சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) நீண்டகால ட்ரொட்ஸ்கிசவாதி கே. ரட்நாயக்கவின் 80வது பிறந்த நாளைக் கொண்டாடியது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

நவம்பர் 14 அன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) உறுப்பினர்கள், தோழர் கே. ரட்னாயக்கவின் 80வது பிறந்தநாளை, கொழும்பின் புறநகர்ப் பகுதியான பிலியந்தலையில் உள்ள அவரது வீட்டில் கொண்டாடினர்.

சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்கள் ரட்நாயக்கவின் 80வது பிறந்தநாளைக் கொண்டாடிய போது

ரட்நாயக்க தனது முழு இளமை-முதுமை வாழ்க்கையின் சுமார் ஆறு தசாப்தங்களை தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் சோசலிச விடுதலைக்கான போராட்டத்திற்காக அர்ப்பணித்துள்ளார். அவரது முதுமை மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் இருந்தபோதிலும், அவர் தொடர்ந்து சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் வேலைகளில் ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கிறார்.

ரட்நாயக்க 1968 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவராக அரசியல்ரீதியாகச் செயற்பட்டதன் மூலம் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (பு.க.க.) ஸ்தாபக உறுப்பினராக இருந்தார். அவர் 1968 முதல் 1971 வரை அதன் இளைஞர் பிரிவான புரட்சிகர கம்யூனிஸ்ட் இளைஞர் அமைப்பின் செயலாளராக இருந்தார்.

1972 இல், ரத்நாயக்க பு.க.க.யின் வெளியீடான கம்கரு மாவத மற்றும் அதன் தமிழாக்கமான தொழிலாளர் பாதை பத்திரிகைகளின் ஆசிரியராகி, பல தசாப்தங்களாக அந்தப் பாத்திரத்தில் தொடர்ந்தார். 1998 இல் உலக சோசலிச வலைத் தளம் (WSWS) ஸ்தாபிக்கப்பட்ட போது, அவர் சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) உலக சோசலிச வலைத் தளத்தின் தேசிய ஆசிரியராகத் தெரிவு செய்யப்பட்டார். அந்த பதவியை அவர் இன்னும் வகிக்கிறார் - இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

1987 இல் இறக்கும் வரை பு.க.க.யின் ஸ்தாபக பொதுச் செயலாளராக இருந்த புகழ்பெற்ற ட்ரொட்ஸ்கிசத் தலைவர்களான கீர்த்தி பாலசூரிய, மற்றும் 2022 இல் இறக்கும் வரை சோசலிச சமத்துவக் கட்சிக்கு தலைமை தாங்கிய விஜே டயஸ் ஆகியோருடன் ரட்நாயக்க நெருக்கமாக ஒத்துழைத்தார். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் / சோசலிச சமத்துவக் கட்சியின் மற்றுமொரு முன்னணி ஸ்தாபக உறுப்பினரான விக்கிரமசிங்க, தனிப்பட்ட முறையில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க அவரது வீட்டிற்குச் சென்றிருந்தார்.

ரட்நாயக்க மத்திய வங்கி ஊழியர் சங்கத்தின் முக்கிய தலைவராகவும் இருந்தார். அவரது அன்பு மனைவி ஜெரானி மற்றும் பிற தோழர்களுடன் சேர்ந்து அவர் தொழிற்சங்கத்தில் சர்வதேச சோசலிசத்திற்கான கொள்கை ரீதியான போராட்டத்தை நடத்தினார். 1980 இல் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசாங்கம் பொது வேலைநிறுத்தத்தை முறியடித்ததில் வேலை நீக்கம் செய்யப்பட்ட 100,000 அரச ஊழியர்களுடன் மத்திய வங்கியில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்ட டஜன் கணக்கான ஊழியர்களில் அவரும் ஜெரானியும் அடங்குவர்.

