முன்னோக்கு

அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் கொடூரம்: டெக்சாஸ் மாநிலம் மீட்புக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் போது, புலம்பெயர்ந்தோர்கள் பலியாகின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

டெக்சாஸின் ஈகிள் பாஸ், 2024 ஜனவரி 3 புதன்கிழமை, கான்செர்டினா முள்வேலித் தடைக்குப் பின்னால் மெக்ஸிகோவிலிருந்து ரியோ கிராண்டேவைக் கடந்து அமெரிக்காவிற்குள் புலம்பெயர்ந்தோர்கள் நுழைகின்றனர். [AP Photo/Eric Gay]

அமெரிக்க-மெக்சிகோ எல்லையிலுள்ள டெக்சாஸின் ஈகிள் பாஸில் வெள்ளியன்று நடந்த துயரமானது, முக்கியமாக இலத்தீன் அமெரிக்காவிலிருந்து வறுமை மற்றும் ஒடுக்குமுறையில் இருந்து தப்பிவரும் புலம்பெயர்ந்தோர்கள் மீதான, முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் காட்டுமிராண்டித்தனத்தின் ஒரு எடுத்துக்காட்டான நிலைமைகளுக்கு, அமெரிக்க ஏகாதிபத்தியமே பொறுப்பேற்க வேண்டும்.

டெக்சாஸ் மாநில துருப்புக்கள் மற்றும் தேசிய காவலர்கள் படைகளானது அமெரிக்க எல்லை ரோந்து அதிகாரிகளை ஆற்றை அடைந்து மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள அனுமதிக்க மறுத்ததை அடுத்து ஒரு பெண் புலம்பெயர்ந்தவரும் அவரது இரண்டு குழந்தைகளும் வெள்ளிக்கிழமை ரியோ கிராண்டேவில் இறந்தனர். ஆறு புலம்பெயர்ந்தோர்கள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டு இருப்பதாக வெளியான தகவலுக்கு கூட்டாட்சி அதிகாரிகளின் பதிலாக இது இருந்தது. மூன்று சடலங்கள் மெக்சிகோ நதிக்கரையில் மீட்கப்பட்டன.

நீரில் மூழ்கியவர்களின் சரியான சூழ்நிலை குறித்து விசாரணை நடந்து வருகிறது. எல்லையில் மாநில துருப்புக்கள் மற்றும் தேசிய காவலர் படைகளை நிறுத்துவதைக் கட்டுப்படுத்தும் நிறுவனமான டெக்சாஸ் இராணுவத் துறையின் (TMD) அதிகாரிகள், நீரில் மூழ்குவதற்கு முன்பு புலம்பெயர்ந்தவர்களுக்கும் மாநிலப் படைகளுக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை என்று கூறுகின்றனர். புலம்பெயர்ந்தவர்கள் நுழைவதை அரசு அதிகாரிகள் தடுத்தனர் அல்லது அவர்களை மீண்டும் ஆற்றில் இறக்கிவிட்டனர் என்பதை அவர்கள் மறுக்கின்றனர்.

மறுக்க முடியாத விஷயம் என்னவென்றால், எல்லை ரோந்துப் படையானது வெள்ளிக்கிழமை இரவு TMD யைத் தொடர்பு கொண்டபோது, புதன்கிழமை TMD யால் ஆக்கிரமிக்கப்பட்ட ஷெல்பி பார்க் பகுதிக்குள் கூட்டாட்சி அதிகாரிகளை அரசு அனுமதிக்காது என்று அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. உள்ளூர்வாசிகள் மற்றும் கூட்டாட்சி அதிகாரிகள் இருதரப்பையும் தடுக்க தேசிய காவலர்கள் படை முள்வேலி தடுப்புகளை அமைத்தனர்.

எல்லையில் இருந்து அரசுப் படைகளை திரும்பப் பெறுமாறு குடியரசுக் கட்சி ஆளுநர் கிரெக் அபோட் (Greg Abbott) உத்தரவிடக் கோரி பைடென் நிர்வாகம் நீதிமன்றத்தை நாடியது. தான் சட்டத்தை அமுல்படுத்துவதாக அபோட் அறிவித்தார். “டெக்சாஸ் மாநிலத்தின் எந்தவொரு புவியியல் இடத்திலும் ஊடுருவலையும் வெளியேறுதலையும் கட்டுப்படுத்த சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது” என்று அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார். அந்த அதிகாரம் “செயல்பாட்டு கட்டுப்பாட்டை பராமரிக்க” அவசியமானது.

