இந்தியாவும் இலங்கையும் காஸா மீதான அதன் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு மத்தியில் இஸ்ரேலிய "அரசுடன் துணை நிற்கின்றன"

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

வலதுசாரி, அமெரிக்க கூட்டாளிகளான இந்தியாவும் இலங்கையும் பல தசாப்த கொடூரமான ஆக்கிரமிப்புக்கு எதிரான பாலஸ்தீனர்களின் எழுச்சிக்கு விரோதமாக, தங்களின் எஜமானர்களுடன் இணைந்து, காஸா மக்கள் மீதான நெத்தன்யாகு அரசாங்கத்தின் காட்டுமிராண்டி தாக்குதல்களுக்கும் ஆதரவளிக்கின்றனர்.

கடந்த சனிக்கிழமை, காஸா மீதான 15 ஆண்டுகளுக்கும் மேலான இஸ்ரேலின் முற்றுகையை ஹமாஸ் போராளிகள் முறியடித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட ட்வீட்டர் செய்தியில், “இந்த கடினமான நேரத்தில் நாங்கள் இஸ்ரேலுடன் ஆதரவாக இருக்கிறோம்” என்று அறிவித்தார்.

வகுப்புவாத தூண்டுதல் மற்றும் வன்முறைக்கு ஒப்பான அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் மோடி, மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து 2002 குஜராத்தில் முஸ்லிம் விரோத படுகொலைக்கு தலைமை தாங்கிய அவர். பாசாங்குத்தனமாக “பயங்கரவாதம்” எனக் கண்டனம் செய்வதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் உடன் இணைந்துகொண்டார். “இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல்கள் பற்றிய செய்தியால் இந்தியா மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளது, இந்த கடினமான நேரத்தில் நாங்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கிறோம்,” என்று அவர் அறிவித்தார்.

2018 ஜனவரியில் அரச பயணமாக வருகை தந்த இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தினார். [Photo: Government of Israel ]

இஸ்ரேலிய பிரதமரிடமிருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து, நெத்தன்யாகு ஆட்சியால் மேற்கொள்ளப்பட்டு வரும் காசாவுக்கான உணவு, தண்ணீர், சக்திவளம் மற்றும் மருத்துவ உதவிகள் அனைத்தையும் முழுமையாக வெட்டித்தள்ளியுள்ளமை, முழு சுற்றுப்புறங்களும் தரைமட்டமாக்கப்பட்டுள்ள காசா மீதான பாரிய வான்வழி குண்டுவீச்சு மற்றும் 2.3 மில்லியன் பாலஸ்தீனியர்கள் வசிக்கும் சிறிய நிலப்பகுதியில் ஒரு இனப்படுகொலைக்கான தரைவழித் தாக்குதலுக்கான தயாரிப்புக்கள் உட்பட குற்றச் செயல்களுக்கு தனது அரசாங்கத்தின் முழு ஆதரவை மோடி வெளிப்படுத்தியுள்ளார்.

மோடி ட்வீட் செய்த ஒரு சுருக்கமான அறிக்கை பின்னர் அவரது அலுவலகத்தால் உத்தியோகபூர்வமாக மீண்டும் வெளியிடப்பட்டிருந்தது. “தற்போதைய நிலமை குறித்த ஒரு பின்னூட்டத்தை வழங்கியமைக்காக பிரதமர் நெத்தன்யாகுவுக்கு நான் நன்றி கூறுகின்றேன். இந்த கடினமான சூழ்நிலையில் இந்திய மக்கள் இஸ்ரேலுடன் உறுதியாக நிற்கிறார்கள். அனைத்து வடிவங்களிலும் தோற்றப்பாடுகளிலும் பயங்கரவாதத்தை, இந்தியா கடுமையாகவும் சந்தேகத்திற்கு இடமின்றியும் கண்டிக்கிறது.”

