பேர்லினில் ரோஜர் வாட்டர்ஸ்: பாசிசம், இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான ஒரு சக்திவாய்ந்த இசை மற்றும் அரசியல் அறிக்கை


மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஒரு பிரிட்டிஷ் பாடகரான ரோஜர் வாட்டர்ஸ் மே 18 மற்றும் 19ம் திகதிகளில் தனது இது ஒரு பயிற்சி அல்ல (This Is Not a Drill) என்ற இசை நிகழ்ச்சியின் சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக பேர்லினுக்குச் சென்றிருந்தார். ஸ்ப்ரீயின் ஆற்றங் கரையில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஸ்டேடியத்தில் இடம்பெற்ற அவரது இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள், ஏறக்குறைய அனைத்தும் விற்றுத் தீர்ந்ததுடன், மிகவும் அற்புதமான, பரபரப்பான இரண்டு மாலைப் பொழுதுகள் அவரது இசை நிகழச்சிகளுடன் களிந்து சென்றன. தற்போது கிட்டத்தட்ட 80 வயதைக் கடந்த பிங்க் ஃபிலாய்டின் இணை நிறுவனரான வாட்டர்சின் இசையையும் அவரது தெளிவான அரசியல் அறிக்கைகளையும், அனைத்து தலைமுறையினரும் பல ஆயிரம் பேர்லினர்களும் பாராட்டியுள்ளனர்.

பேர்லினில் ரோஜர் வாட்டர்ஸ்சின் நிகழ்ச்சி

முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்கள், தங்கள் விரக்தியை மறைக்க முடியாமல், தங்கள் மோசமான ஆத்திரமூட்டல் பிரச்சாரத்தை முடுக்கிவிடுவதன் மூலம் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்வினையாற்றினர். 'ரோஜர் வாட்டர்ஸ் யூத-விரோதத்தை அவருடன் கொண்டு வருகிறார்' என்று BZ எழுதியது; ரோஜர் வாட்டர்ஸ் பேர்லினில் உள்ள தனது விமர்சகர்களை அச்சுறுத்தினார் என்றும் மோர்கன்போஸ்ட் கூறியது. ரோலிங் ஸ்டோன் கூட நிகழ்ச்சியை 'பயங்கர திகிலூட்டும் சிம்பொனி' என்று அழைத்ததுடன், வாட்டர்ஸை 'இசைசார் ரீச்ஸ்பர்கர்' என்று விவரித்தது. ஜேர்மனியில் ரீச்ஸ்பர்கர் என்பது 1871 இல் இருந்த ஜேர்மன் பேரரசை மீட்டெடுக்க முயன்ற தீவிர வலதுசாரி அரசியல் இயக்கம் ஆகும்.

நகரத்தின் அழுக்கான அரசியல் உயரடுக்குகளும் இதே போன்ற தொனிகளை பயன்படுத்தினர். கலாச்சாரத்திற்கான பேர்லின் நகரின் CDU (கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்) கட்சியின் புதிய செனட்டரான ஜோ சியாலோ, இந்த நிகழ்வை 'கடுமையான வார்த்தைகளில்' கண்டனம் செய்ததுடன் வாட்டர்ஸ் ஒரு யூத விரோதி என குற்றம் சாட்டினார். அவரது முன்னோடியான கிளாஸ் லெடரர் (இடது கட்சி) Die Zeit பத்திரிக்கையுடனான ஒரு நேர்காணலில், வாட்டர்ஸ் பிராங்பேர்ட் 'முனிசிபல் ஹாலில் இசைநிகழ்ச்சியை நடத்தியிருந்தால்' கச்சேரியை 'தடுக்க' முயற்சித்திருப்பேன் என்று விளக்கினார்.

