முன்னோக்கு

பிரித்தானியா ஜனநாயக உரிமைகள் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொள்வதாக ஐ.நா மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

just stop oil குழுவைச் சேர்ந்த சூழல் ஆர்வலர்கள், லண்டனில், சாலையில் நடந்து செல்லும் போக்குவரத்தை மெதுவாக்கும் போது, ​​காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். திங்கட்கிழமை, அக்டோபர் 30, 2023 [AP Photo/Kin Cheung]

ஜனநாயக உரிமைகள் மீது, திட்டமிட்ட தாக்குதலைத் தொடுத்துள்ள பிரித்தானியா அரசாங்கம், போராட்டங்களைத் தடை செய்து, சுதந்திரமான பேச்சுரிமையில் பெரும் தலையீடு செய்து, மனித உரிமைச் சட்டங்களை அப்பட்டமாகப் புறக்கணிக்கிறது. பிரித்தானியா ஆளும் வர்க்கத்தின் எதேச்சாதிகாரத் திருப்பம், மனித உரிமைக் கண்காணிப்பாளர்களிடமிருந்து விமர்சனத்திற்கு உள்ளாகும் அளவுக்கு உச்சரிக்கப்படுகிறது.

மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “பாலஸ்தீனிய சார்பு போராட்டக்காரர்கள் மற்றும் காலநிலை ஆர்வலர்கள் சமீபத்தில் அனுபவித்ததைப் போல, அமைதியான போராட்டத்திற்கான உரிமைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது, மேலும் நாடு இடம்பெயர்வு மற்றும் அகதிகள் தொடர்பாக உலகளாவிய போட்டியில் அடிமட்டத்திற்கு சேர்ந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

கார்டியனிடம் பேசுகையில், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரித்தானிய இயக்குனர் யாஸ்மின் அகமது இதுபற்றி அப்பட்டமாக தெரிவித்திருந்தார். “முந்தைய அரசாங்கங்களில், அவர்கள் தேசிய அல்லது சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மதித்து, மனித உரிமை நீதிமன்றங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற எண்ணத்தை எப்போதும் ஏற்படுத்த முயற்சித்துள்ளனர். இன்று, அவ்வாறு செய்ய எந்த முயற்சியும் இல்லை, - உண்மையில், இது முற்றிலும் நேர்மாறானது” என்று அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எதேச்சதிகாரம் போல தோற்றமளிக்கத் தொடங்கியுள்ளதாக, இதனை விவரித்த அகமது, “உள்நாட்டு மனித உரிமைச் சட்டங்களை அழிப்பது மற்றும் அதன் சர்வதேசக் கடமைகளைப் புறக்கணிப்பது பற்றி அரசாங்கம் பேசுவது மட்டுமல்லாமல், அமைதியான போராட்டத்திற்கான உரிமையின் மீது வெளிப்படையான தாக்குதலையும் தொடுத்துள்ளது. காலநிலை எதிர்ப்பாளர்களை அடைத்து வைப்பது, அகதிகளை குற்றவாளிகளாக்குவது மற்றும் பொதுமக்களுக்கு மேலாக, பொலிசுக்கு முன்னெப்போதும் இல்லாத அதிகாரங்களை வழங்கியுள்ளது” என்று குறிப்பிட்டார்.

பிரித்தானியா உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறி, புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் சட்டமூலத்தில் இருந்து மனித உரிமைச் சட்டத்தை “நீக்குவதற்கான” அரசாங்கத்தின் முன்மொழிவை அகமது கண்டித்தார்.

இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்களுக்கு எதிராக மிக மோசமான சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம், ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்திய பிரதமர் ரிஷி சுனக், “ஹமாஸ் ஒரு தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு என்பதை நான் அனைவருக்கும் நினைவூட்டுகிறேன். மக்கள் ஹமாஸுக்கு ஆதரவளிக்கக் கூடாது, அவ்வாறு செய்தால் மக்கள் பொறுப்புக்கூறுவதை உறுதி செய்வோம்” என்று குறிப்பிட்டார். காஸாவில் இனப்படுகொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானவர்களை இங்கிலாந்து போலீசார் கைது செய்துள்ளனர்.

