காஸாவில் இனப்படுகொலையை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் வில் லேமனின் டிக்டாக் வீடியோவுக்கு பாரியளவிலான சர்வதேச விடையறுப்பு கிடைத்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

2022 இல் வேலைநிறுத்தம் செய்யும் மக் டிரக்ஸ் (Mack Trucks) வாகனத் தொழிலாளியும், ஐக்கிய வாகன தொழிலாளர் சங்கத்தின் (UAW) தலைவருக்கான சோசலிச வேட்பாளருமான வில் லேமன், இஸ்ரேலுக்கான ஆயுத உற்பத்திகள் மற்றும் ஏற்றுமதியை நிறுத்துவதன் மூலம் காஸாவில் இனப்படுகொலையை நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்த ஒரு டிக்டாக் வீடியோ சர்வதேச அளவில் நூறாயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது.

ஞாயிறன்று லேமன் தனது டிக்டாக் பக்கத்தில் வெளியிட்ட இந்த வீடியோவை, காஸாவில் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் கொலைகார தாக்குதலை தொழிலாள வர்க்கம் தலையிட்டு நிறுத்த வேண்டும் என்ற அவரது அழைப்பை ஆதரிக்கும் பார்வையாளார்களால் ஆயிரக்கணக்கான முறை பகிரப்பட்டுள்ளது.

வில் லேமனின் டிக்டாக் வீடியோ

இரண்டு நிமிடம் 15 விநாடிகள் கொண்ட அந்த வீடியோவில், லேமன் கூறுகிறார், அதாவது “அமெரிக்க அரசாங்கம் மற்றும் இரு முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் முழு ஆதரவையும் கொண்ட பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் அரசாங்கம் தொடர்ந்து படுகொலை செய்வதை நான் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறேன். நடப்பது ஒரு போர்க் குற்றத்திற்கு சற்றும் குறைந்ததல்ல, அதை தடுக்க தொழிலாள வர்க்கம் விழிப்புணர்வூட்டப்பட்டு அணிதிரட்டப்பட வேண்டும்.”

“இஸ்ரேலுக்கு தயாரிக்க ஒதுக்கப்பட்ட ஆயுதங்களைக் உற்பத்தி செய்ய மறுக்குமாறும், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு செல்ல மறுக்குமாறும், இஸ்ரேலின் மிருகத்தனமான மற்றும் சட்டவிரோத முற்றுகையை செயல்படுத்துவதில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் உலகத் தொழிலாளர்களைக் கேட்டுக் கொள்ளுவதாக” சம்பந்தப்பட்ட தொழில்துறைகளிலுள்ள தொழிலாளர்களுக்கு பாலஸ்தீனிய தொழிற்சங்கங்களின் பொது சம்மேளனம் விடுத்த வேண்டுகோளை லேமன் முழுமையாக வழிமொழிகிறார்.

பின்னர் அவர் இஸ்ரேலிய இராணுவத்திற்கான அனைத்து இராணுவ தளபாட உபகரணங்களின் உற்பத்தியையும் நிறுத்துமாறு ஐக்கிய வாகனத் தொழிலாளர்களைக் (UAW) இவ்வாறு கோருகிறார், “இஸ்ரேலுக்கான வெடிபொருட்கள் மற்றும் இராணுவ தளபாட உபகரணங்களின் உற்பத்தி நிறுத்தப்படும்போது, பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகளிலுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் அவர்களின் சம்பளத்தில் 100 சதவிகிதம் போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களுடனான ஒப்பந்தங்களிலிருந்து இலாபம் அடைந்த பெருநிறுவனங்களால் வழங்கப்பட வேண்டும்.”

லேமனின் இந்த அறிக்கையானது டிக்டாக் பார்வையாளர்களிடமிருந்து வைரலான மற்றும் உற்சாகமான பதிலிறுப்பைப் பெற்றுள்ளது. சமூக ஊடக வீடியோ பகிர்வுத் தளங்களில் பெரும்பாலோர் இளைஞர்கள் ஆவார்கள். எடுத்துக்காட்டாக, ஒரு கணக்கெடுப்பின்படி, அமெரிக்காவில் மதிப்பிடப்பட்ட 80 மில்லியன் செயற்பாட்டிலுள்ள டிக்டாக் பயன்பாட்டாளர்களில் 60 சதவீதம் பேர் - சுமார் 48 மில்லியன் பேர்கள் - 16 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள்.

