இசைக்கலைஞர் ரோஜர் வாட்டர்ஸ் ஜேர்மனியில் ஏன் வேட்டையாடப்படுகிறார்?

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ரொக் இசைக்கலைஞர் ரோஜர் வாட்டர்ஸ் தனது வெற்றிகரமான ஜேர்மன் சுற்றுப்பயணத்தை மே 28 அன்று பிராங்பேர்ட்டில் ஒரு கச்சேரியுடன் நிறைவு செய்தார். பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அவரை உற்சாகப்படுத்தியபோது, ​​அரசியல்வாதிகளும் ஊடகங்களும் முன்னெப்போதும் இல்லாத வகையில், அவர் மீது ஒரு சூனிய வேட்டையை  ஏற்பாடு செய்தனர். ஜேர்மன் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இடது கட்சி முதல் அதிதீவிர வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சி (AfD) வரையான  அனைத்துக் கட்சிகளும் பெரும்பான்மையான ஊடகங்களும் இவருக்கு எதிரான இந்த சூனிய வேட்டையில் பங்கேற்றன. 79 வயதான பிங்க் ஃபிலாய்ட் இசைக்குழுவின் இணை நிறுவனர் ரோஜர் வாட்டர்ஸ் மீது வீசப்பட்ட அனைத்து அவதூறும் மிகவும் பொருத்தமற்றவை, எல்லாப் பொய்யும் அபத்தமானவை. 

ஒரு சிறந்த இசைக்கலைஞராக மட்டுமின்றி, அநீதி, அடக்குமுறை, போர் மற்றும் பாசிசத்திற்கு எதிரான தளராத போராளியாக பெயர் பெற்ற வாட்டர்ஸ், 'யூத வெறுப்பாளர்' என்றும் அவரது இசை நிகழ்ச்சி 'நாகரீகத்தை மீறுவதாகவும்' கண்டனம் செய்யப்பட்டது. (இந்த கண்டனத்தினை செய்தவர், பிராங்ஃபர்ட் மேயர் மைக் ஜோசப், சமூக ஜனநாயகக் கட்சி, SPD). இப்போது வரை, யூத இன அழிப்பு ஜேர்மனியில் 'நாகரிகத்தின் மீறல்' என்று விவரிக்கப்பட்டு வருகிறது. இஸ்ரேலிய தூதர் டேனி டானன் வாட்டர்ஸை 'நம் காலத்தின் மிகப் பெரிய யூத வெறுப்பாளர்களில் ஒருவர்' என்று கண்டித்தார். 

பெர்லினில் ரோஜர் வாட்டர்ஸ்

தான் ஒரு யூத-விரோதி அல்ல, மாறாக இனவெறி மற்றும் ஒடுக்குமுறையின் ஒவ்வொரு வடிவத்தையும் எதிர்ப்பவர் என்று வாட்டர்ஸ் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். இருப்பினும், அவருக்கு எதிரான தாக்குதல்கள் வலுப்பெற்று வருகின்றன. பிராங்போர்ட் நகராட்சியும்,மாநில அரசாங்கமும் அவரது இசை நிகழ்ச்சியை தடை செய்ய முயற்சித்த பிறகு, பிராங்பேர்ட்டில் அவருக்கு ஆதரவாக ஒரு நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டது, இருப்பினும் அவர் மீது அவதூறுகளையும் பொய்களையும் அள்ளிவீசும் அவரது எதிர்ப்பாளர்களை  எதுவும் தடுக்கவில்லை.  

பொய்களும் திரிபுகளும் காஃப்காஈஸ்க் என்ற அபத்தமான பண்புகளைப் பெற்றன. எடுத்துக்காட்டாக, அரச வானோலியான Deutschlandfunk ஒலிபரப்பாளரான செபாஸ்டியன் ஏங்கல்பிரெக்ட் 'ஒரு யூத எதிர்ப்பு உலகக் கண்ணோட்டத்தை கட்டுடைப்போம்' என்ற ஒரு வர்ணனையை ஒலிபரப்பினார். “முதலாளித்துவத்தை எதிர்ப்போம்! பாசிசத்தை எதிர்ப்போம்! போரை எதிர்ப்போம்!'' என்ற வாசகங்கள் வாட்டர்ஸின் நிகழ்ச்சியின் போது காண்பிக்கப்பட்டு அம்பலப்படுத்துகிறது.  'பாசிச வாய்வீச்சு' அவரது ஆதாரம்: 'வலதுசாரி ஜனரஞ்சகவாதிகளிடம் இருந்து நாம் அறிந்தபடி, வாட்டர்ஸ்  மொத்த எளிமைப்படுத்தல்களை வழங்குகிறார்.' இந்த நம்பமுடியாத தர்க்கத்தின் படி, நீங்கள் வெள்ளையை கருப்பு என்றும் மற்றும் கருப்பை  வெள்ளை என 'கட்டுடைக்க' முடியும்.