பயங்கரமான போர்க்குற்றங்களைச் செய்கின்ற நெத்தன்யாகு அரசாங்கத்தை மோடி அரவணைத்துக் கொண்டமையானது, அவரது கிட்டத்தட்ட தசாப்த கால பி.ஜே.பி. அரசாங்கத்தின் கீழ், டெல் அவிவ் உடன் புதுடில்லி மிகவும் நெருக்கமான மற்றும் முற்றிலும் பிற்போக்கான இராணுவ-மூலோபாய உறவுகளை வைத்திருப்பதை உறுதிப்படுத்துகிறது. முஸ்லீம்கள் மீதான அவர்களின் பொதுவான விரோதத்தில், பி.ஜே.பி. இந்து மேலாதிக்கவாதிகளுக்கும் நெதன்யாகு மற்றும் அவரது தீவிர வலதுசாரிக் கூட்டணிப் பங்காளிகளுக்கும் இடையே ஒரு வலுவான கருத்தியல் தொடர்பு உள்ளது.

எவ்வாறாயினும், பாலஸ்தீன மக்கள் மீதான அதன் ஒருதலைப்பட்ச போரில் இஸ்ரேலுக்கு இந்தியாவின் உறுதியான ஆதரவு, முதலும் முக்கியமுமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான அதன் “பூகோள மூலோபாய கூட்டாண்மை” மற்றும் வாஷிங்டனின் பெய்ஜிங்கிற்கு எதிரான அனைத்து பக்க பொருளாதார, இராஜதந்திர மற்றும் இராணுவத் தாக்குதலுடன் எப்போதுமான ஆழமான ஒருங்கிணைப்பின் விளைவு ஆகும். சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் முன்னரங்க நாடாக இந்தியா எந்த அளவிற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் வகையில், வாஷிங்டன் சீனாவுடன் போர் தொடுக்கும் போது, அமெரிக்காவிற்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்த திட்டங்களை அவசரமாக வகுத்து வருவதாக இந்திய இராணுவம் சமீபத்தில் வெளிப்படுத்தியது. .

பல தசாப்தங்களாக இஸ்ரேல், மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிக முக்கியமான மூலோபாய பங்காளியாக இருந்து வருகிறது. அது வாஷிங்டனின் நலன்களை பாதிக்கும் பல்வேறு முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகள் மற்றும் பிராந்தியத்தின் ஒடுக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகளுக்கு எதிராக அதன் தாக்குதல் நாயாக செயல்பட்டு வருகிறது. வாஷிங்டன் இந்தோ-இஸ்ரேலிய உறவுகளை வலுப்படுத்துவதை மிகவும் ஊக்குவித்துள்ளதுடன் ஓரளவு வெற்றியுடன், இப்பகுதியில் அதிகரித்து வரும் சீன மற்றும் ஈரானிய செல்வாக்கை எதிர்கொள்வதற்கு, இஸ்ரேலுக்கும் ஏகபோக வளைகுடா அரச முடியாட்சிகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவுகளை மேம்படுத்தும் முயற்சியில் புது டெல்லியை ஈர்த்துள்ளது.

நெதன்யாகு ஆட்சிக்கும் பாலஸ்தீன மக்கள் மீதான அதன் தாக்குதலுக்கும் மோடியின் ஆதரவுப் பிரகடனங்கள் மிகவும் கடுமையாக இருந்ததால், சில அமெரிக்க சார்பு வளைகுடா நாடுகள் கூட அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மற்றும் பாலஸ்தீனியர்கள் மீதான கொடூரமான அடக்குமுறைக்கு எதிராக முன்னர் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பு குறித்து இதுவரை புதுடெல்லியின் பேணிவரும் முழு மௌனத்தை இந்திய வெளியுறவு அமைச்சக அறிக்கை உடைக்கும் என்று அவர்கள் நம்புவதாகக் கூறப்படுகிறது.

