காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலை மற்றும் யேமனில் அமெரிக்க-பிரிட்டன் போருக்கு எதிராக லண்டனில் அரை மில்லியன் மக்கள் பேரணி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

காஸா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைத் தாக்குதல் மற்றும் இந்த வாரம் யேமன் மீதான குண்டுவீச்சில் பிரிட்டனின் ஈடுபாடு ஆகியவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், போர்நிறுத்தம் மற்றும் பாலஸ்தீனத்துக்கான தேசிய அணிவகுப்பில் சனிக்கிழமையன்று லண்டனில் குறைந்தது 500,000ம் பேர் கலந்துகொண்டனர்.

காஸா மக்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்து வருகிறது என்பதை நிரூபிக்கும் வகையில், ஒரு அழிவுகரமான வழக்கை தென்னாப்பிரிக்காவின் வழக்கறிஞர்கள் முன்வைத்த சில நாட்களுக்குப் பிறகு இந்த அணிவகுப்பு நடந்துள்ளது.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

லண்டன் நிகழ்வு உலகளாவிய எதிர்ப்பின் ஒரு பகுதியாக இருந்தது. உலகில் மக்கள் வசிக்கும் ஆறு கண்டங்களிலும் உள்ள 45 நாடுகளில் 120 க்கும் மேற்பட்ட நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.

அமெரிக்காவில், வாஷிங்டனில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் சனிக்கிழமையன்று 100,000ம் மக்களைக் கொண்ட மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது. கால் மில்லியனுக்கும் அதிகமான மக்களை ஒன்றிணைத்த நவம்பர் 4 எதிர்ப்பு போராட்டம் போல பெரியதாக இல்லாவிட்டாலும், பல அமெரிக்க முஸ்லீம் குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஊடகங்கள் மற்றும் இரு அரசியல் கட்சிகளின் (ஜனநாயக கட்சி மற்றும் குடியரசுக்கட்சி) 100 நாட்களுக்கும் மேலான அவதூறுப் பிரச்சாரங்கள் இருந்தபோதிலும், பல யூதர்கள் உட்பட அனைத்துப் பின்னணியில் உள்ள மக்களையும் குளிரில் அணிவகுத்துச் செல்வதைத் தடுக்க முடியவில்லை.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

போராட்டத்தில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்களின் முழுக் குடும்பங்களும் தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து, “இனப்படுகொலை ஜோ பைடென் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரான “இரத்தவெறி பிளிங்கனுக்கு” எதிராக கோஷமிட்டனர். உலக சோசலிச வலைத்தளம் போராட்ட எதிர்ப்பாளர்களின் விரிவான நேர்காணல்களை வெளியிடும்.

நியூயோர்க்கில் வெள்ளிக்கிழமை மாலை, சுமார் 100 பேர்கள் யேமனுக்கு ஆதரவாகவும், சட்டவிரோத அமெரிக்க மற்றும் இங்கிலாந்து வான்வழித் தாக்குதல்களுக்கு எதிராகவும் பேரணி நடத்தினர். ஒப்பீட்டளவில் சிறிய அளவிலான பேரணியாக இருந்தபோதிலும், சுமார் 100 பொலிஸ் அதிகாரிகள் இப்பேரணிக்கு அனுப்பப்பட்டனர். மேலும் “ஏய், ஹோ ஹோ, இஸ்ரேலிய படகுகள் செல்ல வேண்டும், காஸா அழைத்தது, யேமன் பதிலளித்தது” என்று கோஷமிட்டுக் கொண்டிருந்த அமைதியான போராட்ட எதிர்ப்பாளர்களை பொலிசார் துன்புறுத்தி இடையூறுகள் செய்தனர்.

லண்டனில் டவுனிங் ஸ்ட்ரீட் மற்றும் இதர ஏகாதிபத்திய அரசாங்கங்களின் ஆதரவுடன் அக்டோபர் 8 அன்று இஸ்ரேல் காஸாவின் அழிவை கட்டவிழ்த்துவிட்டதால், லண்டனில் சனிக்கிழமை நடந்த அணிவகுப்பு இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஏழாவது தேசிய எதிர்ப்பு ஆகும். லட்சக்கணக்கான மக்கள் லண்டன் தெருக்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த நவம்பர் 11 மார்ச்சில் 800,000ம் மக்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்ட அணிவகுப்புக்குப் பிறகு, இந்த ஒரு மாதத்தில் தலைநகரில் நடந்த முதல் ஆர்ப்பாட்டம் இதுவாகும்.

