லியோன் ட்ரொட்ஸ்கியும் இருபத்தோராம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டமும்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

டேவிட் நோர்த்தின் வெளிவரவிருக்கும் லியோன் ட்ரொட்ஸ்கியும் இருபத்தோராம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டமும் என்ற நூலிற்கான முன்னுரை இதுவாகும். நோர்த், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசியத் தலைவரும் ஆவார்.

இந்தப் புத்தகத்தின் அச்சுப் பதிப்பும் மின்புத்தகமும் (epub) 30 ஜூன் 2023 அன்று வெளியிடப்படும். இதை ஏப்ரல் 6 ஆம் திகதி மெஹ்ரிங் புக்ஸில் (Mehring Books) முன்பதிவு செய்யவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

***

இந்தத் தொகுப்பில் தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைப் படைப்புகள் கடந்த நாற்பது ஆண்டு காலப் பகுதியில் எழுதப்பட்டவையாகும். லியோன் ட்ரொட்ஸ்கியும் மார்க்சிசத்தின் அபிவிருத்தியும் என்ற முதல் கட்டுரையானது ஆரம்பத்தில் 1982 ஆண்டின் இலையுதிர்காலத்தின் பிற்பகுதியில் வெளியிடப்பட்டது. ரஷ்யா, உக்ரேன் மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் பிற நாடுகளிலுள்ள ட்ரொட்ஸ்கிஸ்டுகளால் நிறுவப்பட்ட ஒரு இளைஞர் அமைப்புக்கு 2023 பெப்ரவரியில் எழுதப்பட்ட ஒரு கடிதம் நூலின் கடைசி ஆவணமாகும்.

முதல் மற்றும் இறுதி ஆவணத்துக்கும் இடையில் பல ஆண்டு கால இடைவெளி இருந்தபோதிலும், அவைகள் ஒரு மைய ஆதாரத்தால் இணைக்கப்பட்டுள்ளன: அதாவது, லியோன் ட்ரொட்ஸ்கி, இருபதாம் நூற்றாண்டின் முதல் நான்கு தசாப்தங்களில் சோசலிச வரலாற்றில் மிகவும் தனிச் சிறப்புவாய்ந்த ஆளுமைமிக்க தலைவராக இருந்ததுடன், அவரது மரபுவழியானது உலக சோசலிசத்தின் வெற்றிக்கான தற்போதைய சமகால போராட்டத்திற்கு தீர்க்கமானதும் இன்றியமையாததுமான தத்துவார்த்த மற்றும் அரசியல் அடித்தளமாகவும் உள்ளது. வரலாற்றில் ட்ரொட்ஸ்கியின் இடத்தையும் அவரது நீடித்த அரசியல் முக்கியத்துவத்தையும் குறித்த இந்த மதிப்பீடானது கடந்த நாற்பது ஆண்டுகால நிகழ்வுகளால் சக்திவாய்ந்த முறையில் வலிமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நான்காம் அகிலத்தின் ஸ்தாபகரான லியோன் ட்ரொட்ஸ்கி

