கைதியை சித்திரவதை செய்தமை தொடர்பாக பதில் பொலிஸ் மா அதிபர் குற்றவாளி: முதலாளித்துவ அரசின் உச்சக்கட்ட சீரழிவின் வெளிப்பாடு

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், 2011 ஆம் ஆண்டு நுகேகொடவில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய போது, ​​மிரிஹான பொலிஸாரின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவரை சித்திரவதை செய்ததாக குறித்த சந்தேகநபர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த வாரம் தென்னகோன் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் நான்கு பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது.

தேஷ்பந்து தென்னகோன்

தென்னகோன் உட்பட குற்றவாளிகள் தங்களின் தனிப்பட்ட பணத்தில் இருந்து 2 மில்லியன் ரூபாவை மனுதாரருக்கு இழப்பீடாக வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், நால்வருக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் கோரியது. மேலும், மனுதாரருக்கு இழப்பீடாக அரசு ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேற்கண்ட பொலிஸ் அதிகாரிகள், பொலிசார் முன்னிலையிலும், தனது வீட்டில் தனது மனைவி மற்றும் பிள்ளைகள் முன்னிலையிலும் தன்னை கொடூரமாக தாக்கியதாகவும், மிளகாயை சுவாசிக்க வற்புறுத்தியதாகவும் மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தென்னகோனை பதில் பொலிஸ் மா அதிபராக நியமித்ததும், அரசியலமைப்பு ஆணைக்குழு அந்த நியமனத்தை அங்கீகரித்ததும் இந்த வழக்கு உட்பட பல வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் இருக்கின்ற நிலைமையிலேயே ஆகும். மேலும், இப்போது நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பிறகும் அவர் பதவியில் தொடர்கிறார்.

இது தொடர்பாக ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள “வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு”, நிறைவேற்று அதிகாரமும், சட்டப் பேரவையும் “பொது நம்பிக்கைக்கு” முன்னுரிமை அளித்து, உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிப்பதில் “நம்பிக்கை”, “திறமை” ஆகியவற்றைக் கருத்தில் கொள்வது அவசியம் என்று கூறுகிறது. தென்னகோன் உட்பட நால்வர் குற்றவாளிகளாக காணப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக வன்முறைச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது சட்டமா அதிபரின் பொறுப்பாகும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் உபுல் ஜயசூரிய, அண்மையில் குழுவினால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போது தெரிவித்தார்.

முதலாளித்துவ ஸ்தாபனத்தின் ஒரு பகுதியான வழக்கறிஞர்களின் கூட்டமைப்பு, முதலாளித்துவ அரசின் மீதான “பொது நம்பிக்கை” சீரழிவது பற்றி கவலை கொண்டுள்ளனர். இவர்களைப் போன்ற உயர் மத்தியதர வர்க்கத்தின் பிரிவுகளும், அதே போல் அரசியல் ரீதியாக இந்தப் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்ட போலி-இடது கட்சிகள் மற்றும் அமைப்புகளும், முதலாளித்துவ அரசின் மீது உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைவதைக் கண்டு அச்சமடைந்துள்ளனர். அரசியலமைப்புத் திருத்தங்கள் மற்றும் ஆணைக்குழுக்கள் எனப்படுவற்றால் முதலாளித்துவ அரசை சுத்திகரித்து, “சட்டப்பூர்வமான நீதித்துறை”, “நம்பகமான பொலிஸ்”, “ஒழுக்கமுள்ள ராணுவம்”, “ஊழலற்ற நாடு” ஆகியவற்றைப் பராமரிக்க முடியும் என்ற மாயையில் ஒட்டிக்கொண்டுள்ள அவர், உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலும் அதை தினிக்க தீவிரமாக முயற்சிக்கின்றார்.

முதலாளிகளும் அவர்களின் மத்தியதர வர்க்க ஆதரவாளர்களும், அரசு என்பது ஒட்டுமொத்த மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கருவி என்று மீண்டும் மீண்டும் கூறி வருகின்றனர். இது முற்றிலும் தவறானது. லெனின் தனது “அரசும் புரட்சியும்” என்ற நூலில் குறிப்பிட்டது போல், முதலாளித்துவ அரசு என்பது “பாட்டாளி வர்க்கத்தை நசுக்க முதலாளித்துவம் பயன்படுத்தும் அடக்குமுறை சக்தி” ஆகும். பொலிஸ், இராணுவம், சட்டம் மற்றும் நீதித்துறையும் அந்த அடக்குமுறை அதிகாரத்தின் கொடூரமான கருவிகள் ஆகும். இவற்றை புனிதமாக வைத்திருப்பது அபத்தமானது ஆகும்.

எவ்வாறாயினும், இன்று உலக முதலாளித்துவ முறைமை எதிர்கொள்ளும் ஆழமான அமைப்பு ரீதியான நெருக்கடிக்கு முகங்கொடுக்கையில், முதலாளித்துவ அரசுகளின் உண்மைத் தன்மை உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான தொழிலாளர்களின் கண்முன் கொடூரமாக அம்பலத்துக்கு வருகின்றது. கோவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரைன் மற்றும் காஸாவில் நடக்கும் போர்களால் ஆழமடைந்து வரும் இந்த நெருக்கடியின் மத்தியில், உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள், உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது பாரிய சிக்கன நடவடிக்கைகளைத் தினிப்பதன் மூலம் நெருக்கடியின் சுமையை அவர்கள் மீது இறக்கி வைக்க முயல்வதுடன், அந்த சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான வர்க்கப் போராட்டங்களை நசுக்க விரைவாக சர்வாதிகார ஆட்சிகளுக்கு மாறி வருகின்றன.