இந்த அணிவகுப்பானது, ராணி விக்டோரியா தெரு மற்றும் ஃப்ளீட் தெரு வழியாக வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள பாராளுமன்ற சதுக்கத்திற்கு செல்வதற்கு முன்பு, லண்டனின் பாங்கிங் பகுதியில் கூடியது.

லண்டன் பெருநகர பொலிசார் பெருமளவு குவிக்கப்பட்டிருந்தனர். 1,700 அதிகாரிகளுடன், லங்காஷயர் வரை இதர படைகளால் வலுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையும் இதல் அடங்கும். குறிப்பிட்ட வழித்தடத்தில் இருந்து யாரும் விலகிச் செல்லக் கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் போராட்டக்காரர்கள் மீது விதிக்கப்பட்டன. கென்சிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தைச் சுற்றிலும் சீல் வைக்கப்பட்ட பகுதிக்குள் எந்தப் பங்கேற்பாளரும் நுழைய முடியாது, ஊர்வலத்தின் முடிவில் கூட்டத்தில் நடந்த உரைகள் மாலை 4.30 மணிக்கும், முழு நிகழ்வும் மாலை 5 மணிக்கும் முடிந்தது.

இந்த போராட்ட அணிவகுப்புக்கு முன்னதாக, லண்டன் பொலிஸ் துணை உதவி ஆணையர் லோரன்ஸ் டெய்லர், பேச்சுரிமை மீதான தாக்குதலில், வேண்டுமென்றே பதாகைகளில் வரம்பை மீறுவது அல்லது கோஷங்களை எழுப்பும் எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று கூறினார். எதிர்ப்புகளை கட்டுப்படுத்துவதற்கும், எந்தவொரு குற்றத்தையும் முறியடிப்பதற்கும் பொலிசார் தமது அதிகாரங்களைப் பயன்படுத்த நான் அவர்களுக்கு ஆதரவளிக்கிறேன்” என்று கன்சர்வேடிவ் உள்துறை செயலாளர் ஜேம்ஸ் கிளேவர்லி கூறிய பிறகு இது நடந்தது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த மூன்று பேர் உட்பட ஒன்பது பேர்கள் கைது செய்யப்பட்டனர். தடை செய்யப்பட்ட அமைப்பை ஆதரித்ததாக சந்தேகத்தின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இனவெறியைத் தூண்டியதற்காக மூன்று பேர்கள் –அதில் ஒருவர் பதாகைகளை வைத்திருந்தார், மற்ற இரண்டு பேர்கள் கோஷமிட்டதற்காக கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் புரட்சிகர கம்யூனிஸ்ட் குழுவைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர்.

லண்டனில் நடந்த அணிவகுப்புகள் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிரான பாரிய எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றன. சமீபத்திய கருத்துக் கணிப்புகளில், காஸாவில் போர் நிறுத்தத்திற்கு கிட்டத்தட்ட 80 சதவீதமான மக்களின் ஆதரவைக் காட்டுகின்றன. இருந்தபோதிலும், கடந்த மூன்று மாதங்களாக, பிரிட்டனில் நடந்துவரும் எதிர்ப்புகளின் முக்கிய அமைப்பாளர்களான போர் கூட்டணியை நிறுத்து (STWC) மற்றும் பாலஸ்தீன ஒற்றுமை பிரச்சாரம் ஆகியவற்றின் முன்னோக்கு, இந்த போராட்ட எதிர்ப்புகளின் எந்தவொரு சாத்தியமான முன்னோக்கையும் மறுத்துள்ளது. இஸ்ரேலின் இனப்படுகொலையை ஆதரிப்பதில் எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் பெரும்பான்மையான எம்.பி.க்கள் சுனாக் அரசாங்கத்திற்குப் பின்னால் முழுமையாக இருக்கின்றனர். தொழிற்கட்சி தலைவர் சேர் கீர் ஸ்டார்மர் குறிப்பாக பாலஸ்தீனிய மக்களுக்கு தண்ணீர், உணவு மற்றும் மருந்துகளை மறுக்க இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என்று கூறி போர்க்குற்றங்களை ஆதரிக்கின்றார்.

