மக்ரோன், லு பென்னுடன் இணைந்து பாசிச குடியேற்ற எதிர்ப்பு சட்டத்தை நிறைவேற்றியுள்ளார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஒரு பாசிச குடியேற்றக் கட்டுப்பாட்டு மசோதாவை நிறைவேற்றுவதற்காக மரின் லு பென்னின் அதிதீவிர வலது தேசிய பேரணி (RN) மற்றும் பழமைவாத குடியரசுக் கட்சி (LR) ஆகியவற்றுடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதியின் மறுமலர்ச்சி (RE) கட்சியின் 69 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒரு சிறுபான்மையினர், இந்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்தோ அல்லது புறக்கணித்திருந்தாலும், அதிதீவிர வலதுசாரிகளும், பழமைவாதிகளும் ஒருமனதாக இந்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை பாராளுமன்றத்தில் இந்த சட்டத்திற்கு 349 வாக்குகள் ஆதரவாகவும் 186 வாக்குகள் எதிராகவும் கிடைத்தன.

பிரெஞ்சு ஜனாதிபதியும் மறுதேர்தலுக்கான ஜனாதிபதி வேட்பாளருமான இருந்த இம்மானுவேல் மக்ரோன் ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 10, 2022 அன்று பாரிசிலும், பிரெஞ்சு அதிவலது ஜனாதிபதி வேட்பாளர் மரீன் லு பென் பாரிஸில் மார்ச் 14, 2022 திங்களன்று நடந்த ‘பிரான்ஸ் போரின் முகம்’ நிகழ்ச்சியின் போது பேசுகிறார்கள்.

இச்சட்டமானது, அடிப்படை ஜனநாயக உரிமைகளை அழித்து, யூதர்களை சித்திரவதை மற்றும் அழிப்பு முகாம்களுக்கு நாடு கடத்துவதற்கு உதவிய, இரண்டாம் உலக யுத்த காலத்தில் நாஜி ஒத்துழைப்பு, யூத எதிர்ப்பு விச்சி ஆட்சி பயன்படுத்திய அடக்குமுறைக் கொள்கைகளுக்கு புத்துயிர் அளித்துள்ளது.

மக்ரோனின் சட்டவிரோத கொள்கைக்கு பரவலான மக்களின் எதிர்ப்பையும் மீறி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரெஞ்சு நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமையானது, தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர் போராட்டங்களால் வகைப்படுத்தப்பட்ட ஒரு வருடத்தை நிறைவு செய்தது. கடந்த ஜூன் மாதம், ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தின் போது, பிரெஞ்சு மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பொருளாதாரத்தை முடக்குவதன் மூலம் மக்ரோனை வீழ்த்த விரும்பினர். ஜூலை மாதம், நாந்தேரில் 17 வயது இளைஞன் நஹேல் போலிசாரால் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பல நாட்கள் வெகுஜன போராட்டங்கள் வெடித்தன. சியோனிச ஆட்சியின் பாலஸ்தீனியர்கள் மீதான இனப்படுகொலைக்கு மக்ரோனின் ஆதரவு ஆகியவை பிரான்ஸ் மற்றும் உலகெங்கிலும் தீவிரமயமாக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களிடமிருந்து பரந்த எதிர்ப்பைத் தூண்டியுள்ளன.

ஒரு வெடிக்கும் அரசியல் மற்றும் சமூக நிலைமையை எதிர்கொண்டுள்ள மக்ரோன், எதேச்சதிகார ஆட்சியை நாடும் வகையில், தனது கொள்கைகளுக்கு அடித்தளமாக வலது மற்றும் அதிதீவிர வலதுசாரிகளுடன் ஒரு கூட்டணியை நாடுகிறார். ஆரம்பத்தில் சுற்றுச் சூழலியலாளர்களின் இயக்கத்தால் (ecologists) கொண்டுவரப்பட்ட ஒரு பிரேரணைக்கு, ஜோன்-லூக் மெலன்சோனின் நியூப்ஸ் (Nupes) கூட்டணி மற்றும் மேக்ரோனிஸ்டுகளின் ஒரு பகுதியினரின் ஆதரவுடன் இந்த மசோதா நிராகரிக்கப்பட்டு, அசல் பதிப்பை செல்லுபடியற்றதாக்கியது.

இந்தச் சட்டம் பரவலான கோபத்தைத் தூண்டும் என்பதை அதை நிராகரிப்பவர்கள் புரிந்துகொண்டனர். எவ்வாறெனினும், மக்ரோன், குடியரசுக் கட்சி (LR) மற்றும் தேசிய பேரணி (RN) உடன் தன்னை இணைத்துக் கொண்டார். குடியரசுக் கட்சி (LR) மற்றும் தேசிய பேரணி (RN) அதை அங்கீகரிப்பதை உறுதி செய்வதற்காக கூட்டு ஒருங்கிணைப்பு ஆணையம் அசல் மசோதாவை கடுமையாக்கியது.