ஸ்ராலினிசம் ஒரு எதிர்ப்புரட்சிகர சக்தி என்ற ட்ரொட்ஸ்கியின் கண்டனம், வரலாற்றால் நிரூபணமாகியுள்ளது என்ற உண்மையிலிருந்து நாம் ஆரம்பிப்போம். இருப்பினும், முதல் கட்டுரை எழுதப்பட்ட காலத்தில், சோவியத் ஒன்றியமும் கிழக்கு ஐரோப்பாவில் அதனுடன் இணைந்திருந்த ஸ்ராலினிச ஆட்சிகளும் நீடித்து இருந்தன. கிரெம்ளின் அதிகாரத்துவத்துடன் இணைந்திருந்த ஸ்ராலினிச அரசியல் கட்சிகள் மில்லியன் கணக்கான உறுப்பினர்களுடன் தற்பெருமை கொண்டிருந்தன. ஸ்ராலினிச அதிகாரத்துவம் முதலாளித்துவத்தை மீண்டும் ஸ்தாபிக்கும், மற்றும், அந்த ஆட்சியின் அழுகிய கட்டமைப்பானது தேசிய பொருளாதார தன்னிறைவு, தகுதியின்மை மற்றும் பொய்களின் சுமையின் கீழ் தகர்த்துவிடும் என்று ட்ரொட்ஸ்கி முன்கணித்தார். அதிகாரத்துவத்தை 'உண்மையான தற்போதைய சோசலிசம்' என்று கூறிய அரசியல் வக்காலத்து வாங்கிகள் பலரால் இந்த முன்கணிப்பு 'ட்ரொட்ஸ்கிச குறுங்குழுவாதம்' என்றும் 'சோவியத்-விரோத பிரச்சாரம்' என்றும் கூட நிராகரிக்கப்பட்டது.

லியோன் ட்ரொட்ஸ்கியும் மார்க்சிசத்தின் அபிவிருத்தியும் என்ற கட்டுரை, சரியாக நீண்ட கால மற்றும் மிகவும் முதுமையடைந்திருந்த சோவியத் தலைவரான லியோனிட் பிரெஷ்னேவ், தனது நோய் படுக்கையிலிருந்து செஞ்சதுக்கத்தில் உள்ள கிரெம்ளின் சுவர் சமாதிக்குச் சென்றது வரையான மாதங்களிலேயே எழுதப்பட்டது. ஸ்ராலினிச அதிகாரத்துவம் அதன் தலைமைப் பதவியை முதலில் யூரி ஆண்ட்ரோபோவிற்கும் பின்னர் கான்ஸ்டான்டின் செர்னெங்கோவிற்கும் மாற்றியது. அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் தங்கள் முன்னோடிகளுடன் கிரெம்ளின் சுவர் சமாதியில் சேர்ந்து கொண்டார்கள். இறுதியாக, 1985 மார்ச் மாதம் மிக்கைல் கோர்பச்சேவிடம் பதவி ஒப்படைக்கப்பட்டது.

சோவியத் வரலாற்றை கற்பதில் ஒரு புதிய 'வெளிப்படைத்தன்மை' [glasnost] சம்பந்தமாக கோர்பச்சேவின் வாக்குறுதிகள் ஒருபுறம் இருக்க, ஸ்ராலினிச ஆட்சிக்கு எதிராகவும் அக்டோபர் புரட்சியை அது காட்டிக் கொடுத்தற்கு எதிராகவும் ட்ரொட்ஸ்கி முன்னெடுத்த போராட்டத்தை கிரெம்ளின் தொடர்ந்து கண்டனம் செய்தது.

1987 நவம்பரின் பிற்பகுதியில், ஸ்ராலினிச ஆட்சி வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, கோர்பச்சேவ் அக்டோபர் புரட்சியின் எழுபதாவது ஆண்டு நிறைவு விழாவில் ஆற்றிய உரையில், ஸ்ராலினை நியாயப்படுத்தலையும் ட்ரொட்ஸ்கி மீதான விஷமத்தனமாக கண்டனத்தையும் உள்ளடக்கிக்கொண்டார். ஆனால் ட்ரொட்ஸ்கி ஒருமுறை குறிப்பிட்டது போல், வரலாற்றின் விதிகள் அதி சக்திவாய்ந்த பொதுச் செயலாளரை விட மிகவும் சக்திவாய்ந்தவை என்பதை நிரூபித்தது என்றார்.

