முன்னோக்கு

காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராக லண்டனில் வெகுஜன எதிர்ப்பும் பூகோள ரீதியான போராட்டமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

காசாவில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிராக லண்டனில் 800,000ம் பேர் கலந்துகொண்ட போராட்டத்தின் ஒரு பகுதி, November 11, 2023

கடந்த வார இறுதியில், உலகம் முழுவதும் பரவி வரும் எதிர்ப்பு அலையின் ஒரு பகுதியாக, பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராக மில்லியன் கணக்கான மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உலகளாவிய சீற்றம், இனப்படுகொலையை ஆதரிக்கும் தங்கள் சொந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்களை நிறுத்தியுள்ளது.

இந்த போராட்டங்களில் மிகவும் அசாதாரணமானது லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமாகும். இஸ்ரேலுக்கான இரத்தவெறி ஆதரவில் அமெரிக்கா மற்றும் ஜேர்மனியுடன் இணைந்துள்ள ஏகாதிபத்திய பிரிட்டனின் தலைநகரின் தெருக்களில், முக்கால் மில்லியன் முதல் ஒரு மில்லியன் மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்த அணிவகுப்பில் இங்கிலாந்தின் முஸ்லீம் மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் மற்றும் அனைத்து இன பின்னணியைச் சேர்ந்த இளைஞர்களும் இருந்தனர். 56.5 மில்லியன் மக்கள் வசிக்கும் ஒரு நாட்டில், அதாவது அறுபது பேரில் ஒருவர் போர் நிறுத்தத்தைக் கோருவதற்கும் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதே இதன் பொருளாகும்.

இங்கிலாந்தில்தான் ஆளும் உயரடுக்கிற்கும் அதன் கட்சிகளுக்கும் மற்றும் திரளான உழைக்கும் மக்களுக்கும் இடையே உள்ள பிளவு மிகவும் முழுமையாக வெளிப்படுத்தப்படுகிறது. எனவே, ஒவ்வொரு நாட்டிலும் விரைவாக முதிர்ச்சியடையும் வெடிக்கும் மோதல்களுக்கு இது வழி காட்டுகிறது.

காஸா ஒரு வினையூக்க நிகழ்வாகும், இது பிரித்தானயாவிலுள்ள பழமைவாத அரசாங்கத்தின் மீது மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆளும் வர்க்கம் மற்றும் தொழிற்கட்சி உட்பட அதன் கட்சிகள் மீதும் உணரப்படும் வெறுப்புக்கான மையப் புள்ளியாக செயல்படுகிறது. டோனி பிளேயர் 2003ல் ஈராக் போருக்கு பிரிட்டனை பொய்களின் அடிப்படையில் ஈடுபடுத்தியதிலிருந்து, சேர் கெய்ர் ஸ்டார்மரின் இஸ்ரேலுக்கான ஆதரவு, அவரை மிகவும் வெறுக்கப்படும் தொழிற்கட்சித் தலைவராக ஆக்கியுள்ளது. இது பெருமளவிலான ராஜினாமாக்கள் மற்றும் உள் நகர பகுதிகளில் அவருக்கான ஆதரவு சரிவுக்கு வழிவகுத்ததுடன், பல ஆர்ப்பாட்டக்காரர்கள் ஸ்டார்மரை போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பதாக குறிப்பிட்டு, வீட்டில் தயாரிக்கப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியிருந்தனர்.

போர்-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை, பயங்கரவாத யூத எதிர்ப்பு ஆதரவாளர்கள் என்று அவதூறு செய்ய கன்சர்வேடிவ் அரசாங்கம் மற்றும் பத்திரிகைகளால் நடத்தப்பட்ட இழிவான பிரச்சாரத்திற்கு எதிரான வெகுஜன எதிர்ப்பின் செயலாக, இந்த எதிர்ப்பு போராட்டம் இருந்தது. போராட்டத்திற்கு முந்தைய வாரத்தில், தீவிர வலதுசாரி இனவாதியான உள்துறை செயலர் சுயெல்லா பிராவர்மேன், “வெறுக்கத்தக்க அணிவகுப்பை” பெருநகர பொலிசார் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். அவருக்கு பிரதமர் ரிஷி சுனக் ஆதரவு தெரிவித்தார். அரசாங்கத்தின் ஆணைகள் மற்றும் இஸ்ரேலுக்கான அதன் ஆதரவிற்கு, இது அதிக எதிர்ப்பைத் தூண்டும் என்று அவர்கள் அறிந்திருந்ததால் மட்டுமே பெருநகர பொலிசார், தடை விதிப்பதற்கு மறுத்தனர்.

இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பை, யூத எதிர்ப்பு என்று எல்லா இடங்களிலும் அரசாங்கங்கள் பொய்யைப் பரப்புகின்றன. உண்மையாக, இது பாசிச எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் முதலாளித்துவ எதிர்ப்பு ஆகியவற்றின் உலகளாவிய வெடிப்பை முன்னெடுத்துச் செல்கிறது.

பெரும் எண்ணிக்கையிலான யூதர்கள் கலந்துகொண்ட எதிர்ப்பு போராட்டங்களுக்கு எதிரான யூத-விரோத குற்றச்சாட்டுகள், அரசாங்கம், தொழிற்கட்சி மற்றும் ஊடகங்கள் தங்கள் சொந்த குற்றங்களை நியாயப்படுத்த ஒன்றும் செய்யாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. X/Twitter இல் பதிவிட்ட சனிக்கிழமை எதிர்ப்பு போராட்டத்துக்கு பிராவர்மேன் அளித்த பதிலால் இது உறுதிப்படுத்தப்பட்டது. “இதை தொடர முடியாது. வாரந்தோறும், லண்டனின் தெருக்கள் வெறுப்பு, வன்முறை மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவற்றால் மாசுபடுகின்றன. பொதுமக்களை இந்த கும்பல் பணிய வைக்க மிரட்டுகின்றனர். குறிப்பாக யூதர்கள் அச்சுறுத்தப்படுவதாக உணர்கிறார்கள். இதற்கு கூடுதல் நடவடிக்கைகள் தேவை” என்று அவர் பதிவிட்டார்.

இஸ்ரேல் அல்-ஷிஃபா மருத்துவமனையை முற்றுகையிட்டு குழந்தைகளைக் கொன்ற நாளில், மேற்குறிப்பிட்ட மோசமான வசனத்தை அவர் எழுதினார். இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர பிரேவர்மேன் மேலும் நடவடிக்கை எடுக்க விரும்பினால், அது முழு அளவிலான பொலிஸ் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு, சனிக்கிழமையன்று நடந்த போராட்டத்தின் சில பகுதிகளைத் தாக்க முயற்சித்த பாசிசக் கும்பலைத் திரட்டுவதை மட்டுமே குறிக்கும். காஸாவில் நெதன்யாகு எப்படி நடந்துகொள்கிறாரோ, அதேபோல் இங்கிலாந்தில் உள்ள எதிர்ப்பையும் பிரேவர்மேன் நடத்துவார்.

அனைத்து ஏகாதிபத்திய நாடுகளின் ஆளும் உயரடுக்குகளும் உள்நாட்டுப் போர் மற்றும் இன அழிப்பு மொழியைப் பயன்படுத்துகின்றன. கடந்த செவ்வாய், புளோரிடா மாநில சட்டமன்றத்தில் “உடனடியாக போரின் தீவிரத்தை குறைக்க மற்றும் போர்நிறுத்தம் மற்றும் புளோரிடியர்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாப்பதற்கு” அழைப்பு விடுத்த மசோதா, 104 க்கு 2 என்ற வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. ஜனநாயகக் கட்சியினர் குடியரசுக் கட்சியினருடன் இணைந்து மசோதாவின் ஆதரவாளரான மாநிலப் பிரதிநிதியான ஆங்கி நிக்சனைப் புறக்கணித்தனர்.

காஸாவில் 10,000ம் பாலஸ்தீனியர்கள் இறந்ததை நிக்சன் சுட்டிக்காட்டி கேட்டபோது: எத்தனை பேர் போதும்? பிரதிநிதி மைக்கேல் சால்ஸ்மேன் தரையில் இருந்து, “எல்லோரும்!” என்று கூறினார்.

இனப்படுகொலைக்கான இந்த வெளிப்படையான ஆதரவு பைடென் நிர்வாகம் மற்றும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபனத்தின் கொள்கையை அப்பட்டமான வடிவத்தில் வெளிப்படுத்துகிறது. புளோரிடா மாநிலத்தின் பாசிச கவர்னர் ரொன் டிசாண்டிஸ், இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிரான மாணவர் குழுக்களை கலைத்துள்ளார்.

