முன்னோக்கு

விளாடிமிர் லெனின் மறைந்து 100 ஆண்டுகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

விளாடிமிர் லெனின்

ஜனவரி, 21ந் திகதி, லெனின் என்றழைக்கப்படும் விளாடிமிர் இலியிச் உல்யனோவ் மறைந்ததன் 100வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. உலக வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆளுமைகளில் ஒருவராக லெனின் இடம் பெறுகிறார். போல்ஷிவிக் கட்சியை ஸ்தாபித்து, ரஷ்யாவை மாற்றிமைத்து சோவியத் ஒன்றியத்தை உருவாக்கியது மட்டுமின்றி, 20 ஆம் நூற்றாண்டின் அனைத்து புரட்சிகர அரசியல் போராட்டங்களுக்கும் ஒரு ஆழ்ந்த உந்துதலை வழங்கிய ஒரு புரட்சிக்கு தலைமை கொடுத்த தத்துவார்த்த மற்றும் அரசியல் மேதையாக லெனின் இருந்தார்.

மார்ச் 1923 இல் ஒரு மரணத்தை விளைவிக்க கூடிய மாரடைப்பால் அவர் பாதிக்கப்பட்டு 10 மாதங்களுக்குப் பின்னர், அதாவது ஜனவரி 21, 1924 அன்று, 53வது வயதில், லெனினின் அகால மரணமானார். ஒரு வருடத்திற்குள் மூன்று முறை அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு, அவரை அரசியல் நடவடிக்கைகளில் இருந்து அகற்றியது. 1923 கோடையிலும், இலையுதிர் காலத் தொடக்கத்திலும் ஆரோக்கியமடைவதற்கான சில அறிகுறிகள் இருந்தமையினால், அவர் ஓரளவு அரசியல் நடவடிக்கையை மீண்டும் தொடங்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் நான்காவது மற்றும் அபாயகரமான மாரடைப்பு ஏற்பட்டதால் அவை நொறுங்கிப் போயின.

லெனினின் மரணமானது சோவியத் ஒன்றியம் மற்றும் உலகப் புரட்சியின் தலைவிதியில் பேரழிவுகரமான பின்விளைவுகளைக் கொண்டிருந்த ஒரு அரசியல் துயரமாக இருந்தது. இது ஒரு முக்கியமான கட்டத்தில் வந்தது. மார்ச்சில் வந்த மாரடைப்பிற்கு பின்னர், போல்ஷிவிக் கட்சியின் அரசியல் தலைமையினால் ட்ரொட்ஸ்கி பெருகிய முறையில் தாக்குதலுக்கு உட்பட்டார். ஸ்ராலின், சினோவியேவ் மற்றும் காமனேவ் ஆகியோர் அரசியல் குழுவிற்குள் (”முக்கூட்டு”) ஒரு கோட்பாடற்ற கன்னையை உருவாக்கினர். 1923 அக்டோபரில் இடது எதிர்ப்பு அணி ஸ்தாபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்ராலின் ட்ரொட்ஸ்கிக்கு எதிராக அதிகரித்தளவில் மூர்க்கமான பிரச்சாரத்திற்கு தலைமை கொடுத்தார், அதில் 1917க்கு முன்னர் லெனினுக்கும் ட்ரொட்ஸ்கிக்கும் இடையே நிலவியிருந்த வேறுபாடுகளைத் தவறாக எடுத்துரைப்பது, பொய்மைப்படுத்துவது ஆகியவைகளும் உள்ளடங்கும். இந்த வேறுபாடுகள் புரட்சியின் போக்கில் ஏற்கனவே தீர்க்கப்பட்டன.

1924 இன் ஆரம்பத்தில் லெனின் இறந்திருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் என்பதை ஒருவர் உறுதியாகக் கூற முடியாது. ஆயினும், லெனினின் மரணம் ட்ரொட்ஸ்கியை தனிமைப்படுத்தியது. அக்டோபர் புரட்சியின் புரட்சிகர சர்வதேசியவாதத்திற்கு ஸ்ராலினால் உருவகப்படுத்தப்பட்ட அதிகாரத்துவ பிற்போக்குத்தனத்திற்கு எதிரான போராட்டத்தில் ட்ரொட்ஸ்கி, மிக சக்திவாய்ந்த கூட்டாளியை இழந்தது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