சட்டவிரோதமான நடவடிக்கைகளை தூண்டுவிடும் சந்தேகத்தின் அடிப்படையில் பெர்லின் பொலிசார் வாட்டர்ஸுக்கு எதிராக உத்தியோகபூர்வமாக விசாரணையைத் தொடங்கினர், இது ஊடகங்களால் பேராசை வெறியுடன் சுரண்டப்பட்டது. வாட்டர்ஸ் மேடையில் அணிந்திருந்த உடை, போலீஸ் சந்தேகத்தின்படி, தேசிய சோசலிசத்தால் (நாஜிக்கள்) பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியத்தை மீறுவதுடன், நாஜி ஆட்சியை மகிமைப்படுத்துகிறதாம். 

காவல்துறையின் 'சந்தேகம்' என்பது 'இன் தி ஃபிளெஷ்' பாடலின் போது வாட்டர்ஸ் அணிந்திருந்த தோல் கோட் ஆகும், அதில் அவர் ஒரு வெறித்தனமான பாசிச வாய்வீச்சாளரை சித்தரிக்கிறார். வாட்டர்ஸ் இந்த பாடலை 43 ஆண்டுகளாக மேடைகளில் நிகழ்த்தி வருகிறார். இது பிங்க் ஃபிலாய்டின் தி வால் திரைப்படத்தில், இசைக்கலைஞர் பாப் கெல்டாஃப்-இப்போது சேர் பாப் கெல்டாஃப்- அப்பாத்திரத்தினை ஏற்றிருந்தார். இந்த 43 வருடங்களில் பாசிசம், அநீதி, மதவெறி என அனைத்து வடிவங்களுக்கும் எதிராகப் பாடப்பட்ட இந்தப் பாடல், நாஜிகளைக் கண்டிப்பதற்குப் பதிலாக அவர்களைக் புகழ்வதாக யாரும் நினைத்துபக்கூட பார்த்ததில்லை. பேர்லின் காவல்துறையும் அவர்களது அரசியல் பாதுகாவலர்களும் மட்டுமே இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

BDS (பகிஷ்கரிப்பு, விலக்கல் மற்றும் தடைகள்) இயக்கத்திற்கு வாட்டர்ஸின் ஆதரவு யூத-விரோதத்தின் வெளிப்பாடு அல்ல. BDS பாலஸ்தீனியர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக இயக்கப்பட்டது மற்றும் தென்னாப்பிரிக்க எதிர்ப்பு நிறவெறி இயக்கத்தின் முறைகளை அடிப்படையாகக் கொண்டது. உண்மையில், வாட்டர்ஸின் எதிர்ப்பாளர்கள் இஸ்ரேலிய அரசாங்கத்தின் மீதான எந்தவொரு விமர்சனத்தையும் அடக்குவதில் அக்கறை கொண்டுள்ளனர், இதில் வெளிப்படையான இனவாதிகள் மற்றும் வலதுசாரி தீவிரவாதிகள், போலீஸ் மந்திரி இடாமர் பென்-க்விர் போன்றவர்கள் வாட்டர்ஸ் மீதான தாக்குதல் தொனியை அமைத்தனர். 

வாட்டர்ஸ் ஏன் மிகவும் கடுமையான முறையில் தாக்கப்படுகிறார்? இது வாட்டர்ஸ் என்ற தனி நபரைப் பற்றியது மட்டுமல்ல என்பது வெளிப்படையானது. வாட்டர்ஸ் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார், ஆனால், உண்மையான இலக்கு அவரல்ல, மாறாக போர், பாசிசம் மற்றும் விரிவடைந்துவரும் சமூக சமத்துவமின்மைக்கான எதிர்ப்பு ஆகும்.