மே 21 அன்று, முனிச்சில் அமைந்துள்ள ஒலிம்பிக் மண்டபத்தில் வாட்டர்ஸ் மற்றொரு வெற்றிகரமான இசை நிகழ்ச்சியை நடத்தினார். அங்கும் அவர் மீது அவதூறூகள் அள்ளிவீசும் முயற்சிகள் தொடர்ந்தன. மண்டபத்தின் முன் ஒரு சிறிய கூட்டத்தில், மியூனிக் மற்றும் மேல் பவேரியாவின் யூத மத சமூகத்தின் தலைவரான சார்லோட் நோப்லோச், வாட்டர்ஸை 'யூத விரோத தீக்குளிப்புவாதி' என்று அழைத்தார்.

வாட்டர்ஸ் ‘’ஏற்கனவே சர்ச்சைக்குரிய தோற்றத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் யூத எதிர்ப்புப் பதிவின் மூலம் கவனத்தை ஈர்த்தார்’’ என்று Süddeutsche Zeitung பத்திரிகை எழுதியது. அதில் அவர் இஸ்ரேலை 'கொடுங்கோன்மை மற்றும் இனவெறி ஆட்சி' என்று விபரித்திருந்தார்.

அரசியல்வாதிகளும் ஊடகங்களும் வாட்டர்சை அடக்குவதற்கு பயன்படுத்தும் முறை எவ்வளவு அழுக்காக இருக்கிறது. யூத-விரோதக் குற்றச்சாட்டைப் பயன்படுத்தி, இஸ்ரேலிய அரசாங்கத்தின் ஒடுக்குமுறை, ஜனநாயகமற்ற மற்றும் மிகவும் போர் வெறிபிடித்த கொள்கைகளுக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பும் -இதில் தீவிர வலதுசாரிக் கூறுகளும் தொனியை அமைக்கின்றன- அவை அமைதியாக்கப்பட வேண்டும் என்பதாகும்.

மேலும், உக்ரேனில் உள்ள பாசிச மற்றும் யூத-விரோத சக்திகளை வெளிப்படையாக ஆதரிக்கும் மற்றும் ஜேர்மனியிலேயே அதிதீவிர வலதுசாரிகளை வலுப்படுத்தும் அதே கட்சிகளால் யூத-விரோத குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் ஜேர்மன் பாராளுமன்றம் இயற்றிய 'யூத விரோத தீர்மானங்கள்' என்று அழைக்கப்படுபவை அனைத்தும் யூதப் படுகொலை குற்றத்தினை குறைமதிப்புக்கு உள்ளாக்கி, நாஜி இராணுவத்தினை புகழ்ந்துவரும் ஜேர்மனிக்கான மாற்று (AfD) என்ற பாசிச கட்சியின் தலைமையால்  ஆதரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜேர்மனியில் உள்ள வலதுசாரி செய்தி ஊடகம் மற்றும் அரசியல் கும்பல்களின் பயமுறுத்தல்களுக்கு அடிபணிந்துபோவதை வாட்டர்ஸ் மறுத்துவிட்டார். மே 28 அன்று, பிராங்பேர்ட்டிலுள்ள விழா அரங்கில் வாட்டர்ஸின் நிகழ்ச்சியைத் தடை செய்ய அனைத்து நிறுவனமயமான கட்சிகளின் கூட்டணி முயற்சித்தது. அவர் நீதிமன்றத்தில், கருத்து சுதந்திரம் மற்றும் கலைக்கான உரிமையை பாதுகாத்தார்.

பலத்த கைதட்டலுடன், மேடைக்கு மேலே உள்ள வீடியோ திரைகளில் பின்வரும் செய்தியுடன் நிகழ்ச்சி பேர்லினில் தொடங்கியது: “பொது நலன் சார்ந்த ஒரு விஷயத்தில், பிராங்பேர்ட்டில் உள்ள நீதிமன்றம் நான் யூத விரோதி அல்ல என்று தீர்ப்பளித்தது என்பது சிறப்பான விடயம். தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், யூத-விரோதத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்’’ என்று அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு கச்சேரியின் தொடக்கத்திலும் வழங்கப்பட்ட அதே செய்தி தொடர்ந்தது: 'நான் பிங்க் ஃபிலாய்டை நேசிக்கிறேன், ஆனால் ரோஜரின் அரசியலை என்னால் சகிக்க முடியவில்லை' என்று உங்களில் ஒருவர் கருதுவார் எனில், நீங்கள் இப்போதே மதுக்கடைக்கு சென்றுவிடுவது நல்லது.' உண்மையில், யாரும் மதுக்கடைக்குச் செல்லவில்லை, ஆனால் அவரது இந்தக்கூற்று பலத்த ஆதரவுக்கும், கைதட்லுக்கும்  உள்ளானது!