7 மார்ச் 1985 அன்று மிக்கைல் கோர்பசேவ் (நடுவில்). உடனிருப்பவர்கள் ஆண்ட்ரே க்ரோமிகோ மற்றும் நிகோலாய் டிகோனோவ் [AP Photo/Boris Yurchenko]

கோர்பச்சேவின் கொள்கைகள் சோவியத் ஒன்றியத்தை கலைத்து முதலாளித்துவத்தை புணருத்தாரனம் செய்வதை இலக்காகக் கொண்டவை என்று முன்கணித்து, எச்சரித்த ஒரே அரசியல் போக்கு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மட்டுமே ஆகும். 1987 ஆண்டு மார்ச் மாதத்திலேயே, புதிய சோவியத் தலைவரின் 'கோர்பிமேனியா' என்று அழைக்கப்படும் உலகளாவிய போற்றிப் புகழுதலுக்கு மத்தியில், அனைத்துலகக் குழு இவ்வாறு எச்சரித்தது:

சோவியத் ஒன்றியத்திலுள்ள தொழிலாள வர்க்கம் மற்றும் சர்வதேச அளவிலுள்ள தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்கள் ஆகிய இரு சாராருக்கும், கோர்பசேவின் சீர்திருத்தக் கொள்கை எனப்படுவது ஒரு கபடத்தனமான அச்சுறுத்தலை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது அக்டோபர் புரட்சியின் வரலாற்று வெற்றிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன், உலக அளவில் ஏகாதிபத்தியத்துடனான அதிகாரத்துவத்தின் எதிர்ப்புரட்சிகர ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதோடு பிணைந்துள்ளது.[1]

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1989 இல், பெரெஸ்ட்ரோயிகா எதிர் சோசலிசம் என்ற தலைப்பில் கோர்பச்சேவின் கொள்கைகள் பற்றிய பகுப்பாய்வில், நான் இவ்வாறு எழுதினேன்:

கடந்த மூன்று ஆண்டுகளில், உற்பத்தி சக்திகளின் தனியார் உடைமையை ஊக்குவிக்க கோர்பச்சேவ் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அதிகாரத்துவமானது முற்றிலும் முதலாளித்துவ வழியில் ஒழுங்கமைக்கப்பட்ட சோவியத் கூட்டுறவு நிறுவனங்களின் வளர்ச்சியுடன் முன்னெப்போதையும் விட வெளிப்படையாக தனது நலன்களை அடையாளப்படுத்தி வருகிறது. இவ்வாறாக, அதிகாரத்துவத்தின் சொந்த சலுகைகள் இனியும் அரசுச் சொத்துடைமையின் வடிவங்களுடன் பிணைக்கப்படாமல், விரோதமாக இருக்கும் அளவிற்கே, உலக ஏகாதிபத்தியத்துடனான அதன் உறவுகள் அதற்கேற்ப மற்றும் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும். சோவியத் வெளியுறவுக் கொள்கையின் பிரதான குறிக்கோளான, ஏகாதிபத்திய தாக்குதலுக்கு எதிராக சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாப்பது என்பது மேலும் மேலும் குறைந்து கொண்டே வருவதுடன், அதற்கு மாறாக, பெரெஸ்ட்ரோய்காவின் (மறுசீரமைத்தல்) உள்நாட்டு இலக்குகளை அடைவதற்காக, அதாவது சோவியத் ஒன்றியத்திற்குள் முதலாளித்துவ சொத்துடைமை உறவுகளை அபிவிருத்தி செய்வதன் பேரில், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான ஏகாதிபத்திய ஆதரவை அணிதிரட்டுவது இடம்பெறுகின்றது. இவ்வாறாக, தனியொரு நாட்டில் சோசலிசம் என்ற ஸ்ராலினிச தத்துவத்தின் எதிர்ப்புரட்சிகர தர்க்கமானது சோவியத் அரசு சொத்துக்களை கீழறுப்பதையும் சோவியத் ஒன்றியத்திற்குள்ளேயே முதலாளித்துவத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு வெளியுறவுக் கொள்கையை அபிவிருத்தி செய்வதில் அதனுடைய இறுதி வெளிப்பாட்டைக் காண்கின்றது.[2]