டெக்சாஸ் பொதுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர், வாஷிங்டன் போஸ்ட்டிடம் வெள்ளிக்கிழமை நீரில் மூழ்கியவர்கள் குறித்து தங்களுக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று கூறினார். புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்குவது “ஒன்றும் புதிதல்ல” என்று ஒரு DPS செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கிறிஸ் ஒலிவாரெஸ் போஸ்ட்டிடம் தெரிவித்தார். இந்த இரக்கமின்மை மாநில மற்றும் கூட்டாட்சி அரசாங்கங்கள் மற்றும் இரண்டு முதலாளித்துவக் கட்சிகளான ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரின் கண்ணோட்டத்தை சுருக்கமாகக் காட்டுகிறது.

பல ஜனநாயகக் கட்சி அதிகாரிகள் எல்லையில் அபோட்டின் நடவடிக்கைகள் குறித்து முதலைக் கண்ணீர் சிந்திய அதே வேளையில்— எடுத்துக்காட்டாக, மத்திய உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, அபோட்டின் நடவடிக்கைகள் கொடூரமானது, ஆபத்தானது மற்றும் மனிதாபிமானமற்றது என்று அழைத்தது— எல்லையற்ற பாசாங்குத்தனம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் இருவரின் உற்சாகமான ஆதரவுடன், ஆயிரக்கணக்கான பாலஸ்தீனக் குழந்தைகளை இஸ்ரேல் படுகொலை செய்ததை பைடென் நிர்வாகம் அங்கீகரித்து செயல்படுத்தியுள்ளது.

பைடெனுக்கும் அபோட்-க்கும் இடையிலான மோதலில் குறிப்பிடத்தக்க சட்டரீதியான மற்றும் அரசியலமைப்பு சிக்கல்கள் உள்ளன. அபோட் சமீபத்தில் எஸ்பி 4 என்ற ஒரு பரந்த மசோதாவில் கையெழுத்திட்டார், இது அவரது உத்தரவின் பேரில் நிறைவேற்றப்பட்டது, இது நாட்டை விட்டு கட்டாயமாக வெளியேறுவதன் மூலம் தண்டனைக்குரிய “சட்டவிரோத நுழைவு” என்ற புதிய மாநில குற்றத்தை உருவாக்குகிறது. (அதாவது, தலைப்பைத் தவிர மற்ற அனைத்தும் நாடு கடத்துதல்) வெளியேற மறுப்பவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

இந்தச் சட்டம் அரசியலமைப்பை மீறுவதாக பைடென் நிர்வாகம் பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, இதன் கீழ் தேசிய எல்லைகளைக் கட்டுப்படுத்துவது கூட்டாட்சி அரசாங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட அதிகாரமாகும். சரக்குகளை பரிசோதிக்கவோ அல்லது சுங்க வரி வசூலிக்கவோ முடியும் என்பதைத் தவிர, எல்லையைக் கடப்பவர்களைக் கைது செய்ய மாநிலங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

அபோட், பைடென் நிர்வாகத்தை எதிர்ப்பதோடு, புலம்பெயர்ந்தோர் மீதான அவரது கொடூரமான தாக்குதல்களை பாராட்டி வருவதுடன், நாடு முழுவதும் உள்ள பாசிச குடியரசுக் கட்சி அரசியல்வாதிகளுக்கு ஒரு அணிதிரட்டும் புள்ளியாக அவர் மாறியுள்ளார். கடந்த வாரம், சபாநாயகர் மைக் ஜான்சன் தலைமையிலான 60 குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தூதுக்குழு ஈகிள் பாஸில் உள்ள எல்லைக்கு விஜயம் செய்தது. இது, பைடென் நிர்வாகம் வேண்டுமென்றே சட்டவிரோத குடியேற்றத்தை ஊக்குவிக்கிறது என்ற அவர்களின் கூற்றுக்களை வலுப்படுத்தும் முயற்சியாகும். இந்த விவகாரத்தில் பைடென் நிர்வாகத்தின் முக்கிய பிரதிநிதியான உள்நாட்டுப் பாதுகாப்பு செயலாளர் அலெஜாண்ட்ரோ மயோர்காஸுக்கு எதிராக, முறையான பதவி நீக்க நடவடிக்கைகளைத் தொடங்குவதாக உள்நாட்டுப் பாதுகாப்புக்கான நாடாளுமன்றக் குழு புதன்கிழமை தெரிவித்துள்ளது.

