முன்னோக்கு

இஸ்ரேல் இனப்படுகொலையை நடத்துகிறது என்பதை சர்வதேச நீதிமன்ற (ICJ) முறைப்பாடு நிரூபிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஒரு பாலஸ்தீன குழந்தையானது காஸாப் பகுதியில் இஸ்ரேல் குண்டுவீச்சில் கொல்லப்பட்டு காஸா நகரிலுள்ள ஷிஃபா மருத்துவமனை மைதானத்திற்குள் புதைக்கப்பட்ட மக்களின் கல்லறைகளைப் பார்க்கின்றது, டிசம்பர் 31, 2023. [AP Photo/Mohammed Hajjar]

1948 இனப்படுகொலை வரையறை உடன்படிக்கையின் (1948 Genocide Convention) கீழ் இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ள அசாதாரண விசாரணை நடவடிக்கைகளில் இந்த வாரத்தின் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) வாதங்கள் விசாரிக்கப்படும்.

இந்த வழக்கு நடவடிக்கைகளானது டிசம்பர் 29 அன்று தாக்கல் செய்யப்பட்ட ஒரு முறையான முறைப்பாட்டின் மூலம் தென்னாபிரிக்காவால் தொடங்கப்பட்டது. அதில், காஸாவில் பொது மக்களுக்கு எதிராக இஸ்ரேலிய ஆயுதப் படைகள் நடத்தி வரும் தாக்குதல் “இனப்படுகொலைத் தன்மையைக் கொண்டது” என்று விவரிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இது “ஒரு தேசிய, இன, நிற அல்லது மதக் குழுவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும்” நிலையானது இனப்படுகொலை வரையறை உடன்படிக்கையை மீறி “குறிப்பிட்ட நோக்கத்துடன்” நடத்தப்படுகிறது.

இந்த சர்வதேச நீதிமன்ற (ICJ) முறைப்பாடானது அதிக இறுக்கமான வாக்கியங்களைக் கொண்ட 84 பக்கங்களுடன், 574 அடிக்குறிப்புகளையும் கொண்டுள்ளது, கிட்டத்தட்ட ஒவ்வொன்றும் நீண்ட மற்றும் விரிவான அறிக்கை அல்லது ஆவணத்தை மேற்கோள் காட்டுகின்றது. இது ஒரு பேரழிவுகரமான, பெரும் வழக்கை முன்வைக்கிறது.

டிசம்பர் 29 நிலவரப்படி, தென்னாப்பிரிக்காவின் முறைப்பாடானது “7,729 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 21,110 க்கும் மேற்பட்ட பெயரிடப்பட்ட பாலஸ்தீனியர்களின் இறப்புகளை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் 7,780 க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லையென்றும், அவர்கள் இடிபாடுகளின் கீழ் இறந்ததாகக் கருதுகின்றது.” இந்த இறப்புகளுக்கு மேலாக, “55,243 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள்” மேலும் காயமடைந்துள்ளனர், இந்தக் காயங்களினால் பலர் உடல் ஊனமுற்றோராக அல்லது நிரந்தர உருச்சிதைவுற்றோராக உள்ளனர்.

“இஸ்ரேலானது முழு சுற்றுப்புறங்களையும் உள்ளடக்கிய காஸாவின் பெரும் பகுதிகளில் பேரழிவு இழப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் 355,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய வீடுகளை சேதப்படுத்தியுள்ளது அல்லது அழித்துள்ளது” என்று அந்த முறைப்பாடு தொடர்கிறது. இந்தக் குண்டுவீச்சு தாக்குதலானது “1.9 மில்லியன் மக்களை அல்லது காஸாவின் மக்கள்தொகையில் 85 சதவிகிதத்தினரை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்ற” கட்டாயப்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய இராணுவமானது இந்த இடம்பெயர்ந்த மக்களை “போதுமான தங்குமிடம் இல்லாமல், முன்னெப்போதும் இல்லாத சிறிய பகுதிகளுக்குள் தள்ளுகிறது, அதில் அவர்கள் தொடர்ந்தும் தாக்கப்படுகின்றார்கள், கொல்லப்படுகிறார்கள் மற்றும் பலவீனப்படுத்தப்படுகிறார்கள்.”

