வேட்டையாடப்பட்ட மின்சார ஊழியர்களைப் பாதுகாக்க இலங்கை தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் கூட்டு பொதுக் கூட்டமொன்றை நடத்தியது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் கூட்டு கொழும்பில் வியாழன் அன்று ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தியது. அரசுக்கு சொந்தமான நிறுவனத்தை தனியார் மயமாக்குவதை எதிர்த்து நடவடிக்கை எடுத்தமைக்காக இப்போது அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்டுள்ள பழிவாங்கலுக்கு இலக்காகியுள்ள, இலங்கை மின்சார சபை (இ.மி.ச.) ஊழியர்களுக்கு ஆதரவை திரட்டும் வகையில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது.

அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் கொள்கைகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட ஏனைய கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக இ.மி.ச. ஊழியர்கள் ஜனவரி 3 முதல் 5 வரை மூன்று நாட்கள் சுகயீன விடுமுறைப் பிரச்சாரத்தை நடத்தினர்.

தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் கூட்டானது துறைமுகம், சுகாதாரம், ஆடை, பெருந்தோட்டம், இரயில் மற்றும் கல்வித் துறைகளில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் வேலை நீக்கம் செய்யப்பட்ட கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் ஊழியர்கள், வெளிநாட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் இலங்கையின் தெற்கில் உள்ள பெரகமவைச் சேர்ந்த விவசாயிகளால் நிறுவப்பட்ட நடவடிக்கைக் குழுக்களின் கூட்டணியாகும். அந்தந்த நடவடிக்கைக் குழுக்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் பிரதிநிதிகள் உட்பட சுமார் 60 பேர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

நடவடிக்கை குழுக்களினதும் சோசலிச சமத்துவக் கட்சியினதும் (சோ.ச.க.) உறுப்பினர்கள் வியாழன் நடந்த கூட்டத்திற்கு முன்னதாக கொழும்பிலும் ஏனைய பிரதேசங்களிலும் பிரச்சாரம் செய்தனர். பிரதானமாக இ.மி.ச. வேட்டையாடலுடன் தொடர்புடைய ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை சிங்களம் மற்றும் தமிழில் விநியோகித்தனர்.

துறைமுக ஊழியர் சாலித சின்ஹபாகு தலைமையில் கூட்டம் நடைபெற்றதுடன் சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் டபிள்யூ.ஏ. சுனில் பிரதான அறிக்கையை முன்வைத்தார். பெருந்தோட்டங்களில் இருந்து வருகை தந்தவர்களுக்காக உரைகள் தமிழாக்கம் செய்யப்பட்டன.

துறைமுக ஊழியர் சாலித சிங்கபாகு

வருகை தந்திருந்தவர்களை வரவேற்றுப் பேசிய சாலித, “தங்கள் நிறுவனத்தை தனியார்மயமாக்குவதற்கு எதிராகப் போராடி வரும் 23,000ம் மின்சார ஊழியர்களின் பக்கத்தில் நடவடிக்கை குழுக்களின் கூட்டு நிற்கின்றது” என்றார்.

இ.மி.ச. ஊழியர்கள் 66 பேர் இடைநிறுத்தம் செய்யப்பட்டு தற்போது நிர்வாகத்தால் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் விளக்கினார்.

மேலும் 75 இடைநிறுத்தக் கடிதங்களை இ.மி.ச. அதிகாரிகள் தயாரித்துள்ளதாகவும் எங்களுக்கு தகவல் கிட்டியுள்ளது. இந்த தொழிலாளர்களை ஒடுக்கும் நோக்கிலான இந்த இடைநீக்கங்களை இரத்துச் செய்யுமாறு தொழிற்சங்கங்கள் இ.மி.ச. அதிகாரிகளிடமும் அரசாங்கத்திடமும் வேண்டுகோள் விடுக்கின்றன,” என்று அவர் கூறினார்.

தொழிலாளர்கள் அரசாங்கத் தாக்குதல்களுக்கு எதிராக ஐக்கியப்பட்ட நடவடிக்கை எடுப்பதை தொழிற்சங்கத் தலைமைகள் தடுப்பதால், தொழிலாளர்கள் தங்களுடைய அடிப்படை உரிமைகளைக் காக்க, தங்களது சொந்த நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று சாலித கூட்டத்தில் கூறினார்.

பிரதான அறிக்கையை வழங்கிய சுனில், இ.மி.ச.யின் அடக்குமுறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்று விளக்கினார். 'அவர்களின் [ஜனவரி 3-5] போராட்டத்திற்கு முந்தைய நாள், நிர்வாகம் மறு அறிவிப்பு வரும் வரை இ.மி.ச. ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளையும் இரத்து செய்தது,' என்று அவர் கூறினார்.