அரசாங்கத்தின் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இனப்படுகொலைக்கு எதிராக, பிரித்தானியாவில் மில்லியன் கணக்கான மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர், நவம்பர் 11 அன்று லண்டனில் ஒரு மில்லியன் பேர் வரை பேரணி நடத்தினர்.

காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பை குற்றமாக்க பிரித்த்தானிய அரசாங்கத்தின் முயற்சிகள், ஜனநாயக உரிமைகள் மீதான உலகளாவிய தாக்குதலின் ஒரு பகுதியாகும். பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில், அதிகாரிகள் போராட்டங்களை தடை செய்ய முயன்றனர். அமெரிக்காவில், போராட்டக்காரர்கள் “பயங்கரவாதிகளுடன் ஒற்றுமையை” வெளிப்படுத்துவதாகக் குற்றம் சாட்டி செனட் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது, மேலும் பல பல்கலைக்கழகங்கள் பாலஸ்தீனத்தில் நீதிக்கான மாணவர்கள் அமைப்பை தடை செய்ய முடிவு செய்தன.

பொதுவாக ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கையை நெருக்கமாகப் பின்பற்றுகின்ற மனித உரிமைகள் கண்காணிப்பகம், பிரித்தானியா பற்றி இதுபோன்ற அப்பட்டமான கருத்துக்களை கூறுவது, பிரித்தானிய ஆளும் வர்க்கம் எவ்வளவு விரைவாக ஜனநாயக ஆட்சி வடிவங்களை வலது பக்கம் இழுக்கிறது என்பதற்கான அறிகுறியாகும். குறிப்பிடத்தக்க வகையில், “இந்த அணுகுமுறை, மற்ற மனித உரிமைகளை மீறுபவர்களை தடுத்து நிறுத்தும் நமது திறனை குறைமதிப்பிற்கு உட்படுத்துவது மட்டுமல்ல, சர்வதேச அரங்கில் பொறுப்புக்கூற வைக்கும் திறனையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றது” என்று யாஸ்மின் அகமது எச்சரித்தார்.

காலநிலை எதிர்ப்பாளர்கள் மீதான பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கடுமையான தண்டனைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான பரந்த தாக்குதல்களை ஐக்கிய நாடுகள் சபை விமர்சித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில், just stop oil குழுவுடன் தொடர்புடைய இரண்டு எதிர்ப்பாளர்களான மோர்கன் ட்ரோலாண்ட் மற்றும் மார்கஸ் டெக்கர் ஆகியோருக்கு, கடந்த அக்டோபரில் “பொதுமக்களுக்கு இடையூறு” ஏற்படுத்தியதற்காக முறையே மூன்று மற்றும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டன. லண்டனுக்கு கிழக்கே உள்ள டார்ட்போர்ட் கிராசிங் பாலத்தின் மீது பதாகையை விரிக்க ஏறிய இருவரையும் அகற்றுவதற்கு 24 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அவர்களின் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்த டேனியல் பிரைட்மேன் கே.சி என்பவர், “நவீன காலத்தில், இந்த நாட்டில் அகிம்சை வழிப் போராட்டங்கள் நடத்தப்பட்ட வழக்கில்” இவையே மிக நீண்ட காலம் என்று குறிப்பிட்டார். மேலும் “இந்த வகையான எதிர்ப்பைக் காட்டிலும் அனைத்து போராட்டங்களிலும் உறையவைக்கும் விளைவை ஏற்படுத்தும் அபாயம்” இருப்பதாக எச்சரித்தார்.

ஜூலை மாதம் அவர்களது மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது. தலைமை நீதிபதி சூ கார், “இந்த வகையான குற்றங்களுக்கு விதிக்கப்பட்ட முந்தைய தண்டனைகளை விட இந்த சிறைத்தண்டனைகள் மிக அதிகம்” என்று ஒப்புக்கொண்டார். ஆனால் நீதிபதிகள் “பாராளுமன்றத்தின் விருப்பத்தை” பின்பற்றுகிறார்கள் என்று போலீஸ், குற்றம், தண்டனை மற்றும் நீதிமன்றங்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. “அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் கூடிய, வன்முறையற்ற எதிர்ப்பு நடவடிக்கையை வெளிப்படையாக உள்ளடக்கிய பொதுமக்களை இடையூறு செய்யும் குற்றமும் இதில் அடங்கும்”.