லெனின், அவரது வாழ்வின் இறுதி ஆண்டுகளில், அவரது உடல்நிலை மோசமடைந்த போதும் கூட, சோவியத் அரசு இயந்திரத்திற்குள்ளும் போல்ஷிவிக் கட்சிக்குள்ளும் அபிவிருத்தி கண்டு வந்த தேசியவாத மற்றும் அதிகாரத்துவ சீரழிவுக்கு எதிரான ஒரு போராட்டத்தைத் தொடங்கியிருந்தார். 1922 டிசம்பர் பிற்பகுதியில், லெனின் அவரது “கடைசி மரண சாசனம்” (“Last Testament”) என்று வரலாற்றில் இடம்பெறவிருந்ததை எழுதத் தொடங்கினார். ஸ்ராலினை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்குமாறு போல்ஷிவிக் கட்சித் தலைமைக்கு அழைப்பு விடுத்து 1923 ஜனவரி 4 இல் எழுதப்பட்ட ஒரு பிற்சேர்க்கையும் இதில் உள்ளடங்கியிருந்தது.

லெனினின் மரண சாசனம், வெளிநாட்டு வர்த்தகத்தின் மீதான அரசு ஏகபோகத்தைப் பாதுகாத்தல், கட்சிக்குள்ளாக பெரிய ரஷ்ய பேரினவாதத்தின் வளர்ச்சிக்கு எதிர்ப்பு மற்றும் அதிகாரத்துவவாதத்திற்கு எதிரான போராட்டம் என சோவியத் கொள்கை சம்பந்தப்பட்ட இன்றியமையாத பிரச்சினைகளில் ட்ரொட்ஸ்கியுடன் ஒரு கூட்டணியை ஸ்தாபிப்பதற்கான நகர்வுகளுடன் பொருந்தி இருந்தது. 1923 மார்ச்சில் லெனினுக்கு ஏற்பட்ட மாரடைப்பினால் மட்டுமே, ஒரு மாதத்திற்குப் பின்னர் நடந்த போல்ஷிவிக் கட்சியின் பன்னிரண்டாவது காங்கிரசில், ட்ரொட்ஸ்கியுடன் சேர்ந்து ஒரு பகிரங்கமான போராட்டத்தைத் தொடங்குவதில் இருந்து லெனினைத் தடுத்தது.

அனைத்திற்கும் மேலாக, இந்த முக்கிய ஆண்டுகளில் கம்யூனிச அகிலத்தில் (Communist International) லெனினின் செல்வாக்கும் அரசியல் தலைமையும் சர்வதேச சூழ்நிலையை உலகப் புரட்சிக்கு சாதகமாக மாற்றியிருக்கும், சோவியத் ஒன்றியத்திற்குள்ளேயே தேசியவாத பிற்போக்குத்தனத்தை ஆழமாக பலவீனப்படுத்தியிருக்கும். லெனின் உயிருடன் இருந்திருந்தால், அரசியல்ரீதியாக செயலூக்கத்துடன் இருந்திருந்தால், 1924 இல் ஸ்ராலின் மற்றும் புகாரினால் முன்னெடுக்கப்பட்ட “தனி ஒரு நாட்டில் சோசலிசம்” என்ற தேசியவாத மற்றும் மார்க்சிச-விரோத கோட்பாட்டிற்கு எதிராக அவர் ஒரு கடுமையான போராட்டத்தை நடத்தியிருப்பார்.

லெனினின் மரணத்திற்குப் பின்னர், அபிவிருத்தி அடைந்து வந்த ஸ்ராலினிச இயந்திரம் அவரது சடலத்தை மட்டுமல்ல, மாறாக அவரது சிந்தனைகளையும் கூட மம்மி போல் பதப்படுத்தி வைத்திருந்தது. ட்ரொட்ஸ்கிக்கு எதிரான அவர்களின் தாக்குதலில், ஸ்ராலினும் அவரது கூட்டாளிகளும் லெனினின் சிந்தனையை மிகவும் சம்பிரதாயமான விதத்தில் கையாண்டனர், லெனினின் சொந்த வழிமுறையை முற்றிலும் பொய்யாக்கும் விதத்தில் மேற்கோள்களை சூழலில் இருந்து கிழித்தெறிந்தனர்.

