முன்னோக்கு

அமெரிக்க வளாகங்களில் இனப்படுகொலை எதிர்ப்பாளர்களை அரசு திட்டமிட்டு வேட்டையாடுவதை எதிர்ப்போம்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

காஸாவில் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்தில் எழுப்பப்பட்ட வரலாற்று மற்றும் அரசியல் கேள்விகளைக் குறித்து விவாதிப்பதற்கும், அதை முடிவுக்குக் கொண்டுவர ஒரு சோசலிச முன்னோக்கை வழங்குவதற்கும் கல்வியாளர்களின் சாமானிய பாதுகாப்புக் குழுவுடன் [அமெரிக்கா]-(Educators Rank-and-File Safety Committee (US) இணைந்து, IYSSE யும் இந்த ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 17, 2023 அன்று இந்திய மற்றும் இலங்கை நேரப்படி அதிகாலை 1:30 a.m. மணிக்கு (சனிக்கிழமை 16, 2023 அன்று ஐரோப்பிய நேரப்படி இரவு 21:00 p.m. மணிக்கு) ஒரு இணையவழிக் கூட்டத்தை நடத்துகிறது. இந்தப் போராட்டத்தில் இணைய விரும்பும் அனைத்து மாணவர்களும் கல்வியாளர்களும் (ஆசிரியர்கள் உட்பட) இங்கே கிளிக் செய்வதன் மூலம் Zoom ஊடாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பு, டிசம்பர் 9 அன்று பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் (UPenn) தலைவர் லிஸ் மாகில் என்பவரை, வலுக்கட்டாயமாக இராஜினாமா செய்ய வைத்திருப்பதை கண்டிக்கிறது. காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேலிய பாசிச ஆட்சி நடத்தும் இனப்படுகொலைப் போருக்கு, இளம் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் பாரிய எதிர்ப்பை நசுக்குவதை இந்த வேட்டையாடல் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பாசிச “பெரும் இடம்பெயர்வுக் கோட்பாட்டிற்காக” வாதடுபவரும், ஜனவரி 6 கிளர்ச்சியை ஆதரித்தவருமான குடியரசுக் கட்சியின் எலிஸ் ஸ்டெபானிக், “சியோனிச எதிர்ப்பு என்பது யூத எதிர்ப்பு” என்ற கூற்றின் முன்னணி ஆதரவாளர். [AP Photo/Mark Schiefelbein]

வலதுசாரி பில்லியனர் நன்கொடையாளர்கள், பாசிச குடியரசுக் கட்சியினர், பைடெனின் வெள்ளை மாளிகை, ஜனநாயகக் கட்சி மற்றும் இராணுவ-உளவுத்துறை இயந்திரம் ஆகியவற்றின் கூட்டணியின் மூலம் மாகிலின் ராஜினாமா கட்டாயப்படுத்தப்பட்டது. ஹார்வர்ட் பல்கலைக்கழகத் தலைவர் கிளாடின் கே மற்றும் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் (MIT) தலைவர் சாலி கோர்ன்ப்ளூத் ஆகியோருடன் சேர்ந்து, பிரதிநிதிகள் சபையில் மெக்கார்த்திய விசாரணைக்கு மாகில் உட்படுத்தப்பட்டார். உலகின் மிகவும் மதிப்புமிக்க மூன்று கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், பல்கலைக்கழக வளாகங்கள் முழுவதும் பரவிவரும் யூத எதிர்ப்பு அலையை தடுத்து நிறுத்தத் தவறியதாகக் கூறி, யூத எதிர்ப்பாளரும் அதிவலது குடியரசுக் கட்சியின் உறுப்பினருமான எலிஸ் ஸ்டெபானிக் தலைமையில் கடுந்தொணியில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