ஆனால் இன்றுவரை, வெளியுறவு அமைச்சை அமைதியாக இருக்குமாறு மோடி உத்தரவிட்டுள்ளார். அவர் தனது அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தனிப்பட்ட முறையில் கட்டளையிடவும் வெளிப்படுத்தவும் விரும்புகிறார் - இது வாஷிங்டனின் நிலைப்பாட்டை பிரதிபலிப்பதோடு நெதன்யாகு மற்றும் இஸ்ரேலிய இராணுவத்திற்கு காஸா மக்களை படுகொலை செய்வதற்கும்/அல்லது வெளியேற்றுவதற்கும் சுதந்திரத்தை அளிக்கிறது.

இஸ்ரேலுடன் இந்தியாவின் வளர்ந்து வரும் மூலோபாய கூட்டணி

புது டெல்லி, 1992 இல் ஒரு மூலோபாய மறுதிசையமைவுக்கு மத்தியில் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக்கொண்டது. அது தலைமை தாங்கிய அரசின் அபிவிருத்தி மூலோபாயம் தோல்வியடைந்ததால், இந்திய முதலாளித்துவம் அமெரிக்கா தலைமையிலான உலக முதலாளித்துவ அமைப்பில் முழு ஒருங்கிணைப்பையும், பூகோள மூலதனத்திற்கான மலிவு-உழைப்பின் புகலிடமாக இந்தியாவின் மாற்றத்தையும் வாஷிங்டனுடன் மிகவும் நெருக்கமான உறவுகளையும் நாடியது. தசாப்தத்திற்கும் சற்று அதிகமான காலத்தில், இந்திய-அமெரிக்க மூலோபாய கூட்டணியே புது டில்லியின் வெளியுறவுக் கொள்கையின் அடிக்கல்லாக இருந்து வருகின்றது. இதே போல், இந்திய-இஸ்ரேல் உறவுகள், குறிப்பாக இராணுவம் மற்றும் உளவுத்துறை உறவுகளும் வளர்ந்தன.

1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான கார்கில் எல்லைப் போரின் போது இஸ்ரேல் இந்தியாவிற்கு மோட்டார் மற்றும் வெடிமருந்துகளை வழங்கியது. அன்றிலிருந்து, இந்தியாவின் இரண்டாவது அல்லது மூன்றாவது பெரிய வெளிநாட்டு ஆயுதங்கள் மற்றும் ஆயுத அமைப்புகளின் வழங்குனராக இஸ்ரேல் இருந்து வருகிறது. இஸ்ரேலிடம் இருந்து இந்தியா வாங்கிய உபகரணங்களில் ஃபால்கன் அவாக்ஸ் (வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள்), ஹெரான், சர்ச்சர் II மற்றும் ஹரோப் ட்ரோன்கள், அத்துடன் பராக் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு கட்டமைப்புகள் மற்றும் ஸ்பைடர் விரைவு-பிரதிபலிப்பு விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகள் ஆகியவை அடங்கும்.

இந்தியாவின் பாரம்பரிய நிலைப்பாட்டில் இருந்து குறிப்பிடத்தக்க மாற்றமாக, 2014ல் நடந்த காஸா போரின் போது, பாலஸ்தீனிய குடிமக்களை இஸ்ரேல் திட்டமிட்டு படுகொலை செய்ததை விமர்சித்து 2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களில் பி.ஜே.பி. அரசாங்கம் வாக்களிக்காது ஒதுங்கியிருந்தது.

ஆனால், 2017 ஜூலையில் மோடி இஸ்ரேலுக்கு விஜயம் செய்ததன் மூலம், இந்தியப் பிரதமர் ஒருவர் முதன்முறையாக, ஒரு மூலோபாய கூட்டணியைப் பிரகடனம் செய்தார். அது, இந்திய-இஸ்ரேல் உறவுகளை ஒரு புதிய விமானத்தில் ஏற்றியது. அன்றிலிருந்து மோடி, இஸ்ரேலுடனான இந்தியாவின் இராணுவ-உளவுத்துறை மற்றும் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் பிரதான விடயமாக ஆக்கியுள்ளார். அதன் இறுதியில், அவர் கடந்த நான்கு ஆண்டுகளாக இஸ்ரேலுக்கான தனது தூதுவரைக் கொண்டிருந்தார், அந்த தூதுவர், ஆகஸ்ட் 2014 முதல் ஆகஸ்ட் 2019 வரை அல்லது அவரது முதல் பிரதமர் பதவிக்காலம் முழுவதும் அவரது தனிப்பட்ட செயலாளராக பணியாற்றிய இராஜதந்திரியாக இருந்தார்.

