ஜேர்மனியில் இருந்து, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதும் விவசாயிகளின் எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்துள்ளன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஜேர்மன் பேர்லினில், டிராக்டர்களினால் வீதிகளை மறித்து  விவசாயிகள் மேற்கொண்ட பாரிய எதிர்ப்பு போராட்டத்திற்கு பின்பு, இதேபோன்ற விவசாயிகளின் பாரிய நடவடிக்கைகள் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதும் பரவி வருகின்றன. உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்காவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான போரின் விளைவுகள் மற்றும் நிதியச் சந்தைகள், விவசாய வணிக நிறுவனங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆகியவற்றால் உந்தப்பட்ட ஊகங்களின் மீது கோபம் வெடிக்கிறது. சர்வதேச ரீதியில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் தொழிலாளர்கள் உணவைக் குறைத்ததின் காரணமாக விவசாயிகளின் வருமானம் சரிந்துள்ளது.

புதன்கிழமை, ஜன. 24, 2024 அன்று, பிரான்சின் மத்திய பதியிலுள்ள லியோன் அருகே M6 நெடுஞ்சாலையை விவசாயிகள் தடுத்து நிறுத்துகின்றனர். குறைந்த ஊதியம், பெருகிவரும் செலவுகள் மற்றும் பிற பிரச்சினைகளுக்கு எதிராக பிரெஞ்சு விவசாயிகள் நாடு முழுவதும் மற்றும் பிரஸ்ஸல்ஸில் போராட்டம் நடத்துகின்றனர்.   [AP Photo/Laurent Cipriani]

பாரிய விவசாயிகளின் எதிர்ப்பு போராட்டங்கள் பிரான்ஸ், போலந்து மற்றும் ருமேனியாவைத் தாக்கி ஸ்பெயினில் தயாராகி வருகின்றன. போலந்து மற்றும் ருமேனியாவில் உள்ள விவசாயிகள், மலிவு விலை உக்ரேனிய தானிய இறக்குமதிகள் உள்ளூர் சந்தைகளுக்கு பெரிமளவில் வருவதால், உக்ரேனியுடனான தங்கள் எல்லைகளைத் தடுத்து, மானியங்களைக் கோருகின்றனர். ஸ்பெயினில் அடுத்த மாதம் விவசாய அமைச்சகத்தை முற்றுகையிட உள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். இந்த வாரம், இதேபோன்ற எதிர்ப்புக்கள் பிரான்ஸ் முழுவதும் பரவி, 2018-19 “மஞ்சள் சீருடை” போராட்டங்களுக்குப் பிறகு பெரும்பாலான சாலை தடுப்புக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒரு சக்திவாய்ந்த ஜேர்மன் இரயில்வே வேலைநிறுத்தம் மற்றும் பிரான்சின் பாசிச குடியேற்றச் சட்டத்திற்கு எதிரான வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், ஐரோப்பிய விவசாயிகளின் எதிர்ப்பு போராட்டங்கள் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சர்வதேச அளவில் மக்கள் எதிர்ப்பை பிரதிபலிக்கின்றன. “மஞ்சள் சீருடை” போராட்டங்களைப் போலவே தீர்க்கமான கேள்வியானது, இந்த இயக்கத்தை முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் பரந்த போராட்டத்துடன் இணைப்பது தொடர்பாகும். தொழிலாள வர்க்கத்தின் அனைத்து சமூக சக்தியையும் அணிதிரட்டினால் மட்டுமே கிராமப்புற தொழிலாளர்களின் கழுத்தை நெரிக்கும் போர்கள் மற்றும் நிதி ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

டீசல் எரிபொருளுக்கான கட்டாய விலை உயர்வுகளை செலுத்த வேண்டியிருக்கும் அதே வேளையில், தங்கள் விளைபொருட்களுக்கு குறைந்த விலையை வழங்குவதை எதிர்த்து விவசாயிகள் சாலைகளை மறித்து தென்மேற்கு பிரான்சில் போராட்டங்களை தொடங்கியுள்ளனர். ஜேர்மனியில் விவசாயிகளின் எதிர்ப்பைத் தூண்டிய முக்கிய பிரச்சினைகளில் இதுவும் ஒன்றாகும். அதன் அரசாங்கம் ரஷ்யாவிற்கு எதிராக மறுஆயுதமாக்கலுக்கு நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களை செலவழிப்பதற்கு, அதன் வரவு செலவுத் திட்டத்தை சமநிலைப்படுத்த விவசாய எரிபொருள் மானியங்களை வெட்டித்தள்ளியுள்ளது.