அடுத்து வந்த நிகழ்வுகளால் உறுதிப்படுத்தப்பட்ட கோர்பச்சேவின் கொள்கைகள் குறித்த இந்த மதிப்பீட்டிற்கான தனிச்சிறப்புவாய்ந்த பெருமையை நான் கோர முடியாது. அனைத்துலகக் குழுவின் முன்னோக்கானது அரை நூற்றாண்டுக்கு முன்னர், ட்ரொட்ஸ்கி தனது காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி  நூலில் சோவியத் சமூகத்தின் முரண்பாடுகள் மற்றும் ஸ்ராலினிச ஆட்சியின் எதிர்ப்புரட்சிகர பாதை குறித்து செய்திருந்த பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அனைத்திற்கும் மேலாக, சோவியத்துக்குப் பிந்தைய முதலாளித்துவ மீட்பு நிகழ்வுப்போக்கு குறித்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் புரிதலானது, ட்ரொட்ஸ்கி முன்கணித்த வழியிலேயே அது இடம்பெற்றது என்ற உண்மையால் எளிதாக்கப்பட்டது.

'மனிதகுலத்தின் கருத்தியல் பரிணாம வளர்ச்சியின் இறுதிப் புள்ளி மற்றும் சிவில் அரசாங்கத்தின் இறுதி வடிவமாக மேற்கத்திய தாராளவாத ஜனநாயகத்தின் உலகமயமாக்கல்' என்று ராண்ட் கார்ப்பரேஷன் (Rand Corporation) பகுப்பாய்வாளரான பிரான்சிஸ் ஃபுகுயாமா முன்னறிவித்து வரையறுத்ததைப் போல், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது 'வரலாற்றின் முடிவின்' விளைவு அல்ல.[3] அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு டொனால்ட் ட்ரம்ப் தெரிவாவார் என ஃபுகுயாமா எதிர்பார்க்கவில்லை என்பது தெளிவாகிறது.

உண்மையில், சோவியத்துக்குப் பிந்தைய ரஷ்யாவிலோ அல்லது முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலோ இடம்பெற்ற அபிவிருத்திகள், ராண்ட் சிந்தனைக் குழுவினரால் உருவாக்கப்பட்ட கற்பனைகளை ஒத்திருக்கவில்லை. ரஷ்யாவிற்குள், முதலாளித்துவத்தின் மீட்சியை நியாயப்படுத்திய அனைத்து நம்பிக்கைக்குரிய முன்கணிப்புக்களும் நிகழ்வுகளால் நிராகரிக்கப்பட்டன. செழிப்பிற்குப் பதிலாக, முன்னாள் சோவியத் அதிகாரத்துவத்தினருக்கும் ஏனைய குற்றவியல் சக்திகளுக்கும் அரச சொத்துக்களை தீ வேகத்தில் விற்றுத் தள்ளியதால், பாரிய வறுமையும் திகைப்பூட்டும் சமூக சமத்துவமின்மையும் உருவாகியது. ஜனநாயகம் மலர்வதற்கு ஊக்கமளிப்பதற்குப் பதிலாக, புதிய ரஷ்ய அரசு விரைவாக ஒரு தன்னலக்குழு ஆட்சியின் வடிவத்தை எடுத்தது. அக்டோபர் புரட்சியுடனான அதன் வரலாற்றுத் தொடர்பை ரஷ்யா மீளமுடியாத வகையில் நிராகரித்துவிட்டதால், அது, அதன் புதிய 'மேற்கத்திய பங்காளிகளால்' மென்மையான அரவணைப்புகளுடன் வரவேற்கப்படுவதுடன் முதலாளித்துவ நாடுகளின் சகோதரத்துவத்துடன் அமைதியாக ஒருங்கிணைக்கப்படும் என்ற வலியுறுத்தலானது, அனைத்து முன்கணிப்புகளிலும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டதும் யதார்த்தமற்றதும் ஆகும் என்பதை நிரூபித்தது.

