முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பானது, இடது எதிர்ப்பு அணியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

அக்டோபர் 15, 2023 அன்று, முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் ஒரு ட்ரொட்ஸ்கிச இளைஞர் அமைப்பான போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பானது, சோசலிச சமத்துவக் கட்சியினதும் (அமெரிக்கா) மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவருமான டேவிட் நோர்த் கலந்து கொண்ட ஒரு கூட்டத்துடன் இடது எதிர்ப்பு அணியின் தோற்றத்தின் நூற்றாண்டைக் கொண்டாடியது. 46 பழைய போல்ஷிவிக்குகள் உள்கட்சி போராட்டத்தில், லியோன் ட்ரொட்ஸ்கிக்கு தங்கள் அரசியல் ஆதரவை அறிவித்து சரியாக 100 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தச் சந்திப்பு நடந்தது, இது ஸ்ராலினிசத்திற்கு எதிரான இடது எதிர்ப்பு அணியின் தொடக்கத்தைக் குறித்தது.

அக்டோபர் 15, 2023 அன்று இடது எதிர்ப்பு அணியின் நூற்றாண்டு விழாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட கூட்டத்திற்காக YGBL ஆல் வடிவமைக்கப்பட்ட வரைகலைப்படம் இதுவாகும்

சர்வதேச அளவில் இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் ட்ரொட்ஸ்கிசம் ஒரு பிரதான அரசியல் மற்றும் அறிவுஜீவித சக்தியாக வெளிப்பட்டிருப்பதற்கான ஒரு சக்திவாய்ந்த எடுத்துக்காட்டாக இக்கூட்டம் அமைந்துள்ளது. பல தலைமுறைகளைச் சேர்ந்த சோசலிஸ்டுகளின் அரசியல் படுகொலை மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கியின் படுகொலை உட்பட ஸ்ராலினிசத்தின் குற்றங்கள் மற்றும் பப்லோவாதத்தின் காட்டிக்கொடுப்புகள் ஆகியவை புரட்சிகர வேலைத்திட்டத்திலிருந்து தொழிலாள வர்க்கத்தின் பெரும் பிரிவுகளை துண்டித்தது. ஒரு நீண்ட வரலாற்றுக் காலத்திற்குப் பின்னர், ட்ரொட்ஸ்கிசத்தின் கோட்பாடுகள், மார்க்சிச சர்வதேசியத்திற்கு எதிரான ஸ்ராலினிச எதிர்வினையின் மையமாக இருந்த முன்னாள் சோவியத் யூனியனில் புதிய தலைமுறை புரட்சியாளர்களின் அரசியல் போராட்டத்தை உயிர்ப்பிக்கிறது.

ட்ரொட்ஸ்கிசத்தின் கொள்கைகளுக்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தசாப்தகால போராட்டத்தின் ஆண்டு விழாவின் வரலாற்று முக்கியத்துவத்தை வலியுறுத்தும் கருத்துக்களுடன் டேவிட் நோர்த் கூட்டத்தைத் தொடங்கினார். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அதன் அமெரிக்கப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்து நோர்த் பின்வருமாறு கூறினார்:

இடது எதிர்ப்பு அணியானது ஸ்தாபிக்கப்பட்டு சரியாக 100 ஆண்டுகளுக்குப் பின்னரும், ட்ரொட்ஸ்கிசம் முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் உயிர்வாழ்கிறதை, இந்தக் கூட்டத்தின் முக்கியத்துவம் நிறுவுகிறது. போல்ஷிவிக் கட்சியின் மிகவும் முன்னேறிய மற்றும் அரசியல் நனவான பிரிவைச் சேர்ந்த ட்ரொட்ஸ்கி மற்றும் அவரது சக சிந்தனையாளர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் அடித்தளத்திலுள்ள கோட்பாடுகள் மற்றும் மரபுகள் ரஷ்யா மற்றும் உக்ரேனிலும் மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் அனைத்து வெவ்வேறு பகுதிகளிலும் ஒரு புதிய தலைமுறை புரட்சிகர இளைஞர்களால் புதுப்பிக்கப்பட்டு போராடப்பட்டு வருகின்றன.

