முன்னோக்கு

தொடரும் கோவிட்-19 எழுச்சியானது மற்றொரு மரணக் குளிர்காலத்தை முன்னறிவிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சியாட்டிலிலுள்ள ஹார்பர்வியூ மருத்துவ மையத்திலுள்ள கோவிட்-19 தீவிர சிகிச்சை பிரிவிலுள்ள ஒரு நோயாளியுடன் இணைக்கப்பட்ட ஒரு வெளிப்புற உடல் மெம்ப்ரேன் ஒக்ஸிஜினேற்றும் (Extracorporeal Membrane Oxygenation - ECMO) இயந்திரத்தை பதிவுசெய்யப்பட்ட செவிலியரான எரின் பியூசெமின் வெள்ளிக்கிழமையன்று கண்காணிக்கிறார். [AP Photo/Elaine Thompson]

கொரோனா வைரஸின் JN.1 திரிபு வகையானது உலகளவில் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அமெரிக்காவிலும் வடக்கு அரைக்கோளத்திலும் (Northern Hemisphere) மற்றொரு மரணக் குளிர்காலம் இப்போது விரிவடைந்து வருகிறது. செவ்வாயன்று வெளியிடப்பட்ட அமெரிக்காவின் கழிவு நீர் தரவானது, பெருந்தொற்று நோய் தொடங்கியதிலிருந்து இரண்டாவது மிக உயர்ந்த வெகுஜன நோய்த்தொற்றின் அலைக்கு மத்தியில், ஒவ்வொரு நாளும் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இப்போது கோவிட்-19 நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைக் குறிக்கிறது, இது 2021-22 குளிர்காலத்தில் ஓமிக்ரோன் திரிபு வகையின் ஆரம்ப அலையால் மட்டுமே மேலோங்கிருந்தது.

அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பா முழுவதும் உள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிறைந்துவழிவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதிகரித்து வரும் மருத்துவமனைகளில், காத்திருப்பு அறைகள், அவசர அறைகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் அளவுகள் நிரம்பி வழிகின்றன அல்லது நிரம்பி வழிவதற்கு அருகில் உள்ளன, மேலும் ஆம்புலன்ஸ்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன அல்லது தங்கள் நோயாளிகளை எடுத்துச் செல்ல பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, வடக்கு கரோலினாவின் சார்லோட்டில் கோவிட்-19 க்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் இப்போது முழு பெருந்தொற்று நோயின் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளனர். டொராண்டோவில், கனடிய அவசரகால மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் மைக்கேல் ஹவ்லெட், சிட்டி நியூஸிடம் கூறுகையில், 'நான் 1987 முதல் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் பணியாற்றி வருகிறேன், மேலும் அது மிக மோசமானதற்கு அருகில் கூட இல்லாமல், இது இதுவரை இல்லாத மிக மோசமான நிலையிலுள்ளோம்' என்று குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், 'எங்களிடம் நோயாளிகளை வைத்திருப்பதற்கு இடம் இல்லாததால் காத்திருப்பு அறைகளில் மக்கள் இறக்கின்றனர். ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெச்சர் அல்லது தரையில் மக்களுக்கு உயிர்பிழைக்க உதவி அளிக்கப்படுகிறது' என்று கூறினார்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

இது குறித்து கிளீவ்லேண்ட் கிளினிக்கின் நுரையீரல் மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜோசப் கபாசா கூறுகையில், 'தற்போதைய திரிபு முந்தைய திரிபுகளை விட மோசமான அல்லது சக்திவாய்ந்ததாக தெரிகிறது. தற்போதைய சுற்றோட்டத்திலுள்ள திரிபின் சில அம்சங்கள் (அதை உருவாக்குவது) சற்று வீரியம் மிக்கதாகவும் நோய்க்கிருமியாகவும் ஆக்குகின்றன, இது முந்தையதை (திரிபுகளை) விட மக்களை நோய்வாய்ப்படுத்துகிறது' என்று குறிப்பிட்டார்.