காலநிலை மாற்றத்தின் சூழலில், மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பது குறித்த ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளரின் கவலை தெரிவிக்கும் கடிதத்தை, இயன் பிரே ஆகஸ்ட் 15 அன்று இங்கிலாந்து அரசாங்கத்திற்கு அனுப்பினார்.

இந்தக் கடிதம், சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்ப்பாளர்களைக் குறிக்கிறது மற்றும் “கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான ஒன்றுகூடல் மற்றும் சங்கம் அமைப்பது ஆகியவற்றுக்கு சுதந்திரத்திற்கான அவர்களின் உரிமைகளைப் பயன்படுத்துவதைப் பற்றிய” கவலையை வெளிப்படுத்துகிறது என்று கடந்த வாரம் பிபிசி செய்தி வெளியிட்டது. “தண்டனைகளின் தீவிரம், சிவில் சமூகம் மற்றும் செயல்பாட்டாளர்களின் வேலையின் மீது ஏற்படுத்தக்கூடிய சாத்தியமான விளைவுகள் குறித்து அவர் தீவிரமாக கவலைப்படுவதாக” பிரே கூறுகிறார்.

பொது ஒழுங்கு சட்டம், “அமைதியாக ஒன்று கூடும் உரிமையின் மீதான நேரடித் தாக்குதலாகத் தோன்றுகிறது” என்று அந்தக் கடிதம் வாதிடுகிறது. “ஏன்… பொது ஒழுங்குச் சட்டத்தை அறிமுகப்படுத்தி நிறைவேற்றுவது அவசியம் மற்றும் பொது ஒழுங்குச் சட்டம் மற்றும் திரு. டெக்கர் மற்றும் திரு. ட்ரோலாண்ட் ஆகியோரின் தண்டனை சர்வதேச விதிமுறைகள் மற்றும் தரநிலைகளுடன் எவ்வாறு ஒத்துப்போகிறது” என்று அக்கடிதம் கேட்கிறது.

பொது ஒழுங்கு சட்டம் எவ்வாறு சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு இணங்குகிறது என்று, தானும் மற்ற நான்கு ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர்களும் கையெழுத்திட்டு கேட்ட கடிதத்துக்கு பதிலளிக்கப்படவில்லை.

குறிப்பாக 60 நாட்களுக்குள் பதிலைக் கோரிய போதிலும், அவருடைய சொந்தக் கடிதம் அதே விதியை சந்தித்தது. இது தொந்தரவாக இருப்பதாகவும், தற்போதைய அரசாங்கத்தின் மனித உரிமைகள் குறித்த பொதுவான அலட்சியத்தைப் இது பிரதிபலிப்பதாகவும் அவர் பிபிசியிடம் கூறினார்.

பிபிசி தனது கட்டுரையை வெளியிட்ட பிறகு, பிரதமர் ரிஷி சுனக் ஐநா அதிகாரிக்கு தனது போர்வெறிமிக்க பதிலை அளித்து, X இல் பதிவிட்டார். “சட்டத்தை மீறுபவர்கள் அதன் முழுப் பலத்தையும் உணர வேண்டும். சுயநல போராட்ட எதிர்ப்பாளர்கள், கடுமையாக உழைக்கும் பெரும்பான்மையான மக்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஈடுபட்டால், கடுமையான தண்டனைகளை எதிர்கொள்வது முற்றிலும் சரியானது” என்று அவர் தெரிவித்தார்.

சில வருடங்களுக்கு முன்புதான், ஐ.நா. மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பு போன்ற அமைப்புகள் “சர்வதேச விதிகள் அடிப்படையிலான ஒழுங்குமுறையின்” பாதுகாவலர்கள் என்ற ஏகாதிபத்தியத்தின் கூற்றுகளுக்கு இலவச அரசாங்க அனுமதியை வழங்க முடிந்தது. இது மனிதாபிமானம் மற்றும் மனித உரிமைகளின் மொழியில், போர்வை அணிந்த ஏகாதிபத்திய நலன்களின் ஆட்சியை மட்டுமே குறிக்கிறது.