பிரதான ஏகாதிபத்திய நாடுகளுக்குள், சோவியத் ஒன்றியத்தின் உடைவைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளான, கடந்த மூன்று தசாப்தங்களை குணாம்சப்படுத்தப்படுத்திய பொருளாதார, பூகோள அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளின் தொடர்ச்சி, ஒரு உலக அமைப்புமுறையாக முதலாளித்துவத்தை அதன் அழிவை நோக்கி உந்தித் தள்ளும் முரண்பாடுகள் குறித்த மார்க்சிச பகுப்பாய்வை உறுதிப்படுத்தியுள்ளன. 1938ல் ட்ரொட்ஸ்கியால் எழுதப்பட்ட நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணமானது, வரலாற்று சகாப்தத்தை முதலாளித்துவத்தின் 'மரண ஓலம்' என்று வரையறுத்ததுடன், தற்போதைய நிலைமையை பற்றி முன்கூட்டியே இரண்டாம் உலகப் போர் தொடக்கத்தின் தறுவாயிலேயே பின்வருமாறு விவரித்துவிட்டது:


மனித குலத்தின் உற்பத்தி சக்திகள் தேக்கமடைகின்றன. ஏற்கனவே புதிய கண்டுபிடிப்புகளும் மேம்பாடுகளும் பொருள் செல்வத்தின் மட்டத்தை உயர்த்தத் தவறிவிடுகின்றன. முழு முதலாளித்துவ அமைப்புமுறையின் சமூக நெருக்கடி நிலைமைகளின் கீழ், ஒருங்கிணைந்த நெருக்கடிகள் வெகுஜனங்கள் மீது முன்னெப்போதையும் விட கடுமையான இழப்புகளையும் துன்பங்களையும் திணிக்கின்றன. பெருகிவரும் வேலையின்மையும், அதையொட்டி, அரசின் நிதி நெருக்கடியை ஆழப்படுத்துவதோடு நிலையற்ற பண அமைப்பு முறைகளைக் கீழறுக்கிறது. ...

முதலாளித்துவ சிதைவின் அதிகரித்து வரும் பதட்டத்தின் கீழ், ஏகாதிபத்திய பகைமைகள் ஒரு முட்டுக்கட்டையை அடைகின்றன, அதன் உச்சத்தில் தனித்தனி மோதல்கள் மற்றும் இரத்தம் தோய்ந்த உள்ளூர் குழப்பங்களும் ஏற்படுகின்றன ... தவிர்க்கவியலாமல் இவை உலகப் பரிமாணங்களிலான மோதலாக ஒன்றிணைய வேண்டும். முதலாளித்துவ வர்க்கம், நிச்சயமாக, ஒரு புதிய போரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அதன் மேலாதிக்கத்திற்கு ஏற்படக்கூடிய மரண ஆபத்தை அறிந்திருக்கிறது. ஆனால் அந்த வர்க்கமானது 1914க்கு முந்தைய காலத்தை விட இப்போது ஒரு போரை தவிர்ப்பதில் அளவிடமுடியாத இலாயக்கற்று இருக்கின்றது.[4]

தற்போதைய உலக நிலைமையானது எண்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ட்ரொட்ஸ்கியால் மிகவும் கூர்மையாக விவரிக்கப்பட்டவற்றுடன் ஒரு ஆபத்தான ஒத்திருக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. உலக நிலைமை பற்றிய அவரது புரிதலானது முதலாளித்துவத்தின் நெருக்கடியின் மூலத்தைக் குறித்த அவரது பகுப்பாய்விலிருந்து பெறப்பட்டதாகும்: 1) சமூகமயப்பட்ட உற்பத்திக்கும் உற்பத்திச் சாதனங்களின் தனியார் உடைமைக்கும் இடையிலான மோதல்; மற்றும் 2) முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறையானது உலகப் பொருளாதாரத்தின் புறநிலை வளர்ச்சியுடன் பொருந்தாத தன்மை. முதலாளித்துவத்தின் கட்டமைப்பிற்குள், இந்த முரண்பாடுகளிலிருந்து எழும் நெருக்கடியானது பாசிச மிலேச்சத்தனம், உலகப் போர் ஆகிய இரட்டை பேரழிவுகளுக்கு இட்டுச் செல்லுகின்றன.