கடுமையான அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் மின்சாரம் மற்றும் பெற்றோலியத் துறைகளை அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரகடனப்படுத்தினார். இந்தத் துறைகளில் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கும் தொழிலாளர்களுக்கு கடுமையான சிறைத்தண்டனை, அபராதம் மற்றும் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பை கிடைக்காமல் செய்தல் போன்ற தண்டனைகளை விதிக்க இந்த அடக்குமுறை நடவடிக்கைகள் பயன்படுத்தப்படலாம்.

சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் W. A. சுனில் 1 பெப்ரவரி 2024 அன்று நடந்த கூட்டத்தில் உரையாற்றிய போது.

'இ.மி.ச. ஊழியர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் போராட்டத்திற்கு எதிராக அரசாங்கம் விதித்த நீதிமன்றத் தடை பெப்ரவரி 1 வரை நீட்டிக்கப்பட்டது,' என்று அவர் கூறினார்.

வேட்டையாடப்பட்ட இ.மி.ச. தொழிலாளர்களைப் பாதுகாக்கவும், அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடவும், தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்கள், மறியல் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் உட்பட கூட்டான வர்க்க நடவடிக்கைகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சுனில் கூட்டத்தில் தெரிவித்தார்.

'சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை அபிவிருத்தி செய்வதன் மூலமும் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் பொது வேலைநிறுத்தத்திற்குத் தயாராகும் நடவடிக்கைகள் மூலமும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களின் ஐக்கியத்தை கட்டியெழுப்புவது அவசியமானது' என்று அவர் தொடர்ந்தார்.

'இலங்கை தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச வர்க்க சகோதர சகோதரிகளுடன் இணைந்து ஐக்கியத்தை கட்டியெழுப்புவது இங்குள்ள இன்னொரு இன்றியமையாத காரணியாகும். இந்த சர்வதேச போராட்டத்திற்கு அடித்தளத்தை அமைப்பதற்காக, தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியை நாங்கள் ஸ்தாபித்துள்ளோம்.

'சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக சோசலிச கொள்கைகளை செயல்படுத்தும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தில் மட்டுமே தொழிலாள வர்க்கம் அதன் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முடியும்' என்று சுனில் கூறினார்.

இக்கூட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தி பேசிய கே. காண்டீபன், இந்த வேட்டையாடல் மின்சாரத் தொழிலாளர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டது அல்ல என்று கூறினார்.

“இந்த அடக்குமுறை அரசாங்கமானது தங்களின் உரிமைகளைக் காக்கப் போராடும் ஒவ்வொரு தொழிலாளர் பிரிவினருக்கும் அதை விரிவுபடுத்தும். அது மட்டுமன்றி, இது இலங்கைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டது அல்ல. ஏனைய இடங்களில் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்களும் தொழிலாளர்களுக்கு எதிராக இத்தகைய அடக்குமுறை நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விடுகின்றன,” என்று அவர் கூறினார்.

2021 பெப்ரவரியில் சம்பள உயர்வுக்காக வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டதன் பின்னர் மஸ்கெலியாவிலுள்ள ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் எவ்வாறு அரச அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டனர் என்பதையும் அவர் விளக்கினார்.

கே. காண்டீபன்

'போலி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், 24 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதுடன் மொத்தமாக 38 தொழிலாளர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர். பிரதான தோட்டத் தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், நிர்வாகத்துடனும் பொலிசுடனும் சதி செய்ததோடு இந்தத் தொழிலாளர்களைப் பாதுகாக்க எதுவும் செய்யவில்லை” என்று அவர் கூறினார்.

பல தொழிலாளர்கள் ஒன்று கூடி ஒரு நடவடிக்கைக் குழுவை அமைக்க முடிவு செய்ததாக காண்டீபன் கூறினார். 'வேறு பல தோட்டங்களில் தொழிலாளர்கள் இப்போது நடவடிக்கை குழுக்களை அமைப்பது பற்றி கலந்துரையாடி வருகின்றனர், ஏனெனில் தொழிலாளர்களின் போராட்டங்களை நசுக்குவதற்கு அதிகாரத்துவங்கள் தொழிற்சங்கங்களைப் பயன்படுத்துகின்றன,' என்று அவர் மேலும் கூறினார்.

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியரான தேகின் வசந்த, பல்கலைக்கழகத்தில் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சங்கத்தின் குண்டர்களால் தானும் சோ.ச.க. முழுநேர ஊழியரான லக்ஷ்மன் பெர்னாண்டோவும் எப்படி கொடூரமாக தாக்கப்பட்டார்கள் என்பதை விளக்கி கூட்டத்தில் உரையாற்றினார். அவரது இடது கை விரல்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது, ஒரு மாதத்திற்கு விரிவான சிகிச்சை தேவைப்பட்டது. பெர்னாண்டோவும் படுகாயமடைந்தார்.