புது தில்லி-டெல் அவிவ் அச்சானியின் நிஜமான அபிவிருத்தியுடன், வாஷிங்டன் இந்தியாவை அதன் மத்திய கிழக்குக் கொள்கையில் இன்னும் ஆழமாக இழுக்க முயன்றது. 2021 அக்டோபரில், வாஷிங்டன் பல பொருளாதாரத் துறைகளில் கூட்டு முயற்சிகளை மேம்படுத்துவதற்காக இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு இராச்சியங்கள் மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய I2U2 குழுவை உருவாக்கியது. ஒரு இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா ஆகியவற்றின் பொருளாதார நுழைவாயிலாகவும் சீனாவுக்கு மாற்றீடான ஒரு பூகோளப் பொருளாதார உற்பத்தியின் சங்கிலியின் மையமாகவும் இந்தியா வளர்ச்சியடைவதற்கான வசதிகளை உருவாக்குவதன் பேரில் வாஷிங்டன் ஒரு நங்கூரமாக இருக்கும், என கடந்த மாதம் புதுடில்லியில் நடந்த ஜி 20 உச்சிமாநாட்டில், அமெரிக்க ஜனாதிபதி பைடென் அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ், சமீபத்தில் இந்தியாவின் அதானி குழுமத்தால் வாங்கப்பட்ட இஸ்ரேலிய துறைமுகமான ஹைஃபா, ஆசியா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையே ஒரு முக்கிய பொருளாதார இணைப்பாக செயல்பட உள்ளது.

ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு மற்றும் போரை ஆதரிப்பதில் இந்தியாவின் பங்கு

அதன் நீண்டகால மூலோபாய பங்காளியான மொஸ்கோவிடமிருந்து இடைவெளியைப் பேணி, அவர்களின் உக்ரேன் யுத்தத்தில் ரஷ்யாவைத் தோற்கடித்து அடிபணிய வைப்பதற்கு உதவுமாறு, வாஷிங்டன், லண்டன், பேர்லின், பாரிஸ் மற்றும் பிரஸ்ஸல்ஸ் ஆகிய நாடுகளின் கோரிக்கைகளால் இந்தியா ஆட்டங்கண்டுள்ளது.

ஆனால், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்தியா “மூலோபாய சுயாட்சி” மற்றும் “பல்முனை உலகில்” அனைவருடனும் “நட்பு” உறவுகளை பின்பற்றுகிறது, என்று கூறினாலும் கூட, பெரும்பாலான மற்றைய புவிசார் அரசியல் முனைகளில், அதன் கொள்கை வாஷிங்டனுடன் இன்னும் நெருக்கமாக இணைந்துள்ளது.

ஈரான் ஒரு உதாரணமாகும். ஈரானுடனான தனது உறவைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கைகளை, புது டெல்லி மீண்டும் ஏற்றுக்கொண்டுள்ளது. ஈரானிய நட்பு அமைப்பான ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் அழிப்புப் போருக்கு அதன் முழு ஆதரவானது, தெஹ்ரானுடனான இந்தியாவின் உறவுகளைச் சீர்குலைக்கும். விசேடமாக, கடந்த வார இறுதியில் ஹமாஸ் தலைமையிலான எழுச்சிக்கு ஈரான் பொறுப்பேற்க வேண்டும் மற்றும் “நட்ட ஈடு செலுத்த வேண்டும்” என்று பல ஏகாதிபத்திய மையங்களிலிருந்து அழைப்புகள் வந்துள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் ஆதரவாளரான அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட கல்வியாளர் விஜே பிரசாத் போன்ற போலி இடதுசாரிகள், இந்திய முதலாளித்துவம் மற்றும் துருக்கி, பிரேசில் இருந்து சீனா மற்றும் ரஷ்யாவின் புட்டின் போன்ற வலதுசாரி முதலாளித்துவ தட்டுக்கள் வரையானோர், மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகளுக்கு ஒரு முற்போக்கான எதிர்முனையாக இருப்பார்கள் என்று கூறுகின்றார்கள்.