ஜயவர்தன அரசாங்கத்தால் தூண்டிவிடப்பட்டு 1983 ஜூலையில் நடந்த கொடூரமான தமிழர் விரோத படுகொலைகளுக்கு மத்தியில், ரட்நாயக்கவின் வீடு இனவாத குண்டர்களால் எரிக்கப்பட்டது. கடந்த ஆண்டு, துரதிர்ஷ்டவசமாக, ரட்நாயக்க தனது மனைவி மற்றும் வாழ்நாள் முழுவதும் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினராக இருந்த ஜெரானியை இழந்தார்.

தீபால் ஜெயசேகர

பொதுச் செயலாளர் தீபால் ஜெயசேகர உட்பட பல சோசலிச சமத்துவக் கட்சி தோழர்கள் ரட்நாயக்கவின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டனர். அவர்களது கருத்துக்களில், ட்ரொட்ஸ்கிசத்திற்கு ரட்நாயக்கவின் மகத்தான பங்களிப்பை மட்டுமல்லாமல், உறுதிப்பாடு, தைரியம் மற்றும் அவரது வாழ்க்கைப் பணிகளில் வெளிப்படும் ஏனைய சிறந்த தனிப்பட்ட குணங்களையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

உலக சோசலிச வலைத் தளம் மற்றும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் உட்பட, உலகெங்கிலும் உள்ள அனைத்துலகக் குழுவின் பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல தோழர்களின் வாழ்த்துகள் வாசிக்கப்பட்டன. (நோர்த்தின் வாழ்த்ச் செய்தியை முழுமையாக இங்கே படிக்கலாம்).

சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) பொதுச் செயலாளர் ஜயசேகர, ரட்நாயக்கவின் மகள் வனஜா மற்றும் மகன் ஜெயானுக்கும் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தமைக்காக நன்றி கூறி ஆரம்பித்தார். 1987 ஆம் ஆண்டு கம்கரு மாவத்த பத்திரிகையின் பக்கங்கள் மூலம் ரட்நாயக்கவுடனான தனது முதல் சந்திப்பை ஜயசேகர நினைவு கூர்ந்தார். '1990 ஆம் ஆண்டு ஆசிரியர் பணியில் சேர கொழும்புக்கு அழைக்கப்பட்டதில் இருந்து அவரது வழிகாட்டுதலின் கீழ் அவருடன் நெருக்கமாக பணியாற்றும் பாக்கியம் எனக்கு கிடைத்தது,' என்று அவர் கூறினார்.

மவீகும்புர கிரிபண்டா, நந்த விக்கிரமசிங்க, சகுந்த ஹிரிமுத்துகொட, சமன் குணதாச, டபிள்யூ.ஏ. சுனில், விலானி பீரிஸ், பாணி விஜேசிறிவர்தன மற்றும் வசந்த ரூபசிங்க ஆகியோரும் ரட்நாயக்கவுடனான அரசியல் அனுபவங்களை நினைவுகூர்ந்து சுருக்கமான கருத்துக்களை வெளியிட்டனர்.

கே. ரத்நாயக்க

இறுதியில் பேசிய ரட்னாயக்க, “இங்கு தோழர்கள் கூறியது போல் கட்சிக்கு நான் பங்களிப்பை செய்திருந்தால், அனைத்து கட்சி தோழர்களின் பங்களிப்பின் ஒரு பகுதியாகவே என்னால் அதை செய்ய முடிந்தது” என்றார்.

பு.க.க. ஸ்தாபிக்கப்பட்டதில் கீர்த்தி பாலசூரிய, விஜே டயஸ், விக்கிரமசிங்க மற்றும் பலருடன் அவர் நெருக்கமாக ஒத்துழைத்ததை ரட்னாயக்க நினைவு கூர்ந்தார்.