'மின்சார ஊழியர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைக் குழு கூட்டுக் கூட்டத்தின் ஆதரவை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்,' என்று வசந்த கூறினார். “தொழிலாளர்களின் இடைநிறுத்தத்தை இரத்துச் செய்வதற்கு நீதிமன்றத்திற்கு செல்லப் போவதாக இ.மி.ச. தொழிற்சங்கத் தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால், அரசாங்கம் இந்த கொடூரமான சட்டங்களை குறிப்பாக தொழிலாளர்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்கென்றே உருவாக்கியுள்ளது. அரசாங்கம் ஊழியர்களுக்கு எதிராக அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தைப் பயன்படுத்துகின்ற நிலையில், நீதிமன்றங்கள் மூலம் வேலை இடைநீக்கங்களை நிறுத்த முயற்சிப்பது கேலிக்கூத்தானது,” என்று அவர் மேலும் கூறினார்.

“விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக இருப்பதோடு அனைத்து வர்க்கப் போராட்டங்களையும் நசுக்குவதே அவரது நோக்கமாகும். ஒரு எதிர் தாக்குதலைத் தயாரிப்பதற்கு தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன இயக்கத்தை கட்டியெழுப்புவது முக்கியமாகும். அதனாலேயே தொழிலாளர்கள் தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க வேண்டும்,” என்று வசந்த கூறினார்.

கொழும்பு துறைமுகத் தொழிலாளியான சம்பத், இ.மி.ச. தொழிலாளர்கள் வேட்டையாடப்படுவதைக் கண்டித்ததுடன், துறைமுகத் தொழிலாளர்களும் இதே பிரச்சினைகளை எதிர்கொள்வதாகக் கூறினார். தொழிலாளர்களின் நிலைமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

'எங்கள் சம்பளத்தின் மீதான வரிவிதிப்பு தாக்குதல்களால் ஊதியம் மிஞ்சுவதில்லை. முன்பு எங்களின் சம்பளத்தை வைத்து நிர்வகிக்க முடிந்தது. வீடும் கட்டி எங்கள் பிள்ளைகளை நல்ல முறையில் படிக்க வைக்கலாம்,'' என்றார்.

பல தொழிலாளர்கள், 'தங்கள் குடும்பத்துடன் வாழ்க்கையை அனுபவிக்கும் வாய்ப்பை இழந்து, வருமானத்தை நிரப்ப மேலதிக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்' என்று அவர் தொடர்ந்தார். துறைமுகங்களின் தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களைப் பிளவுபடுத்துவதோடு அவை ஊழியர்களின் நலன்களை இனிமேலும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று சம்பத் விளக்கினார்.

ஆசிரியர் வசந்த விஜேசிறி கூறுகையில், “இ.மி.ச. ஊழியர்கள் பலிகடா ஆக்கப்பட்டமை, நம் அனைவருக்கும் எதிரான தாக்குதல் என்பதை விளக்கி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தோம். மின்வாரிய ஊழியர்களை பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது,” எனத் தெரிவித்தார். 

விஜேசிறி, 2021 ஆம் ஆண்டு கன்னியமான சம்பளத்திற்காக ஆசிரியர்கள் நடத்திய உறுதியான போராட்டம் பற்றி பேசினார். 'ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்திற்கு விரோதமாக இருந்தன. பின்னர் அரசாங்கம் போதாகுறையான சம்பள உயர்வு ஒன்றை வழங்கியபோது, அதை ஏற்றுக்கொண்ட தொழிற்சங்கங்கள் எங்களின் 100 நாள் வேலைநிறுத்தத்தை கைவிட்டன.

“முதலாளித்துவ அரசாங்கங்கள் மீது அழுத்தம் கொடுப்பதன் மூலம் இந்தத் தாக்குதல்களைத் தோற்கடிக்க முடியாது. தொழிலாள வர்க்கம் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளிலிருந்து சுயாதீனமாக ஒழுங்கமைக்கப்பட்டு ஒன்றுபட வேண்டும்,' என்று அவர் கூறினார்.