துலூஸைச் சுற்றியுள்ள ஒக்சிக்டானி பிராந்தியத்தில், விவசாயிகள் பல நெடுஞ்சாலைகளைத் தடுத்துள்ளனர். இந்த வாரம், எதிர்ப்பு போராட்டங்கள் விரைவாக தென்மேற்கு மற்றும் மார்சேய்க்கு வடக்கே டிரோம் மாவட்டத்திலும், போவே மற்றும் பாரிஸுக்கு வடக்கே பிக்கார்டி பகுதி மற்றும் பிரிட்டானின் மேற்கு தீபகற்பத்தில் உள்ள பிரெஸ்ட் முழுவதும் பரவியுள்ளது.

அலெக்ஸாண்ட்ரா சோனாக் என்ற விவசாயி, துலூஸுக்கு தெற்கே ஏரியஜ் மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தபோது கொல்லப்பட்டார். கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஒரு கார் அவரது சாலை மறியல் வழியாக சென்றபோது, ​​சோனாக், அவரது மகள் மற்றும் அவரது கணவர் மீது மோதியது. சோனாக்கின் மகள் நேற்று இறந்தார், இருப்பினும் அவரது கணவர் உயிர் பிழைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரெஞ்சுப் பொலிசாரால் நாடுகடத்தல் உத்தரவுகளை எதிர்கொண்டுள்ள ஆர்மேனிய நாட்டவர் என அடையாளம் காணப்பட்ட காரை ஓட்டிச் சென்ற சாரதி மீது தன்னிச்சையான கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

விவசாயிகளின் போராட்டங்கள் முதலாளித்துவ அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் விவசாய சங்கங்களின் (தேசிய விவசாய உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FNSEA), கிராமப்புற ஒருங்கிணைப்பு மற்றும் விவசாயிகள் கூட்டமைப்பு) கட்டுப்பாட்டிற்கு வெளியே தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்புகள், போராட்டங்களைத் தொடங்கிய துலூஸ் - பயோன் நெடுஞ்சாலையின் ஆரம்ப முற்றுகைக்கு அல்லது பிரான்சின் மூன்று பெரிய நகரங்களான பாரிஸ், லியோன் மற்றும் மார்சேய் ஆகியவற்றுக்கு இடையேயான போக்குவரத்தை துண்டிக்ககூடிய, முக்கிய A6 மற்றும் A7 நெடுஞ்சாலைகளை முற்றுகையிடுவதற்கு எந்த உத்தரவையும் கொடுக்கவில்லை.

செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில், விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் புதிதாக பதவியேற்றுள்ள பிரெஞ்சு பிரதம மந்திரி கேப்ரியல் அட்டலைச் சந்தித்து, விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைச் சமாளிக்க “நூறு மில்லியன் யூரோக்களை” கண்டுபிடிப்பதாக அவர்களது உறுப்பினர்களுக்கு உறுதியளித்தனர்.

எவ்வாறாயினும், கோபம் தொடர்ந்து அதிகரித்து, விவசாயிகளின் எதிர்ப்புகள் பரவி வருவதுடன், துலூஸ் மற்றும் போர்தோவில் மந்த நடவடிக்கைகளை ஏற்பாடு செய்த டாக்ஸி ஓட்டுநர்களிடமிருந்து ஆதரவையும் பெற்றுள்ளது. ஏஜென் பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், அதனை உரம் போட்டு மூடி கட்டிடத்தின் முகப்பை தீயிட்டு கொளுத்தினர்.

இன்று, பிரான்சிலுள்ள 100 மாவட்டங்களில் 85ல் எதிர்ப்பு போராட்டங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. அத்தோடு, லியோன், போர்தோ, அமியன், ஒரஞ்சு, பூர்ஜ், பயோன், ஏஜென், பெரிக்யூ மற்றும் அங்கூலேம் போன்ற நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

ஜேர்மனியைப் போலவே, விவசாயிகள் விரைவில் நாட்டின் தலைநகரை முற்றுகையிடக்கூடும் என்பதற்கான அறிகுறிகளும் உள்ளன. FNSEA தலைவர் ஆர்னோ ரூசோ நேற்று France2 தொலைக்காட்சியில் “விவசாய சமூகத்தில் வரலாறு காணாத வெடிப்பு” பற்றி எச்சரித்தார். “வன்முறை, சில நேரங்களில் அது வெகு தொலைவில் இல்லை” அத்தோடு பாரிஸை முற்றுகையிடுவது “ஒரு விருப்பத் தேர்வல்ல” என்று கூறினார். எவ்வாறாயினும், பிக்கார்டியில் இருந்து வடக்கேயும், எஸ்ஸோன் மாவட்டத்திலிருந்து தெற்கிலும் டசின் கணக்கான டிராக்டர்கள் பாரிஸில் குவிந்து வருவதாக கூறப்படுகிறது.

