ஹெலன் ஹல்யார்டுக்கு ஒரு அஞ்சலி (நவம்பர் 24, 1950-நவம்பர் 28, 2023)

73 வயதில் ஹெலன் ஹல்யார்டின் (Helen Halyard) எதிர்பாராத மற்றும் திடீர் மரணம், சோசலிசத்திற்கான ஒரு தைரியமான மற்றும் தன்னலமற்ற போராளியை அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கம் இழந்துள்ளது. அவரது மறைவு, அதே நேரத்தில் சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா) மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளில் உள்ள அவரது தோழர்களுக்கு ஒரு மகத்தான தனிப்பட்ட இழப்பாகும், அவர்களில் பலர் ஹெலனுடன் பல தசாப்தங்களாக நெருக்கமாகப் பணியாற்றியுள்ளனர்.

ஹெலன் ஹால்யார்ட்

1971ல் வேர்க்கர்ஸ் லீக்கில் (சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி) சேர்ந்ததில் இருந்து, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பணியில் ஹெலன் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். வெகுஜன சிவில் உரிமைகள் இயக்கம் மற்றும் வியட்நாம் போருக்கு எதிரான போராட்டத்தால் அரசியல் ரீதியாக தீவிரமயமாக்கப்பட்ட அவர், ஆப்பிரிக்க-அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் மிகவும் முன்னேறிய பிரிவுகளின் பாரம்பரியம் மற்றும் போராட்ட மரபுகளில் ஆழமாக (அறிவு ரீதியாக, கலாச்சார ரீதியாக மற்றும் உணர்வு ரீதியாக) வேரூன்றி இருந்தார்.

வேர்க்கர்ஸ் லீக்கில் இணைந்து கொள்வதற்கு முன்பே, ஹெலன் அமெரிக்காவில் இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பரந்த சர்வதேச வர்க்கப் போராட்டத்துடன் அடையாளம் காட்டினார். இந்த உள்ளார்ந்த போக்கு ஹெலனை அனைத்து வகையான தேசியவாத அரசியலிலிருந்தும் முறித்துக் கொண்டு வேர்க்கர்ஸ் லீக்கில் சேர வழிவகுத்தது. ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு அவரது மாற்றம் மிகவும் நனவாக இருந்தது. ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பப்லோவாத சோசலிச தொழிலாளர் கட்சியால் ஆதரிக்கப்பட்ட கறுப்பின தேசியவாதத்திற்கு சந்தர்ப்பவாத தழுவலை ஹெலன் திட்டவட்டமாக நிராகரித்தார்.

52 ஆண்டுகள் நீடித்த ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் ஹெலனின் வரலாற்றுப் பங்கு பற்றிய முழுமையான ஆய்வு மற்றும் சுருக்கம் இந்த முதல் அஞ்சலியின் எல்லைக்கு அப்பாற்பட்டது. அவரது கட்சித் தோழர்கள், இன்றைய பயங்கர இழப்பில் இருந்து இன்னும் மீளவில்லை. ஆனால் அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாறு ஹெலன் ஹால்யார்டின் வாழ்க்கையுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது என்று சொல்ல வேண்டும்.

ஒரு புரட்சிகர கட்சி அதன் உறுப்பினர்களுக்கு கல்வி அளிக்கிறது. ஆனால், கட்சியின் அரசியல், சமூக, கலாச்சார மற்றும் தார்மீகத் தன்மையானது, அதன் உறுப்பினர்களின் குணாதிசயத்தால் ஆழமாகப் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக ஹெலனுக்கு இது பொருந்தும். அவரது ஆளுமைமிக்க அபரிமிதமான ஆற்றல், விதிவிலக்கான நுண்ணறிவு, சோசலிச நோக்கத்திற்கான, கொள்கைக்கான தீவிர அர்ப்பணிப்பு, அறிவுசார் ஒருமைப்பாடு, தனிப்பட்ட பெருந்தன்மை, நகைச்சுவை மற்றும் இரக்கம் ஆகியவற்றின் குறிப்பிடத்தக்க கலவையை வெளிப்படுத்தியது. கடந்த 50 ஆண்டுகளில் ட்ரொட்ஸ்கிச இயக்கம் மற்றும் வர்க்கப் போராட்டத்தின் முக்கிய அத்தியாயங்களின் அனைத்து விமர்சன அனுபவங்களின் மையமாக ஹெலன் இருந்துள்ளார்.

பல ஆண்டுகளாக ஹெலனுடன் பணிபுரியும் பாக்கியத்தைப் பெற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் நம்பகமான தோழரையும் அன்பான மற்றும் ஈடுசெய்ய முடியாத நண்பரையும் இழந்துள்ளனர். இளைய தலைமுறை உறுப்பினர்கள் ஒரு ஊக்கமளிக்கும் ஆசிரியரை இழந்துவிட்டனர்.

ஆனால் ஹெலன் ஹால்யார்டின் பணி சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வேலையிலும், அதே போல் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களிலும் உயிர்வாழும்.

Loading