ஆனால் வன்முறை மற்றும் எதேச்சதிகாரத்துடன் அரசாங்கங்கள், பெருகிய முறையில் ஆழமான, விரோதமான மக்கள் மீது ஆட்சி செய்ய நிர்ப்பந்திக்கப்படுவதால், இந்தப் புனைகதை தகர்ந்து போகிறது. காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு ஏகாதிபத்திய அரசாங்கங்கள் மற்றும் முக்கிய எதிர்க்கட்சிகளின் பாரிய ஆதரவு, இந்த செயல்முறையை விரைவாக துரிதப்படுத்தியுள்ளது.

ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான காலநிலை ஆர்வலர்களின் அமைதியான போராட்ட தந்திரோபாயங்களை ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்தி, புதிய சர்வாதிகார சட்டங்களை செயல்படுத்தும் அவர்களின் நோக்கம் மிகவும் விரிவானது. காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிரான தேசிய ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட மில்லியன் கணக்கானவர்களின் மூர்க்கமான கண்டனங்கள் மற்றும் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை நேரடியாக குறிவைக்கும் சட்டங்களை இயற்றியதன் மூலம், இந்த உண்மை தெளிவாகியுள்ளது. ஆளும் வர்க்கம் தொழிலாள வர்க்கத்துடன் ஒரு பாரிய மோதலுக்கு தயாராகி வருகிறது.

மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் ஐ.நா ஆகியவை குறிப்பாக தற்போதைய அரசாங்கத்தைக் குறிப்பிட்டாலும், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கும் இடையே எந்த வேறுபாடும் கிடையாது.

ஏகாதிபத்தியம் மற்றும் போருக்கு எதிரான எதிர்ப்பை இலக்காகக் கொண்டு, இப்போது நடத்தப்படும் பிரச்சாரத்தின் முன்னோடியாக இது பயன்படுத்தப்படுகிறது என்பதை முழுமையாக அறிந்திருந்தும், காலநிலை போராட்டக்காரர்கள் மீதான ஒடுக்குமுறையை தொழிற்கட்சி ஆதரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், Just Stop Oil அமைப்பின் எதிர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் அரசு “சும்மா நிற்பதை நிறுத்துங்கள் மற்றும் தங்கள் வேலைகளை தொடருங்கள்”  என்று நிழல் நீதித்துறை செயலாளர் ஸ்டீவ் ரீட் அழைப்பு விடுத்துள்ளார். இந்த அக்டோபர் மாதம், நீண்ட தண்டனைகளுக்கு தனது ஆதரவை அறிவித்த தொழிற்கட்சித் தலைவர் சேர் கெய்ர் ஸ்டார்மர், பொது வழக்குகளின் இயக்குநராக இருந்தபோது (2008-2013) இந்த நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறினார்.

பாலஸ்தீனிய போராட்ட எதிர்ப்புக்கள் என்று வரும்போது, “இடது யூத-விரோத”  சூனிய வேட்டையை முன்னின்று நடத்திய தொழிற்கட்சியானது, பெருநகர பொலிஸின் மிகவும் அர்ப்பணிப்புள்ள ஆதரவாளர்களாக முன்னேறியுள்ளது. பொலிஸ் ஏற்கனவே நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்களை கைது செய்துள்ளதுடன், மேலும் மேலும் செல்வதற்கு அதற்கு தேவையான கருவிகளைக் கேட்கிறது.

பொலிஸ்-அரசு ஆட்சிக்கு திரும்புவது ஒரு தனிப்பட்ட பிரித்தானியாவின் நிகழ்வு அல்ல. ஜேர்மனி கடந்த ஆண்டுகளில் காலநிலை மாற்ற போராட்ட எதிர்ப்பாளர்கள் மீது கடுமையான ஜனநாயக விரோத ஒடுக்குமுறையை மேற்கொண்டது, இன்று பாலஸ்தீனிய சார்பு ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்குவதற்கான சோதனை ஓட்டமாக செயல்படுகிறது. இது பிரான்சிலும் பிரதிபலிக்கிறது. ஜனநாயக உரிமைகள் மீதான முன்னணித் தாக்குதல் என்பது, வெகுஜன எதிர்ப்பின் முகத்தில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளும் ஒரு ஆளும் வர்க்கத்தின் உலகளாவிய பிரதிபலிப்பாகும், மேலும் அரசு அடக்குமுறையைத் தவிர அதனிடம் வேறு எந்தப் பதிலும் இல்லை.

Loading