பயன்பாட்டாளரான useractual என்பவர் லேமனின் டிக்டாக் வீடியோவின் ஒரு மறுபதிவு செய்யப்பட்டமையானது, இதை எழுதிக்கொண்டிருக்கும் போது, சுமார் 221,000 பார்வைகளையும், 4,000 க்கும் மேற்பட்ட பகிர்வுகளையும், 3,000 க்கும் மேற்பட்ட அபிப்பிராயக் கருத்துகளையும் பெற்றுள்ளது. காஸாவில் சியோனிச அரசின் குற்றங்களைத் தடுக்க தொழிலாள வர்க்கம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற லேமனின் வேண்டுகோள் டிக்டாக் பயன்பாட்டாளர்களிடையே பெரும் சக்திவாய்ந்த ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை சில கருத்துக்களின் விரைவான மதிப்பாய்வு காட்டுகிறது.

எமி என்பவர் இவ்வாறு எழுதினார், “மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அவர்களால் இதைச் செய்ய முடியாது, நாங்கள் நினைப்பதை விட எங்களுக்கு அதிக சக்தி உள்ளது. நன்றி!!”

பூயர் எழுதினார், “ஆமாம்! “சர்வதேச தொழிலாள வர்க்கம் என்பது உலகளாவிய ஐக்கியம் நான் தேடிக்கொண்டிருக்கிறேன்!!”

ஃபூபர்ட் என்பவர், “இது போன்ற பலர் சரியான விஷயத்திற்காக குரல் கொடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

ஹிரா லீ தனது ட்விட்டர் பக்கத்தில், “உங்கள் துணிச்சலுக்கும், பேச்சாற்றலுக்கும் நன்றி. தடைகளைத் தாண்டக்கூடிய, கேட்கக்கூடிய குரல் உங்களுடையது” என்றார்.

மேலும் MidnightBlue424 இவ்வாறு எழுதினார், “நீங்கள் ஒரு உண்மையான ஹீரோ. தடுத்து நிறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விழிப்புணர்வு நெகிழ்ச்சியாகவும் பாராட்டத்தக்கதாகவும் இருக்கிறது. நன்றி. போதுமானது. அனைத்துப் போர்களையும் நிறுத்து.”

“காஸாவில் நடந்து வரும் இனப்படுகொலை குறித்து முழு UAW உறுப்பினர்களுக்கும் தெரிவிக்க ஒரு ஒருங்கிணைந்த கல்வியூட்டல் நடவடிக்கை தொடங்கப்பட வேண்டும் மற்றும் பாலஸ்தீனத்திலுள்ள எங்கள் சகோதர சகோதரிகளின் வேண்டுகோளுக்கு ஆதரவான தீர்மானங்கள் ஒவ்வொரு கிளைகளிலும் நிறைவேற்றப்பட வேண்டும்” என்ற லேமனின் கோரிக்கைக்கு ஒரு பிரதிபலிப்பாக பொதுமக்களுக்கு கல்வி கற்பிப்பது குறித்த கருத்து தெளிவாக இருந்தது.

UAW தலைமையும் மற்றும் தொழிற்சங்க தலைவர் ஷான் ஃபைன் ஆகியோர் காஸா மீதான இஸ்ரேலின் வான்வழி குண்டுவீச்சு மற்றும் தரைவழித் தாக்குதலுக்கு பைடென் நிர்வாகத்தின் ஆதரவுக்கு வழங்கப்பட்ட ஆதரவை லேமன் அம்பலப்படுத்துகிறார். அதாவது “பாலஸ்தீனிய தொழிற்சங்கங்களின் வேண்டுகோளை ஃபைன் புறக்கணித்துள்ளார்” என்று அவர் கூறுகிறார். மேலும் என்னவென்றால், செப்டம்பரில் ஃபைன் பைடெனை மிச்சிகனிலுள்ள வெய்னுக்கு அழைத்து, “உழைக்கும் மக்களின் நண்பராக காட்டிக் கொண்டார். ... பைடென் தொழிலாளர்களுடன் நிற்கவில்லை, நெதன்யாகு மற்றும் இஸ்ரேலிய இராணுவம் பொதுமக்களை படுகொலை செய்வது மற்றும் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் மீது குண்டு வீசுவது போன்றவற்றுடன் அவர் நிற்கிறார் என்று அம்பலப்படுத்தினார்.”