மாகில் வெளியேற்றப்பட்டதன் மூலம், அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் பண்புரீதியாக ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில், நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் பாலஸ்தீனத்தில் நீதிக்கான மாணவர்கள் (SJP) மற்றும் அமைதிக்கான யூத குரல்கள் போன்ற மாணவர் குழுக்களைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளன, மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு வேலை வாய்ப்புகள் இரத்து செய்யப்படுகின்றன. அவர்கள் ஏமாற்றப்பட்டாலும், அச்சுறுத்தப்பட்டாலும், தாக்கப்பட்டாலும், அவர்களைப் பாதுகாப்பதில் இருந்து பல்கலைக்கழக நிர்வாகங்கள் ஆர்ப்பாட்டமாகத் தவிர்த்து விடுகின்றன. அமெரிக்க யூத இளைஞர்களுக்கு திட்டமிட்டு தீவிர வலதுசாரி சியோனிச சித்தாந்தம் போதிக்கப்படுவதையும் அதற்கு எதிரான அவர்களின் பெருகிவரும் எதிர்ப்பையும் அம்பலப்படுத்தும் இஸ்ரேலியம் என்ற ஆவணப்படத்தின் திரையிடல் காட்சிகள் நியூயோர்க்கிலுள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகம், ஹண்டர் கல்லூரி மற்றும் பிற வளாகங்களில் தடைசெய்யப்பட்டுள்ளன.

நியூயோர்க் ஜனநாயகக் கட்சியின் ஆளுநர் கேத்தி ஹோச்சுல், பல்கலைக்கழகத் தலைவர்கள் கல்லூரி வளாகங்களில் “யூத எதிர்ப்பையும் மற்றும் இனப்படுகொலைக்கான அழைப்புகளை” கண்டிக்கத் தவறினால், அரசு நிதியை திரும்பப் பெறுவதாக அச்சுறுத்தியுள்ளார். பிரச்சாரம் இதுவரை வளாகங்களை மையமாகக் கொண்டிருந்தாலும், அது பெருகிய முறையில் உயர்நிலைப் பள்ளிகளுக்கும் விரிவடைகிறது.  மற்றும்  ஆகிய இடங்களிலுள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், இனப்படுகொலைக்கு எதிராக போராட்டங்களை ஏற்பாடு செய்து, மாணவர் செய்தித்தாள்களில் அதை எதிர்த்து குரல் கொடுத்தவர்கள், ஊடகங்களால் “யூத எதிர்ப்பாளர்கள்” என்று கண்டிக்கப்பட்டுள்ளனர். மற்றும் பாலஸ்தீன ஆதரவு ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செய்தி தெளிவாக உள்ளது: அதாவது இஸ்ரேலிய அரசின் கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்கவோ அல்லது கேள்வி கேட்கவோ துணியும் எவரும் மெளனிக்கப்பட வேண்டும், வளாகங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட வேண்டும், கருப்புப்பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும், சமூக ஊடகங்களிலும் வளாகங்களிலும் பணியிடங்களிலும் தீவிர வலதுசாரி கும்பல்களால் தாக்கப்பட்டு வேட்டையாடப்பட வேண்டும். இந்த வேட்டையின் மைய நோக்கங்கள் இரண்டு வகைப்படும்: முதலாவதாக, வளாகங்களிலும் அதற்கு அப்பாலும் சுதந்திரமான பேச்சுரிமையை அழிப்பது, இரண்டாவதாக, அரசு, இராணுவம் மற்றும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் நோக்கங்களுக்கு பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை முழுமையாக அடிபணியச் செய்வதாகும்.

வரலாற்றில் ஒவ்வொரு பெரிய போருக்கு ஆதரவான மற்றும் ஜனநாயக விரோத பிரச்சாரத்தைப் போலவே, இந்த வேட்டை பொய்களின் தொகுப்பின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. முதல் பொய் என்னவென்றால், “யூதர்களின் இனப்படுகொலைக்கு” அழைப்பு விடுக்கும் பரந்த அடிப்படையிலான யூத எதிர்ப்பு இயக்கம் அமெரிக்க வளாகங்களில் உள்ளது. இன்று இனப்படுகொலைக் கொள்கைகளுக்கு உட்பட்ட ஒரே மக்கள் பாலஸ்தீனியர்கள், காஸாவில் திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பு அழிப்பு இனப்படுகொலைக்கான பாடநூல் வரையறையை இது பூர்த்தி செய்கிறது. மேலும் கடந்த இரண்டு மாதங்களில் அமெரிக்க பல்கலைக்கழக வளாகங்களில் வன்முறையாக தாக்கப்பட்ட ஒரே மாணவர்கள் பாலஸ்தீனிய மற்றும் பாலஸ்தீனிய சார்பு மாணவர்கள், வெர்மான்ட்டில் சுடப்பட்ட  மூன்று பாலஸ்தீனிய பட்டதாரி மாணவர்கள் மற்றும் பலர் இனப்படுகொலைக்கு எதிராக பேசியதற்காக உடல்ரீதியாக தாக்கப்பட்டனர், மிரட்டப்பட்டனர் மற்றும் அச்சுறுத்தப்பட்டனர்.