பூகோள முதலாளித்துவத்தின் அபாயகரமான இயக்கவியல் குறித்த தனது பகுப்பாய்வில், ட்ரொட்ஸ்கி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாத்திரத்திற்கு மைய முக்கியத்துவம் கொடுத்திருந்தார். 1928 இல், (ஸ்ராலினிச ஆட்சியால் அவர் நாடுகடத்தப்பட்டிருந்த) மத்திய ஆசியாவிலுள்ள தொலைதூர அல்மா அட்டாவிலிருந்து அவர் இவ்வாறு எழுதினார்:


நெருக்கடிக் காலத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கமானது எழுச்சிக் காலத்தை விட இன்னும் முழுமையாகவும், வெளிப்படையாகவும், இரக்கமின்றியும் செயல்படும். ஆசியா, கனடா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா அல்லது ஐரோப்பாவிலேயே இது நிகழ்கிறதா, அல்லது இது அமைதியான முறையில் அல்லது போரின் மூலம் நடைபெறுகிறதா என்பதைப் பொருட்படுத்தாமல், பிரதானமாக ஐரோப்பாவின் செலவிலேயே அமெரிக்கா தனது இடர்பாடுகள் மற்றும் நோய்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயற்சிக்கும்.[5]

1934ல் ட்ரொட்ஸ்கி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாதையை இன்னும் கூர்மையான சொற்களில் விவரித்தார்:


1914ல் ஜேர்மனியைப் போர்ப் பாதைக்குத் தள்ளிய அதே பிரச்சினைகளுக்கு எதிராக அமெரிக்க முதலாளித்துவம் எழுந்து நிற்கிறது. உலகம் பங்கீடு செய்யப்பட்டுள்ளதா? அதை மறுபங்கீடு செய்ய வேண்டும். ஜேர்மனியை பொறுத்தவரை அது 'ஐரோப்பாவை ஒழுங்கமைப்பது' குறித்த பிரச்சினையாக இருந்தது. அமெரிக்காவானது உலகை 'ஒழுங்கமைக்க' வேண்டும். வரலாறானது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எரிமலை வெடிப்புக்கு நேருக்கு நேர் மனிதகுலத்தை கொண்டு வருகிறது.[6]

தனது சூறையாடும் கொள்கைகளை மனிதாபிமான சொற்றொடர்களைக் கொண்டு புனிதப்படுத்தும் அமெரிக்காவின் விருப்பத்தை ட்ரொட்ஸ்கி கேலி செய்தார். முதலாம் உலகப் போருக்குப் பின்னர், ஜனாதிபதி வூட்ரோ வில்சனை அவர் 'பிலிஸ்தீனர்  (போர் விரும்பி) மற்றும் பாசாங்குகாரர்', 'இரத்தத்தில் நனைந்த ஐரோப்பாவை அறத்தின் உன்னத பிரதிநிதியாக புணைந்துகாட்டும் 'நயவஞ்சகர்', 'அமெரிக்க டொலரின் மீட்பர்'; தண்டிப்பது, மன்னிப்பது மற்றும் மக்களின் தலைவிதியை ஒழுங்குபடுத்துவதையும் செய்பவர்' என்று விவரித்தார்.”[7] இப்போது வில்சனின் வக்கிரமான இனவாதம் நன்கு அறியப்பட்டுள்ள நிலையில், ஜனநாயக தாராளவாதத்தின் சின்னமாக நீண்ட காலமாக புகழப்பட்ட ஒரு காலத்தில் மதிக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி குறித்த ட்ரொட்ஸ்கியின் விளக்கம், கல்விசார் சமூகத்தின் ஒருமித்த கருத்தாக மாறியுள்ளது.