இஸ்ரேலிய குற்றங்களை வெளிப்படையாக பாதுகாத்ததற்காக ஜனாதிபதி பைடென் சர்வதேச அளவிலும் அமெரிக்காவிற்குள்ளும் “இனப்படுகொலை ஜோ” என்று கண்டனம் செய்யப்பட்டு வரும் நிலையில், ஃபைன் மற்றும் அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளின் (Democratic Socialists of America – DSA) உறுப்பினர்கள் மற்றும் அவரது உள்வட்டத்திலுள்ள முன்னாள் பேர்னி சாண்டர்ஸ் ஊழியர்கள் வெள்ளை மாளிகைக்கு உதவ வருகிறார்கள். வியாழனன்று, Detroit Three (3 பெரும் நிறுவனங்கள்) ஆனது UAW பேச்சுவார்த்தை நடத்திய உத்தேச ஒப்பந்தங்களை ஊக்குவிப்பதற்காக தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு உதவுவதற்காக, இல்லினாய்ஸின் பெல்விடேரில் பைடெனுடன் ஃபைன் இணையவுள்ளார்.

ஈரான், ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான தனது போர்த் திட்டங்களில் தொழிற்சங்க அதிகாரத்துவத்தை மேலும் ஒருங்கிணைப்பதற்கான அவரது முயற்சிகளின் ஒரு பகுதியாக, Ford, GM மற்றும் Stellantis வாகனத்துறை தொழிலாளர்களுக்காக UAW “வரலாற்று உடன்படிக்கைகளை” வென்றது என்ற பொய்யை ஊக்குவிப்பதில் பைடென் ஃபைனுடன் இணைந்து வருகிறார். இந்த ஒப்பந்தங்கள் பெல்விடேர் தொழிற்சாலையை “காப்பாற்றின” என்ற கூற்றும் இதில் அடங்கும். உண்மையில், “சந்தை நிலைமைகள் அனுமதித்தால்” அடுத்த சில ஆண்டுகளில் ஒரு மின்சார வாகனம் மற்றும் பேட்டரி ஆலையைத் திறப்பது குறித்த தெளிவற்ற வாக்குறுதிகளுக்கு ஈடாக மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் Stellantis மீது நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் வரிக் குறைப்புகள் மற்றும் பிற மானியங்களை பொழிந்துள்ளன.

செவ்வாயன்று, UAW தலைவர் ஃபைன், ரேச்சல் மடோவுடன் (ஒரு அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளர், அரசியல் விமர்சகர்) MSNBC தொலைக்காட்சியில் காட்சியளித்து பைடெனைப் பாராட்டினார், “எங்கள் நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக, ஒரு ஜனாதிபதி ஒரு மறியல் போராட்டத்தைப் பார்வையிடத் தேர்வு செய்தார். அது நிறையப் பேசுகிறது.” காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு பைடெனின் முழு ஆதரவு குறித்து மடோவ் எதுவும் கேட்கவில்லை, ஃபைன் ஒரு வார்த்தை கூட அதுபற்றி பேசவில்லை.

புதன்கிழமை பிற்பகலில், லேமன் டிக்டாக்கில் ஒரு பின்தொடர்தல் வீடியோவை வெளியிட்டார், அதில் அவர் தனது முதல் வீடியோ வைரலானது குறித்து விளக்கினார், மேலும் “அமெரிக்க அரசாங்கம், பைடென் நிர்வாகம் மற்றும் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளின் முழு ஆதரவுடன் இஸ்ரேல் தற்போது செய்து வரும் குற்றங்களுக்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மாபெரும் எதிர்ப்பு” என்பதை வெளிப்படுத்தினார்.

சமீபத்திய நாட்களில், இனப்படுகொலையை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கான தனது அழைப்பை ஆதரிக்கும் வகையில் UAW மற்றும் உலகெங்கிலுள்ள சாமானிய தொழிலாளர்களிடமிருந்து ஆதரவுச் செய்திகளைப் பெற்றதாக லேமன் கூறினார். ஃபைன், UAW எந்திரம் மற்றும் முழு AFL-CIO அதிகாரத்துவத்தின் “கோழைத்தனமான மௌனத்திற்கு” அவர் இந்த பதிலை ஒப்பிட்டார், அதாவது இவை பைடெனுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றன, மற்றும் “அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட குண்டுகள் மற்றும் ஏவுகணைகள் காஸாவின் பாதுகாப்பற்ற மக்கள் மீது தொடர்ந்து மழைபோல் பொழிவதால் உற்பத்தியை தொடர்ந்து நடத்த வேண்டும்” என்று கூறுகின்றன.

அபிவிருத்தியடைந்து வரும் போர்-எதிர்ப்பு இயக்கமானது “ஏகாதிபத்திய போர் மற்றும் முதலாளித்துவ சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவரும் திறன் கொண்ட சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்” என்பதை வலியுறுத்திய லேமன் தனது வேண்டுகோளை முடித்தார். wsws.org/worker இல் பதிவு செய்வதன் மூலம் அனைத்து தொழிலாளர்களும் சாமானிய இயக்கத்தில் சேர வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

Loading