அதைத் தொடர்ந்து வந்த இரண்டரை மணி நேரம், அரச ஸ்தாபனம் ஏன் வாட்டர்ஸைக் கண்டிக்கிறது மற்றும் அவரது சுற்றுப்பயணத்தை நிறுத்த விரும்பியது என்பதை தெளிவாக்கியது. WSWS முந்தைய சுற்றுப்பயண அறிக்கையில் சுட்டிக்காட்டியபடி, ஏறக்குறைய அனைத்து பாடல்களும்,' ஏகாதிபத்திய போர், பாசிசம், தேசியவாதத்தின் விஷம், அகதிகளின் அவலநிலை, அரசு ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்கள், உலகளாவிய வறுமை, சமூகம் சமத்துவமின்மை, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் மற்றும் அணு ஆயுத அழிவின் ஆபத்து” என நம் காலத்தின் அழுத்தமான பிரச்சனைகளை முன்வைத்தன.

பேர்லினில் நடந்த நிகழ்ச்சியின் மறக்கமுடியாத சில தருணங்களை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். மாலையின் கடைசிப் பாடல்களில் ஒன்று பிங்க் ஃபிலாய்டின் 'The Final Cut' (1983) இலிருந்து  “Two Suns in the Sunset” (அஸ்த்தமனத்தில் இரண்டு சூரியன்கள்) ஆகும். இந்தப் பாடல் அணு ஆயுதப் போரின் பேரழிவு விளைவுகளைப் பற்றி எச்சரிக்கிறது. பாடலின் வீடியோ அனிமேஷன் அதிர்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் உள்ளது. தனது குடும்பத்தைப் பார்க்க வீட்டிற்குச் செல்லும் ஒரு மனிதன் அணுப் புயலுக்குள் சிக்குப்படுவதை இது சித்தரிக்கிறது.

பாடலை அறிவித்த வாட்டர்ஸ், உலக முடிவின் கடிகாரம் நள்ளிரவு முதல் 90 வினாடிகள் இருக்கிறது என்று எச்சரித்தார். மேலும் ஒன்று நிச்சயம்: “அடுத்த ஆண்டு, இது 90 வினாடிகளுக்கும் குறைவாக இருக்கும். ஏனெனில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இன்னும் ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது” என்று கூறிய அவர், மேலும் 'உலகத்தை அழிக்கும் இந்த அயோக்கியர்களை தடுத்து நிறுத்துங்கள், ஏனெனில் அவர்கள் இந்த நேரத்தில் என்ன செய்கிறார்கள் என்பதுபற்றி  கவனம் செலுத்துவதில்லை’’ என்று வாட்டர்ஸ் குறிப்பிட்டார். 

போர்க் குற்றவாளி'

முக்கிய போர் வெறியர்கள் யார் என்பது வாட்டர்ஸால் தெளிவாக்கப்பட்டது. அவரது தனி ஆல்பமான 'Amused to Death' (1992) இலிருந்து 'The Bravery of Being Out of Range”' என்ற போர்-எதிர்ப்பு பாடலுக்காக ரொனால்ட் ரீகன் முதல் ஒவ்வொரு அமெரிக்க அதிபரின் படங்களும் காட்டப்பட்டது, ஒவ்வொன்றும் 'போர் குற்றவாளிகள்' என்ற சுலோகத்துடனும், அங்கே அவர்களது போர்க்குற்றங்களின் பட்டியலும் கொடுக்கப்பட்டிருந்தது. பாரக் ஒபாமா மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரை 'ட்ரோன் மூலம் படுகொலைகள்' செய்ய ட்ரோன்களைப் பயன்படுத்தியதற்காகவும் மற்றும் ஜேர்ஜ் டபிள்யூ புஷ் அவரது 'பேரழிவு ஆயுதங்களைப் பற்றிய' பொய்களுக்காக வாட்டர்ஸ் தாக்கினார். அமெரிக்க தற்போதைய ஜனாதிபதி பைடனை குறிப்பிட்டு, 'இப்போதுதான் தொடங்குகிறார்' என்றார்.