எனவே, லண்டனில் நடந்த பேரணிகளில் இஸ்ரேலின் தாக்குதலை எதிர்க்கும் சில தொழிற்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றனர். இவர்களில் அப்சனா பேகம், பெல் ரிபெய்ரோ-அடி, ரிச்சேர்ட் பேர்கன் மற்றும் ஜோன் மெக்டோனல் ஆகியோர் அடங்குவர். அத்துடன், ஸ்டார்மரால் வெளியேற்றப்பட்ட தொழிற்கட்சியின் பாராளுமன்ற முன்னாள் தலைவர் ஜெரமி கோர்பின் மற்றும் அவரது நிழல் உள்துறை செயலாளர் டயான் அபோட் ஆகிய இரண்டு எம்.பி.க்கள் கூட்ட மேடைகளில் உரையாற்றியுள்ளனர்.

ஜனவரி 13, 2024 அன்று லண்டனில் நடந்த பேரணியில் உரையாற்றிய ஜெரமி கோர்பின்

இஸ்ரேலின் போர்க்குற்றங்களுக்கு எதிரான தமது வழக்கை கேட்க தென்னாப்பிரிக்க தூதுக்குழுவால் ஹேக்கிற்கு அழைக்கப்பட்ட பின்னர் கோர்பின் இந்த வாரம் மீண்டும் கூட்டத்தில் உரையாற்றினார். மீண்டும் ஒருமுறை “மக்கள் பிரதம மந்திரியாக” அறிமுகப்படுத்தப்பட்ட கோர்பின் பேசுகையில், இஸ்ரேலிய இனப்படுகொலையை கண்டித்து, உலக அமைதிக்கான தனது வழக்கமான அழைப்புகளை விடுத்தார். ஆனால் கோர்பின், மீண்டும் ஸ்டார்மர் அல்லது தொழிற் கட்சி பற்றிய எந்தக் குறிப்பையும் தெரிவிப்பதை தவிர்த்துக் கொண்டார்.

இனப்படுகொலையை எளிதாக்குவதில் ஸ்டார்மரின் பங்கு, அவர் யேமன் மீது குண்டுவீசுவதை ஒப்புக்கொண்ட வாரத்தில் தெரிந்தது என்று குறிப்பிட்ட போர் கூட்டணியை நிறுத்து அமைப்பின் துணைத் தலைவர் ஆண்ட்ரூ முர்ரே (கோர்பினின் சிறப்பு அரசியல் ஆலோசகராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய ஒரு ஸ்ராலினிஸ்ட்) கூறுகையில், “சுனக் மற்றும் ஸ்டார்மர் பாலஸ்தீனிய இரத்தத்தில் இடுப்பு வரை மூழ்கியுள்ளனர்” என்று குறிப்பிட்டார். ஆனால், இதிலிருந்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை மற்றும் தொழிற்கட்சியுடன் அரசியல் முறிவு அல்லது அதற்கு எதிரான போராட்டம் எதுவும் முன்மொழியப்படவில்லை. மாறாக “காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தினால் செங்கடலில் நாளை அமைதி நிலவக்கூடும், பிரச்சனையின் வேர் இங்குதான் உள்ளது” என்று முர்ரே கூறினார்.

“ரோயல் கடற்படை செங்கடலில் இருந்து வெளியேறி மீண்டும் பிரிட்டனின் போர்ட்ஸ்மவுத் துறைமுக கடற்படை தளத்திற்கு திரும்ப வேண்டும்”, மற்றும் “ஏகாதிபத்தியம் மத்திய கிழக்கிலிருந்து வெளியேற வேண்டும்” என்பதே இதற்கான முர்ரேயின் பதிலாகும்.