இரண்டாவது மற்றும் அதனுடன் தொடர்புடைய பொய் என்னவென்றால், இஸ்ரேல் அரசுக்கு எதிரான எதிர்ப்பானது “யூத எதிர்ப்பு” என்பதாகும். இஸ்ரேலின் சியோனிச அரசு யூத மக்களுக்கும் யூத மதத்திற்கும் ஒத்திருக்கிறது என்பதைக் குறிக்கும் இந்தக் கூற்று, ஒரு இனவாத அனுமானத்தை அடிப்படையாகக் கொண்டது: அதாவது அனைத்து யூதர்களும், இரத்தம் அல்லது வேறு சில கட்டுக்கதை தொடர்புகளால், இஸ்ரேலிய அரசுக்கு உள்ளார்ந்த விசுவாசத்தைக் கொண்டுள்ளனர் என்பதாகும்.

ஐரோப்பிய மற்றும் யூத தொழிலாள வர்க்கத்தின் மார்க்சிச மற்றும் சோசலிச இயக்கத்திற்கு எதிராக யூத முதலாளித்துவம் மற்றும் மத்தியதர வர்க்கத்தின் பிரிவுகளால் சியோனிசம் வரலாற்று ரீதியாக ஒரு தேசியவாத பிற்போக்குத்தனமாக வெளிப்பட்டது. யூத இனப்படுகொலையின் (Holocaust) பாசிச பயங்கரங்களால் அதற்கு தவறான சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டாலும், சியோனிச அரசு ஒருபோதும் யூத வெகுஜனங்களின் சமூக நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, மாறாக ஒரு முதலாளித்துவ ஆளும் வர்க்கம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. உண்மையில், காஸாவில் நடக்கும் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்களில் யூத மக்களும் அமைப்புகளும், குறிப்பாக யூத இளைஞர்கள் முன்னணி பங்கு வகித்துள்ளனர்.

சியோனிசத்தையும் இனப்படுகொலையையும் யூத விரோதத்துடன் எதிர்ப்பது என்ற சமன்பாடு தவறானது மட்டுமல்ல மற்றும் அவதூறானது ஆகும். முதலாளித்துவம், பாசிசம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இடது-சாரி எதிர்ப்பை குற்றமாக்கும் அதேவேளையில், உண்மையான பாசிச மற்றும் யூத எதிர்ப்பு வலதுகளை வலுப்படுத்தவும் புனர்வாழ்வளிக்கவும் அது உதவுகிறது.

டொனால்ட் டிரம்பின் ஆதரவாளரும், ஜனவரி 6 பாசிச ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியின் ஆதரவாளரான பாசிச, நியூயோர்க் குடியரசுக் கட்சியின் பிரதிநிதி எலிஸ் ஸ்டெபானிக் இந்த பிரச்சாரத்தை முன்னின்று நடத்துவது தற்செயல் நிகழ்வு அல்ல. ஸ்டெபானிக் இனவெறி மற்றும் யூத எதிர்ப்பு “பெரும் இடம்பெயர்வுக் கோட்பாட்டை” பின்பற்றுகிறார். இது “வெள்ளையர்” நாடுகளில் வெள்ளையர் அல்லாத புலம்பெயர்ந்தவர்களை அதிக அளவில் நிரப்புவதற்கு சர்வதேச யூதர்கள் சதி செய்வதாக குற்றம் சாட்டுகிறது. குடியரசுக் கட்சியில் அப்பட்டமான நவ-நாஜி, வெள்ளையின மேலாதிக்கவாத மற்றும் கிறிஸ்தவ அடிப்படைவாத சக்திகள் வகிக்கும் அதிகரித்து வரும் மேலாதிக்க பாத்திரத்தின் உருவகமாக அவர் உள்ளார்.