கன்சாஸின் செனட்டர் ரோஜர் மார்ஷல் டெக்சாஸ் சட்டம் அமெரிக்க அரசியலமைப்பின் பிரிவு 1, பிரிவு 10, பத்தி 3 ஆகியவற்றை செயல்படுத்துவதற்கான ஒரு முயற்சி என்று கூறினார்:

காங்கிரசின் ஒப்புதலின்றி, எந்த மாநிலமும் கப்பல்கள் மீது அவற்றின் டன் (சரக்கு திறன்) அடிப்படையில் வரிகளை விதிக்க முடியாது, அமைதியான காலத்தில் துருப்புக்களையோ அல்லது போர்க் கப்பல்களையோ வைத்திருக்கக் கூடாது, மற்றொரு மாநிலத்துடன் அல்லது ஒரு வெளிநாட்டு சக்தியுடன் எந்த ஒப்பந்தமும் அல்லது உடன்படிக்கையில் கையெழுத்திடக்கூடாது, அல்லது ஒரு வெளிநாட்டு சக்தியுடன், அல்லது போரில் ஈடுபட, உண்மையில் படையெடுக்கப்பட்டால் அல்லது உடனடி ஆபத்தில் தாமதத்தை ஒப்புக்கொள்ள முடியாது.

இந்த பத்தியானது அபோட்டின் நடவடிக்கைகளைத் தடைசெய்வதாகத் தெரிகிறது. ஆனால் ஆளுநரும் அவரது ஆதரவாளர்களும் ரியோ கிராண்டேவைக் கடக்கும் புலம்பெயர்ந்தோர்கள் ஒரு படையெடுப்பு என்றும், அவர்கள் டெக்சாஸ் மாநிலத்தை “உடனடி ஆபத்தில்” வைக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர். இது சட்ட ரீதியாக அபத்தமானது மற்றும் அரசியல் ரீதியாக ஆபத்தானது. டெக்சாஸ் ஆக்கிரமிக்கப்பட்டால், தாக்குதலைத் தடுக்க தேவையான எந்த சக்தியையும் பயன்படுத்த மாநில அரசு உரிமை கோரலாம்.

கடந்த வாரம் தீவிர வலதுசாரி போட்காஸ்ட் (podcast) தொகுப்பாளருக்கு அளித்த பேட்டியில் அபோட்டிடம் எல்லைப் பிரச்சினை குறித்து கேட்கப்பட்டது. ரியோ கிராண்டேவின் ஒரு பகுதியில் மிதக்கும் தடைகளை வைப்பது (புலம்பெயர்ந்தோர் அவற்றின் கீழ் நீந்த முயன்றால் இறப்புகளுக்கு வழிவகுக்கும்) மற்றும் புதிய மாநில சட்டமான எஸ்பி 4 ஐ ஏற்றுக்கொள்வது உள்ளிட்ட புலம்பெயர்ந்தோருக்கு எதிராக “அனைத்து கருவிகளையும் உத்திகளையும்” அரசு பயன்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.

டெக்சாஸ் ஆளுநர் இவ்வாறு முடித்தார்: அதாவது “நாங்கள் செய்யாத ஒரே விஷயம் என்னவென்றால், நாங்கள் எல்லையைக் கடக்கும் மக்களை சுடவில்லை, ஏனென்றால் நிச்சயமாக பைடென் நிர்வாகம் எங்கள் மீது கொலை குற்றத்தைச் சாட்டும்.” இப்படிக்கூறுவது, ஒரு அச்சுறுத்தலைத் தவிர ஒரு நகைச்சுவை அல்ல.

தீவிர வலதுசாரி ஹவுஸ் ஃப்ரீடம் காகஸின் (House Freedom Caucus) உறுப்பினரான டெக்சாஸ் பிரதிநிதி சிப் ராய், குடியேற்றக் கொள்கை தொடர்பாக பைடென் நிர்வாகத்துடனான மோதலில் பிரிவினை ஒரு விருப்பமாக இருக்கலாம் என்று பரிந்துரைத்தார். அவரது அலுவலகத்திலிருந்து ஒரு செய்திக்குறிப்பு பின்வருமாறு அறிவித்தது: அதாவது “டெக்சாஸ் மற்றும் அதேபோன்ற எண்ணம் கொண்ட அமெரிக்கர்கள் நாங்கள் ஒன்றியத்திற்குள் நுழைந்த ஒப்பந்தத்தை மீறி தங்கள் நல்வாழ்வு, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை விட்டுவிட்டு ஒரு கூட்டாட்சி அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமா என்று எனது சக டெக்ஸான்கள் கேட்பது சரிதான்.”