பாராளுமன்றத்தில் கன்சர்வேடிவ்களுடன் சேர்ந்து ஏகாதிபத்தியப் போரின் ஒற்றைக் கட்சியாக செயல்படும் ஒரு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பேகம் மற்றும் ரிபேரோ-அடி ஆகியோருடன் பேசும்போது முர்ரே இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 13, 2024 அன்று லண்டனில் சனிக்கிழமை நடைபெற்ற பேரணியில் ஆண்ட்ரூ முர்ரே பேசுகிறார்

பேகம் மற்றும் ரிபேரோ-அடியை அறிமுகப்படுத்திய கூட்டத்தின் நெறியாளர், “இஸ்ரேலின் கொலைக்கு உடந்தையாக இருந்ததற்காகவும், யேமனில் அவர்கள் செய்த செயலுக்காகவும் இங்குள்ள பெரும்பாலான எம்.பி.க்கள் வெட்கித் தலைகுனிந்திருக்க வேண்டிய நிலையில், அவர்களில் ஒரு சிலர் அமைதிக்காக குரல் கொடுக்கிறார்கள்” என்று கூறினார்.

இந்த இரு எம்.பி.க்களும் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராக சரியான கருத்துக்களைக் கூறினர், அதே சமயம் அதில் தங்கள் சொந்தக் கட்சியின் பங்கைக் குறிப்பிடுவதை கவனமாகத் தவிர்த்து, தொழிற் கட்சியுடன் எந்த மோதலையும் தவிர்க்கும் பொருட்டு ஸ்டார்மரின் பெயரைக் குறிப்பிடுவதைத் தவிர்த்தனர்.

ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தொழிற்கட்சியின் மையக்கரு இருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்களை நம்பவைத்து, அவர்களது நற்சான்றிதழ்களை வலுப்படுத்துவதற்கு, இனப்படுகொலையை எதிர்த்துப் பதிவு செய்யத் தயாரான ஒரு சிறிய எண்ணிக்கையிலான தொழிற்கட்சி எம்.பி.க்கள் முதன்முறையாக, சுயமாக அறிவிக்கப்பட்ட தொழிற்கட்சியின் கன்னை முகாமின் ஒரு பகுதியாக காஸா இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த அணிவகுப்பில், தொழிற் கட்சியின் ஜனநாயகத்திற்கான பிரச்சாரக் குழு, உந்துதல் குழு, தொழிற்கட்சி பெண்கள் முன்னணி, தொழிற்கட்சி மற்றும் பாலஸ்தீனம், தொழிற் கட்சியின் அணு ஆயுதக் குறைப்புக்கான பிரச்சாரக் குழு (CND), இடது யோசனைகளின் விழாவிற்கான குழு மற்றும் தொழிற் கட்சியின் வெல்ஷ் அடித்தளக் குழு ஆகிய குழுக்கள் ஈடுபட்டன. Labour Hub, Labour Outlook மற்றும் Left Horizons ஆகிய அமைப்புகளும் இதை ஆதரிக்கின்றன.

தொழிற் கட்சியின் கன்னை பிரிவிலுள்ள பிரதிநிதிகளில் ஒருவரும், தொழிற்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான, ஜெஸ் பெர்னார்ட், இங்கிலாந்தின் இளம் தொழிற்கட்சி தலைவர் ஆவர். மேடைகளில் இருந்து இனப்படுகொலைக்கான ஸ்டார்மரின் ஆதரவை வழக்கமாகக் கண்டிப்பதில் பெர்னார்ட் தனியாக இருக்கிறார். கூட்டத்தில், பெர்னார்ட் தொழிற்கட்சியின் கன்னை உருவாக்கத்தைப்பற்றி பாராட்டினார். அதை அவர் “இடது பிளாக்” என்று அழைத்தார். சனிக்கிழமையன்று நடந்த பேரணியில் மேடையில் இருந்து பெர்னார்ட் கூறுகையில், “யேமனில் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் இஸ்ரேலுக்கான தொடர்ச்சியான ஆதரவு ஆகியவை எனது சொந்தக் கட்சித் தலைவரான கெய்ர் ஸ்டார்மரின் ஆதரவைப் பெற்றுள்ளன. கெய்ர் ஸ்டார்மர், தன்னை குறைந்த மனித உரிமை வழக்கறிஞராகவும், அதிக மனித உரிமைகள் உள்ள பொய்யராகவும் காட்டியுள்ளார். மத்திய கிழக்கில் நடந்த மற்றொரு பேரழிவுகரமான போரில் அமெரிக்காவுடன் கைகோர்த்து நடக்கும் டோனி பிளேயரின் இரத்தம் தோய்ந்த வரலாற்றை மீண்டும் செய்ய ஸ்டார்மர் தயாராக உள்ளார். நாங்கள், மக்கள் மற்றும் உறுப்பினர்கள் போர்நிறுத்தத்தை கோருகிறோம், அதனால்தான் தொழிலாளர் இயக்கத்திற்குள் போர்வெறிக்கு எதிர்ப்பை உருவாக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