கடந்த மாதம், இஸ்ரேலின் நடவடிக்கைக்கு எதிரான மாணவர்களை யூத விரோதிகள் என்று முத்திரை குத்தும் ஒரு பிரேரணையை அமெரிக்க செனட் ஏகமனதாக நிறைவேற்றியது, கொலம்பியா, பிரவுன் மற்றும் பிராண்டீஸ் பல்கலைக்கழகங்கள் உட்பட நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் பாலஸ்தீனத்தில் நீதிக்கான மாணவர்களையும், அமைதிக்கான யூத குரல்களையும் இடைநீக்கம் செய்துள்ளன அல்லது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளன.

இங்கிலாந்தில் நடந்த காஸா போராட்டங்கள், தொற்றுநோய்களின் போது 200,000 க்கும் மேற்பட்ட இறப்புகளுக்கு காரணமான ஒரு அரசாங்கத்தின் மீதான வெறுப்பையும், திட்டமிட்ட முறையில் ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலையும் வெளிப்படுத்த மில்லியன் கணக்கானவர்களுக்கு வழிவகுத்துள்ளன.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜோன்சன் கட்டாயமாக ராஜினாமா செய்ததில் இருந்து, கன்சர்வேடிவ் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது சர்வதேச அளவில் வர்க்கப் போராட்டத்தின் மீள் எழுச்சிக்கு மத்தியில் வந்தது, ஆறு மாதங்களுக்குள் இரண்டு மில்லியன் தொழிலாளர்களை உள்ளடக்கிய வேலைநிறுத்த அலையை இங்கிலாந்து கண்டது. அவருக்குப் பதிலாக, மோசமான போர்வெறியர் லிஸ் ட்ரஸ், அவர்கள் எதிர்பார்த்த சிக்கன நடவடிக்கைகளை உடனடியாகத் திணிக்கத் தவறியதற்காக நிதிச் சந்தைகளின் உத்தரவின் பேரில் அகற்றப்படுவதற்கு முன்பு, பதவியில் 45 நாட்கள் மட்டுமே நீடித்தார்.

“பிரிட்டிஷ் அரசியல் ஒரு புரட்சிகர சூழ்நிலையின் அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிறது” என்று அக்டோபர் 20ம்திகதி, WSWSன் முன்னோக்கு குறிப்பிட்டிருந்தது. ஒரு பொது வேலைநிறுத்தம் மற்றும் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கான நிலைமைகள் இருந்தன என்ற உண்மையை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவம், டோரிகளுக்கான மரணதண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தன. தொழிற்சங்க அதிகாரத்துவம் இரயில், தபால், சிவில் ஊழியர்கள், கல்வியாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தங்களைத் தனிமைப்படுத்தி காட்டிக் கொடுத்தபோது, தொழிற்கட்சி தலைவர் ஸ்டார்மர் வேலைநிறுத்தங்களைக் கண்டித்து உக்ரேனில் போருக்கு உறுதியற்ற ஆதரவைப் பிரகடனம் செய்தார்.

“வெகுஜனங்களின் நோக்குநிலை முதலில் சிதைந்து வரும் முதலாளித்துவத்தின் புறநிலைமைகளாலும், இரண்டாவதாக, பழைய தொழிலாளர் அமைப்புகளின் துரோக அரசியலாலும் தீர்மானிக்கப்படுகிறது இந்தக் காரணிகளில், முதலாவது நிச்சயமாக மிகவும் தீர்க்கமானது: அது, அதிகாரத்துவ எந்திரத்தை விட வரலாற்று விதிகள் வலிமையானவையாகும்”. இந்த வாக்கியங்கள், ட்ரொட்ஸ்கியின் இடைமருவு வேலைத்திட்டத்தில் வலியுறுத்தப்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில், இந்த சுருக்கமான இடைவேளை முடிந்துவிட்டது.

இந்த கடுமையான வர்க்க முரண்பாடுகளின் நிலைமை ஒவ்வொரு நாட்டிலும் உள்ளது. பாலஸ்தீனியர்களைப் பாதுகாப்பதற்கான வெகுஜன இயக்கம், கடந்த தசாப்தங்களில் இருந்த பிற்போக்குத்தனமான அரசியல் தேக்கநிலை முடிவுக்கு வந்துவிட்டது என்பதற்கு சான்றாகும். காஸா என்பது உத்தியோகபூர்வ அரசியல் வாழ்க்கையின் மேற்பரப்பிற்கு அடியில் கட்டமைக்கப்பட்ட மக்கள் கோபத்தை பற்றவைத்த ஒரு தீப்பொறியாகும், இது முதலாளித்துவ அரசியல்வாதிகளும் ஊடகங்களும் கண்டுகொள்ளாமல் இருந்த கோபமாகும்.