குண்டுவீச்சு தாக்குதல் “கண்மூடித்தனமானது” மட்டுமல்ல. “காஸாவில் பாலஸ்தீனிய மக்களின் வாழ்க்கையை அழித்தல்” என்ற தலைப்பிலான ஒரு பகுதியில், நீதிமன்றங்கள், நூலகங்கள், பல்கலைக்கழகங்கள், அருங்காட்சியகங்கள், வரலாற்று கட்டமைப்புகள், மத வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், ஆவணக் களஞ்சியங்கள் மற்றும் வரலாற்று கலைப்பொருட்கள் மற்றும் கல்லறைகளைக் கூட இஸ்ரேல் குறிவைத்து திட்டமிட்டு அழித்ததை முறைப்பாடு ஆவணப்படுத்தியுள்ளது.

“முற்றுகையிடப்பட்டு மற்றும் தடுக்கப்பட்டு பாலஸ்தீன மக்களுக்கு அத்தியாவசிய உணவு, நீர், மருந்து, எரிபொருள், தங்குமிடம் மற்றும் பிற மனிதாபிமான உதவிகளை” இஸ்ரேல் தடுப்பதையும் அந்த முறைப்பாடு ஆவணப்படுத்தியுள்ளது. “பட்டினி மற்றும் தாகத்தால் ஏற்படும் அமைதியான, மெதுவான இறப்புகள் ஏற்கனவே இஸ்ரேலிய குண்டுகள் மற்றும் ஏவுகணைகளால் ஏற்பட்ட வன்முறையான மரணங்களை விட அதிகமாக இருக்கும்” என்று நிபுணர்களின் எச்சரிக்கைகளை ஆவணம் மேற்கோள் காட்டுகிறது.

“காஸாவிலுள்ள பெரும்பாலான பாலஸ்தீன மக்கள் இப்போது பட்டினியால் வாடுகின்றனர், பட்டினியின் அளவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன” என்று அந்த முறைப்பாடு கூறுகிறது. “காஸாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 93 சதவீதமான மக்கள் பட்டினியின் நெருக்கடி மட்டங்களை எதிர்கொள்கின்றனர். போதுமான உணவு மற்றும் அதிக அளவு ஊட்டச்சத்து குறைபாட்டுடன்” மக்கள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) சேகரித்த ஆதாரங்களை அந்த முறைப்பாடு மேற்கோளிட்டுள்ளது.

இஸ்ரேலின் நடவடிக்கையில் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். அதாவது “காஸாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இரண்டு தாய்மார்கள் கொல்லப்படுகின்றார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.” மருத்துவ பொருட்கள் மீதான தடையின் மூலம் இஸ்ரேல் வேண்டுமென்றே “பாலஸ்தீனத்தில் புதிய பிறப்புகளைத் தடுக்கும் நோக்கத்துடன் நடவடிக்கைகளை” திணிப்பதாகவும் முறைப்பாட்டில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

காஸாவுக்கு எதிரான இஸ்ரேலின் வெறியாட்டத்தின் இந்த விரிவான உண்மை விவரத்தை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உட்பட இஸ்ரேலிய தலைவர்களின் வாயிலிருந்து நேரடியாக வெளிவரும் இனப்படுகொலை நோக்கத்தின் வெளிப்பாடுகளுடன் இந்த முறைப்பாடு இணைக்கிறது, பிரதமர் அக்டோபர் 28 அன்று, “அமலெக்கர்கள் (Amalek) உங்களுக்கு என்ன செய்தார்கள் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்” என்று ஒரு விவிலிய பகுதியைக் குறிப்பிட்டு, “போய் அமலெக்கர்களை தாக்குங்கள் ... ஆண்களையும், பெண்களையும் கொல்லுங்கள் அதேபோல் கைக்குழந்தைகளையும், பாலூட்டும் குழந்தைகளையும், எவரையும் விட்டுவிடாதீர்கள்” என்று கூறினார்