ஜனநாயக உரிமைகள் மீதான இந்த அதிவலதுத் தாக்குதலுக்கு ஜனநாயகக் கட்சி முழுமையாக உடந்தையாக உள்ளது. பல ஆண்டுகளாக, ஜனநாயகக் கட்சியும், நியூயோர்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகளும், 1619 திட்டம் போன்ற அமெரிக்க ஜனநாயகப் புரட்சிகளின் வரலாற்றை இனவாதப் பொய்மைப்படுத்துதல் மற்றும் #MeToo போன்ற ஜனநாயக விரோத வேட்டை பிரச்சாரங்கள் மூலம் ஜனநாயக நனவுக்கு குழிபறிக்க திட்டமிட்டுச் செயல்பட்டு வருகின்றன.

இப்போது, ​​காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலை தொடர்பாக, ஜனநாயகக் கட்சியும் பைடென் நிர்வாகமும் பாசிச சக்திகளுடன் தங்கள் நடைமுறைக் கூட்டணியை பலப்படுத்தி வருகின்றன. ஸ்டெபானிக் போன்ற நபர்கள் இப்போது “யூத எதிர்ப்பின் எதிர்ப்பாளர்கள்” என்று சட்டபூர்வமாக்ப்பட்டுள்ள நிலையில், உக்ரேனிய நவ-நாஜிக்கள் “ஜனநாயகத்திற்கான” போராளிகள் என்றும் ரஷ்யாவிற்கு எதிரான ஏகாதிபத்தியப் போரை நடத்துவதற்கு நேட்டோவால் ஆயுதபாணியாக்கப்பட்டவர்கள் என்றும் போற்றப்படுகிறார்கள், பெஞ்சமின் நெதன்யாகுவின் பாசிசக் கும்பலானது காஸா மக்கள் மீது அமெரிக்கத் தயாரிப்பு குண்டுகள், செல்கள் மற்றும் ஏவுகணைகளை பொழிந்து வருகிறது.

அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளிலுள்ள அதன் பினாமிகளின் ஏகாதிபத்திய வெறியாட்டத்திற்கும், ஜனநாயக உரிமைகள் மீதான அரசு தலைமையிலான தாக்குதலுக்கும் உள்நாட்டில் பாசிச சக்திகளை வலுப்படுத்துவதற்கும் இடையே ஒரு தீர்க்க முடியாத தொடர்பு உள்ளது. ஐ.நா. பாதுகாப்பு சபையில் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்திற்கு வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியமை, காஸா இனப்படுகொலையானது அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் ஒரு அரசு கொள்கை என்பதை தெளிவாக்குகிறது. ஜனநாயகக் கட்சியின் பெயரளவில் “இடது” பிரிவின் பிரதான பிரதிநிதியான பேர்னி சாண்டர்ஸ் பகிரங்கமாக போர்நிறுத்தத்தை எதிர்த்துள்ளார்.

காஸாவில் பாசிச வெகுஜன படுகொலையின் இந்த வெளிப்படையான அரவணைப்பு உலகின் ஒரு புதிய ஏகாதிபத்திய மறுபிரிவினையின் ஒரு பகுதியாகும், இது உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான ஏகாதிபத்திய-தூண்டப்பட்ட போரில் தொடங்கி, இப்போது நூறாயிரக்கணக்கான இறப்புகளுடன் அதன் இரண்டாவது ஆண்டை எட்டியுள்ளது. மத்திய கிழக்கில் நடக்கும் மோதல் அமெரிக்க-நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போரில் ஒரு புதிய முன்னணி களத்தைக் குறிக்கிறது. சீனாவுக்கு எதிரான போர் ஏற்பாடுகளும் மிகவும் முன்னேறியுள்ளன. பாலஸ்தீனியர்கள் மீது திணிக்கப்படும் அதிர்ச்சியூட்டும் வன்முறையுடன், ஏகாதிபத்திய சக்திகள் வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் தங்கள் ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பை எவ்வாறு கையாள உத்தேசித்துள்ளன என்பதற்கான ஒரு செய்தியை அனுப்புகின்றன.