உண்மையில், இரண்டு சமீபத்திய ஆய்வுகள் JN.1 கீழ் நுரையீரலிலுள்ள செல்களை மிகவும் கடுமையாகப் பாதிக்கிறது என்பதைக் குறிக்கிறது, இது மிகவும் ஆபத்தானதாகக் கருதப்பட்ட ஓமிக்ரோன் திரிபு வகைகளில் இருக்கும் ஒரு பண்பு ஆகும். ஜேர்மனி மற்றும் பிரான்சிலுள்ள ஆராய்ச்சியாளர்களின் ஒரு ஆய்வில், JN.1 இன் உருவாக்கம் 'பைரோலா' என்ற புனைப்பெயரில் அழைக்கப்படும் BA.2.86 ஆகும், 'ஆரம்பகால SARS-CoV-2 மரபுவழிகளின் சிறப்பியல்புகளை இது மீட்டெடுத்துள்ளது: அதாவது வலுவான நுரையீரல் செல்லுகளுக்குள் ஊடுருவக்கூடியதாகும். முந்தைய ஓமிக்ரான் துணை வகைகளுடன் ஒப்பிடும்போது இந்த திரிபு வகை உயர்ந்த சுகாதார அச்சுறுத்தலாக இருக்கலாம்.

தற்போது நிலவி வரும் பாரிய பெருந்நோய்த் தொற்று அலையால் மனித உயிர்களின் பாதிப்பு மிகப்பெரிதாக இருக்கின்றது. அமெரிக்க மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர், அல்லது 100 மில்லியனுக்கும் அதிகமான மனிதர்கள் தற்போதைய அலையின் போது கோவிட் -19 நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது பல்லாயிரக்கணக்கான இறப்புகளுக்கு வழிவகுக்கும், அவற்றில் பல அமெரிக்காவில் கோவிட்-19 பரிசோதனை மற்றும் தரவு அறிக்கையிடல் அமைப்புகளை அகற்றுவதால் சரியாக பதிவு செய்யப்படாது. JN.1 அலை தொடங்குவதற்கு முன்பு நவம்பர் 18 அன்று தி எகனாமிஸ்ட் இதழானது அதிகப்படியான இறப்புகளின் தடமறிதல் வழிமுறை இயக்கியை கடைசியாக புதுப்பித்தபோது, ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 27.4 மில்லியனாக இருந்தது மற்றும் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 5,000 பேர் தொடர்ந்து இறந்துள்ளனர்.

தற்போதைய அலை நீண்டகால மற்றும் பெரும்பாலும் பலவீனப்படுத்தும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று 2020 முதல் நன்கு அறியப்பட்ட நெடும் கோவிட் (Long COVID) நோய் விளைவால் மேலும் வெகுஜன துயரங்களைத் தூண்டும். கடந்த வாரம், நேச்சர் போர்ட்ஃபோலியோவில் (Nature Portfolio) ஒரு முன்-அச்சு ஆய்வு வெளியிடப்பட்டது, lsnf கோவிட்-19 நோய்த்தொற்று 20 வயதிற்குள் ஏற்படும் முதுமையின் விளைவுகளுடன் ஒப்பிடக்கூடிய மூளை பாதிப்பைத் தூண்டும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்பதை நிரூபித்திருக்கிறது. மனச்சோர்வைத் தூண்டும் மனப் பற்றாக்குறைகள், தீவிர உணர்ச்சிகளைக் கையாளும் திறன் குறைதல், கவனம் குறைதல் மற்றும் தகவல்களைத் தக்கவைத்துக் கொள்ளும் திறன் குறைதல் ஆகியவை இதன் விளைவுகளாகும்.

வைரஸானது இதயம், நோயெதிர்ப்பு சக்தி அமைப்பு, செரிமானம் மற்றும் அடிப்படையில் மற்றைய அனைத்து முக்கியமான உடல் செயல்பாடுகளையும் தாக்க முடியும் என்று பிற ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. கோவிட்-19 இன் ஆரம்ப அறிகுறிகள் காய்ச்சலின் அறிகுறிகளை ஒத்திருக்கலாம், ஆனால் உண்மை என்னவென்றால், வைரஸ் உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிக்கும் மற்றும் ஆரம்ப நோய்த்தொற்றுக்குப் பிறகு பல ஆண்டுகளாக அவ்வாறு பாதிப்புறச் செய்ய முடியும். தடுப்பூசியானது நெடும் கோவிட்டின் (Long COVID) அபாயங்களை சற்று குறைத்தாலும், வைரஸின் முழு தாக்கமும் தலைமுறைகளுக்கு உணரப்படும்.