உண்மையில், அந்த நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் அனைத்தும், தங்கள் கொள்ளையடிக்கும் அபிலாஷைகளை முன்னெடுப்பதற்கு சூழ்ச்சி செய்து கொண்டிருப்பதுடன், முதலாளித்துவ அமைப்புக்களால் உருவாக்கப்படும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு மற்றும் போருக்கும் முற்றுப்புள்ளி வைக்க கூடிய ஒரே சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்தின் மீது ஒரே மாதிரியான விரோதப் போக்கையே கொண்டுள்ளன.

எதேச்சதிகார, தீவிர வலதுசாரி மோடி ஆட்சியும் இந்திய முதலாளித்துவமும், உழைக்கும் மக்கள் “பல துருவ உலகத்தை” ஆதரிக்க வேண்டும் என்று விடுக்கும் அழைப்பு, அது எத்தகைய பிற்போக்கு முட்டுச்சந்தில் உள்ளது என்பதை எடுத்துக்காட்ட மட்டுமே உதவுகிறது.

சீனாவிற்கு எதிரான அதன் போர் உந்துதலில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு, இந்தியா முக்கிய ஆதரவை வழங்கி வருவதுடன் இப்போது பாலஸ்தீனிய மக்களை நசுக்க முற்படும் அமெரிக்காவால் ஆயுதபாணியாக்கப்பட்டு ஆதரவளிக்கப்படும் நெதன்யாகு ஆட்சிக்கு அரசியல்-சித்தாந்த மூடுதிரையை வழங்குகிறது.

பாலஸ்தீனிய “பயங்கரவாதம்” என்ற அவர்களின் மெய்சிலிர்க்கும் கண்டனங்களுடன் கடந்த முக்கால் நூற்றாண்டில் அவர்கள் மீண்டும் மீண்டும் அபகரிப்பு மற்றும் இரத்தம் தோய்ந்த ஒடுக்குமுறைக்கு உள்ளக்கப்பட்டதை பற்றிய எந்த விவாதத்தையும் புறக்கணிப்பதன் மூலம், இந்தியாவின் பெருநிறுவன ஊடகங்கள் மோடி அரசாங்கத்தையும் மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகளையும் பிரபலிக்கின்றன.

இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் ஆரம்பத்தில் மோடியை எதிரொலித்தது. ஞாயிற்றுக்கிழமை, அதன் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “இஸ்ரேல் மக்கள் மீதான கொடூரமான தாக்குதல்களை காங்கிரஸ் கண்டிக்கிறது” என்றார். எனினும், காசா முற்றுகை உட்பட இஸ்ரேலிய அரசின் கைகளில் பாலஸ்தீனியர்கள் படும் துன்பங்கள் மற்றும் மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகள் பற்றி, அல்லது நெதன்யாகு அரசாங்கமும் அதன் பாசிச கூட்டாளிகளும் கடந்த ஆண்டில் தொடுத்த முடிவில்லாத தொடர் ஆத்திரமூட்டல்கள் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை.

திங்கட்கிழமை, காங்கிரஸ் கட்சியின் செயற்குழு, ஒரு சிறிய வித்தியாசமான தொனியை எடுத்தது. “மத்திய கிழக்கில் வெடித்துள்ள போர் பற்றி, திகைப்பும் வேதனையும்” வெளிப்படுத்தும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அது “உடனடியான போர்நிறுத்தத்தை” வலியுறுத்தி, “பாலஸ்தீன மக்களின் நிலம், சுய அரசுக்கான மற்றும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் வாழ்வதற்குமான உரிமையையும்” ஆதரித்தது.