ட்ரொட்ஸ்கி ஒரு காலத்தில் ஒரு “வரலாற்று மனிதர்” என்று விவரிக்கப்பட்டார். இடது எதிர்ப்பு அணியிலிருந்து தோன்றிய நான்காம் அகிலம், ஒரு வரலாற்றுக் கட்சியாகும். நமது இயக்கம் அதற்குள் அடங்கியுள்ளதுடன், ஒரு முழு வரலாற்று சகாப்தத்திலும் தொழிலாள வர்க்கத்தின் மாபெரும் மற்றும் பெரும்பாலும் துன்பகரமான புரட்சிகர அனுபவங்களின் செறிவூட்டப்பட்ட வெளிப்பாடாகும். இன்று நாம் சந்திக்கும் இந்த மகத்தான மரபை நாம் கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது...

இறுதியாக நான் கூற வேண்டியது, அரை நூற்றாண்டுக்கும் மேலாக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் செயலூக்கத்துடன் இருக்கும் தோழர்களே, ரஷ்யா, உக்ரேன் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் பிற பகுதிகளிலுள்ள நமது தோழர்களுடன் ட்ரொட்ஸ்கிசத்தின் 100 ஆண்டுகளை நாம் கொண்டாடுகிறோம் என்ற உண்மையே ட்ரொட்ஸ்கிசத்தின் போராட்டத்தை நிரூபிப்பது மட்டுமல்ல, மாறாக மகத்தான பெரும் நம்பிக்கையின் ஆதாரமாகும். ட்ரொட்ஸ்கிசம் உயிர்வாழ்கிறது. இதன் தாக்கமானது உலகம் முழுவதும் விரிவடைந்து வருகிறது. நான்காம் அகிலமானது நடைமுறையில் தன்னை சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியாக நிரூபிக்கும்.

இந்த இலையுதிர்காலத்தில் புரட்சிகர இயக்கத்தின் இரண்டு முக்கிய ஆண்டு விழாக்களுக்கு இடையே ஒரு நெருக்கமான உறவு இருப்பதாக நோர்த் வலியுறுத்தினார்: அதாவது இடது எதிர்ப்பு அணி நிறுவப்பட்ட நூற்றாண்டும் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஸ்தாபிக்கப்படுவதற்கு வழிவகுத்த ஜேம்ஸ் பி. கனனால் பகிரங்க கடிதம் வெளியிடப்பட்ட 70 வது ஆண்டு நிறைவும் ஆகும்.

இந்த ஆண்டு விழாக்கள் ஆழமாக ஒன்றோடொன்று தொடர்புடையவைகளாகும். நமது காலத்தின் இரண்டு பெரிய கேள்விகளுக்கு அவைகள் பதிலளிக்கின்றன. முதலாவது கேள்வி: “ஸ்ராலினிசத்திற்கு ஒரு மாற்றீடு இருந்ததா?” அதற்கு இடது எதிர்ப்பு அணியின் வரலாற்றை மீளாய்வு செய்வதன் மூலம் விடை கிடைக்கிறது.

ஆனால் இக்கேள்விக்கு ஆம் என்று பதில் கிடைத்தவுடன், ட்ரொட்ஸ்கிசம் ஸ்ராலினிசத்திற்கு மாற்றீடு என்பதை ஒருவர் நிறுவியதுடன், இரண்டாவது கேள்வி எழுகிறது: “ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்பவர்கள் யார்?” ட்ரொட்ஸ்கிசத்தின் மரபை அடிப்படையாகக் கொண்டது என்று நியாயபூர்வமாக உரிமை கோரக்கூடிய ஒரு இயக்கம் இன்று உள்ளதா? இக்கேள்விக்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஸ்தாபிக்கப்பட்டதில் எந்தக் குறைவுமின்றி தீர்க்கமாக விடையளிக்கப்பட்டுள்ளது.

நோர்த் மேலும் கூறுகையில்,

இடது எதிர்ப்பு அணி ஸ்தாபிக்கப்பட்டு நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்திற்கு என்ன மாற்றீடு உருவாகியுள்ளது? நமது காலத்தின் மாபெரும் அரசியல் கேள்விகளுக்கு வேறு சிறந்த பதில்கள் எங்கேயும் கிடைக்குமா? கிராம்சியின் எழுத்துக்களில்? மா சே துங்கிடம்? ஃபிடல் காஸ்ட்ரோவிடம்? பிராங்க்பர்ட் பள்ளியில்? முதலாளித்துவ சித்தாந்தம், குட்டி முதலாளித்துவ அரசியல் மற்றும் தேசியவாத முன்னோக்குகளின் இந்த வகையறாக்கள் அனைத்தும் மோசடிகளாகும். இந்தத் தனிநபர்கள் மற்றும் போக்குகள் எதுவும் நமது காலத்தின் பிரச்சினைகளுக்கு பதிலளிக்கும் ஒரு வேலைத்திட்டத்தையும் மரபையும் விட்டுச் செல்லவில்லை. ட்ரொட்ஸ்கியின் வேலைத்திட்டம் மட்டுமே, நான்காம் அகிலத்தால் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதால், அது வரலாற்றுக் காலகட்டத்திற்கு சமமானதாக தன்னை நிரூபித்துள்ளது.

