முன்னோக்கு

அகதிகள் மீதான சவுதியின் படுகொலைகள் : முக்கிய அமெரிக்க கூட்டாளியின் பாரிய படுகொலை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய சக்திகளால் ஆயுதம் மற்றும் பயிற்சி பெற்ற சவூதி அரேபியாவின் எல்லை பொலிசார், மனித குலத்திற்கு எதிரான கொடூரமான குற்றங்களை இழைத்துள்ளனர் என்று, கடந்த திங்களன்று வெளியிடப்பட்ட மனித உரிமைகள் கண்காணிப்பு குழுவின் (HRW) அறிக்கை தெரிவித்துள்ளது. மார்ச் 2022 மற்றும் ஜூன் 2023 க்கு இடையில் யேமன்-சவூதி எல்லையில் எத்தியோப்பியாவிலிருந்து நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் திட்டமிடப்பட்ட முறையில் கொல்லப்பட்டதை HRW ன் அறிக்கை ஆவணப்படுத்துகிறது.

நேரில் கண்ட சாட்சிகள், வீடியோக்கள் மற்றும் செயற்கைக்கோள் ஆதாரங்களின் அடிப்படையில், அந்த அறிக்கை, “மழையைப் போல எங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்”என்ற தலைப்பில் வெளிவந்தது. புலம் பெயர்ந்து வந்த பாரிய மக்கள் கூட்டத்தின் மீது மோட்டார், ராக்கெட்டுகள் மற்றும் டாங்கிகள் மூலம் குறிவைத்து தாக்கப்பட்டதைக் அறிக்கை கண்டறிந்துள்ளது. இவை திகிலூட்டும் காட்சிகளை விட்டுச்செல்கிறது: பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் மலைப்பகுதி முழுவதும் பலத்த காயமடைந்தனர், துண்டிக்கப்பட்டனர் அல்லது ஏற்கனவே இறந்துவிட்டனர்.

இந்த தாக்குதல்கள் சில நேரங்களில் பல நாட்கள் தொடர்ந்தன. கை கால்கள் துண்டிக்கப்பட்ட புலம்பெயர்ந்தவர்களில் பலரை கைவிட வேண்டியிருந்தது, உயிர் பிழைத்தவர்கள் தங்கள் அலறல்களின் நினைவுகளையும், அவர்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள மன அதிர்ச்சியையும் விவரிக்கிறார்கள்.

பதினான்கு வயதான ஹம்தியா HRW இடம்,“எங்கள் மீது தொடர்ச்சியாக சுட்டார்கள், நான் நினைத்துப் பார்க்காத வகையில் மக்கள் கொல்லப்பட்டதைக் கண்டேன். சம்பவ இடத்திலேயே 30 பேர் கொல்லப்பட்டதைக் கண்டேன். நான் ஒரு பாறைக்கு அடியில் என்னை நானே தள்ளிவிட்டு அங்கேயே தூங்கினேன். என்னைச் சுற்றி மக்கள் தூங்குவதை என்னால் உணர முடிந்தது. ஆனால், உண்மையில் என்னைச் சுற்றி தூங்குபவர்கள் இறந்த உடல்கள் என்பதை பின்புதான் உணர்ந்தேன்”என்று கூறினார்.

சில சமயங்களில் ஒரே தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் யேமனை நோக்கி ஓடியபோதும், வெகுஜன கொலைகள் தொடர்ந்தன. எல்லையைக் கடக்கும் இடங்களில் பாரிய புதைகுழிகள் தோண்டி வைக்கப்பட்டன.

எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட பல புலம்பெயர்ந்தோர், தாம் ஊனமாக்கப்படுவதற்கு முன்பு, உடலில் எந்த பகுதியில் சுட விரும்புகிறார்கள் என்று கேட்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர். மற்றவர்கள் கற்கள் மற்றும் உலோக கம்பிகளால் தாக்கப்பட்டனர். இது, சில சமயங்களில் வெடிகுண்டு ஆயுதங்களினால், தொலைதூரத் தாக்குதல்களில் இருந்து தப்பி வந்தவர்களை கையாளும் முறையாக இருந்துள்ளது.

“சவூதி எல்லைப் பொலிசார் 17 வயது சிறுவனையும், உயிர் தப்பிப் பிழைத்தவர்களையும் எப்படி கட்டாயப்படுத்தி, உயிர் பிழைத்துவந்த இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ய நிர்பந்தித்தார்கள் என்றும், அதற்கு மறுத்த ஒருவரை எல்லைப் பொலிசார் தூக்கிலிட்டனர் என்றும் அந்த சிறுவன் விவரித்தான்.”