இந்த மறு ஒழுங்கமைப்பு, பாதிக்கப்பட்ட 200 மில்லியன் பலமான முஸ்லிம் சிறுபான்மையினர் உள்ளடங்கிய இந்திய மக்களிடையே பாலஸ்தீனிய மக்கள் மீது மிகப் பெரும் அனுதாபம் காணப்படுவதனால் ஏற்படுத்தப்பட்டதாகும். அரசியல் ரீதியில் கட்டுப்படுத்தி திசை திருப்புவதற்காக, முதலாளித்துவ நிலைப்பாட்டில் இருந்தே இந்த எதிர்ப்புக்கள் தேவைப்பட்டுள்ளன.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இஸ்ரேலுடன் அணி சேர்ந்துள்ளார். திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், அவர் இஸ்ரேல் மீதான “முன்னெப்போதும் இல்லாத தாக்குதல்” மற்றும் “பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு” கண்டனம் தெரிவித்ததாக மேற்கோள் காட்டப்பட்டது. காஸா மீதான இஸ்ரேலின் முற்றுகை மற்றும் தாக்குதல் சம்பந்தமாக அவரது அறிக்கை முற்றிலும் அமைதி காத்தது.

பொதுமக்களின் மரணம் குறித்து விக்கிரமசிங்கவின் அதிர்ச்சியும் சீற்றமும் மோடியைப் போலவே போலியானது. அவரும் 1970களின் பிற்பகுதியில் இருந்து அவர் அங்கம் வகிக்கும் இலங்கை அரசியல் ஸ்தாபனமும், ஒரு இலட்சத்துக்கும் அதிகமான -சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின்- உயிர்களை பலியெடுத்த நாட்டின் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக கால் நூற்றாண்டு கால இனவாதப் போரை முன்னெடுத்தனர். இந்த யுத்தம், 2009 மே மாதம், இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலையுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. மேலும், சமீப மாதங்களில், அவரது அரசாங்கத்தின் கொடூரமான சர்வதேச நாணய நிதிய சிக்கனக் கொள்கைகளுக்கு எதிராக ஒரு புதிய வெகுஜன எழுச்சியை எதிர்பார்த்து, அவரது அரசாங்கம் அரச அடக்குமுறை சக்திகளை வலுப்படுத்தி வருகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முழு இராணுவ மற்றும் அரசியல் ஆதரவுடனும் இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களினதும் மற்றும் இதர ஆளும் வர்க்கங்களினதும் அனுசரணையுடன், காஸாவில் இருக்கும் பாலஸ்தீனியர்களை நசுக்கும் அதன் இனப்படுகொலைத் திட்டங்களை நெதன்யாகு அரசாங்கம் மேற்கொள்வதைத் தடுப்பதற்கு, இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள உழைக்கும் மக்கள் முன்வருவது அவசியமாகும்.

காஸாவில், இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிரான உலகளாவிய எதிர்ப்பு போராட்டங்கள் தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்ப வேண்டும்

இஸ்ரேல் மற்றும் காஸாவில் நடக்கும் வன்முறைக்கு யார் பொறுப்பு?

நெதன்யாகு அரசை வீழ்த்து! காஸா மீதான ஏகாதிபத்திய ஆதரவு சியோனிச தாக்குதலை நிறுத்து!

காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு வரம்பற்ற ஆதரவை பைடென் அறிவிக்கிறார்

வாஷிங்டனின் உத்தரவின் பேரில், சீனா மீது போர் தொடுப்பதில் அமெரிக்காவுக்கு இந்திய இராணுவம் எவ்வாறு உதவ முடியும் என்பதை பரிசீலனை செய்கிறது

Loading