முன்னோக்கு

உக்ரைன் போர் நிதியைப் பெறுவதற்காக மெக்சிக்கோ எல்லையை மூடுவதற்கு பைடென் உறுதியளிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

வெள்ளியன்று இரவு வெள்ளை மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், ஜனாதிபதி ஜோ பைடென் தனது குடியரசுக் கட்சியின் 'சகாக்களிடம்' குடியரசுக் கட்சியினர் 110 பில்லியன் டாலர்கள் கூடுதல் நிதிப் பொதியை நிறைவேற்ற உதவினால், அமெரிக்க-மெக்சிகோ எல்லையை 'மூடுவதாக'உறுதியளித்திருந்தார். டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட், தஞ்சம் கோரும் புலம்பெயர்ந்தோர் அவரது மாநிலத்தின் மீதான ஒரு 'படையெடுப்பை' உள்ளடக்கியிருப்பதாக அறிவித்து, எல்லை மீதான கூட்டாட்சி அதிகாரத்தை அவர் அபகரித்ததை நியாயப்படுத்திய இரண்டு நாட்களுக்குப் பின்னர் பைடெனின் அறிக்கை வெளியிடப்பட்டது.

வியாழன், ஜனவரி. 18, 2024 அன்று, வெள்ளை மாளிகையின் தெற்குப் புல்வெளியில் ஜனாதிபதி ஹெலிகாப்டர் ஒன்றில் ஏறுவதற்கு முன், ஜனாதிபதி ஜோ பைடென் ஊடகங்களிடம் பேசுகின்றார். [AP Photo/Yuri Gripas]

உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான பினாமிப் போருக்கான 61 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நிதியுதவியை உள்ளடக்கிய இந்த சட்ட மசோதாவில், ட்ரம்பின் 'மெக்சிகோவில் தங்கியிரு' கொள்கையை மீண்டும் ஸ்தாபிப்பது மற்றும் தஞ்சம் கோரும் உரிமையை நடைமுறையளவில் நீக்குவது உட்பட புலம்பெயர்ந்தவர்கள் மீது போதுமானளவுக்கு கொடூரமான தாக்குதல்கள் இடம்பெறவில்லை என்ற குடியரசுக் கட்சியினரின் ஆட்சேபனைகள் காரணமாக இந்தக் கூடுதல் போர் உதவி நிதிப் பொதி அக்டோபரில் இருந்து கிடப்பில் போடப்பட்டு வருகிறது. 

இந்த கூடுதல் நிதி மசோதாவானது இஸ்ரேலுக்கு 14.5 பில்லியன் டாலர்களையும், அமெரிக்க எல்லை பாதுகாப்புக்கு 14 பில்லியன் டாலர்களையும் மற்றும் சீனாவிற்கு எதிராக அமெரிக்காவுடன் அணிசேர்ந்துள்ள தாய்வான் மற்றும் பிற தெற்காசிய ஆட்சிகளுக்கு இராணுவ உதவிக்கு இன்னும் பில்லியன்களையும் வழங்குகிறது.

போர் நிதிப் பொதிக்கு குடியரசுக் கட்சியின் ஆதரவை பெறும் முயற்சியில், ட்ரம்ப் 2019 இல் செய்ததை விட கடந்த ஆண்டில் பைடென்  ஏற்கனவே அதிக நாடுகடத்தலை மேற்கொண்டுள்ளார், மேலும் அவர் டிரம்பின் எல்லைச் சுவரின் பாகங்களை மீண்டும் கட்டத் தொடங்கினார்.

பைடென் மற்றும் ஜனநாயகக் கட்சியினருடனான எந்தவொரு எல்லை உடன்படிக்கைக்கும் ட்ரம்பின் எதிர்ப்புக்கு பதிலளிப்பாக, குடியரசுக் கட்சியின் பிரதிநிதிகள் சபை சபாநாயகர் மைக் ஜோன்சன் வழிமொழிந்தார், பைடென் இப்போது அந்த பாசிசவாத முன்னாள் ஜனாதிபதியின் மொழியை ஏற்றுக்கொண்டதுடன், அவரது கூடுதல் போர் நிதி மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக கையெழுத்திடப்படும் நாளில் அவர் 'எல்லையை மூடுவார்' என்று அறிவித்தார். 