வாட்டர்ஸின் தனிப்பட்ட வாழ்க்கையின் மற்றொரு சிறப்பம்சம், 1987 ஆம் ஆண்டு 'ரேடியோ KAOS' என்ற ஆல்பத்தின் “The Powers That Be” என்ற பாடல் ஆகும். இந்த பாடல் 'அதிகாரங்கள்' மற்றும் அவர்களின் தற்போதைய மற்றும் முந்தைய குற்றங்களின் கடுமையான குற்றச்சாட்டாகும். ஓலமிடும் எச்சரிக்கை ஒலிகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளின் பின்னணியில், பலத்த ஆயுதம் ஏந்திய கொள்ளையடிக்கும் போலீஸ் பிரிவுகள் அல்லது பாசிச குண்டர்களின் குழுக்களும் அவர்களால் பாதிக்கப்பட்டவர்களில் சிலரும் திரையில் தோன்றுகிறார்கள்.  இதில் யூத இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட சோஃபி ஷோல் மற்றும் ஆன் ஃபிராங்க், அத்துடன் 'ஐரோப்பிய கோட்டை' யால் படுகொலை செய்யப்பட்ட புலம்பெயர்ந்தோர் மற்றும் பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அமெரிக்காவில் போலீஸ் வன்முறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அடங்குவர். 'ஆஹா! அவர்கள் ஏன் இவ்வளவு கொடூரமாக இருக்கிறார்கள்? ஏனென்றால் அவர்கள் நமது எதிர்ப்பை நசுக்கி உலகை ஆள விரும்புகிறார்கள். '

'ஆன் ஃபிராங்க்'

முழு நிகழ்ச்சியும் 'இருந்துவரும் அதிகாரங்களுடன்' மோதுவதற்கான ஒரு அழைப்பாக இருக்கிறது. காலத்தால் அழியாத பிங்க் ஃபிலாய்டின் தலைசிறந்த படைப்புகளான “Another Brick in the Wall,” “Comfortably Numb” அல்லது “In the Flesh” (யூத விரோதம் மற்றும் பாசிசத்திற்கு எதிரான பாடல்) இரண்டையும் வாட்டர்ஸ் பயன்படுத்துகிறார், அத்துடன் அவரது சமீபத்திய தனிப்பட்ட பாடல் பதிவுகளும் இதில் அடங்கும்.

'கொலையாளிகளை அடைத்து வை’’

வாட்டர்ஸின் மிக சமீபத்திய 'Déjà Vu', ஆல்பத்திலிருந்து 'இந்த வாழ்க்கைதானா எமக்கு வேண்டியது? (2017)', மற்றும்  'தலைதெறிக்க ஓடு (Run like Hell)' ('தி வால்-சுவர்'-1979) ஆகியவையில் இருந்து ஒரு பாடல் ஆல்பத்தினை உருவாக்கி, இழிபுகழ்பெற்ற '“Collateral Murder”-பிணைய படுகொலை' வீடியோவை அடிப்படையாகக் கொண்டு ஈராக்கில் அமெரிக்க போர்க்குற்றங்கள் பற்றி விவாதிக்கிறது.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க அப்பாச்சி ஹெலிகாப்டரில் இருந்து நிராயுதபாணிகளான பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது அமெரிக்க படையினர்கள் கண்மூடித்தனமாக சுடுவதைக் செல்சியா மானிங்கால் கசியவிடப்பட்ட மற்றும் விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்ட வீடியோ காட்டுகிறது. அது பற்றிய விளக்கக்காட்சி இப்படி ஒரு அழைப்பில் முடிவடைகிறது: “ஜூலியன் அசாஞ்சை விடுவி! படுகொலையாளர்களை கைதுசெய்!” என்ற கோஷத்துக்கு, பார்வையாளர்கள் பெருத்த கரகோஷம் எழுப்பி ஆர்ப்பரித்தனர். 