யேமனுக்கு நாடு கடத்தப்படுவதற்கு முன்னர், சவூதி அரேபியாவில் தற்காலிகமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த உயிர் பிழைத்தவர்கள் தாக்கப்பட்டு, சுகாதாரமற்ற மற்றும் நெரிசலான சூழ்நிலைகளில் - ஒரு நாளைக்கு ஒரு முறை உணவளிக்கப்பட்டு, கழிவுநீர் நிரம்பிய இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

சவூதி அரேபியாவில் புலம்பெயர்ந்த மக்களைக் கொல்லும் கொள்கை இப்போது இருந்தால், இந்த துஷ்பிரயோகங்கள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களாகத் தகுதிபெறக்கூடும் என்று HRW எச்சரிக்கையுடன் எழுதுகிறது, ஆனால் அதற்கான ஆதாரங்கள் அதிகமாக உள்ளன.

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஏப்ரல் 30, 2023க்கும் இடையில், “சவூதி பாதுகாப்புப் படையினரால் பீரங்கிகள் மற்றும் சிறிய ஆயுதங்களால் புலம் பெயர்ந்தவர்கள்மீது குண்டு வீச்சு நடத்தப்பட்டதாக ஐ.நா நிபுணர்கள் புகார் அளித்துள்ளனர், இந்த தாக்குதலில், 430 பேர் கொல்லப்பட்டதோடு, அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் உட்பட 650 பேர்கள் காயமடைந்தனர். இது பெரிய அளவிலான கண்மூடித்தனமான எல்லை தாண்டிய கொலைகளின் திட்டமிட்ட வடிவமாகத் தோன்றுகிறது”என்று HRW அறிக்கை கூறுகிறது.

“மழையைப் போல அவர்கள் எங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்” என்ற தலைப்பிலான அறிக்கை, உயிர் பிழைத்த 42 பேர்களின் நேர்காணல்கள், 350 க்கும் மேற்பட்ட வீடியோக்கள், புகைப்படங்களின் பகுப்பாய்வு மற்றும் நூற்றுக்கணக்கான சதுர கிலோமீட்டர் பகுதிகளின் செயற்கைக்கோள் படங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச மறுவாழ்வு கவுன்சிலின் சுதந்திர தடயவியல் நிபுணர் குழு (IFEG) உறுப்பினர்களால் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன.

இந்த காட்டுமிராண்டித்தனமானது, ரியாத்தில் உள்ள காட்டுமிராண்டி ஆட்சியின் விளைபொருள் மட்டுமல்ல, சவூதி எண்ணெய் மற்றும் அதன் உலகளாவிய கட்டமைப்பின் இன்றியமையாத பகுதியாக சவுதி பில்லியன்களை மறுசுழற்சி செய்வதை நம்பியிருக்கும் உலக முதலாளித்துவத்தின் விளைபொருளாக உள்ளது.

உலகளாவிய சமத்துவமின்மை, ஆபாசமான பணக்கார சர்வாதிகாரிகளால் ஆதிக்கம் செலுத்தும் வர்க்க சமூகங்கள், பிராந்திய மற்றும் ஏகாதிபத்திய போர்களும் சூழ்ச்சிகளும் பூமியில் ஒரு நரகத்தை உருவாக்கியுள்ளன. பலாத்காரம், சித்திரவதை மற்றும் மரணம் ஆகியவை ஆப்பிரிக்காவின் கொம்பு முனையிலிருந்து வெளியேறி, வன்முறை மற்றும் பசியிலிருந்து தப்பித்து, யேமன் வழியாகச் செல்லும் அகதிகளுக்கு கிடைக்கும் வெகுமதியாகும்.

கடந்த ஆண்டு நவம்பரில் அதிகாரப்பூர்வமாக முடிவடைந்த எத்தியோப்பிய அரசாங்கத்திற்கும் நாட்டின் வடக்குப் பகுதிக்கும் இடையே இரண்டு வருட கால திக்ரே (Tigray) போரினால் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். 300,000ம் முதல் 500,000ம் பேர்வரை சண்டை, பட்டினி மற்றும் மருத்துவ பராமரிப்பு இல்லாததால் கொல்லப்பட்டனர். பொதுமக்களின் இருப்பிடங்கள் மீதான தாக்குதல்கள், படுகொலைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் இரு தரப்பினராலும் நிகழ்த்தப்பட்டுள்ளன.