அக்டோபர் 7 அன்று, நெசெட்டின் (பாராளுமன்றம்) துணை சபாநாயகரும் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினருமான நிசிம் வதூரி எழுதினார், “இப்போது நம் அனைவருக்கும் ஒரு பொதுவான குறிக்கோள் உள்ளது— அதாவது காஸாப் பகுதியை பூமியின் முகத்திலிருந்து அழிப்பது. அதைச் செய்யமுடியாதவர்கள் பதிலீடு செய்யப்படுவார்கள்” என்றார்.

அக்டோபர் 9 அன்று, பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் இஸ்ரேலானது “காஸா மீது ஒரு முழுமையான முற்றுகையிடலை ஏற்படுத்திக்கொண்டிருகிறது” என்று கூறினார். அதாவது மின்சாரம் கொடுக்கக்கூடாது, உணவு கொடுக்கக்கூடாது, தண்ணீர் கொடுக்கக்கூடாது, எரிபொருள் கொடுக்கக்கூடாது. நவம்பர் 11 அன்று, இஸ்ரேலின் விவசாய அமைச்சர் அறிவித்தார், “நாங்கள் இப்போது உண்மையில் காஸா நக்பாவை ஆரம்பித்திருக்கிறோம்” என்று 1948 ஆம் ஆண்டின் நக்பாவைக் குறிப்பிட்டார், இதில் பாலஸ்தீனிய மக்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

நவம்பர் 6 அன்று, இஸ்ரேலிய இராணுவ ரிசர்வ் படை மேஜர் ஜெனரலான ஜியோரா ஐலாண்ட், இஸ்ரேல் “காஸாவில் ஒரு மனிதாபிமான நெருக்கடியை உருவாக்க வேண்டும் . . . மனிதர்கள் இருக்க முடியாத இடமாக காஸா மாறும்” என்றார். “காஸாவின் தெற்குப் பகுதியில் ஏற்படும் கடுமையான தொற்றுநோய்களானது வெற்றியை நெருக்கமாக கொண்டு வரும்” என்று அவர் அறிவித்தார்.

இஸ்ரேலிய நெசெட்டின் (பாராளுமன்றம்) உறுப்பினர்கள் காஸா “துடைத்தழிக்கப்பட வேண்டும்,” “தரைமட்டமாக்க”, “அழித்தொழிக்க”, மற்றும் “அடக்கப்பட வேண்டும் என்று திரும்பத் திரும்ப அழைப்பு விடுத்துள்ளனர். . . அதன் மக்கள் அனைவரின் மீதும்.” இதற்கிடையில், “இனப்படுகொலை செய்திகள்” “இஸ்ரேலிய ஊடகங்களில் வழக்கமாக - கண்டனம் அல்லது தடை இல்லாமல் - ஒளிபரப்பப்படுகின்றன.” “காஸா துடைத்தொழிக்கப்பட வேண்டும்” மற்றும் “2.5 மில்லியன் பயங்கரவாதிகள் உள்ளனர்” ஆகியவை இதில் அடங்கும், இது முழு பாலஸ்தீன மக்களையும் குறிக்கிறது.

இஸ்ரேலிய அதிகாரிகள் தங்கள் நடவடிக்கையை நியாயப்படுத்த அக்டோபர் 7 நிகழ்வுகளைப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்து, அக்டோபர் 7, 2023 க்கு முந்தைய இருபத்தோராம் நூற்றாண்டின் ஆண்டுகளில், “1,699 குழந்தைகள் உட்பட சுமார் 7,569 பாலஸ்தீனியர்கள் இராணுவப் பலம் ஏற்றத்தாழ்வுடைய நான்கு போர்களில்” கொல்லப்பட்டனர் என்று முறைப்பாடு சுட்டிக்காட்டுகிறது.

இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து, தென்னாப்பிரிக்காவின் இம் முறைப்பாட்டை சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் ஈரான் உள்ளிட்ட முழு இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு உட்பட குறைந்தது 60 நாடுகளும், மலேசியா, துருக்கி, ஜோர்டான் மற்றும் பொலிவியாவும் அங்கீகரித்துள்ளன.

எவ்வாறெனினும், இந்த முறைப்பாடு இஸ்ரேலின் இனப்படுகொலை நடத்தையிலோ அல்லது ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவிலோ எந்த விளைவையும் ஏற்படுத்தாது. நெதன்யாகு ஆட்சியானது இந்த புகாரை “கேலிக்குரியது” மற்றும் “அபத்தமான இரத்த அவதூறு” என்று கண்டனம் செய்தது.

பைடென் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி தென்னாப்பிரிக்காவின் முறைப்பாட்டிற்குப் பதிலளித்து, “இது தகுதியற்றது, எதிர்மறையானது மற்றும் உண்மையில் எந்த அடிப்படையும் இல்லாதது” என்று கூறினார். வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மாட் மில்லர், அமெரிக்க அரசாங்கம் “இனப்படுகொலையை உருவாக்கும் எந்த நடவடிக்கைகளையும் பார்க்கவில்லை” என்று கூறினார்.

இந்த நேர்மையற்ற ஏய்ப்புகளுக்கு பிரதானமாக, அமெரிக்க செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சிகள் உதவுகின்றன, அவைகள் பொதுவாக முறைப்பாட்டின் உண்மை உள்ளடக்கங்களை வெளியிட மறுத்துவிட்டன.

சர்வதேச நீதிமன்றமானது (ICJ), சில நேரங்களில் உலக நீதிமன்றம் என்று அழைக்கப்படுகிறது, இது ஐக்கிய நாடுகள் சபையின் மிக உயர்ந்த நீதித்துறை அமைப்பாகும். தென்னாப்பிரிக்கா கொண்டு வந்த முறைப்பாடானது ஐ.சி.ஜே (ICJ) நடைமுறைகள் வழியாக செல்ல பல ஆண்டுகள் ஆகலாம், இதில் ஆதாரங்கள் மற்றும் வாதங்களின் முறையான சமர்ப்பிப்பு இருக்கும். இந்த வார விசாரணைகள் முறைப்பாட்டில் “பூர்வாங்க நடவடிக்கைகளுக்கான” கோரிக்கையில் கவனம் செலுத்தும், இதில் “காஸாவிலுள்ள பாலஸ்தீனிய மக்கள் கொல்லப்படுவதையும் கடுமையான உள மற்றும் உடல்ரீதியான தீங்குக்கு உள்ளாக்கப்படுவதையும்” உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு உத்தரவிட வேண்டும் என்ற தென்னாப்பிரிக்காவின் கோரிக்கையும் அடங்கும்.

காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவது மட்டுமல்லாமல், வாஷிங்டன் மற்றும் பிற ஏகாதிபத்திய தலைநகரங்களிலுள்ள அவர்களின் கூட்டாளிகள் மற்றும் இணை சதிகாரர்களுடன் ஒட்டுமொத்த இஸ்ரேலிய அரசாங்கத்தையும் உடனடியாக கைது செய்ய உத்தரவாதம் அளிக்க போதுமான உண்மையான ஆதாரங்கள் முறைப்பாட்டில் விவரிக்கப்பட்டுள்ளன. இங்கு போர்க்குற்றவாளிகளே பெரியளவில் இருக்கும்போது கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும், ஒரு ஊழல்நிறைந்த மற்றும் ஒட்டுமொத்த முதலாளித்துவ சமூக அமைப்புமுறையையும் மற்றும் உலகெங்கிலும் உள்ள அதனுடைய அனைத்து நிறுவனங்கள் மீதுமான ஒரு குற்றச்சாட்டு இதுவாகும்.

சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) இந்த முறைப்பாடானது, இஸ்ரேலிய அரசாங்கம் மீதான அனைத்து விமர்சனங்களையும் “யூத எதிர்ப்பு” என்று நியாயப்படுத்துவதற்கும் குற்றமாக்குவதற்கும் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்கு ஒரு உறுதியான மறுப்பாகவும் செயல்படுகிறது.

இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளது என்பதற்கான அபரிமிதமான உண்மைச் சான்றுகள், இனப்படுகொலை செய்கின்ற குற்றவாளிகளுக்கு நிதி மற்றும் பிற உதவிகளை பெயரளவில் மட்டும் தடைசெய்யும் அமெரிக்கா உட்பட பல நாடுகளின் உள்நாட்டுச் சட்டங்களும் சம்பந்தப்பட்டுள்ளன. அந்த வகையில், இனப்படுகொலை வரையறுப்பு உடன்படிக்கையை இஸ்ரேல் மீறுவதாகக் குற்றம் சாட்டும் விரிவான முறைப்பாட்டை அரசியலமைப்பு உரிமைகளுக்கான மையம் (Center for Constitutional Rights) ஏற்கனவே நவம்பர் மாதம் அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

சர்வதேச சட்டத்தின் கீழ் இஸ்ரேலிய சிப்பாய்கள் மற்றும் அமெரிக்க இராணுவத்தினர் போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக இருக்கும் உத்தரவுகளுக்கு கீழ்ப்படிய மறுப்பது, அவர்களின் கடமையை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டவும் சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ) முறைப்பாடு உதவுகிறது. நூரெம்பேர்க்கில் நாஜி அதிகாரிகளின் விசாரணைகளில் நிறுவப்பட்டதைப் போல, இனப்படுகொலைக் குற்றம் என்று வரும்போது “உத்தரவுகளைப் பின்பற்றுவது” எந்த சரியான தற்காப்பும் அல்ல.

எவ்வாறெனினும், கடந்த முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாக எண்ணற்ற ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பின் இரத்தம் தோய்ந்த போர்களில் சம்பந்தப்பட்டுள்ள ஐ.நா.வின் வரலாற்றை அறிந்த எவரும், வாஷிங்டன் மற்றும் டெல் அவிவில் போர்க்குற்றவாளிகளை விசாரிப்பது ஒருபுறம் இருக்க, காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான அதன் நடைமுறைகளில் எந்த நம்பிக்கையையும் வைக்க மாட்டார்கள். ஐ.நா.வின் முன்னோடியான தேசங்களின் கழகத்தை (League of Nations) லெனின் “திருடர்களின் சமையலறை” என்று வர்ணித்தமையானது இன்றைய ஐ.நா.வுக்கும் சற்றும் குறைந்ததல்ல.

2015 மற்றும் 2022 க்கு இடையில், ஐ.நா பொதுச் சபையானது இஸ்ரேலைக் கண்டித்து 140 க்கும் குறைவான தீர்மானங்களை நிறைவேற்றியது, இஸ்ரேலை தவிர்த்து மற்றைய அனைத்து நாடுகளையும் கண்டித்து மொத்தம் 68 தீர்மானங்களுடன் ஒப்பிடும்போது, அவற்றை செயல்படுத்த ஐ.நா குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது, மேலும் இஸ்ரேல் அவைகளை வெறுமனே புறக்கணித்துள்ளது. டிசம்பரில், 193 ஐ.நா உறுப்பு நாடுகளில் மொத்தம் 153 நாடுகள் காஸாவில் “போர் நிறுத்தத்திற்கு” அழைப்பு விடுக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன, 10 நாடுகள் மட்டுமே எதிர்த்தன. ஆனால் அந்தத் தீர்மானம் இஸ்ரேலின் இனப்படுகொலை நடவடிக்கைகளையோ அல்லது அமெரிக்காவிலிருந்து இஸ்ரேலுக்கு பாரிய அழிவுகரமான ஆயுதங்களை அனுப்புவதையோ குறைக்க உதவவில்லை.