ஆனால் இக்கொள்கையானது பெருகிவரும் மக்கள் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. பேச்சு சுதந்திரத்தின் மீதான அப்பட்டமான ஒடுக்குமுறை, அமெரிக்க அரசியல் ஸ்தாபகம் ஏற்கனவே “இளைஞர்களை இழந்துவிட்டோம்” என்பதையும், தங்கள் கொள்கைகளுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்பதையும், கடந்த காலங்களைப் போல இனியும் பொதுக் கருத்தைத் திணிக்க முடியாது என்பதையும் ஒப்புக்கொள்கிறது. இடைவிடாத இஸ்ரேலிய-சார்பு போர் பிரச்சாரம் மற்றும் தணிக்கை மற்றும் அச்சுறுத்தல் முயற்சிகள் இருந்தபோதிலும், மில்லியன் கணக்கான மக்கள் பாரிய போராட்டங்களில் இறங்கியுள்ளனர் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இனப்படுகொலைக்கு எதிரான தங்கள் எதிர்ப்பில் உறுதியாக உள்ளனர்.

2022 நவம்பரில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பான சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பானது, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஒரு உலகளாவிய பாரிய போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான அழைப்பை விடுத்தது. காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலைக்கு எதிராக உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களின் பாரிய ஆர்ப்பாட்டங்களுடன், இந்த இயக்கம் உருவாகத் தொடங்கியுள்ளது, மேலும் இது சர்வதேச அளவில் வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சியுடன் ஒத்துப்போகிறது.

வர்க்க நோக்குநிலை மற்றும் அரசியல் தலைமை பற்றிய முக்கியமான கேள்விதான் இப்போது பிரதானமாக உள்ளது. வாஷிங்டன், லண்டன், பேர்லின், பாரிஸ் மற்றும் ஜெருசலேமில் இனப்படுகொலை செய்தவர்களிடம் வேண்டுகோள் விடுப்பதன் மூலம் காஸா இனப்படுகொலையை நிறுத்த முடியாது என்பதை கடந்த இரண்டு மாத கசப்பான அனுபவங்கள் நிரூபித்துள்ளன. வன்முறைகள் மட்டுமே அதிகரித்துள்ளன. ஆயுத உற்பத்தி மற்றும் ஆயுத ஏற்றுமதியை நிறுத்துவதன் மூலம் படுகொலையை நிறுத்தக்கூடிய ஒரே சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே.

எங்கள் நவம்பர் 2022 அறிக்கையில் கோடிட்டுக் காட்டியபடி:

IYSSE ஆனது போருக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர்களின் ஆதரவை மட்டும் கோரவில்லை. உலக முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்தில் முன்னணி மற்றும் தீர்க்கமான புரட்சிகர சக்தியாக, ஒரு சோசலிச வேலைத்திட்டத்துடன் ஆயுதபாணியாக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியிலேயே ஏகாதிபத்தியத்தின் தோல்வி தங்கியிருக்கின்றது என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். உலக வரலாற்றில் தொழிலாள வர்க்கத்தின் மிகப் பெரிய தலையீடான ரஷ்யப் புரட்சிதான் முதலாம் உலகப் போரின் முதல் பூகோளப் படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைத்தது போலவே, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தலையீடுதான் இன்று மூன்றாம் உலகப் போரை நோக்கிய விரிவாக்கத்தை நிறுத்தும்.

எனவே IYSSE ஆனது, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலுமுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறது: தொழிற்சாலைகள் மற்றும் வேலைத் தளங்களுக்குச் செல்லுங்கள்! ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பிரதான சக்தியாக தொழிலாள வர்க்கத்தை நோக்கித் திருப்புங்கள்! ஏகாதிபத்திய போர், பாசிசம் மற்றும் ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக போராடுங்கள்! இதற்கு பின்வரும் கோரிக்கைகளை எழுப்புங்கள்:

  • ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்போம்! இனப்படுகொலையை எதிர்ப்பவர்கள் மீது கை வைக்காதே!
  • அனைவருக்கும் இலவச, உயர்தரமான கல்வி உரிமைகளுக்காக! சிஐஏ, இராணுவம் மற்றும் பெருநிறுவன பில்லியனர்களை வளாகங்களிலிருந்து தூக்கியெறியுங்கள்!
  • ஏகாதிபத்திய போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத் தொழிலாளர்களின் ஒரு ஐக்கியப்பட்ட இயக்கத்திற்காக!

இந்த வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்பவர்கள் உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் IYSSE பிரிவுகளை நிறுவ போராட வேண்டும்.

Loading