ஜனநாயகக் கட்சியும் பைடென் நிர்வாகமும் அதன் வெற்று வாய்ச்சொற்கள் அனைத்திற்கும் மேலாக, உக்ரேனுக்கு அதிகரித்த இராணுவ நிதியுதவிக்கு ஈடாக, தஞ்சம் கோரும் உரிமையை திறம்பட ஒழித்து அமெரிக்க-மெக்சிக்கோ எல்லையை மூடும் குடியரசுக் கட்சியினருடன் ஒரு உடன்பாட்டை எட்ட மீண்டும் மீண்டும் முயன்றன. ஜனநாயகக் கட்சியின் மைய முன்னுரிமை வெளிநாடுகளில் போரை தீவிரப்படுத்துவதாகும், இது உலகளாவிய அகதிகள் நெருக்கடியை உந்தித் தள்ளுவது மட்டுமல்லாமல், உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மீதான தீவிரமடைந்து வரும் தாக்குதலையும் உள்ளடக்கியது.

2023 நிதியாண்டில், பைடென் நிர்வாகம் 142,000 க்கும் மேற்பட்ட நாடுகடத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டது, இது முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும். ஏனெனில் ஜனநாயகக் கட்சியானது புலம்பெயர்ந்தோர் மீதான அதிகரித்து வரும் தாக்குதலை மேற்பார்வையிட்டுள்ளது. மற்றய எல்லாவற்றையும் போலவே, பைடென் நிர்வாகமும் அதிக மனித குடியேற்றக் கொள்கையை செயல்படுத்துவதற்கான அதன் வெற்று வாக்குறுதிகளை நிராகரித்துள்ளது.

மாநில மற்றும் கூட்டாட்சி அரசாங்கத்திற்கும், டெக்சாஸுக்கும் நியூயோர்க் மற்றும் சிக்காகோ போன்ற முக்கிய நகரங்களுக்கும் இடையிலான பதட்டங்கள், ஹூஸ்டன் அல்லது டல்லாஸில் விடுவிக்கப்படும் 100,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை அபோட் “வெளியேற்றியுள்ளது”. இது, 2024 ஜனாதிபதி பிரச்சாரம் முதன்மை வாக்களிப்பு கட்டத்தைத் தொடங்கும்போது அமெரிக்காவை பிளவுபடுத்தும் மையவிலக்கு போக்குகளின் மற்றொரு அறிகுறியாகும்.

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவால் வெளியிடப்பட்ட புத்தாண்டு அறிக்கை, இந்த போக்குகள் உலக மற்றும் அமெரிக்க முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடி மற்றும் வெடிக்கும் வர்க்கப் போராட்டங்களில் தொழிலாள வர்க்கம் நுழைவதன் விளைபொருளாகும் என்று எச்சரித்தது.

அதிகரித்து வரும் பிரிவு போக்குகள், பல்வேறு மாநிலங்களின் மீது ஒருங்கிணைந்த கூட்டாட்சி அதிகாரத்தை மீட்டெடுக்கும் உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய முழுத் தீர்வையும் உடைக்க அச்சுறுத்துகின்றன.

தற்போதுள்ள அரசியல் கட்டமைப்பை சிதைக்கும் மோதல், ஆளும் வர்க்கத்தின் முற்போக்கான மற்றும் பிற்போக்குத்தனமான பிரிவுகளுக்கு இடையிலானது அல்ல. ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் பெருநிறுவன மற்றும் நிதிய தன்னலக்குழுவின் இரண்டு பிற்போக்குத்தனமான பிரிவுகளாகும். அவர்களின் தந்திரோபாய வேறுபாடுகள் எவ்வளவு தீவிரமாக இருந்தாலும், அவைகள் முற்றிலும் அவர்களின் பொதுவான பிற்போக்கு நிகழ்ச்சி நிரலுக்கு அடிபணிந்தவையாகும்.

ஏகாதிபத்தியப் போர் மற்றும் உள்நாட்டு அடக்குமுறைக்கு உறுதியளித்துள்ள ஜனநாயகக் கட்சியினரும், அனைத்து ஜனநாயக உரிமைகள் மீதும் பாரியளவில் வெளிப்படையான பாசிசத் தாக்குதலை மேற்கொண்டுவரும் குடியரசுக் கட்சியினரும், பெருவணிகத்தின் இரட்டை பிற்போக்குக் கட்சிகளாகும். இவற்றுக்கு மாற்றாக, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அணிதிரட்டல் அவசியமாகும். தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தை அங்கீகரிப்பது இதற்கு ஒரு முக்கிய அம்சமாக இருக்கிறது.

Loading