பொதுச் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 நீதிபதிகளைக் கொண்ட சர்வதேச நீதிமன்றம் (ICJ) தனது முடிவுகளை நேரடியாக செயல்படுத்துவதற்கான எந்த பொறிமுறையையும் கொண்டிருக்கவில்லை.

இந்த வழக்கு நடவடிக்கைகளின் இறுதி முடிவைப் பொருட்படுத்தாமல், மேலும் இந்த முறைப்பாட்டிற்கு ஒப்புதளிக்கும் தென்னாப்பிரிக்க அரசாங்கம் மற்றும் பிற முதலாளித்துவ அரசாங்கங்களின் நோக்கங்களைப் பொருட்படுத்தாமல், அவைகள் தங்கள் சொந்த சிடுமூஞ்சித்தனமான மற்றும் தவிர்க்க முடியாத அரசியல் காரணங்களுக்காக அவ்வாறு செய்கின்றன. சர்வதேச நீதிமன்ற (ICJ) முறைப்பாட்டின் முக்கியத்துவம் அதன் முழுமையான மற்றும் புறநிலையான விளக்கத்தில் உள்ளது, ஒரே இடத்தில், உண்மையிலும், சட்டரீதியாகவும், வார்த்தையின் ஒவ்வொரு அர்த்தத்திலும், இஸ்ரேலிய அரசாங்கம் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களுடன், முக்கியமாக அமெரிக்காவுடன் சேர்ந்து, ஒரு இனப்படுகொலையை உறுதியான முறையில் அம்பலப்படுத்தியிருப்பதை உலகம் முழுவதும் இதைப் படிக்க வேண்டும்.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர் தன்னை “உலகின் போலீஸ்காரனாக” நியமித்துக் கொண்ட அமெரிக்காவானது — உலக “மனித உரிமைகள்” மற்றும் உலகை “பாதுகாக்கும் பொறுப்பு” என்ற பெயரில் உலகெங்கிலும் தலையிடுவது, படையெடுப்பது, தடைவிதிப்பது மற்றும் குண்டுவீசுவது — இனப்படுகொலை செய்தவர்களை பட்டப்பகலில் பாதுகாக்கும் ஒரு அமெரிக்க அரசாங்கத்தின் காட்சியை உலகம் எதிர்கொள்கிறது.

காஸா இனப்படுகொலையிலும், சர்வதேச நீதிமன்றத்தால் (ICJ) முன்வைக்கப்படும் வழக்கிலும் பிரதிபலிக்கும் “மனித உரிமை ஏகாதிபத்தியத்தின்” மோசடி அம்பலப்படுத்தப்பட்டிருப்பது, உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியின் பிரதிபலிப்பாகும். ஒரு முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் அதன் உள் முரண்பாடுகளைக் கடக்க முடியாத இந்த அமைப்புமுறை, கடந்த நூற்றாண்டின் மிகக் கொடூரமான காட்டுமிராண்டித்தன வடிவங்களை மீண்டும் நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், காஸா இனப்படுகொலை, அதன் அனைத்துக் குற்றச் செயல்களுக்கும் மேலாக, இந்த முரண்பாடுகளைக் களைந்து தீர்க்கப்படாவிட்டால் வரவிருக்கும் பயங்கரங்களின் முன்னறிவிப்பு மட்டுமே இதுவாகும்.

இந்த காரணத்திற்காக, உண்மையில் காஸாவில் இனப்படுகொலை நடத்தப்படுகிறது என்பதற்கான அபரிமிதமான சான்றுகள், அனைத்து முதலாளித்துவ அரசாங்கங்கள், கட்சிகள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான இயக்கத்தை ஒரு உயர்ந்த மட்டத்திற்கு உயர்த்துவதற்கும், அதை ஒரு வரலாற்று நனவான மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தில் ஐக்கியப்படுத்துவதற்கான பணிக்கு அவசரத்தை அளிக்க வேண்டும்.

Loading