வெள்ளை மாளிகை அறிக்கையானது, 'எல்லை உடைந்துவிட்டது' என்ற குடியரசுக் கட்சியின் மந்திரத்தை மீண்டும் வலியுறுத்தியது. கூடுதல் நிதி மசோதாவானது பைடெனுக்கு 'எல்லை நிரம்பி வழியும்போது அதை மூடுவதற்கான ஒரு புதிய அவசரகால அதிகாரத்தை' வழங்கும் என்று அது குறிப்பிட்டது. பைடென் கோரிய புதிய கொள்கைகள் 'எங்கள் நாட்டில் இதுவரை இல்லாத எல்லையைப் பாதுகாப்பதற்கான மிகவும் கடுமையான மற்றும் மிகவும் நியாயமான சீர்திருத்தங்களை' பிரதிநிதித்துவப்படுத்தும் என்று அது மேலும் கூறியது.

புலம்பெயர்ந்தோர் 'வருகைகள்' நாளொன்றுக்கு சராசரியாக 5,000 ஐ எட்டினால், அனைத்து தனியாக வரும் முழு வயது முதிர்ந்த நபர்களையும் தடுப்புக்காவலில் வைப்பது மற்றும் அமெரிக்க-மெக்சிகோ எல்லையை கட்டாயமாக மூடுவதும் என்பதும் இதில் உள்ளடங்குவதோடு, இந்த மசோதாவில் கொள்கை மாற்றங்களில் உள்ளடங்கி இருப்பதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. கடந்த பல மாதங்களாக கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் அந்த எண்ணிக்கையை விட அதிகமாக பதிவாகின்றன.

5,000 'வருகைகள்' வரம்பிற்குள், அதாவது CBP One எனப்படும் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு  மூலம்1,400 சட்ட விண்ணப்பங்கள்  அனுமதிக்கப்பட்ட பின்,  நாள் ஒன்றுக்கு 3,600 மீதியாயிருக்கும் புலம்பெயர்ந்தோர் மட்டும்தான் தஞ்சம் கோரி விண்ணப்பிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். 

மார்ச் 15, 2023 புதன்கிழமையன்று, டிஜுவானா, மெக்சிகோவுடனான எல்லைச் சுவரில் உள்ள வாயிற்கதவு வழியாக வெளியேற்றுவதற்கு முன், சான் டியாகோவில் உள்ள ஃபெடரல் அதிகாரிகள் ஆண்களிடமிருந்து கைவிலங்குகளை அகற்றுகின்றனர் [AP Photo/Gregory Bull]

ஒருமுறை வரையறுக்கப்பட்ட அளவை எட்டியவுடன், புதிய சட்டமானது ஜனாதிபதி ஒரு மூடலைத் திணிக்கும் அதிகாரத்தை அனுமதிக்கும், எல்லை ரோந்து முகவர்கள் எல்லையைக் கடக்கும் எவரொருவரையும் மற்றும் அனைத்து புலம்பெயர்ந்தோர்களையும் எந்தவித தஞ்சம் கோருவதற்கான நடைமுறையுமின்றி உடனடியாக வெளியேற்ற வேண்டியிருக்கும். மூடலின் போது, எல்லையைக் கடந்து வந்த எந்தவொரு புலம்பெயர்ந்தோரும் சட்டப் பிரிவு 8 இன் கீழ் தஞ்சம் கோர முடியாது. 

இரண்டு வார காலப் பகுதியில் 'தினசரி வருகைகள்' ஒரு நாளைக்கு சராசரியாக 3,750 க்கும் குறைவாக இருந்தால் மட்டுமே மூடல் நீக்கப்பட முடியும் என்றும் இப்படியான ஒன்று பல மாதங்களாக நடக்கவில்லை, மேலும் 'மூடலின்' போது இரண்டு முறை எல்லையைக் கடக்க முயன்ற எந்தவொரு புலம்பெயர்ந்தோரும் ஒரு வருடத்திற்கு அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்படும்.

2020 இல் டிரம்பிற்கு எதிராக பிரச்சாரம் செய்த பைடென், மேலும் மனிதாபிமான குடியேற்றக் கொள்கைகள் நிறுவப்படும் என உறுதியளித்திருந்தார். வெள்ளியன்று அவரது அறிக்கையுடன், அவரும் ஜனநாயகக் கட்சியும்  வெளிப்படையாக ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினரின் பாசிச குடியேற்ற எதிர்ப்புக் கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளனர். 