ரட்நாயக்க தொடர்ந்து கூறியதாவது: '1953 இல் இருந்து பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிராக ட்ரொட்ஸ்கிசத்தை பாதுகாப்பதில் அனைத்துலகக் குழு முன்னெடுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, லங்கா சமசமாஜ கட்சியின் (ல.ச.ச.க.) சந்தர்ப்பவாத மாற்றத்திற்கு நமது உலகக் கட்சி குறிப்பாக கவனம் செலுத்தியது. 1964ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க.) முதலாளித்துவக் கூட்டணி அரசாங்கத்தில் ல.ச.ச.க. இணைந்து கொண்டு செய்த வரலாற்றுக் காட்டிக்கொடுப்பை எதிர்த்து, அனைத்துலகக் குழு தலையிட்டது. ல.ச.ச.க. தலைமைக்கு எதிராக எழுந்த ஒரு பிரிவான புரட்சிகர ல.ச.ச.க.யின் நெருக்கடிகளில் அனைத்துலகக் குழு தலையிட்டது. எவ்வாறாயினும், இந்த பிரிவு, 1964 காட்டிக்கொடுப்புக்கு வழிவகுத்த பப்லோவாதத்தின் தேசிய-சந்தர்ப்பவாத அரசியலில் இருந்து விலகிக்கொள்ளவில்லை.

மூத்த பப்லோவாதியான வி. காராளசிங்கம் தலைமையிலான கூறுகளில் இருந்து லங்கா சமசமாஜக் கட்சிக்குள் நுழைவதற்கான அழுத்தம் எங்கள் மீது இருந்தது. எவ்வாறாயினும், அனைத்துலகக் குழுவின் அரசியல் தலையீடு இந்த அழுத்தத்தைத் தோற்கடித்து கட்சியைக் கட்டியெழுப்ப ஒன்றிணைவதற்கு எங்களுக்கு உதவியது.

“அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவு உருவாக்கப்பட்டு 55 ஆண்டுகள் கடந்துவிட்டன. இலங்கையிலும் சர்வதேச அளவிலும் பல தொழிலாள வர்க்கப் போராட்டங்களை நாம் கடந்து வந்துள்ளோம். தொழிலாள வர்க்கத்தினுள் இந்தக் கட்சியைக் கட்டியெழுப்புவதில் நமது தோழர்கள் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள், பொலிஸ், இராணுவம் மற்றும் அரசியல் கட்சிகளின் குண்டர்களும் கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறை மற்றும் வன்முறையை எதிர்கொண்டனர்.”

அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகள் ஒரு புதிய உலகப் போரை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இன்றைய உலகளாவிய நெருக்கடியின் முக்கியமான கட்டத்தை விளக்கி ரட்நாயக்க தனது கருத்துக்களை முடித்தார். அவர் அறிவித்தார்: “மிக முக்கியமான வளர்ச்சி சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் எழுச்சியாகும். தொழிலாள வர்க்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டுவருவதற்குத் தேவையான புரட்சிகர தலைமையை வழங்குவதற்கு, அனைத்துலகக் குழுவின் சகோதரக் கட்சிகளுடன் சேர்ந்து, சோசலிச சமத்துவக் கட்சியை ஒரு வெகுஜனக் கட்சியாகக் கட்டியெழுப்புவதுதான் நாம் செய்ய வேண்டிய பணி.”

ரட்நாயக்கவின் பேரப்பிள்ளைகள் பிறந்தநாள் வாழ்த்து பாடுகிறார்கள்

தனது வாழ்த்துச் செய்தியில், டேவிட் நோர்த், ரட்நாயக்கவின் ஆறு தசாப்த கால அரசியல் வாழ்க்கை 'ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டம், அனைத்துலகக் குழுவின் பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலத்தை சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியாகக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டார்.

1968ல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை ஸ்தாபித்ததில் ரட்நாயக்க ஆற்றிய தீர்க்கமான பங்கை நோர்த் நினைவு கூர்ந்தார். ட்ரொட்ஸ்கிசத்திற்கான அவரது வாழ்நாள் போராட்டத்தை ஆய்வு செய்யும் மாபெரும் பணியை வலியுறுத்தி, நோர்த் பின்வரும் கருத்துக்களைக் கூறினார்:

