ஆகும். வழக்குகளை பரிசீலிப்பதை விரைவுபடுத்தவும், அதன் விளைவாக பெருந்திரளான நாடுகடத்தல்களை விரைவுபடுத்தவும் இன்னும் 100 புலம்பெயர்வைக் கையாளும் நீதிபதிகள் இதில் உள்ளடங்குவர்.

இந்த மசோதாவுக்கு வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், அமெரிக்க வர்த்தக சபை மற்றும் 2020 தேர்தல்களில் டொனால்ட் ட்ரம்பை ஆதரித்த பாசிசவாத சித்தாந்தத்தின் கோட்டையான எல்லை ரோந்து தொழிற்சங்கத்தின் (Border Patrol union) ஆதரவும், நிச்சயமாக, குடியரசுக் கட்சியின் ஒரு கணிசமான பிரிவின் ஆதரவும் கூட இருப்பதாக பைடென் பெருமையாகப் பேசினார்.

வெள்ளை மாளிகையுடனான பேச்சுவார்த்தைகளின் போது குடியரசுக் கட்சியினர் வலியுறுத்திய புலம்பெயர்ந்தோருக்கு எதிரான ஏற்பாடுகளைத் தடுத்ததற்காக குடியரசுக் கட்சியினரைக் குற்றம் சாட்டுவதில் ஜோ பைடென் தனது பெரும்பாலான நேரங்களை செலவிட்டார் —ஒரு செனட் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ட்வீட் செய்தார், “இதுபோன்ற எதையும் நான் ஒருபோதும் பார்த்ததில்லை... அவர்கள் உண்மையில் குறிப்பிட்ட கொள்கையைக் கோரினர், அதைப் பெற்றனர், பின்னர் அதைக் கொன்றனர்.”

ஆனால் வெள்ளை மாளிகையின் நிஜமான கவலை என்னவென்றால், இருகட்சி செனட் உடன்படிக்கை தோற்கடிக்கப்பட்டால், உக்ரேனுக்கு 60 பில்லியன் டாலர்கள், இஸ்ரேலுக்கு 17 பில்லியன் டாலர்கள் மற்றும் தாய்வானுக்கு கிட்டத்தட்ட 10 பில்லியன் டாலர்கள் ஆகியவை அடங்கிய கூடுதல் இராணுவ உதவித் தொகுப்பின் கதவு அநேகமாக மூடப்பட்டிருக்கலாம் என்பதாகும். எல்லை விதிகள் ஏற்பாடு இல்லாமல், இராணுவ உதவி மீதான செனட் நடைமுறை வாக்கெடுப்பு வியாழன் காலை நடைபெற உள்ளது, அது தோல்வியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரேனிய கொடியின் வண்ணங்களைக் காட்டும் கழுத்துப்பட்டி மற்றும் ஒரு அலங்காரச் சின்னத்தை சட்டையில் அணிந்து பைடென் செய்தியாளர்கள் முன் தோன்றினார். 2014 இல் அமெரிக்க ஆதரவிலான ஒரு வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் நிறுவப்பட்ட கியேவ் ஆட்சியைக் குறித்து அவர் கூறுகையில், “ரஷ்ய தாக்குதல் மற்றும் மூர்க்கமான படையெடுப்புக்கு எதிராக தங்களைப் பாதுகாத்துக் கொண்டு, அவர்கள் இப்போது கடும் நெருக்கடியில் உள்ளனர். நேரம் கடந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு மாதமும் உக்ரேனுக்கு புதிய கூடுதல் உதவி இல்லாமல் கடந்து செல்வது என்பது குறைவான பீரங்கி குண்டுகளுடனும், குறைவான வான் பாதுகாப்பு அமைப்புகளுடனும், ரஷ்ய தாக்குதலுக்கு எதிராக உக்ரேன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள குறைவான கருவிகளையே கொண்டிருக்கின்றார்கள் என்பதையே அர்த்தப்படுத்துகிறது. புட்டின் அதைத்தான் விரும்புகிறார்.”

இந்த மசோதா இஸ்ரேலுக்கு “தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள” அவசரமாக அவசியப்படும் நிதிகளை வழங்கும் என்றும், அதாவது, அமெரிக்காவால் நிதியாதாரம் வழங்கப்பட்டு அமெரிக்கா விநியோகித்த ஆயுதங்களைக் கொண்டு நடத்தப்படும் காஸாவில் இனப்படுகொலை அழிப்புகளைத் தீவிரப்படுத்தும் என்றும் அவர் சேர்த்துக் கொண்டார்.

டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினர் மீதான பைடெனின் புதிய தாக்குதலை ஜனநாயகக் கட்சி சார்பு ஊடகங்கள் கொண்டாடின. நியூ யோர்க் டைம்ஸ் இல் வெளியான ஒரு தலைப்புச் செய்தி, “ட்ரம்பின் எல்லை தலையீடு பாதுகாப்பில் இருந்து தாக்குதலுக்கு மாறுவதற்கு பைடெனுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது,” என்று குறிப்பிட்டது.