'அக்டோபரில் பைடெனால் கோரப்பட்ட அமெரிக்க எல்லைக்கான நிதியும் இந்த மசோதாவில் அடங்கும் என்று வெள்ளை மாளிகை அறிக்கை குறிப்பிட்டது, அதில் கூடுதலாக 1,300 எல்லை ரோந்து அதிகாரிகளையும், 375 குடியேற்றத்தை கையாளும் நீதிபதிகளையும், 1,600 புகலிட கோரிக்கையை கையாளும் அதிகாரிகளையும் மற்றும் 100 க்கும் மேற்பட்ட அதிநவீன ஆய்வு இயந்திரங்களையும்” வழங்குகிறது. 

கூடுதல் நிதிப் பொதி பற்றி குடியரசுக் கட்சியினரின் முக்கிய பேச்சுவார்த்தையாளர்களில் ஒருவரான செனட்டர் ஜேம்ஸ் லங்க்போர்ட் திட்டமிடப்பட்டுள்ள இரு கட்சி செனட் சட்டவரைவில் எல்லைக் கொள்கையில் கடுமையான மாற்றங்கள் இருக்கும் என்று கூறினார். அவர் 'ஃபாக்ஸ் நியூஸ் சண்டே' இடம் இவ்வாறு கூறினார்:

இந்த மசோதா, ஒரு நாளைக்குச் சட்ட விரோதமாக கடப்பதை பூஜ்ஜியமாக மாற்றுவதில் கவனம் செலுத்துகிறது. அங்கே பொது மன்னிப்பு எதுவும் கிடையாது. அது எல்லை ரோந்து முகவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது, புகலிட அதிகாரிகளை அதிகரிக்கிறது. அது தடுப்புக் காவல்களில் வைத்திருக்கும் படுக்கை அளவுகளை அதிகரிக்கிறது, இதனால் நாங்கள் விரைவாக தனிநபர்களை தடுத்து வைக்கவும் பின்னர் நாடுகடத்தவும் முடியும்.' 

இந்த மசோதா 'கூடுதல் நாடுகடத்தல் விமானங்களை' வழங்குகிறது என்றும், 'தஞ்சம் கோரும் நிகழ்முறையை மாற்றுகிறது, இதனால் மக்கள் ஒரு உயர்ந்த நிலையில் விரைவான தஞ்சம் கோரும் பரிசோதனையைப் பெற்று, பின்னர் அவர்களின் தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்' என்றும் லங்க்ஃபோர்ட் சேர்த்துக் கொண்டார். 

2.5 மில்லியனுக்கும் அதிகமான 'dreamers' (சிறார்களாக அமெரிக்காவிற்கு வந்த ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்கள் அதாவது இது DREAM சட்டத்திலிருந்து வருகிறது) என்று அழைக்கப்படுபவர்கள் உட்பட மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோரை நாடு கடத்தும் அபாயத்தில் வைக்கும் குடியரசுக் கட்சியின் கோரிக்கைகளுக்கு பைடென் இணங்கி 48 மணி நேரத்திற்குப் பின்னரும், அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளின் (DSA) முன்னணி உறுப்பினர்கள் மௌனமாகவே உள்ளனர்.

2021 ஆம் ஆண்டில் பைடனின் குடியேற்ற கொள்கைகளுக்கு தனது ஆதரவை 'சலுகை பெற்றவர்கள்' என்றும் சோசலிச மற்றும் இடதுசாரி விமர்சகர்களைக் கண்டனம் செய்த நியூயார்க் காங்கிரஸ் உறுப்பினரான அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ், தனது எக்ஸ் / ட்விட்டர் சமூக ஊடக கணக்குகளில் ஒரு ட்வீட்டை இடுகையிடவோ அல்லது இந்த நடவடிக்கையை எதிர்த்து இன்ஸ்டாகிராமில் ஒரு இடுகையை வெளியிடவோ இல்லை. ஞாயிறன்று NBC இன் 'Meet the Press' நிகழ்ச்சியில் தோன்றிய அவரிடம், எல்லையை மூடுவதற்கான பைடெனின் வாக்குறுதி குறித்து  கேள்வி கேட்கப்படவில்லை, மேலும் இந்தப் பிரச்சினையை அவர் கூட எழுப்பவில்லை.