3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்னும் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர் மற்றும் 9 மில்லியன் மக்களுக்கு உணவு உதவி தேவைப்படுகிறது. திக்ரே பிராந்தியத்தில் 40 சதவீத மக்கள் தீவிர உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். போரினால் ஏற்பட்ட அழிவுடன், ஆப்பிரிக்காவின் கொம்பு பகுதி முழுவதிலும் பதிவாகிய மிக மோசமான வறட்சியும் சேர்ந்துகொண்டுள்ளது. 50 மில்லியன் மக்களை ஆபத்தான உணவுப் பாதுகாப்பின்மை நிலை அச்சுறுத்துகிறது. முக்கியமாக தெற்கு சூடான், சோமாலியா மற்றும் எரித்திரியாவில் இருந்து கிட்டத்தட்ட ஒரு மில்லியன் அகதிகளுக்கு எத்தியோப்பியா வசிப்பிடமாக உள்ளது.

சவூதி அரேபியாவுக்கான பயணம், டிஜிபூட்டி மற்றும் ஏடன் வளைகுடா வழியாக யேமனுக்கு குடியேறுபவர்களை அழைத்துச் செல்கிறது. மனித கடத்தல்காரர்கள் புலம்பெயர்ந்தோரை அவர்களது குடும்பத்தினரிடம் இருந்து பணம் பறிப்பதற்காக அடிக்கடி சித்திரவதை செய்கின்றனர். பெண்கள் தொடர்ந்தும் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள், மேலும் HRW ஆல் நேர்காணல் செய்யப்பட்ட அவர்களில் இரண்டு பெண்கள், இந்த வழியில் கர்ப்பமாகிவிட்டனர்.

டிசம்பர் 4, 2022 அன்று TikTok இல் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், ஏறக்குறைய 47 புலம்பெயர்ந்தோர் குழு ஒன்று, அவர்களில் 37 பெண்களாகத் தெரிகிறது, சவூதி அரேபியாவிற்குள் ஒரு செங்குத்தான மலை சாய்வில் அல் தாபித் என்ற புலம்பெயர்ந்தோர் முகாமிலிருந்து கடந்து செல்லும் பாதையில் நடந்து செல்வதைக் காட்டுகிறது. [Photo: Human Rights Watch ]

முதலாவது, புலம்பெயர்ந்தோர் யேமனில் ஒரு போர் மண்டலத்தையும், இரண்டாவது முன்னெப்போதும் இல்லாத வகையில், மனிதாபிமான பேரழிவையும் கடந்து செல்ல வேண்டும். ஒன்பது ஆண்டுகால உள்நாட்டுப் போர் யேமன் சமூகத்தை தரைமட்டமாக்கியுள்ளது. பதினேழு மில்லியன் யேமனியர்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்கின்றனர், 2 மில்லியன் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். 70 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் மனிதாபிமான உதவியை நம்பியுள்ளனர், மேலும் 2021 ஆம் ஆண்டின் இறுதிவரை 377,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா மதிப்பிடுகிறது—அவர்களில் 70 சதவீதமான பேர்கள் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆவர்.

யேமனின் சவூதி ஆதரவு அரசாங்கமும், நாட்டின் பாதிக்கும் மேலான பகுதியைக் கட்டுப்படுத்தும் ஹவுதி கிளர்ச்சிப் படைகளும், வன்முறை, சித்திரவதை, பாலியல் வன்கொடுமைகள் மற்றும் மரணதண்டனை உள்ளிட்ட பயங்கரமான சூழ்நிலைகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த புலம்பெயர்ந்தோருக்கு எதிராக கடுமையான மனித உரிமை மீறல்களைச் செய்துள்ளனர். 2021 இல், ஒரு எதிர்ப்பு போராட்டத்தை அடக்குவதற்காக, ஹவுதிப் படைகள் தடுப்பு முகாம் மீது துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்ததையடுத்து, சனாவில் ஏராளமான புலம்பெயர்ந்தோர் எரித்துக் கொல்லப்பட்டதாக HRW அறிவித்துள்ளது.