நெடும் கோவிட்டின் (Long COVID) மிகவும் பொதுவான சில அறிகுறிகள்

உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் பைடென் நிர்வாகம் தங்கள் கோவிட் -19 பொது சுகாதார அவசரநிலை (PHE) அறிவிப்புகளை எந்த விஞ்ஞானக் காரணமும் இல்லாமல் முடிவுக்குக் கொண்டு வந்த எட்டு மாதங்களுக்குப் பிறகு சமீபத்திய குளிர்கால நோய்த்தொற்றுகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது நிகழ்கிறது. இது பெருந்தொற்று நோய்க்கான அனைத்து உத்தியோகபூர்வ பதிலையும் மொத்தமாக இரத்து செய்யத் தொடங்கியது, இது முழு உலக மக்களையும் பாதிக்க வைரஸுக்கு சுதந்திரத்தை வழங்கியது.

பெருநிறுவன ஊடகங்களில் கொரோனா வைரஸைப் பற்றிய எந்தக் குறிப்பும் முழுமையாக இல்லாதது, இந்த விஷயத்தில் அதிகாரப்பூர்வ அறிக்கையின் முடிவோடு ஒத்துப்போனதாக உள்ளது. அதற்குப் பிறகு, மருத்துவமனைகளில் நோய்களைப் பற்றியோ அல்லது பொதுப் பிரமுகர்கள் சம்பந்தப்பட்டதாகவோ குறிப்பிடப்படும் எந்தவொரு குறிப்பும் 'சுவாச நோய்' என்ற சொற்றொடரை தொடர்ந்து பயன்படுத்தியது. கோவிட், கொரோனா வைரஸ் மற்றும் பெருந்தொற்று நோய் என்ற வார்த்தைகள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு, நோயின் அபாயங்கள் குறித்த உண்மைகள் தீவிரமாக மறைக்கப்பட்டுள்ளன.

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவானது தனது 2024 புத்தாண்டு அறிக்கையில் பொது சுகாதாரத்தின் மீதான இந்த பூகோளரீதியான தாக்குதலின் ஒட்டுமொத்த விளைவுகளை சுருக்கமாக எழுதியது:

பெருந்தொற்று நோயின் தற்போதைய நிலையைச் சுற்றியுள்ள அனைத்து உண்மைகளும் தரவுகளும் உலக மக்களிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளன, அதற்கு பதிலாக முடிவில்லாத பொய்கள், உளவியல் கையாளுதல்கள் மற்றும் பிரச்சாரங்களுக்கு உட்படுத்தப்பட்டு, இப்போது மௌனத்தின் திரையால் மறைக்கப்பட்டுள்ளன. அரசாங்கம், பெருநிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களால் இவ்வாறு அமுல்படுத்தப்படுவதானது நெருக்கடியின் உண்மையான தீவிரத்தை ஒரு திட்டமிட்டு மூடிமறைப்பு செய்வதாகும். ஒவ்வொரு நாளும் உலகளவில் மில்லியன் கணக்கானோர் நோய்வாய்ப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பதால், என்ன விளைவுகள் ஏற்பட்டாலும், பெருந்தொற்று நோயின் யதார்த்தத்தை வெறுமனே புறக்கணிப்பது, மறுப்பது மற்றும் பொய்யாக்குவது என்று உத்தியோகபூர்வ கொள்கை விரிவடைந்துள்ளது.

சமீபத்திய கழிவு நீர் தரவுகளுக்கு விடையிறுப்பாக, ஒரு சில செய்திக் கட்டுரைகள் மட்டுமே வந்துள்ளன, அவற்றில் பெரும்பாலானவை தற்போதைய அலையின் தீவிரத்தை குறைத்து மதிப்பிட முயன்றன மற்றும் மருத்துவமனைகளில் ஆழமடைந்து வரும் நெருக்கடியை பெரும்பாலும் புறக்கணித்தன.