விவசாயிகளின் போராட்டங்கள் பிரெஞ்சு அரசாங்கத்திற்குள் ஆழ்ந்த நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. பிரெஞ்சு மக்களில் 85 சதவீதம் பேர் விவசாயிகளின் போராட்டங்களை ஆதரிப்பதாகவும், 56 சதவீதம் பேர் ஏற்கனவே விவசாய மானியங்களை அதிகரித்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. பிரதமர் அட்டல் இரண்டு நாட்களாக விவசாய கூட்டமைப்புகளுடன் நெருக்கடி நிலைமை தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தினார். ஆனால், அவர் என்ன கொள்கைகளை முன்மொழிவார் என்பது குறித்து எந்த அறிவிப்பும் செய்யவில்லை.

பாசிச உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மானின் விவசாயிகளிடம் “பொதுச் சொத்துக்களை மதிக்க அவர்களை ஊக்குவிக்கும் அதே வேளையில் அவர்களை அரசியல் ரீதியாக ஆதரிக்க” விரும்புவதாகக் கூறினார், மேலும் அவர்களைத் தாக்க கலகத் தடுப்பு போலீஸாருக்கு உத்தரவிடப் போவதில்லை என்று பரிந்துரைத்தார். “துன்பப்படும் மக்களுக்கு எதிராக நான் CRS [கலகப்பிரிவு போலீசாரை] அனுப்பவில்லை என்று பாசாங்குத்தனமாக கூறினார். உண்மையில், உள்துறை அமைச்சகம் ஏற்கனவே தெற்கில் உள்ள விவசாயிகளைக் கண்காணிக்க கலகத் தடுப்பு போலீஸாரை அனுப்பியுள்ளது. மேலும் “மஞ்சள் அங்கி” போராட்டத்தின் போது செய்தது போல், பாரிஸின் மையப்பகுதியை போராட்டங்கள் சென்றடைந்தால், பெரிய அளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகளை பொலிஸ் தயார் செய்யும்.

விவசாயிகளுக்கு எதிராக கடுமையான போக்கை எடுக்கவிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள, விவசாய அமைச்சர் மார்க் பெனோ, அரசாங்கம் விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தையில் “வாய்வீச்சு அல்லது எளிதான வழியை எடுக்க மாட்டாது” என்று கூறினார். பேச்சுவார்த்தைக்காக பிரதமர் அட்டலைச் சந்தித்தபோது, மார்க் பெனோ வரும் நாட்களில் தனது கொள்கையைக் குறிப்பிடுவதாகவும், “நாம் அடக்கமாக முன்னோக்கிச் செல்ல வேண்டும், அதுதான் எனது பாணி” என்றும் லு மொண்ட் பத்திரிகையிடம் கூறினார்.

விவசாயிகள் கூட்டமைப்புகளின் மூத்த தலைவர்கள் அரசாங்கத்தை விமர்சித்து, போராட்ட இயக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கும் அவசர நடவடிக்கைகளை அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டனர். கிராமப்புற ஒருங்கிணைப்புத் தலைவர் Véronique Le Floch, எந்தவொரு உறுதியான “பேரழிவு” அறிவிப்பையும் அரசாங்கம் வெளியிடத் தவறிவிட்டது என்று கூறினார். மேலும், விவசாயிகளுக்கான டீசல் (GNR) நிதியுதவி மற்றும் முன்னெப்போதும் இல்லாத வகையில், சுகாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் விவசாயத்திற்கான நிதியுதவி பற்றிய அறிவிப்பையாவது [அரசாங்கத்திடம் இருந்து] எதிர்பார்க்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

விவசாயிகள் எச்சரிக்கப்பட வேண்டும்: முதலாளித்துவ அரசாங்கங்களோ அல்லது அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் சங்கங்களோ விவசாயிகளின் நலன்களை இதயத்தில் கொண்டிருக்கவில்லை. விவசாயிகள் ஒரு முக்கியமான சமூக சக்தியாக உள்ளனர். பிரான்சில் பல்வேறு அளவுகளில் தொழில்துறை பண்ணைகள் முதல் மிகச் சிறிய பண்ணைகள் வரை 390,000 பண்ணைகள் உள்ளன. அங்கு விவசாயிகள் மாதத்திற்கு வெறும் 400 யூரோக்கள் வறுமை ஓய்வூதியத்துடன் ஓய்வு பெறுகின்றனர். எவ்வாறாயினும், நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களை, போர் இயந்திரத்திற்கும், பெரும் பணக்காரர்களுக்கான வங்கி பிணையெடுப்பிற்கும், மக்களின் உணவு செலவிலிருந்து கொடுப்பதற்கு உறுதியாக இருக்கும் ஆளும் வர்க்கத்தை விவசாயிகள் எதிர்கொள்கின்றனர். இந்தப் போராட்டத்தில் தொழிலாளி வர்க்கம்தான் விவசாயிகளின் சிறந்த நண்பனாகும்.