3 பில்லியன் டாலர் கடனுக்காக சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன திட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் ஜனாதிபதி விக்கிரமசிங்க, அந்தத் தாக்குதல்களுக்கு எதிராக எழும் எந்தவொரு வர்க்கப் போராட்டத்தையும் பொலிஸ் மற்றும் இராணுவத்தைப் பயன்படுத்தி மிகவும் கொடூரமான முறையில் ஒடுக்குகின்ற அதே வேளை, “பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்” “இணைவழி நடைமுறைகளின் பாதுகாப்புச் சட்டம்” ஆகிய ஜனநாயக விரோதச் சட்டங்களை இயற்றுவதை விரைவுபடுத்தியுள்ளார்.

பொலிஸ் அரசை நோக்கிய வேகமான பயணத்தில் விக்கிரமசிங்கவிற்கு “சரியான” பொலிஸ் மா அதிபரும் ஏனைய அதிகாரிகளும் தேவை. வர்க்கப் போராட்டங்களை கொடூரமாக நசுக்கியதில் தென்னகோன் இழிபுகழ் பெற்றவர் ஆவார்.

2022ம் ஆண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவியில் இருந்து அகற்றிய வெகுஜன எழுச்சியின் பிரதான எதிர்ப்பு மையமாக இருந்த, காலிமுகத் திடலில் “கோடா கோ கம” இல் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மீது, அப்போதைய பிரதமரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) தலைவருமான மஹிந்த இராஜபக்ஷவின் தூண்டுதலின் பேரில், 2022 மே 9 அன்று ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. குண்டர்கள் நடத்திய கொடூரத் தாக்குதலின் திட்டங்கள் பற்றி முன்னரே தெரிந்திருந்தும் தென்னகோன் அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. தென்னகோன் அப்போது மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்தார்.

தென்னகோனை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்து, தாக்குதல் தொடர்பான விசாரணைகளை தடையின்றி மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர் அப்போதைய பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கிய போதிலும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. தென்னகோன், கோட்டாபய இராஜபக்ஷ மற்றும் மகிந்த இராஜபக்ஷ உட்பட இராஜபக்ஷ வட்டத்தின் நெருங்கிய கூட்டாளியாக இழிபுகழ்பெற்றவராவர். மஹிந்த இராஜபக்ஷவின் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.யின் முண்டுகொடுப்புடன் ஜனாதிபதி பதவியில் இருக்கும் விக்கிரமசிங்க, தென்னகோனை பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கும் போது, இராஜபக்ஷ வட்டாரத்துடன் அவருக்கு இருந்த நெருங்கிய உறவையும் கணக்கில் எடுத்துள்ளார் என்பது நிச்சயமானதாகும்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் வழிகாட்டுதலின் கீழ், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்ய பொலிசையும் அதன் விசேட அதிரடிப் படையையும் இணைத்து அவரது தலைமையில் தொடங்கப்பட்டுள்ள “சிறப்பு நடவடிக்கையே” தென்னகோனின் சமீபத்திய பணி ஆகும்.

கடந்த வாரம் எல்பிட்டியவில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அமைச்சர் அலஸ், தற்போது இடம்பெற்று வரும் குற்றச் செயல்களை இல்லாதொழிக்க விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், அனைத்து பாதாள உலக மற்றும் போதைப்பொருள் செயற்பாட்டாளர்களும் உடனடியாக பொலிஸாரிடம் சரணடைய வேண்டும் என்றார். இல்லாவிட்டால், “கண்ட உடன் சுட்டுக்கொல்லும்” நிலைமையை எதிர்கொள்ள நேரும் என மிரட்டினார்.

“கண்ட உடன் சுட்டுவது” ஒரு பொலிஸ் அரசின் குணாம்சமாகும் என சுட்டிக்காட்டிய இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன, டெய்லி மிரர் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டின் நிறைவேற்று, சட்ட மற்றும் நீதித்துறை ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்படும் ஆளும் முறைமை ஒன்று இருக்கும் போது, ஒரு சிரேஷ்ட அமைச்சர் பகிரங்கமாக அத்தகைய கருத்தை எப்படி தெரிவிக்க முடியும்? சட்ட அமைப்பு நடைமுறையில் இருக்கும் போது, ​​கண்டவுடன் சுட்டுத் தள்ளுவதற்கு இது பொலிஸ் அரசு அல்ல,” என்றார்.

உலக சோசலிச வலைத் தளத்தில் 9 செப்டம்பர் 2023 அன்று “இலங்கை அரசாங்கம் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கான விசேட நடவடிக்கையை அறிவிக்கிறது” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட கட்டுரையில் இந்த நடவடிக்கையின் உண்மையான அர்த்தத்தை பின்வருமாறு விளக்கியது:

“எவ்வாறாயினும், விக்கிரமசிங்கவின் “குற்ற-எதிர்ப்பு” எனப்படும் நடவடிக்கைகளின் உண்மையான இலக்கு, தொழிலாள வர்க்கமும் ஒடுக்கப்பட்ட மக்களுமே என்று நாங்கள் எச்சரிக்கிறோம். அரசாங்கம், அது நடைமுறைப்படுத்தும் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளுக்கு பெருகிவரும் வெகுஜன எதிர்ப்பை முகங்கொடுப்பதோடு அந்த எதிர்ப்பை அடக்கவும் தொழிலாள வர்க்கத்தை அச்சுறுத்தவும் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளைப் பயன்படுத்துகிறது.”

அந்தக் கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:

“ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான பொலிஸ் மற்றும் இராணுவ நடவடிக்கைகள், சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்கான தயாரிப்புகளும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக முதலாளித்துவ அரசை பலப்படுத்துவதற்கும் கட்டியெழுப்புவதற்குமான பல திட்டங்களில் இன்னொன்று ஆகும்.”

Loading