அக்டோபர் புரட்சியின் இரண்டாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விழாவில் லெனினும் ட்ரொட்ஸ்கியும்

டேவிட் நோர்த்தின் உரைக்குப் பின்னர், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இளைஞர் மற்றும் மாணவர் இயக்கமான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பின் சார்பாக கிளாரா வெய்ஸ் உரையாற்றினார். கடந்த இலையுதிர் காலத்தில் இருந்து, போருக்கு எதிராக இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் ஒரு உலகளாவிய இயக்கத்தைக் கட்டியெழுப்ப YGBL அமைப்புடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். ட்ரொட்ஸ்கிசத்திற்கான ஒரு நூற்றாண்டுகால போராட்டத்தின் முக்கியத்துவத்தை காஸாவில் கட்டவிழ்ந்து வரும் இனப்படுகொலையுடன் ஒப்பிட்டு அவர் இவ்வாறு கூறினார்,

வரலாற்றில் மிகப் பெரும் குற்றங்களில் ஒன்று பாலஸ்தீனிய மக்களுக்கு எதிராக உலகின் கண்களுக்கு முன்னால் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு வருகிறபோது ட்ரொட்ஸ்கிசத்தின் நூற்றாண்டை நாம் கொண்டாடுகிறோம். உக்ரேன் போருக்கு சற்றும் குறைவில்லாமல், காஸாவில் கட்டவிழ்ந்து வரும் பயங்கரமானது, முடிவடையாத 20 ஆம் நூற்றாண்டின் விளைபொருளாகும்.

மார்க்சிய இயக்கம் எப்போதும் சியோனிசத்தை சோசலிச இடதிலிருந்து எதிர்த்தது. ரஷ்யப் பேரரசில் அனைத்து ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களையும் போலவே யூத மக்களின் தலைவிதியும் சோசலிசப் புரட்சியின் வளர்ச்சியுடன் பிணைந்துள்ளது என்று லெனினும் ட்ரொட்ஸ்கியும் வலியுறுத்தினார்கள். ஆரம்பகால போல்ஷிவிக் அரசாங்கம் உள்நாட்டுப் போரில், அதாவது பாரிய இனப்படுகொலைக்கு (Holocaust) முன்னர் வரலாற்றில் மிகவும் கொடூரமான யூத-விரோதப் படுகொலைகளை முடிவுக்குக் கொண்டுவருவதன் மூலம், ஒரு சோசலிச தீர்வின் நம்பகத்தன்மையை நடைமுறையில் நிரூபித்துக் காட்டியது. 1920 களில், இது யிடிஷ் (Yiddish- Ashkenazi language, Jewish-German) மொழிக்கு-உக்ரேனியன் மொழியைப் போலவே-வெளியீடுகள் மற்றும் பள்ளிகளுக்கு சம உரிமைகளையும் அரசு நிதியையும் வழங்கிய ஒரே நாடாக ஆரம்பகால சோவியத் அரசு மட்டுமே உலகில் இருந்தது.