வலதை நோக்கிய இந்த நகர்வு, அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் இன் அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) அமைப்பு போன்ற பைடெனின் போலி-இடது ஆதரவாளர்களை இது அம்பலப்படுத்துகிறது. மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கு முன்னர், நியூ யோர்க் நகர காங்கிரஸ் பெண்மணி, புதிய ஜனநாயகக் கட்சி நிர்வாகத்தை விமர்சிக்கும் எவரொருவரையும் கண்டனம் செய்தார், குறிப்பாக ட்ரம்ப் நிர்வாகத்தின் கொடூரமான ஒடுக்குமுறையை விட புலம்பெயர்ந்தோர் மற்றும் தஞ்சம் கோருவோரை நோக்கிய மிகவும் வித்தியாசமான கொள்கை குறித்த பைடெனின் சூளுரையை மேற்கோளிட்டார்.

பைடனின் எதிர்ப்பாளர்கள் “உண்மையிலேயே சலுகை பெற்ற விமர்சனத்தில்” ஈடுபட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

இதைக் கொண்டு வரும் எவருக்கும் நாம் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும், எதுவும் மாறவில்லை என்று நீங்கள் கூறும்போது, உங்கள் கருப்பு மற்றும் பழுப்பு மற்றும் உங்கள் சமூகத்தின் ஆவணமற்ற உறுப்பினர்களுக்கு, உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் அனுப்பும் செய்தி என்ன?... “எதுவும் மாறவில்லை” என்று நீங்கள் கூறும்போது, இப்போது நாடுகடத்தலில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ள மக்களை “யாரும் இல்லை” என்று அழைக்கிறீர்கள். எமது இயக்கத்தில் அதனை நாம் அனுமதிக்க முடியாது.

அணுஆயுத போர் அபாயத்தைக் கொண்டு மனிதகுலத்தையே அச்சுறுத்தும் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான பைடெனின் பினாமிப் போருக்கு பாசிசவாத குடியரசுக் கட்சியினரின் ஆதரவைப் பெறுவதற்காக, இப்போது, ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள வெள்ளை மாளிகையால் “நாடுகடத்தப்படுவதில் இருந்து பாதுகாக்கப்பட்டதாக” ஒகாசியோ-கோர்டெஸ் கூறியவர்கள் எல்லை ரோந்துப் படையினரிடம் ஒப்படைத்து வருகின்றனர். அத்துடன் இஸ்ரேலில் இனப்படுகொலை செய்யும் நெத்தனியாகு அரசாங்கத்திற்கு ஆயுதம் கொடுக்கப்பட்டு வருகிறது. இக்கொள்கையானது இரு பெருவணிகக் கட்சிகளாலும் முழுமையாக ஆதரிக்கப்படுகிறது.

போலி-இடதுகள் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போருக்குப் பின்னால் அணிவகுத்து நிற்பதுடன், காஸாவில் அமெரிக்க-இஸ்ரேலிய பாரிய படுகொலை குறித்து நேர்மையற்ற வாய் கிழிந்த விமர்சனத்தை மட்டுமே செய்துள்ளன. அதேபோல், தொழிலாள வர்க்கத்தின் மிகவும் பாதுகாப்பற்ற பிரிவான புலம்பெயர்ந்தோர் மற்றும் தஞ்சம் கோருவோரை இலக்கு வைப்பதை பைடென் ஏற்றுக்கொண்டதற்கு நியாயப்படுத்த தேவையான காரணங்களையும் அவர்கள் கண்டுபிடிப்பார்கள்.

இவை அனைத்தும் 2024 ஜனாதிபதித் தேர்தலில், குடியரசுக் கட்சியின் பாசிசவாத ட்ரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சியின் போர் வெறியர் பைடெனுக்கு இடையிலான தெரிவில் “குறைந்த தீமை” என்று எதுவும் இல்லை என்ற யதார்த்தத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இரு வேட்பாளர்களுமே மூர்க்கமான பிற்போக்குத்தனமான பெருநிறுவன ஆளும் உயரடுக்கின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனர் மற்றும் பாதுகாக்கின்றனர். இரு வேட்பாளர்களுமே அமெரிக்காவிற்குள்ளும் மற்றும் உலகெங்கிலும் மிகவும் வன்முறையான மற்றும் ஒடுக்குமுறை முறைகளைப் பயன்படுத்துவார்கள்.

முதலாளித்துவ இருகட்சி முறையில் இருந்து அதன் அரசியல் சுயாதீனத்தை நிறுவவும், ஒரு சோசலிச, புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அதன் வர்க்க சக்தியை அணிதிரட்டவும், தொழிலாள வர்க்கம் இந்தத் தேர்தல் ஆண்டு முழுவதிலும் மற்றும் அதற்கு அப்பாலும் ஒரு அரசியல் போராட்டத்திற்கு தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும்.

Loading