“ஆனால், புரட்சிகரப் செயற்பாட்டில் உங்களது தசாப்தங்களில் மிகச்சுருக்கமாக கூறி வலியறுத்த வேண்டியது என்னவெனில், நீங்கள் அரசியல் புத்துயிர்ப்பு, அரசியல் வேலைத்திட்டம் மற்றும் கொள்கைகளுக்கான அர்ப்பணிப்பு மற்றும் சோசலிசத்திற்கான போராட்டம் சார்ந்து இருக்கும் தனிப்பட்ட தைரியம் தளராமையால் ஆளுமைபடுத்தப்பட்டுள்ளீர்கள் என்பதாகும். மற்றும் இலங்கை சோ.ச.க., உலக சோசலிச வலைத் தள ஆசியர் குழு மற்றும் அனைத்துலகக் குழுவில் உள்ள உங்களது சகல தோழர்களும் சக பணியாளர்களும் உறுதிப்படுத்துவது போல, இந்த அனைத்து தரங்களுக்கும், நீடித்த கடின உழைப்புக்கான அசாதாரண திறன் உண்டு என்பதை கூறியே ஆக வேண்டும்.”

பிரித்தானிய சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளரான கிறிஸ் மார்ஸ்டன், ரட்நாயக்க 'பொறுமையான, சிந்தனாசக்தி உள்ள தோழர். அரசியல் மற்றும் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தின் அபிவிருத்தி சம்பந்தமான அவரது அணுகுமுறை மிக உயர்ந்த தீவிரத்தன்மையைக் கொண்டது,' என்று விவரித்தார். “தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புரட்சிகர நோக்குநிலையையும் தலைமைத்துவத்தையும் வழங்கக்கூடிய ஒரு கட்சியும் காரியாளர்களும் இலங்கையில் இருப்பதையிட்டு உங்களைப் போன்ற தோழர்களுக்கு நன்றி என்று கூற வேண்டும். நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையிலான முன்நோக்கை அபிவிருத்தி செய்வதில் உங்களைப் போன்ற தோழர்களின் அனுபவங்கள் இந்திய துணைக் கண்டத்திலும் உலகம் முழுவதிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைக் கட்டியெழுப்புவதில் இன்றியமையாத பங்களிப்பை வழங்குகிறது,” என அவர் கூறி முடித்தார்.

ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் சார்பாக, உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் பீட்டர் சைமண்ட்ஸ் மற்றும் தேசிய செயலாளர் செரில் கிறிஸ்ப் ஆகியோர் வாழ்த்து அனுப்பியிருந்தனர்: 'இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் வளர்ச்சிக்கும் இன்னும் பரந்த அளவில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைக் கட்டியெழுப்புவதிலும் நீங்கள் செய்த பிரமாண்ட பங்களிப்பில் நீங்கள் திருப்தி அடையலாம்..' என அவர்கள் தெரிவித்திருந்தனர்.

அவர்கள் நினைவு கூர்ந்தனர், “நீங்களும் உங்கள் மனைவி ஜெரானியும் காட்டிய விருந்தோம்பலை இங்கிருந்து வரும் தோழர்கள் பாராட்டினர். கடந்த ஆண்டு உங்கள் மனைவி இறந்தமை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளான ஜெயான் மற்றும் வனஜாவுக்கும் ஒரு பெரும் இழப்பாக இருக்கும். நீங்கள் பரந்த ஆர்வம், அறிவு மற்றும் நகைச்சுவை உணர்வு கொண்ட மிகவும் பண்பட்ட மனிதர்.

ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியைச் சேர்ந்த ரிச்சர்ட் பிலிப்ஸ், உலக சோசலிச வலைத் தளத்தின் திருத்தப் பணியில் ரத்நாயக்கவுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வருபவர். 'நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்குகளுக்கான அரசியல் போராட்டத்தில் ரட்நாயக்கவின் அசாதாரண வாழ்நாள் அர்ப்பணிப்பை' பிலிப்ஸ் கௌரவப்படுத்தினார். அது “எண்ணிலடங்கா தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியதுடன் ட்ரொட்ஸ்கிசத்துக்கும் அதன் புரட்சிகர மற்றும் அனைத்துலகவாத கொள்கைக்கும் அவர்கள் வென்றெடுக்கப்பட்டனர்.”

ஜேர்மனியில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சியைச் சேர்ந்த கிறிஸ்டோப் வாண்ட்ரேயர் கூறியதாவது: 'நாங்கள் கூட்டாக பங்கேற்ற அனைத்து சர்வதேச கலந்துரையாடல்களிலும், உங்கள் சிந்தனைமிக்க மற்றும் தீவிரமான பங்களிப்புகள் நமது சர்வதேச முன்னோக்கின் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை.'