ஜனாதிபதி மக்ரோனின் ஓய்வூதிய கட்டளைக்கு எதிராக பிரான்சில் மில்லியன் கணக்கானவர்கள் பல வாரங்களாக கிளர்ச்சி செய்ததை அமைச்சகங்கள், கட்சி தலைமையகம் மற்றும் தலையங்க அலுவலகங்களில் உள்ள கருத்து உருவாக்குபவர்கள் பயங்கரத் திகிலுடன் பார்த்துள்ளனர். நேட்டோவின் இராணுவ மறுசீரமைப்பு மற்றும் உக்ரேனில் போரை தீவிரப்படுத்துவது என, இடைவிடாது, 24 மணி நேரமும் பிரச்சாரம் செய்தாலும், ஜயுறவாதம் மற்றும் நிராகரிப்பினை இவை சந்திக்கின்றன என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். பாரிய பணவீக்கத்துடன் தொடர்புடைய உண்மையான ஊதிய வெட்டுக்களுக்கு  எதிரான பரந்துபட்ட எதிர்ப்பானது, தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டில் இருந்து மீறிவிடும் என அவர்கள் அஞ்சுகின்றனர். அவர்கள் ஒரு சமூக எழுச்சிக்கு அஞ்சுகிறார்கள்.

இதனால்தான் வாட்டர்ஸ் ஒரு உதாரணமாக திகழ்கிறார். விரைவில் 80 வயதாக இருக்கும் அவர் தனது இளமைக் காலத்திலிருந்தே கிளர்ச்சி மனப்பான்மையைத் தக்கவைத்துக்கொண்டார் என்பதும் -தனிப்பட்ட தொழில் சார் வெற்றி மற்றும் பெரும் பணக்காரர்களான அவரது தலைமுறையில் பலரைப் போலல்லாமல்- அவர் ஓநாய்களுடன் ஊளையிடத் தயாராக இல்லை என்பதும் அவர்களின் கோபத்தைத் தூண்டுகிறது. 

வாட்டர்ஸுக்கு எதிரான அவதூறு, முதலாளித்துவ ஆட்சியின் மிக முக்கியமான கருத்தியல் தூண்களான கலாச்சார மற்றும் அறிவியல் ஸ்தாபனங்கள் மற்றும் ஊடகங்களில், ஒரு நிலைப்பாட்டை எடுக்கவோ அல்லது வேறுபட்ட கருத்தை வெளிப்படுத்தவோ துணிந்த எவரையும் அச்சுறுத்தும் நோக்கத்துடன் உள்ளது. அதனால்தான், தனது கொள்கைகளை விட்டுக்கொடுக்காததற்காக நாம் வாட்டருக்கு கடன் பட்டிருக்கிறோம். 

வாட்டர்ஸுக்கு எதிரான பிரச்சாரம் என்பது நாஜிகளின் வரலாற்றுக் குற்றங்களை சிறுமைப்படுத்துவதையும் அதன் மூலம் புதிய குற்றங்களை தயார் செய்வதையுமே நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜேர்மனியின் மறு ஆயுதமயமாக்கல் மற்றும் பெரும் இராணுவ வல்லரசு கொள்கைகளுக்கு திரும்புவதற்கு வரலாற்றின் மறுவிளக்கம் மற்றும் இதுவரை இருந்து வரும் அனைத்து மதிப்புகள் பற்றிய மறுமதிப்பீடும் தேவைப்படுகிறது. 1970 களில் இருந்து ஒரு வகையான அடிப்படை சமூக ஒருமித்த கருத்தை உருவாக்கிய 'மீண்டும் வேண்டாம் போர், மீண்டும் ஒருபோதும் வேண்டாம் பாசிசம்' போன்ற கோட்பாடுகள் இனியும் பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்றாக அல்லது சகிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

இதனால்தான் ஜேர்மனியில் இடம்பெற்ற மிக மோசமான வரலாற்றுக் குற்றங்களுடன் தொடர்புடைய நாகரீகத்தின் மீறல் மற்றும் யூத எதிர்ப்பு போன்ற கருத்துக்கள் முற்றிலும் அகற்றப்படுகின்றன. யூத இன அழிப்பினை 'பறவை மலம்' என்று அழைப்பதன் மூலம் அதை சிறுமைப்படுத்திய AfD கட்சியின் நாஜிக்கள், யூத-எதிர்ப்பாளர்களல்ல மாறாக அவர்களை எதிர்ப்பவர்களே யூத எதிர்ப்பாளர்களாக்கப்பட்டுள்ளனர். வாட்டர்ஸ் இன் பாசிச எதிர்ப்பு, யூத எதிர்ப்பு என்று முத்திரை குத்தப்படுகிறது, அதே சமயம் உண்மையான யூத எதிர்ப்புக்கும் மற்றும் பாசிஸ்டுகளுக்கும் புத்துயிரூட்டப்படுகிறது.