உலக ஏகாதிபத்தியத்தின் நெருக்கடி பற்றிய மார்க்சிச மதிப்பீட்டின் அடிப்படையில், உலக சோசலிச வலைத் தளமானது 2020க்கான அதன் புத்தாண்டு முன்னோக்கு அறிக்கையில், இந்த வளர்ச்சியை எதிர்பார்த்து, “சோசலிசப் புரட்சியின் தசாப்தம் தொடங்குகிறது” என்று குறிப்பிட்டது.

“வர்க்கப் போராட்டத்தின் மேலாதிக்கம் மற்றும் புரட்சிகரமான அம்சம் அதன் சர்வதேச தன்மை ஆகும், இது நவீன கால முதலாளித்துவத்தின் உலகளாவிய தன்மையில் வேரூன்றியுள்ளது. மேலும், தொழிலாள வர்க்கத்தின் இயக்கம் இளைய தலைமுறையினரின் இயக்கமாகும், அது, எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு இயக்கமாகும்” என்று அந்த அறிக்கை விளக்கமாக கூறியது.

அறிக்கை தொடர்ந்தது:

தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சியும், சர்வதேச அளவில் வர்க்கப் போராட்டத்தின் எழுச்சியும், புரட்சிக்கான புறநிலை அடிப்படையாகும். எவ்வாறாயினும், தொழிலாளர்களின் தன்னெழுச்சியான போராட்டங்களும் சோசலிசத்திற்கான அவர்களின் உள்ளார்ந்த முயற்சியும் போதுமானதாக இல்லை. வர்க்கப் போராட்டத்தை சோசலிசத்திற்கான நனவான இயக்கமாக மாற்றுவது, அரசியல் தலைமையின் ஒரு கேள்வியாகும்.

காஸாவை வெற்றிகரமாக பாதுகாப்பதற்கும், போருக்கு எதிரான போராட்டமும், இப்போது தொழிலாள வர்க்கத்தில் வேரூன்றி, அனைத்து முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் ஆளும் வர்க்கத்தின் அரசியல் கட்சிகளுக்கு எதிராக இயக்கப்பட வேண்டும்.

தொழிலாள வர்க்கம் மட்டுமே இந்தத் தாக்குதலைத் தோற்கடித்து நிறுத்த முடியும். வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆயுத நிறுவனங்கள், கப்பல்துறைகள் மற்றும் விமான நிலையங்களின் புறக்கணிப்பு உட்பட தொழிலாள வர்க்க நடவடிக்கை, இஸ்ரேலுக்கு இராணுவ பயன்பாட்டிற்கான எந்தவொரு பொருட்களையும் அனுப்புவதைத் தடுக்கமுடியும். தொழிலாள வர்க்கத்தால் பொருளாதாரத்தை முடக்கி அரசாங்கங்களை வீழ்த்த முடியும்.

சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பாரிய சமூக சக்தியானது, போருக்கு எதிரான ஒரு பொது அரசியல் வேலைநிறுத்தத்தில் அணிதிரட்டப்பட வேண்டும். இது தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் காட்டுமிராண்டித்தனமான சிக்கன நடவடிக்கை மீது வெடிக்கும் கோபத்திற்கு ஒரு மையமாக இருக்கும். இந்த போராட்டமானது, தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிராக நடத்தப்பட வேண்டும். இந்த அதிகாரத்துவம், பாலஸ்தீனியர்களை பாதுகாக்க அணிதிரட்டுவதற்கு ஒன்றும் செய்யவில்லை மற்றும் ஆளும் வர்க்கத்தின் நலன்களை அச்சுறுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் தடுப்பதில் ஒரு கையாளாக செயல்பட்டு வருகிறது.

பாலஸ்தீனியர்களைக் கொன்று குவிப்பதன் மூலம், ஆளும் வர்க்கம் அதன் உலகளாவிய ஆதிக்கத்திற்கு எதிரான எந்த எதிர்ப்பும் நசுக்கப்படும் என்பதை நிரூபிக்க விரும்புகிறது. நாட்டிற்கு நாடு அதிகரித்து வரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்பு வடிவில் ஏற்கனவே எதிர் தாக்குதலை நடத்தத் தொடங்கியிருக்கும் பில்லியன் கணக்கான தொழிலாளர்கள், இந்தப் போராட்டத்தை ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவ இலாப முறைக்கு எதிரான நனவான போராட்டமாக வளர்த்தெடுக்க வேண்டும்.

Loading