யேமனின் வடக்கு சாதா பிராந்தியத்தில் சவுதி அரேபியாவை கடப்பதற்கான சோதனைச் சாவடிகளில், சில சமயங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆட்கடத்தல்காரர்கள், அபாயகரமான குறுக்கு வழிகளைத் தேடுவதற்கு, குறைந்த பட்சம் பணம் செலுத்தக்கூடிய புலம்பெயர்ந்தோரை பீரங்கித் தீவனமாகப் பயன்படுத்துகின்றனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்த இரத்தம் தோய்ந்த பாதையில் அதன் தடயங்களை விட்டுச் செல்கிறது. அரை நிலப்பிரபுத்துவ சவுதி தன்னலக்குழுவுடன், அதன் நெருங்கிய பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ கூட்டுறவை அனைவரும் அறிந்ததே. அதன் கூட்டணியின் ஒரு பகுதியாக, யேமன் உள்நாட்டுப் போரில் சவூதியின் தலையீட்டை அமெரிக்கா எளிதாக்குகிறது, இதில் யேமன் பொதுமக்கள் மற்றும் அவர்களின் உள்கட்டமைப்புகளுக்கு எதிராக, முறையான வான்வழித் தாக்குதல்களும் அடங்கும்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்த அமெரிக்க ஜனாதிபதி பைடென் இரு அரசாங்கங்களுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்தினார். பைடெனின் பயணம், பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலைக்குப் பிறகு, சர்வதேச ரீதியில் சவூதியை ஒதுக்கப்பட்ட நாடாக கருதுவதற்கான அவரது வெற்றுப் பிரச்சார உறுதிமொழியை மாற்றியமைத்ததுடன், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போரின் பின்னால் வளைகுடா நாடுகளை வரிசைப்படுத்தும் நோக்கத்தை கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் பைடெனின் வார்த்தைகளில்,“நாங்கள் விலகிச் செல்வதில் தவறு செய்தோம் என்று நான் நினைப்பதை மீண்டும் உறுதிப்படுத்த எங்களுக்கு ஒரு வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன்: மத்திய கிழக்கில் எங்கள் செல்வாக்கு… சீனா மற்றும்/அல்லது ரஷ்யாவால் வெற்றிடத்தை நிரப்பப்படுவதை உருவாக்காமல், பிராந்தியத்தில் நாம் தொடர்ந்து முன்னிலை வகிக்க முடியும் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்”என்று கூறினார்.

குறிப்பிடத்தக்க வகையில், மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் அறிக்கை, நிராயுதபாணியான மற்றும் ஆதரவற்ற புலம்பெயர்ந்தோருக்கு எதிராக “வெடிக்கும் ஆயுதங்களை”சவுதி பயன்படுத்துவதை மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டியது. ஆனால், எந்த நாடுகள் அந்த ஆயுதங்களை வழங்கின என்பதுபற்றி, குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவை வழங்கியதுபற்றி அறிக்கை எதுவும் கூறவில்லை. 73 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் இந்த நாடுகளின் பெயர்கள் ஒன்று கூட இடம் பெறவில்லை. அதற்குப் பதிலாக, கவனமாகச் சொல்லப்பட்ட ஒரு பரிந்துரை உள்ளது: “சம்பந்தப்பட்ட அரசாங்கங்கள் ஆயுதங்கள், பயிற்சி மற்றும் பராமரிப்பு ஒப்பந்தங்கள் உட்பட சவூதி அரேபியாவிற்கு அனைத்து ஆயுதங்கள் மற்றும் பிற இராணுவ உபகரணங்களை வழங்குவதை நிறுத்திவைக்க வேண்டும், மேலும் சவூதி எல்லைப் பாதுகாப்புப் பிரிவுகளுடனான அனைத்து இராணுவப் பயிற்சி மற்றும் ஒத்துழைப்பையும் நிறுத்த வேண்டும்”என்று குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்பது பொதுவாக அமெரிக்க வெளியுறவுக் கொள்கையுடன் இணைந்த ஒரு அமைப்பாகும். உக்ரேனில் தற்போதைய அமெரிக்க-நேட்டோ பினாமி போரில், HRW ரஷ்ய அட்டூழியங்கள் என்று கூறப்படும் நீண்ட அறிக்கைகளை வெளியிட்டது, அதே நேரத்தில் உக்ரேனிய அரசாங்கத்தின் இதேபோன்ற பாதகச் செயல்களைப் பற்றி, மிகக் குறைவாகவே அறிக்கைகள் உள்ளது. முக்கிய அமெரிக்க கூட்டாளிகள் மீதான, இந்தக் குழுவின் எப்போதாவது வரும் விமர்சனங்கள் பொதுவாக, அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பிற்குள் இருக்கும் உள் மோதல்களுடன் இணைக்கப்பட்டுள்ளது அல்லது இந்த நட்பு நாடுகளின் நடவடிக்கைகள் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையுடன் முரண்படும்போது அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வெளியுறவுத்துறையின் விருப்பத் தேர்வாக உள்ளது.