இந்தச் சட்டம் புலம்பெயர்ந்தவர்கள் ஆறு மாதங்களுக்குப் பதிலாக ஐந்து ஆண்டுகளுக்கு சமூக நலன்களை அணுகுவதைத் தடுக்கிறது, இதனால் அதிவலதுசாரிகளின் மையக் கோரிக்கையான “தேசிய முன்னுரிமை” என்ற கொள்கை உறுதிப்படுத்தப்படுகிறது. இது புலம்பெயர்ந்தவர்கள் பிரான்சுக்கு வருவதைத் தடுப்பதோடு, அவர்களை நாடு கடத்துவதை எளிதாக்குவதுடன், குடும்ப ஒன்றிணைப்பு மற்றும் குடியுரிமையை மிகவும் கடினமாக்குகிறது.

பிரான்சில் பிறந்து வளரும் இளையோர்களுக்கு 18 வயதில் தானாகவே பிரெஞ்சு குடியுரிமை கிடைக்காது. குடியேற்றத்திற்கான வருடாந்திர ஒதுக்கீட்டை நாடாளுமன்றம் நிர்ணயிக்க உள்ளது. பிரான்சில் வசிக்கும் வெளிநாட்டவர்கள், அவர்கள் 24 மாதங்கள் பிரான்சில் தங்கியிருப்பதையும், அவர்களின் நிதி நிலைமை “நிலையானது,” “போதுமானது” மற்றும் “சீராக உள்ளது” என்பதை நிரூபித்தால் மட்டுமே, தங்களின் அன்புக்குரிய குடும்பத்தை மீண்டும் ஒன்றிணைப்பிற்கு விண்ணப்பிக்க முடியும்.

போலீசாரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட இரட்டை பிரஜா உரிமையுடையவர்கள், தங்கள் பிரெஞ்சு குடியுரிமையை இழந்து நாடு கடத்தப்படுவார்கள். பிரான்ஸில் சட்டவிரோதமாக வசிப்பது கிரிமினல் குற்றமாகும். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வராத வெளிநாட்டு மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு முன்பு வைப்புத்தொகை செலுத்த வேண்டும். இது அவர்கள் நாட்டை விட்டு வெளியேறிய பின்னரே திரும்பி கொடுக்கப்படும். இவைகள் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட சில நடவடிக்கைகள் மட்டுமே ஆகும்.

இந்த பாசிசவாத மசோதாவை சட்டபூர்வமாக்க தொலைக்காட்சியில் உரையாற்றிய மக்ரோன், இதற்கு வாக்களித்த அதே கட்சிகளைச் சேர்ந்த அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு கவுன்சில் மூலம் சட்டம் இயற்றப்படும் என்று வலியுறுத்தினார். மக்ரோன் இந்த மசோதா “ஒரு சமரசத்தின் பலன்” என்று கூறினார். மேலும் அவர் சிடுமூஞ்சித்தனமாக, “தேசிய பேரணிக்கு (RN) எதிராக போராடுவது என்பது அதற்கு உணவளிக்கும் பிரச்சினைகளை சமாளிக்க மறுப்பது என்று அர்த்தமல்ல. நாட்டில் குடியேற்றப் பிரச்சினை உள்ளது. இந்த மசோதா, “எங்களுக்கு இல்லாமலிருந்த கேடயம்” என்று அவர் கூறினார்.

மரின் லு பென் இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதை ஒரு “கருத்தியல் வெற்றி” என்று கொண்டாடினார்: “நாளை பெரும்பான்மையினரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக குடியரசின் ஜனாதிபதி, ‘தேசிய முன்னுரிமையை’ பாதுகாத்ததற்காக எங்களை எவ்வாறு குறைகூற முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் அதைப் பயன்படுத்தலாம் என்ற கருத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் அதை குறைந்தபட்ச வழியில் பயன்படுத்துகிறார்கள், ஆனால் கொள்கையளவில் கருத்து சரிபார்க்கப்படுகிறது.”

மக்ரோனுக்கும் அதிவலதுசாரிகளுக்கும் இடையிலான கூட்டணி 2017 மற்றும் 2022 இல் போலி-இடதுகளால் முன்னெடுக்கப்பட்ட அரசியல் மோசடியை அம்பலப்படுத்துகிறது. கடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும், இரண்டாவது சுற்றில், அதிவலதுசாரிகளை நிறுத்துவதற்கும், ஜனநாயக உரிமைகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் லு பென்னுக்கு எதிராக மக்ரோனுக்கு வாக்களிப்பது அவசியம் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சுப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (PES) மட்டுமே, எதிர்கால ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்திற்கு தயாரிப்பு செய்வதற்காக இரண்டாம் சுற்று தேர்தலை, செயலூக்கத்துடன் புறக்கணிப்பதற்கு அழைப்பு விடுத்தது. மக்ரோனின் கொள்கைகள் லு பென்னின் கொள்கைகளிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாதவை என்றும், அவர் அதிகாரத்திற்கு வருவதற்கு வழிவகுக்கும் என்றும் சோசலிச சமத்துவக் கட்சி எச்சரித்தது. குடியேற்ற எதிர்ப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், இப்போது லு பென் தான் அரசாங்கத்தின் கொள்கையை தீர்மானிக்கிறார் என்பதை நிரூபிக்கிறது.