பிரான்சில் சோசலிச சமத்துவக் கட்சியைச் சேர்ந்த அலெக்ஸ் லன்டியர் கூறியதாவது: 'இலங்கையில் இனவாதப் போர், தமிழ் தேசியவாதம் மற்றும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து நீங்கள் உருவாக்கிய சக்திவாய்ந்த அபிவிருத்திகள் பிரான்சில் எங்கள் கட்சியைக் கட்டியெழுப்புவதில் மையமாக இருந்தது. இந்திய முதலாளித்துவ தேசியவாதம், ஸ்ராலினிசம் மற்றும் பப்லோவாதத்திற்கு தொழிலாளர் புரட்சிக் கட்சி மேலும் மேலும் அடிபணிந்து போனதற்கு எதிராக, நீங்களும் கீர்த்தியும் விஜேயும் முன்னெடுத்த சோசலிசத்திற்கான மாபெரும் போராட்டத்தின் மூலம் வென்றெடுக்கப்பட்ட தோழர்களே பிரான்சில் சோசலிச சமத்துவக் கட்சியை ஸ்தாபிப்பதில் தீர்க்கமான பங்கு வகித்தனர்.

ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் நிக் பீம்ஸ் பின்வருமாறு எழுதினார்: “வேலைத்திட்டமே கட்சியைக் கட்டமைக்கிறது. இது எங்கள் பகுப்பாய்வுக்கான அடிப்படை ஆகும். ஆனால் வேலைத்திட்டத்திற்கு போராளிகள் தேவை. உங்கள் வாழ்க்கையின் போக்கில், நீங்கள் ட்ரொட்ஸ்கிசத்தின் வேலைத்திட்டத்திற்கான மிகவும் உறுதியான மற்றும் சளைக்காத போராளிகளில் ஒருவராக இருந்தீர்கள்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் கனேடியப் பிரிவின் சார்பாக கீத் ஜோன்ஸ் குறிப்பிட்டார்: 'நீங்கள் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம், மேலாதிக்கம் மற்றும் உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்திற்காக ஒரு தவிர்க்க முடியாத போராளியாக இருந்தீர்கள்.' ஜோன்ஸ் மேலும் கூறியதாவது: “உங்கள் தியாகம் செய்யும் திறன் நன்கு அறியப்பட்டதாகும். இலங்கை மற்றும் தெற்காசியாவில் வளரும் வர்க்கப் போராட்ம் பற்றி உலக சோசலிச வலைத் தளத்திற்கு மார்க்சிய மதிப்பீட்டை வழங்குவதை உறுதி செய்வதற்காகவும் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு புரட்சிகர முன்னோக்கை வழங்குவதற்கும் அடிக்கடி, மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் இரவு முழுவதும் விழித்திருந்து நீங்கள் உங்களை வருத்திக் கொண்டீர்கள்.'

பிரான்சில் சோசலிச சமத்துவக் கட்சியின் உதவித் தேசியச் செயலாளர் ஞானா தனது வாழ்த்துரையில் பின்வருமறு கூறினார்: 'லங்கா சமசமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்பு, உள்நாட்டுப் போர், ஜே.வி.பி. கொலையாளிகளின் தாக்குதல்கள், அரசாங்கம் மற்றும் அதன் இராணுவத்தின் தொடர்ச்சியான துன்புறுத்தல்கள் மற்றும் தமிழ் தேசியவாதிகளின் மிரட்டல்களாலும் உங்களை அச்சுறுத்த முடியாமல் போனது. நீங்கள் ஒருபோதும் ஆட்டங்காணவில்லை. நீங்கள் அங்கம் வகிக்கும் பு.க.க. / சோசலிச சமத்துவக் கட்சியின் தலைமையில் உள்ள, மிகவும் உறுதியான ட்ரொட்ஸ்கிசத் தலைவர்கள், அசாதாரண அரசியல் வலிமைக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.”

Loading