ஜெஸ் பெர்னார்ட் (இடது) பாலஸ்தீனத்திற்கான தொழிற் கட்சி உறுப்பினர்களின் பேனருக்கு அருகில் பேசுகிறார்

“பாலஸ்தீனத்திற்கான பேரணிக்கு செல்வதற்காக இந்த வாரம் முதல் முறையாக தொழிற்கட்சியின் இடது குழுக்களின் கூட்டணி எங்களுடன் இணைந்தது எப்படி என்பதை” பெர்னார்ட் பாராட்டினார். மேலும், “இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வதிலிருந்து எங்களை கட்டுப்படுத்த முயற்சித்த போதிலும், தொழிற் கட்சி உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். இடது குழுக்களின் அணியில் சேருங்கள்... நாங்கள் போருக்கு ஊதுகுழலாக மாற மாட்டோம், நாங்கள் பாலஸ்தீனத்திற்கான தொழிற் கட்சி உறுப்பினர்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.

பெர்னார்ட்டின் தனிமைப்படுத்தப்பட்ட அறிக்கைகள், செவிடன் காதில் ஊதிய சங்காக, அவரது பாராளுமன்றக் கூட்டாளிகளின் மௌனத்தை எடுத்துக்காட்டுகின்றன.

“கோர்பின், போர்க் கூட்டணியை நிறுத்து மற்றும் காஸாவில் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்தில் முன்னோக்கி செல்லும் வழி என்ற தலைப்பிலான சமீபத்திய WSWS கட்டுரையில், சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளர் கிறிஸ் மார்ஸ்டன் விளக்கினார்: “தொழிற் கட்சியும், தொழிற்சங்க காங்கிரஸும் வெளிப்படையாகவே போருக்கு ஆதரவாக இருப்பதாலும், தொழிலாளர்கள் மீதான அவர்களின் பிடி பாரியளவில் அரிக்கப்பட்டிருப்பதாலும், கோர்பின் மற்றும் அவரது குறைந்து வரும் ஆதரவாளர்கள் குழுவின் போர் எதிர்ப்பு நம்பகத்தன்மைக்கு STWC நற்சான்றிதழ்களை வழங்குகிறது. எனவே STWC கஸாவிற்கு எதிராக தொழிற்கட்சியை கட்டாயப்படுத்த வேண்டும் என்று நம்பினால், கோர்பினிசத்தை ஒரு போர்-எதிர்ப்பு போக்காக முன்வைப்பது அவசியம்.

இந்த ஆண்டு இங்கிலாந்தில் ஒரு பொதுத் தேர்தல் நடத்தப்படும், அனைத்து கருத்துக்கணிப்புகளும் பரவலாக வெறுப்புக்களுள்ளான டோரிகளை விட தொழிற்கட்சி முன்னணியில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. ஒரு தேர்தல் அறிவிக்கப்படும் தருணத்தில், தொழிற் கட்சியின் “இடது” கன்னை குழுவானது, போர்-எதிர்ப்பு அமைப்புக்களை திரட்டி, ஸ்டார்மர் தலைமையிலான அரசாங்கத்துக்காகப் பிரச்சாரம் செய்து, தொழிலாள வர்க்கத்திற்கு, இதனை ஒரு பெரிய படியாகச் சித்தரிக்கத் தேவையான அனைத்து அரசியல் முயற்சிகளையும் செய்யும்.

Loading