அதிதீவிர வலதுசாரிகளுடன் மக்ரோனின் கூட்டணி ஆச்சரியமல்ல. அவர் தனது அரசாங்கத்தில் நவ-பாசிச சக்திகளை வளர்க்கிறார். நாஜி ஒத்துழைப்பு விச்சி அரசியலின் ஆணிவேராக இருந்த Action Française அமைப்பின் முடியாட்சி ஆதரவுத் தலைவரான சார்லஸ் மோராவின் எழுத்துக்கள் கற்பிக்கப்படுகின்றன என்பது இரகசியமல்ல. உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மனன் 2008 இல் Action Française இன் உறுப்பினராக இருந்தார். முன்னாள் மக்ரோனின் அரசாங்க செய்தித் தொடர்பாளர் பெஞ்சமின் கிரிவோ 2018 இல் மோராவிற்கு பொழிப்புரை வழங்கினார். மக்ரோன் தானே “சிப்பாய் பெத்தானுக்கு” மரியாதை வணக்கம் செலுத்தினார்.

மக்ரோனின் புலம்பெயர்ந்தோர்-விரோத சட்டமானது, நாஜி ஒத்துழைப்புவாத பிலிப் பெத்தானின் விச்சி ஆட்சியின் ஒடுக்குமுறைக் கொள்கைகளுக்கு புத்துயிர் அளிக்கிறது. 1940 ஆம் ஆண்டில், தாராளவாத மூன்றாம் குடியரசின் கீழ், தனது முன்னோடி வழங்கிய குடியுரிமைகளை இரத்து செய்யும் சட்டத்தை பெத்தான் அறிவித்தார். 1940 மற்றும் 1944 க்கு இடையில், பல யூதர்கள் உட்பட சுமார் 15,000 பேர்கள் தங்கள் குடியுரிமையை இழந்தனர். இது அவர்களை நாஜிக்களின் வதை மற்றும் அழிப்பு முகாம்களுக்கு நாடு கடத்துவதற்கு வழிவகுத்தது. 1942 மற்றும் 1944 க்கு இடையில் நாடுகடத்தப்பட்ட 75,721 யூதர்களில், சுமார் 3 சதவீதம் பேரான 2,566 பேர்கள் மட்டுமே உயிர் பிழைத்தனர்.

இந்தப் பாசிச சட்டத்தின் தாக்கங்களை தொழிலாளர்கள் எதிர்ப்பார்கள், ஆனால் அவர்கள் அதிகாரத்துவ எந்திரங்களைப் பற்றி எந்த பிரமையும் கொண்டிருக்க முடியாது. சமூக உரையாடலின் கட்டமைப்பில் தொழிற்சங்கங்கள், பெருநிறுவன மற்றும் அரசு கொள்கையின் சக்கரத்தில் இணைகின்றன. தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பின் (CGT) செயலாளர் சோஃபி பினெட் “ஒத்துழையாமைக்கு” அழைப்பு விடுத்தார். ஆனால் இந்த ஆண்டு, மக்ரோனின் ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தின் போது, CGT மற்றும் பிற தொழிற்சங்கங்கள் பாரிய சமூக அதிருப்தியை, ஒரு முட்டுச்சந்திற்கு கொண்டு சென்றன. மக்கள் எதிர்ப்பால் மூழ்கிவிடுவார்கள் என்ற அச்சத்தில், தொழிற்சங்கங்கள் சீர்திருத்தத்தை திணிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் எலிசபெத் போர்னை நோக்கி திரும்பியதுடன், ஆர்ப்பாட்டங்களை அடக்கும் பொறுப்பை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இரண்டாம் உலகப் போரின் போது நாஜிசத்திற்கு எதிரான போராட்டமானது, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர கிளர்ச்சியின் தன்மையை எடுத்தது. இத்தாலி, நெதர்லாந்து மற்றும் பிரான்சிலுள்ள தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். குடியேற்றச் சட்டம் மற்றும் மக்ரோனின் எதேச்சதிகாரக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரு சர்வதேச போராட்டத்தில், ஒரு ட்ரொட்ஸ்கிச முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாளர்கள் தங்கள் புரட்சிகர பாரம்பரியங்களை புதுப்பிக்க வேண்டும்.

மக்ரோனை வீழ்த்துவதற்கான புரட்சிகர அணிதிரட்டல் மட்டுமே தொழிலாளர்களுக்கான ஒரே வாய்ப்பு ஆகும். இதைச் செய்வதற்கு, தொழிலாளர்கள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சுப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியை (PES) கட்டியெழுப்ப வேண்டும்.

Loading