ட்ரொட்ஸ்கி, 1940 ஆகஸ்டில் ஒரு ஸ்ராலினிச முகவரால் படுகொலை செய்யப்பட்ட சமயத்தில் அவர் எழுதிக் கொண்டிருந்த ஒரு கட்டுரையில், ரஷ்ய புரட்சியில் லெனினின் சொந்த பாத்திரத்தை வரைந்து, புறநிலை அபிவிருத்திகள், புரட்சிகர தலைமை மற்றும் தனிநபர்களுக்கு இடையிலான சிக்கலான உறவு குறித்து ஆராய்ந்தார். லெனின் இல்லாமல், அக்டோபர் புரட்சி “அதேபோல்” நடந்திருக்கும் என்று வாதிட்டவர்களை எதிர்த்து, ட்ரொட்ஸ்கி இவ்வாறு அதற்குப் பதிலளித்தார்:

ஆனால் அது அப்படியல்ல. வரலாற்று நிகழ்ச்சிப்போக்கின் உயிருள்ள கூறுகளில் ஒன்றை லெனின் பிரதிநிதித்துவம் செய்தார். பாட்டாளி வர்க்கத்தின் மிகவும் செயலூக்கமான பிரிவின் அனுபவம் மற்றும் கூர்மையின் ஆளுருவாக அவர் திகழ்ந்தார். முன்னணிப் படையை அணிதிரட்டவும் தொழிலாள வர்க்கத்தையும் விவசாய வெகுஜனங்களையும் அணிதிரட்டுவதற்கான ஒரு வாய்ப்பை வழங்கவும் புரட்சி அரங்கில் அவர் சரியான நேரத்தில் தோன்றியது அவசியமாக இருந்தது. வரலாற்றுத் திருப்பங்களின் தீர்க்கமான தருணங்களில் அரசியல் தலைமை என்பது போரின் நெருக்கடியான தருணங்களில், தலைமைக் கட்டளைத் தளபதியின் பாத்திரத்தைப் போலவே ஒரு தீர்மானகரமான காரணியாக மாற முடியும். [”வர்க்கம், கட்சி மற்றும் தலைமை”]

1917 வசந்த காலத்தில் போல்ஷிவிக் கட்சியை அதிகாரத்தைக் கைப்பற்றுவதை நோக்கி மறுநோக்குநிலைப்படுத்துவதில் லெனினின் பாத்திரம் தீர்மானகரமானதாக இருந்தது. லெனின் அவரது “ஏப்ரல் ஆய்வுரைகளுடன்” ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு, அக்டோபர் புரட்சிக்கு இட்டுச் சென்ற ஒரு புதிய அரசியல் பாதையில் கட்சியை வழி நடத்தினார்.

லெனினின் மரணத்திற்குப் பின்னர், அவரது அரசியல் சிந்தனைகளும் கருத்துருக்களும் ட்ரொட்ஸ்கி மற்றும் இடது எதிர்ப்பு அணியினரால் அபிவிருத்தி செய்யப்பட்டன. அதேவேளையில் ஸ்ராலினிச கன்னையானது ரஷ்ய புரட்சியின் அடித்தளமாகக் கொண்டிருந்த உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்திற்கு எதிராக கட்டவிழ்ந்து வந்த பிற்போக்குத்தனத்தைப் பிரதிநிதித்துவம் செய்தது. போல்ஷிவிசத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியை —அதாவது, உண்மையான புரட்சிகர சர்வதேசியவாதம் மற்றும் மார்க்சிசத்தை— பேணுவதற்கான ட்ரொட்ஸ்கியின் போராட்டம் 1938 இல் நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்படுவதில் உச்சக்கட்டத்தை அடைந்தது.

இனப்படுகொலை மற்றும் உலகப் போரினை இயல்பாக்குதல் மற்றும் உலகெங்கிலும் வர்க்க மோதலின் மீளெழுச்சியின் முதலாளித்துவ ஒழுங்கின் சிதைவின் ஒரு புதிய காலகட்டமாக, தெளிவாக இருக்கும் ஒன்றில் இந்த மரபியம் இப்போது தீவிர முக்கியத்துவத்தைப் பெறுகிறது. இந்தப் புதிய புரட்சிகர காலகட்டத்தில், லெனின் மீண்டும் மகத்தான வரலாற்று ஆளுமையாக கருதப்படுவார்.

விளாடிமிர் லெனினின் வாழ்க்கை மற்றும் சிந்தனைகள் குறித்த ஒரு முழுமையான ஆய்வுக்கு, உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுத் தலைவர் டேவிட் நோர்த்தின் பின்வரும் கட்டுரைகளை நாங்கள் பரிந்துரைக்கிறோம்:

Loading