உக்ரைனில் இது மிகவும் தெளிவாக உள்ளது, அங்கு ஜேர்மன் அரசாங்கம் செலன்ஸ்கி ஆட்சியுடன் நெருக்கமாக செயல்படுகிறது, நாஜி ஒத்துழைப்பாளர்கள் மற்றும் ஸ்டெபன் பண்டேரா போன்ற வெகுஜன கொலைகாரர்களுக்கு நினைவுச் சின்னங்களை நிறுவுகிறது மற்றும் பல தெருக்களுக்கு அவர்களின் பெயரை சூட்டுகிறது. SS சின்னங்களால் அலங்கரிக்கப்பட்ட அசோவ் பட்டாலியன் போன்ற தீவிர வலதுசாரிப் பிரிவுகள் ஆயுதம் தரித்திருப்பதுடன் சுதந்திரப் போராளிகளாகப் போற்றப்படுகின்றனர். 

எஸ்டோனியாவில், ஜேர்மன் தூதரகம் என்பது எஸ்டோனியன் வரலாற்று நினைவுக் கழகத்தினால் நடத்தப்படும் கோடைகாலப் பள்ளியின் இணை ஒழுங்கமைப்பாளாராக இருக்கிறது. இது ஐரோப்பாவை நாஜி பயங்கரவாதத்திலிருந்து விடுவித்த செம்படையின் தலைவர்களை போர்க் குற்றவாளிகள் என கண்டனம் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

சோசலிச சமத்துவக் கட்சி பல ஆண்டுகளாக பாசிசத்தின் புத்துயிரூட்டலுக்கும் மற்றும் அதன் மீள்வருகைக்கும் எதிராக போராடி வருகிறது. எங்கள் வாசகர்களுக்கு, அவர்கள் ஏன் திரும்பி வருகிறார்கள்? (Why are they back?) என்ற புத்தகத்தினை வாசிக்கும்படி பரிந்துரைக்கிறோம். இந்த புத்தகத்தில் வரலாற்று பொய்மைப்படுத்தல், ஙஅரசியல் சதி மற்றும் ஜேர்மனியில் பாசிசத்தின் மீள் வருகை மற்றும் அதன் வளர்ச்சியை சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவர் கிறிஸ்டோப் வாண்ட்ரியர் விரிவாக ஆய்வு செய்கிறார். இது அக்டோபர் 2018 இல் மெஹ்ரிங் வெர்லாக் என்ற புத்தக வெளியிட்டூக் கழகத்தினால் வெளியிடப்பட்டது மற்றும் இன்றைய நிகழ்வுகளைப் புரிந்துகொள்வதற்கான முக்கியமான அடிப்படையை இந்தப் புத்தகம் வழங்குகிறது. 

ஊடகங்கள் மற்றும் குட்டி முதலாளித்துவ சூழலில் உள்ள எவரும் வாட்டர்ஸைப் பாதுகாக்கவோ அல்லது புறநிலையாக அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தவோ தயாராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பசுமைவாதிகளின் கட்சிப் பத்திரிகையான டாஸ் அவரை 'இரவில் ஊளையிடும் புட்டினின் பிரிட்டிஷ் ஓநாய்' என்று கண்டிக்கிறது . 

பாசிச எதிர்ப்பு மற்றும் அமைதிவாத சூழலில் இருந்து உருவாகிய பசுமைவாதிகள், இன்று மிக மோசமான போர்வெறியர்களாக மாறியுள்ளனர். அதே நேரத்தில் பரந்த வெகுஜனங்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அவர்கள் பங்குச் சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் ஏற்றத்தினாலும் மற்றும் 'சுதந்திர சந்தை' பொருளாதாரக் கொள்கைகளினாலும் செல்வசெழிப்புற்ற நகர்ப்புற நடுத்தர வர்க்கங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். மேலும், அவர்கள் தங்கள் தலைவிதியை ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் இழிவான கொலைகாரக் கொள்ளை நோக்கங்களுடன் பிரிக்கமுடியாமல் இணைத்துள்ளனர். 

இராணுவவாதம், போர் மற்றும் பாசிசம் மீண்டும் திரும்புவதை நிறுத்துவதற்கு, முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கான போராட்டத்தினை மேற்கொள்ள, தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச இயக்கத்தால் மட்டுமே முடியும். 

Loading