குறிப்பாக வீடியோ திரைகளில் பெரிய எழுத்துக்களில் காட்டப்பட்ட, வாட்டர்ஸின் தெளிவான அரசியல் அறிக்கைகளுக்கு பார்வையாளர்கள் பெரும் கைதட்டலுடன் பதிலளித்தது, நிகழ்ச்சியின் தொடர்ச்சியான சிறப்பு அம்சமாக இருந்தது. '1977 இல் வெளிவந்த 'விலங்குகள்' ஆல்பத்தின் -செம்மறியாடு' என்ற பாடலில், 'போரை எதிர்,' 'பாசிசத்தை எதிர்,' 'இராணுவவாதத்தை எதிர்,' 'முதலாளித்துவத்தை எதிர்' மற்றும் எதிர்ப்புக்கான கடுமையான முறையீடுகள் இருந்ததைப்போல்,  'அனைத்து பேரரசுகளையும் அடித்துவிரட்டு', 'ட்ரோன்களை அடித்துவிரட்டு', 'வீடுகளில் இருக்கும் மக்கள்மீது குண்டுகளை பொழிவதை அடித்துவிரட்டு', 'ஆக்கிரமிப்பை அடித்துவிரட்டு, மற்றும் அவர்களது 'மனித உரிமைகளை அடித்துவிரட்டு' போன்ற போர்க்குணமிக்க அழைப்புகளுக்கும் அதே வலுவான ஆதரவு கிடைக்கப்பெற்றது. 

தெளிவான அரசியல் குவிமையப்படுத்தலால் மாபெரும் இசையின் சிறப்பம்சம் ஒருபோதும் பாதிப்படைவதில்லை என்பதை வெளிப்படுத்தியதே நிகழ்ச்சியின் மற்றொரு பலமாகும்.  மாறாக இங்கு, வடிவமும் உள்ளடக்கமும் ஒன்றுக்கொன்று துணைபுரிந்து  ஊட்டமளிக்கும் ஒரு முழுமையை உருவாக்கியதை நாம் கண்டோம். வாட்டர்ஸ் மற்றும் அவரது முழு இசைக்குழுவும் மிக உச்சத்தின் இசை மட்டத்தில் இதை நிகழ்த்தினர். டெட்ராய்டில் வாட்டர்ஸின் செயல்திறன் பற்றி நாம் ஏற்கனவே எழுதியது பேர்லினில் உறுதிப்படுத்தப்பட்டது:

'எதார்த்தத்திற்கு எதிரான போராட்டம்... எப்போதும் உண்மையான ஆக்கப்பூர்வ படைப்பின் ஒரு பகுதியாகும்' என்ற லியோன் ட்ரொட்ஸ்கியின் முன்மொழிவின் உண்மையை வாட்டர்ஸ் இந்த சுற்றுப்பயணத்தின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நடைமுறையில் நிரூபித்துக் காட்டுகிறார். கலையின் ஒவ்வொரு புதிய போக்கும், இப்படி நிகழ்த்தப்பட்ட இவரது இந்தக்கச்சேரியும் கூட, ஒரு'புதிய போக்கு' ஆகும், அது 'புரட்சிகர கிளர்ச்சியுடன்' தொடங்கியது என்று கருதப்படவேண்டும்..

இது ஒரு பயிற்சி அல்ல என்ற வாட்டர்ஸின் இசை நிகழ்ச்சி ஒரு புரட்சிகர அம்சத்தைக் கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணம் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை முதலாளித்துவ உயரடுக்கையும் அவர்களின் அமைப்பையும் எதிர்கொள்ளவும், விமர்சன ரீதியாக சிந்திக்கவும், அநீதி, சமூக சமத்துவமின்மை மற்றும் போர் இல்லாத சிறந்த எதிர்காலத்திற்காக போராடவும் தூண்டுகிறது.

Loading