ஆனால், இந்த வெளியீட்டின் நேரத்திற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும், கூறப்படும் சான்றுகள் உண்மையானவை மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவங்கள் மிகவும் மோசமானவை என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. இஸ்ரேல் மற்றும் எகிப்துடன் மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூன்று முக்கிய கூட்டாளிகளில் ஒன்றான சவூதி ஆட்சி இரத்தத்தில் மூழ்கியுள்ளது.

மனித உரிமை மீறல்களுக்கு இதர நாடுகளின் மீதான தடைகளை கூறும்போது, சவூதி அரேபியாவுடன் நட்புறவைப் பேணும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற அரசாங்கங்கள் மோசமான பாசாங்குத்தனத்தின் குற்றவாளிகளாக உள்ளனர். எண்ணெய் வளமுள்ள வளைகுடா நாடுகளுடன் தொடர்பு கொள்ளும்போது, சர்வதேச சட்டத்திற்கான மிகவும் அடையாளமான “உறுதிப்பாடுகள்”கூட கரைந்துவிடும். ஏகாதிபத்திய அரசாங்கங்கள் தங்களின் வெறித்தனமான வெளிநாட்டுக் கொள்கைகள், மனித உரிமைகள் மற்றும் சர்வதேசச் சட்டங்களைக் கருத்தில் கொண்டவை என்று கூறுகின்றன. ஆனால், சவூதி அரேபியா இந்தக் கூற்றுக்கள் அப்பட்டமான பொய் என்பதற்கு மறுக்க முடியாத சான்றாக உள்ளது.

மேலும், சவூதி பட்டத்து இளவரசரின் காட்டுமிராண்டித்தனம் கூட ஏகாதிபத்திய அரசாங்கங்கள், குறிப்பாக அமெரிக்காவின் குற்றங்களுடன் ஒப்பிடுகையில் மங்கிப்போகிறது. கடந்த மூன்று தசாப்தங்களில், வாஷிங்டன் டி.சி.யில் அமர்ந்திருக்கும் அரசாங்கத்தை விட உலகில் வேறு எந்த அரசாங்கமும் அதிக போர்களில் ஈடுபட்டதில்லை, அதிகமான மக்களைக் கொன்றது அல்லது சர்வதேச சட்டத்தை மீறியதும் இல்லை.

புலம்பெயர்ந்தோர் மீதான துஷ்பிரயோகம் மற்றும் அப்பட்டமான படுகொலைகளைப் பொறுத்தவரை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் அனைத்தும் தங்கள் சொந்த குற்றங்களை மேற்கொண்ட குற்றவாளிகள் ஆவர். அமெரிக்க மெக்சிகோ எல்லைப் படையின் கைகளினாலோ அல்லது“ஐரோப்பிய கோட்டை”எனப்படும் கொள்கையின் கீழுள்ள எண்ணற்ற நடவடிக்கைகளினாலோ பாரிய மரணங்கள் நிகழ்வதற்கு வழி வகுத்துள்ளன.

சவூதி ஆட்சியின் குற்றங்கள், சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அணிதிரட்ட வேண்டியதன் அவசியத்தின் மற்றொரு நிரூபணமாகும். அந்த வகையில், உக்ரேனில் நேட்டோ-ரஷ்யா மோதலில் இருப்பது போல், அல்லது போர், கடுமையான வறுமை, காலநிலை மாற்றம், உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி மற்றும் அதன் முறிவின் பிற விளைவுகளால் ஏற்கனவே அகதிகளாக ஆக்கப்பட்டுள்ள 100 மில்லியன் மக்களை காட்டுமிராண்டித்தனமாக நடத்துவதையும், அணுவாயுத உலகப் போரின் அச்சுறுத்தலையும் நிறுத்துவதற்கான ஒரேவழி இதுவேயாகும்.

Loading