உத்தியோகபூர்வ இருட்டடிப்பானது சமூக வாழ்க்கையில் ஒரு அசாதாரண முரண்பாட்டிற்கு வழிவகுத்துள்ளது. வெகுஜன நோய்த்தொற்றின் யதார்த்தம் என்பது கோவிட்-19 ஆல் தற்போது அல்லது சமீபத்தில் நோய்வாய்ப்பட்ட அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் அல்லது கொல்லப்பட்டவர் ஒரு நண்பர், அண்டை வீட்டுக்காரர், குடும்ப உறுப்பினர் அல்லது சக ஊழியரை அனைவருக்கும் தெரியும். இருப்பினும் பெருந்தொற்று நோயின் அபாயத்தை நிராகரிப்பதற்கான இடைவிடாத அழுத்தம் என்பது விற்பனை மையங்கள், பல்பொருள் அங்காடிகள், பணியிடங்கள் மற்றும் மருத்துவர் அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகள் கூட தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முகக்கவசத்தின் அடிப்படை மற்றும் எளிய முன்னெச்சரிக்கையை எடுக்காத மக்களால் நிரம்பியுள்ளன என்பதாகும். ஒருவரின் வீட்டிற்கு வெளியே ஒவ்வொரு வருகையும், அறியப்படாத நீண்டகால விளைவுகளுடன் நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தைக் கொண்டுள்ளது.

பெருந்தொற்று நோய் அதன் ஐந்தாவது ஆண்டில் நுழையும்போது, இந்த உலக வரலாற்று அனுபவத்தின் படிப்பினைகளைப் பெறுவது முக்கியமானதாகும். முதலாளித்துவ அரசாங்கங்கள் இந்த நோயை எதிர்த்துப் போராட விரும்பவில்லை மற்றும் திறனற்றவை என்பதை கடந்த நான்கு ஆண்டுகள் ஐயத்திற்கிடமின்றி நிரூபித்துள்ளன. மனித உயிர்கள் மற்றும் ஆரோக்கியத்தில் எவ்வளவு விலை கொடுத்தேனும், பெருநிறுவனங்களின் இலாபங்கள் தங்கு தடையின்றி தொடர்வதை உறுதி செய்வதே அவர்களின் முதன்மையான அக்கறையாக இருந்து வருகிறது.

கொரோனா வைரஸிற்கான உண்மையான தீர்வு அதைப் புறக்கணிப்பது அல்ல, மாறாக உலகளவில் வைரஸை ஒழித்து அழிப்பதற்கான பிரச்சாரத்தை உருவாக்குவதாகும். அவ்வாறு செய்ய முகக்கவசம் அணிய கட்டளைகளை செயல்படுத்துதல், வெகுஜன பரிசோதனை மற்றும் தொடர்பு தடமறிதல், அத்துடன் புதுப்பிக்கப்பட்ட காற்றோட்ட அமைப்புகளை நிறுவுதல் மற்றும் வைரஸ் பரவுவதைத் தடுக்க Far-UVC (புற ஊதா சி ஒளியின் ஒரு குறிப்பிட்ட வரம்பு -a specific range of ultraviolet C light) தொழில்நுட்பத்தை பாதுகாப்பாக பயன்படுத்துதல் ஆகியவை தேவைப்படுகின்றன. இந்த பூகோளரீதியான பொது சுகாதாரத் திட்டத்திற்கான வளங்களானது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட வேண்டும், அவைகள்தான் பெருந்தொற்று நோயால் ஏற்பட்ட வெகுஜன துன்பங்களுக்கு பொறுப்பாகும்.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் இலாப நோக்கத்திற்கும் மற்றும் சமூகத்தின் உண்மையான நோயான முதலாளித்துவத்திற்கும் நேரடியாக முரண்படுகின்றன. எனவே, கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டமானது முதன்மையாக மருத்துவ அல்லது விஞ்ஞானரீதியானது அல்ல, ஆனால் அரசியல் மற்றும் சமூகரீதியானது ஆகும். சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு பெருந்தொற்று நோயின் உண்மையான அபாயங்கள் குறித்து கல்வி கற்பிக்கப்பட வேண்டும் மற்றும் நோய் பரவுவதை தடுக்கவும் வெகுஜன மரணத்தை பரப்பும் அடிப்படை சமூக ஒழுங்கிற்கு எதிராகவும் ஒரே நேரத்தில் அணிதிரட்டப்பட வேண்டும். இது உலக சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்கான ஒரு புரட்சிகர போராட்டமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

Loading