பிரதிநிதிகள் சபையின் மற்றய மூன்று DSA உறுப்பினர்களான கோரி புஷ் (மிசூரி), க்ரெக் காசர் (டெக்சாஸ்) மற்றும் ரஷிதா ட்லைப் (மிச்சிகன்), இதேபோல் உக்ரைனில் போருக்காகவும் காஸாவில் இனப்படுகொலைக்காகவும் நிதியைப் பெறுவதற்காக புலம்பெயர்ந்தோரை கைவிட்டதற்காக பைடெனைக் கண்டித்து எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை. 

அவர்களின் மௌனம் கவனக்குறைவு அல்ல. போலி சோசலிஸ்டுகள் மற்றும் சுய-பிரகடனப்படுத்தப்பட்ட 'முற்போக்குவாதிகள்' உட்பட ஜனநாயகக் கட்சியினர், உக்ரேனிய போருக்கும் மத்திய கிழக்கில் விரிவடைந்து வரும் போருக்கும் நிதியாதாரங்களைப் பெறுவதற்கு பிரதிபலனாக குடியரசுக் கட்சியினரின் பாசிசவாத உள்நாட்டு திட்டநிரலை நடைமுறைப்படுத்துவதில் அவர்களுடன் ஒத்துழைப்பார்கள். ஜனநாயக உரிமைகள் மீதான எந்த மீறலும் நியாயமான வரம்புகளுக்கு அப்பாற்பட்டது.

இது CNN இன் வருடாந்திர ஒன்றியத்திற்கான ஜனாதிபதியின் உரை (State of the Union) நிகழ்ச்சியில் முன்னாள் பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசியால் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. இனப்படுகொலை-எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது FBI விசாரணை நடத்த பெலோசி அழைப்புவிடுத்ததோடு, ஒரு துளி ஆதாரமும் வழங்காமல், அவர்களில் சிலரை 'ரஷ்ய செயற்பாட்டாளர்கள்' என்று அவர் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது: “அவர்கள் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்பது என்பது திரு. புட்டினின் செய்தியாகும். எந்த தவறும் செய்யாதீர்கள், இது புட்டின் பார்க்க விரும்புவதோடு நேரடியாக இணைந்துள்ளது.  அதே விடயம்தான் உக்ரைனிலும் நடப்பது. இது புட்டினின் செய்தி பற்றியது.”

இந்த முன்னேற்றங்கள் 'இனப்படுகொலை ஜோ' மற்றும் நவம்பரில் ஜனநாயகக் கட்சியினருக்கான வாக்கெடுப்பானது டிரம்பின் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடுவதற்கான வழிமுறையாக இல்லை, ஆனால் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக நிலைமைகள் மீதான தாக்குதல்கள் தீவிரமடையும் என்பதற்கான உத்தரவாதம் என்பதை நிரூபிக்கிறது.

முதலாளித்துவ கட்சிகளையும் ஆதரிப்பதன் மூலமாக, தொழிலாள வர்க்கம் அமெரிக்காவிலோ அல்லது வேறு எங்குமே அதன் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முடியாது. டிரம்ப் மற்றும் பைடெனுக்கு இடையிலான தேர்வு என்பது தேர்வே அல்ல. அங்கே 'குறைந்த தீமை' என்பது கிடையாது. உலகப் போர், சர்வாதிகாரம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வறுமைக்கு பொறுப்பேற்றுள்ள நெருக்கடி நிறைந்த முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் போட்டி பிற்போக்குத்தனமான கன்னைகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் இரண்டு கட்சிகள் அங்கே உள்ளன.

ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் வர்க்கத்தால் தொடுக்கப்பட்டு வருகின்ற புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான போரானது, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலில் முன்னணியில் உள்ளதாகும். முதலாளித்துவமானது காட்டுமிராண்டித்தனத்திற்குள் இறங்குவதற்கு எதிரான போராட்டத்தின் பாகமாக, சோசலிசத்திற்கான புரட்சிகரப் போராட்டத்தின் மூலமாக அனைத்து நாடுகளின் தொழிலாளர்களாலும் இது எதிர்க்கப்பட வேண்டும்.

Loading