ஜேர்மன் அரசாங்கத்தைப் போலவே, 2030க்கு முன்னர் இராணுவச் செலவினங்களை 100 பில்லியன் யூரோக்களுக்கு மேல் அதிகரிப்பதாக மக்ரோன் உறுதியளித்துள்ளார். ஆபிரிக்காவில் பிரான்சின் போர்கள் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போரை அதிகரிக்கும் திட்டத்திற்கு நிதியளிக்க அவர் பயன்படுத்திய நடவடிக்கை என்பது, கடந்த ஆண்டு பாரியளவில் செல்வாக்கற்ற ஓய்வூதிய வெட்டுக்களை திணித்ததாகும். மக்களுக்கு எதிராக வெளிப்படையாக ஆட்சி செய்துவரும் மக்ரோன், பிரான்சில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களைத் தாக்குவதற்கு, கலகத் தடுப்பு போலீஸாரை அனுப்பினார். இறுதியில் எதிர்ப்பு போராட்ட இயக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தொழிற்சங்க அதிகாரத்துவங்களை அவர் நம்பியிருந்ததோடு, ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் இராணுவ செலவினங்களில் அதிகரிப்புகளை நிறைவேற்றினார்.

ஐரோப்பிய யூனியனின் “பண்ணை முதல் முட்கரண்டி” (Farm-to-Fork) திட்டத்தை விவசாயிகள் விரைவாக செயல்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான விவசாயக் கொள்கை, மற்றும் மானியங்கள் மீதான நிபந்தனைகளுக்கு எதிராக விவசாயிகள் இப்போது எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டமானது, டீசல் எரிபொருளின் பயன்பாடு, நைட்ரேட் அடிப்படையிலான உரங்களின் பயன்பாடு மற்றும் காலநிலைக்கு தீங்கு விளைவிக்கும் பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைப்பதற்காக பண்ணையாளர்களின் கால்நடைகளின் அளவைக் குறைக்கிறது. எனினும், இதற்கு ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் விவசாயிகளுக்கு போதுமான உதவிகளை வழங்காமல், மக்களின் உணவு விநியோகத்திற்கான வெளிப்படையான அவமதிப்புடன் இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டனர்.

“பண்ணை முதல் முட்கரண்டி” திட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ ஆய்வுகள், இது ஐரோப்பிய ஒன்றிய உணவு உற்பத்தி மற்றும் நுகர்வு மற்றும் ஐரோப்பிய விவசாயத்தில் ஆழமான நெருக்கடியைத் தூண்டும் என்று கண்டறிந்துள்ளது. 2020 ஆம் ஆண்டின் அமெரிக்க வர்த்தகத் துறையின் ஆய்வு, இது உற்பத்தியில் 11 சதவிகிதம் வீழ்ச்சியையும், உணவுப் பொருட்களின் விலையில் 17 சதவிகிதம் அதிகரிப்பையும் ஏற்படுத்தக்கூடும் என்று கண்டறிந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு கீல் பல்கலைக்கழக ஆய்வின்படி, உற்பத்தியில் 16 சதவிகிதம் வீழ்ச்சியும், தானியங்களுக்கு 12 சதவிகிதமும், பாலுக்கு 36 சதவிகிதமும், இறைச்சிக்கு 42 சதவிகிதமும் விலை உயர்வு இருக்கும் என்று கணித்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல், உண்ணவும், வேலை செய்யவும், உணவை உற்பத்தி செய்வதற்கான வழிகளைக் கண்டறியவும் அனைவருக்கும் போதுமான பணம் உள்ளது. எவ்வாறாயினும், இந்தப் பணம், டிரில்லியன் யூரோ வங்கி பிணையெடுப்புகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய போர்வெறியர்களின் பொறுப்பற்ற இராணுவ வரவு செலவுத் திட்டங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட வேண்டும். இது, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் முதலாளித்துவ உறுப்பு அரசாங்கங்களை வீழ்த்துவதற்கும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும், ஐரோப்பாவில் ஐக்கிய சோசலிச அரசுகளைக் கட்டுவதற்கும் தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் பின்னால் விவசாயிகளை ஒன்றிணைப்பதை உள்ளடக்கியுள்ளது.

Loading