சுகாதார ஊழியர் அத்துகோரல கூறியதாவது: “மருத்துவர்கள் மற்றும் பிற ஊழியர்கள் உட்பட வைத்தியசாலைகளில் பல சிரமங்களும் பற்றாக்குறைகளும் காணப்படுகின்ற போதிலும், இந்த விடயங்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவதற்கு அமைச்சின் உத்தரவின் கீழ் எமக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்கள் ஆட்சியாளர்களுக்கு சாதகமான முறையில் தொழிலாளர்களை பிளவுபடுத்தியுள்ளன. இந்த பிளவுகளுக்கு முடிவு கட்டுவதற்கே, இந்த நடவடிக்கை குழுவை அமைத்துள்ளோம். இத்தகைய குழுக்களை அமைக்குமாறும் உங்கள் உரிமைகளைப் பாதுகாக்க குரல் கொடுக்குமாறும் ஏனைய தொழிலாளர்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

திலக கமகே

விவசாயிகள் எதிர்நோக்கும் பொருளாதாரச் சுமைகள் குறித்து பெரகமவைச் சேர்ந்த விவசாயி திலக கமகே கூட்டத்தில் பேசினார். “இன்று ஒரு கிலோகிராம் சர்க்கரையை வாங்க, நாம் 4 கிலோகிராம் நெல்லை விற்க வேண்டும். ஆனால் ஒரு நெல் வயலை அறுவடை செய்ய, ஒரு இயந்திரத்தை வாடகைக்கு எடுக்க 25,000 ரூபாய் [$US80] செலவாகும். இந்த செலவுகளால், நாம் நோய்வாய்ப்பட்டால் மருந்துகளுக்கு பணம் செலுத்த முடியாது என்று அவர் கூறினார்.

அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும் விவசாயிகளை ஏமாற்றிவிட்டதாகக் கூறிய கமகே, விவசாயிகளுக்கான தீர்வு தொழிலாள வர்க்கத் தீர்வாக மட்டுமே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்தில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்ட ஆடைத் தொழிலாளி குசும் உரையாற்றினார். “6 இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆடைத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்களான நாங்கள் மின்சாரத் தொழிலாளர்களைப் பாதுகாக்கப் போராட வேண்டும். இதுவே தொழிலாளர்களை போராட்டத்தில் ஐக்கியப்படுத்துவதற்கான வழி” என்று கூறிய அவர், தொழிற்சங்கங்களின் துரோகப் பாத்திரத்தை கண்டனம் செய்தார்.

குசும்

சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அன்டன் மார்கஸ், எவ்வாறு தொழிலாளர்களைக் காட்டிக்கொடுத்தார் என்பதை அவர் விளக்கினார். கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்தில் ஆடைத் தொழிற்சாலையொன்று மூடப்பட்ட போது, தொழிலாளர்களுக்கு சிறந்த இழப்பீடு வழங்கப்படும் என மார்கஸ் உறுதியளித்தார்.

'இது ஒரு போலி வாக்குறுதி என்று நிரூபிக்கப்பட்டது,' என்று கூறிய குசும், தொழிற்சாலை மூடப்பட்டதால் இலாபம்பெற்ற உரிமையாளர்களின் சார்பாகவே மார்கஸ் செயல்பட்டாரே ஒழிய தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை, என விளக்கினார். 'இந்த பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்க தொழிலாளர்களுக்கு சோசலிசம் தேவை,' என்று அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட இலங்கை மின்சார சபை ஊழியர்களைப் பாதுகாப்பதற்கான CWAC தீர்மானத்திற்கு 2024 பெப்ரவரி 1 அன்று ஏகமனதாக வாக்களிக்கப்பட்டது.

இந்த உரைகளைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட இ.மி.ச. தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான எதிர்கால நடவடிக்கை குறித்த தீர்மானத்தை தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் கூட்டு முன்வைத்தது. ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பகுதிகள் கீழே வெளியிடப்பட்டுள்ளன:

“தனியார் மயமாக்கல் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இ.மி.ச. ஊழியர்களுக்கு எதிராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்டுள்ள வேட்டையாடலை இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. வேலை இடைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை நிபந்தனையின்றி உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று நாம் கோருகிறோம்.

'இந்த கூட்டம் ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்படுவதை அல்லது வேறு எந்த தண்டனை நடவடிக்கைகளையும் எடுப்பதை எதிர்ப்பதுடன் அத்தகைய நடவடிக்கைகள் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மீறுவதாக கருதுகிறது.'

'இ.மி.ச. ஊழியர்கள் மீதான தாக்குதலை ஏனைய தொழிலாளர்கள் மீதான தாக்குதலாகும். அதே போல் சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட தாக்குதல்களை நாங்கள் அனைவரும் எதிர்கொள்கிறோம்.'

தொழிலாளர்கள் தங்கள் போராட்டங்களை ஐக்கியப்படுத்தி ஒருங்கிணைக்க இலங்கை முழுவதும் வேலைத் தளங்களிலும் சுற்றுப்புறங்களிலும் நடவடிக்கை குழுக்களை அமைக்க வேண்டும் என்று தீர்மானம் கோரியது. இந்த நடவடிக்கைக் குழுக்கள் சர்வதேச அளவில் தங்கள் போராட்டங்களை ஒருங்கிணைக்க தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியுடன் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்தது.

Loading