இஸ்ரேல் அரசை நிறுவியதும் சியோனிசத்தின் மேலாதிக்கமும் எல்லாவற்றிற்கும் மேலாக, அக்டோபர் புரட்சியின் வேலைத்திட்டத்தை காட்டிக்கொடுத்த ஸ்ராலினிச துரோகத்தின் விளைபொருளாகும். ஸ்ராலினிசம் தான் 1930 களில் ஐரோப்பியப் புரட்சியை கழுத்தை நெரித்து, ஜேர்மனியில் ஹிட்லர் அதிகாரத்திற்கு வருவதை சாத்தியமாக்கியது. இதுதான், பாரிய இனப்படுகொலையை (Holocaust) ஐரோப்பிய யூதர்களின் மீது கட்டவிழ்த்துவிடுவதற்கு வழிவகுத்தது. உலகெங்கிலுமுள்ள வெகுஜனங்களின் பார்வையில் சோசலிசத்தை பெரும் பயங்கரத்துடனும் (Great Terror), யூத விரோதத்தின் (antisemitism) மறுமலர்ச்சியுடனும் இழிவுபடுத்தியது ஸ்ராலினிசமே ஆகும், இது மாபெரும் ரஷ்ய பேரினவாதத்தின் மறுமலர்ச்சி மற்றும் “தனி ஒரு நாட்டில் சோசலிசம்” என்ற தேசியவாத வேலைத்திட்டத்தின் மிகவும் மோசமான விளைவுகளில் ஒன்றாகும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது, பப்லோவாதத்தின் நவ-ஸ்ராலினிச போக்குக்கு எதிரான 33 ஆண்டுகால கசப்பான போராட்டத்தில், ஸ்ராலினிசத்தை ஏகாதிபத்தியத்தின் ஒரு எதிர்ப்புரட்சிகர முகமையாக ட்ரொட்ஸ்கிச மதிப்பீட்டை பாதுகாத்ததைப் போலவே, நிரந்தரப் புரட்சி முன்னோக்கை, குறிப்பாக ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களுக்காக பாதுகாத்தது. 1982-1986ல் தொழிலாளர் புரட்சிக் கட்சிக்கு (WRP) எதிரான போராட்டத்தில், இந்த இரண்டு கேள்விகளும் ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தைப் பாதுகாப்பதில் மைய முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன.

இன்று, உக்ரேன் போரிலும், காஸா மீதான இனப்படுகொலைத் தாக்குதலிலும், இந்தப் போராட்டம் மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வா சாவா போராட்ட முக்கியத்துவத்தை பெறுவதை நாம் காண்கிறோம். ... பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு இயக்கம் ஏற்கனவே வெளிப்படத் தொடங்கியுள்ளது. மிகவும் முன்னேறிய கூறுகள் ட்ரொட்ஸ்கிசத்தின் வேலைத்திட்டத்துடன் இணைந்து கொள்ளும், ஏனென்றால் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புறநிலை முயற்சிகள் மற்றும் தேவைகளுக்கு ஒத்திருக்கும் ஒரே அரசியல் மற்றும் வரலாற்று வேலைத்திட்டம் இதுவாகும்.

இந்தக் கூட்டத்தில் YGBL அமைப்பின் மூன்று உறுப்பினர்கள் அதன் பின்னர் உரையாற்றினர். குழுவின் இணை நிறுவனரும் தலைவருமான ஓஸ்டாப் ரெரிக், 1920 களில் இடது எதிர்ப்பு அணியின் வளர்ச்சியையும் ஸ்ராலினிசத்திற்கு எதிரான அதன் போராட்டத்தையும் முதன்முதலில் மதிப்பாய்வு செய்தார். சோவியத் அதிகாரத்துவத்திற்கு எதிரான மார்க்சிச எதிர்ப்பின் இரத்தம் தோய்ந்த ஒடுக்குமுறை இருந்தபோதிலும், அவர் பின்வருமாறு வலியுறுத்தினார்:

... ட்ரொட்ஸ்கியையும் போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளையும் கட்சியிலிருந்து வெளியேற்றியது, மேலும் நாடுகடத்தப்பட்டது, சிறையில் அடைத்தது மற்றும் அரசியல் படுகொலைகள் கூட இடது எதிர்ப்பை முடிவுக்குக் கொண்டுவரவில்லை. ஏனென்றால், இடது எதிர்ப்பு ஒரு தேசிய நிகழ்வு அல்ல, அது தேசிய அளவில் கட்டுப்படுத்தப்படவில்லை, அதன் ஆதரவாளர்கள் உலகெங்கிலும் இருந்தனர், அவர்கள்தான் 1938 செப்டம்பரில் நான்காம் அகிலத்தை ஸ்தாபித்தனர். அரசியல் படுகொலை அதன் உச்சக்கட்டத்தை எட்டியபோது ட்ரொட்ஸ்கி மற்றும் இடது எதிர்ப்பு அணியின் பணியைத் தொடர்ந்தவர்கள் அவர்கள்தான். 1953ல் பிளவு ஏற்பட்டு, மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டான ஜேம்ஸ் பி. கனனால் அது ஸ்தாபிக்கப்பட்ட பின்னர், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, ஸ்ராலினிசத்திற்கு எதிராகவும் அதன் பப்லோவாத ஒத்துழைப்பாளர்களுக்கு எதிராகவும் ட்ரொட்ஸ்கியின் வேலைத்திட்டத்தைப் பாதுகாப்பதற்காகவும் போராடிய காரணத்தை இன்றுவரை தொடர்ந்தது- இன்றும் தொடர்கிறது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே, ட்ரொட்ஸ்கி மற்றும் இடது எதிர்ப்பின் பணியைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதுடன், ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தை, முதலாளித்துவ மீட்சியை நோக்கி வழிநடத்துகிறது என்றும், பப்லோ மற்றும் மண்டேல் கூறியது போல், அதன் சொந்த சுய சீர்திருத்தத்தை நோக்கி அல்ல என்று பிரகடனம் செய்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது, சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவம் மீட்டெடுக்கப்படுவது குறித்து எச்சரித்தது, அத்துடன், டெட் கிராண்ட் ஸ்ராலினிச அதிகாரத்துவத்திடமிருந்து ஒரு தொழிலாளர் ஜனநாயகத்தைக் கோரியபோது, யெல்ட்சின் ரஷ்யாவை ஒரு தொழிலாளர் அரசு என்று அழைத்தபோதும் இந்த எச்சரிக்கையை அது விடுத்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுதான் வரலாற்று உண்மைக்கான இடைவிடாத போராட்டத்தை வழிநடத்தியதுடன், சோவியத் ஒன்றியத்தின் பாட்டாளி வர்க்கத்தை முதலாளித்துவத்தின் மீட்சியுடன் காத்திருக்கும் விளைவுகள் குறித்து தொடர்ந்தும் எச்சரித்தது. முதலாளித்துவ அமைப்புமுறையின் வளர்ந்து வரும் உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியில், பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் நெதன்யாகு ஆட்சிக்கு எதிரான பாலஸ்தீனிய மக்களின் எழுச்சிக்கு மத்தியில், [உக்ரேனில்] தூண்டப்பட்ட பினாமிப் போர், நடந்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் ஒரு மூன்றாவது ஏகாதிபத்திய போரின் அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கு மத்தியில், முதலாளித்துவ அமைப்புமுறையின் வளர்ந்து வரும் உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியில் நாம் இடது எதிர்ப்பின் 100 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறோம், இவைகள் அனைத்தும் முதலாளித்துவத்தின் முரண்பாடுகளால் உருவாக்கப்படுகின்றன.

....போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பு தனது சரியான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது என்பதையும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவையும் மற்றும் முழு முன்னாள் சோவியத் ஒன்றியத்திலும் கட்டியெழுப்ப அது தொடரும் பாதையானது, உலகப் பாட்டாளி வர்க்கத்தை கம்யூனிசத்தின் வெற்றிக்கு இட்டுச்செல்லும் என்பதையும் அறிந்திருக்கிறது.

நமது இயக்கத்தின் நூற்றாண்டு நிடூழி வாழ்க!

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நிடூழி வாழ்க!

லெவ் நோவிட்ஸ்கி பின்னர் இடது எதிர்ப்பு அணியின் போராட்டம் வெளிப்படுத்திய புறநிலைச் சூழலை மீளாய்வு செய்தார். இடது எதிர்ப்பு அணியும் ஸ்ராலின் பிரிவும் சோவியத் சமூகத்தில் வெவ்வேறு சமூக சக்திகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன, அதாவது “ஒருபுறம் பாட்டாளி வர்க்க மற்றும் அரை பாட்டாளி வர்க்க வர்க்கங்களும், மறுபுறம் குட்டி-முதலாளித்துவ மற்றும் அதிகாரத்துவ அடுக்குகளும் நின்றன” என்று அவர் வலியுறுத்தினார். அவர் பின்வருமாறு உரையை முடித்தார்,

ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் முந்தைய தலைமுறையினரிடமிருந்து நாம் மரபுவழியாகப் பெற்ற போராட்டத்தின் ஒளியை, அனைத்து பின்னடைவுகள் மற்றும் தோல்விகளுக்கு மத்தியிலும், நாம் தொடர்ந்து வெற்றிகரமான இலக்கை நோக்கி எடுத்துச் செல்ல வேண்டும். இறுதியில், உலகின் மற்றும் மனிதகுலத்தின் தலைவிதியானது இதைப் பொறுத்துதான் இருக்கிறது. சோசலிசப் புரட்சிகளின் தசாப்தத்தில் நாம் ஏற்கனவே மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நுழைந்து விட்டோம்; தசாப்தம் ஏற்கனவே அதன் மையப்புள்ளியை நெருங்கிக் கொண்டிருக்கிறது, அது முதன்மையாக ஒரு சோசலிச முன்னோக்கு இருக்குமா இல்லையா, சர்வதேச தொழிலாள வர்க்கம் ஒரு உலக மற்றும் அணுஆயுத போரை நிறுத்துமா இல்லையா என்பதைப் பொறுத்து இருக்கிறது. இந்தப் பணிகள் அனைத்தும் இப்போது நம்மை எதிர்கொள்கின்றன, அவற்றை நாம் எதிர்கொள்ள வேண்டும். இறுதியில், பாட்டாளி வர்க்கப் புரட்சியின் முடிவையும், அதன் மூலம் ஒட்டுமொத்த மனித வளர்ச்சியின் போக்கையும் பாட்டாளி வர்க்க முன்னணிப் படைதான் தீர்மானிக்கும்.

இந்தக் கூட்டத்திற்கான தனது பங்களிப்பில், ஆண்ட்ரே ரிட்ஸ்கி, ட்ரொட்ஸ்கிசம் மற்றும் அனைத்துலகக் குழுவை நோக்கிய தனது திருப்பமானது, போல்ஷிவிக் கட்சிக்குள் ஸ்ராலினிசத்திற்கு ஒரு மாற்றீடு இருந்தது என்பதைப் புரிந்துகொள்வதற்கு வாடிம் ரோகோவினின் படைப்புகளை ஆய்வு செய்ததன் மூலம் உந்தப்பட்டது என்று வலியுறுத்தினார். “ஒரு மகத்தான வரலாற்றுப் படைப்பு நம்மைப் போன்ற ஒரு அமைப்பின் அரசியல் நோக்குநிலையை எவ்வாறு செல்வாக்கு செலுத்த முடியும் என்பதை இங்கே காணலாம்” என்றார்.

போலி-இடதுகளை அம்பலம்படுத்துவது என்பது “ட்ரொட்ஸ்கிச இயக்கம் மற்றும் அனைத்துலகக் குழுவின் படிப்பினைகள் மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் சமகால போராட்டத்தின் அடிப்படையில் மட்டுமே செய்யப்பட முடியும்” என்றும் ரிட்ஸ்கி வலியுறுத்தினார். இப்போராட்டத்தின் தொடக்கத்தின் நூற்றாண்டை நாம் கொண்டாடுகிறோம் என்பது நமது இயக்கம் ஆழமான வரலாற்று வேர்களைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது, மேலும் இந்த போராட்டத்தின் அனைத்து படிப்பினைகளையும் நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

கூட்டத்தின் இறுதி பேச்சாளர் கஜகஸ்தானிலுள்ள ஒரு ட்ரொட்ஸ்கிச யுவதியான கார்லா ஆவார். அவர் பின்வருமாறு கூறினார்,

அன்பார்ந்த தோழர்களே, நண்பர்களே, கஜகஸ்தானில் அமைந்துள்ள அல்மா-அட்டா நகரத்திலிருந்து நான் உங்களிடம் உரையாற்றுகிறேன். சரியாக 95 ஆண்டுகளுக்கு முன்னர், அக்டோபர் புரட்சியின் முக்கியத்துவம் வாய்ந்தவர்களில் ஒருவரும், செம்படையை உருவாக்கியவரும், உள்நாட்டுப் போரில் அதன் வெற்றிகளை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவருமான லெவ் டேவிடோவிச் ட்ரொட்ஸ்கி, ஸ்ராலினின் ஆட்சியால் இந்த நகரத்திற்கு நாடுகடத்தப்பட்டார். ஸ்ராலினும் அவரது பிரச்சார எந்திரமும், வரலாற்றை பொய்மைப்படுத்தி, ட்ரொட்ஸ்கியை புரட்சியின் எதிரியாக சித்தரித்தனர். ஆனால், உண்மையில் அக்டோபர் புரட்சியின் எதிரியும், தீவிர குற்றவாளியும் ஸ்ராலினே ஆவார். ... நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பகுதியை இந்த நகரத்தில் கட்டியெழுப்புவது அவசியம் என்று நான் நம்புகிறேன், அப்போதுதான் இறுதியில் உண்மை வெல்லும். எல்லாவற்றிற்கும் மேலாக, இறுதியில், மிகவும் சக்திவாய்ந்த பொதுச் செயலாளரை பழிவாங்குவதை விட வரலாற்றின் பழிவாங்கல் வலுவானது.

Loading