ஆனால், அதன் பசாங்குத்தனத்தை பற்றிய அவரது அம்பலப்படுத்தல் எந்தவகையில் பொருந்தினாலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்கைகளை, அல்லது அந்த விடயத்துக்காக, ஹிட்லரின் கீழ் அதன் ஜேர்மன் போட்டியாளரின் கொள்கைகளை, வெறுமனே ஒரு அமைதியான உலகின் மீதான குற்றவியல் இடையூறுகளாக மட்டுமே வகைப்படுத்தவில்லை. இந்த நாடுகளின் கொள்கைகள் மற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளின் கொள்கைகள் மீது அவர் சுமத்திய குற்றச்சாட்டு, பிலிஸ்தீனிய குணவியல்பு பண்பை விட, ஒரு வரலாற்றுத் தன்மை கொண்டதாக இருந்தது. படையெடுத்தல், இணைத்துக்கொள்ளல் மற்றும் ஆக்கிரமித்தல் கொள்கையானது தனிப்பட்ட தலைவர்களின் பைத்தியக்காரத்தனத்தில் அன்றி, ஹிட்லரைப் போன்ற ஒரு மனநோயாளி விஷயத்தில் கூட, உலகளாவிய வளங்கள் மற்றும் உலக சந்தையை அணுகுவதில் அரச எல்லைகளால் விதிக்கப்பட்ட வரம்புகளை கடந்து வெற்றிகொள்ள வேண்டிய அவசரத் தேவையிலேயே வேரூன்றி இருந்தது. ஏகாதிபத்திய இராணுவவாதத்தின் இடைவிடாத வளர்ச்சி, தவிர்க்கவியலாமல் உலகப் போரை நோக்கி இட்டுச் சென்றமையானது, தேசிய-அரசு அமைப்புமுறையின் வரலாற்று திவால்நிலையைக் குறிக்கிறது. ட்ரொட்ஸ்கி 1934ல் முதலில் அமெரிக்க பத்திரிகையான Foreign Affairs இல் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் முன்கணித்தபடி:


அந்நியச் சந்தைகளுக்கான போராட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கூர்மையடையும். இறையாண்மையின் நன்மைகள் குறித்த புனிதமான கருத்துக்கள் உடனடியாக தூக்கி எறியப்பட்டு, தேசிய நல்லிணக்கத்திற்கான ஞானிகளின் திட்டங்கள் குப்பைத் தொட்டியில் வீசப்படும். இது, அதன் வெடிக்கும் நிலையிலான இயல் ஆற்றலுடன் ஜேர்மன் முதலாளித்துவத்திற்கும், அல்லது ஜப்பானின் தாமதமான மற்றும் பேராசை கொண்ட முதலாளித்துவத்திற்கும் மட்டுமன்றி, அதன் புதிய முரண்பாடுகள் இருந்தபோதிலும் இன்னும் சக்திவாய்ந்ததாக இருக்கும் அமெரிக்க முதலாளித்துவத்திற்கும் பொருந்தும்.[8]

1920களின் பிற்பகுதியிலும் 1930களின் பிற்பகுதியிலும் ட்ரொட்ஸ்கியால் பகுப்பாய்வு செய்யப்பட்ட முரண்பாடுகள் அவற்றின் அபிவிருத்தியின் மிகவும் முன்னேறிய, உண்மையில் முடிவுக் கட்டத்தில் இப்போது உள்ளன. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர், அமெரிக்காவின் பூகோள மேலாதிக்கத்தின் நலன்களுக்காக 'உலகை ஒழுங்கமைப்பதற்கான' உந்துதல், ஒரு உலகளாவிய வெறியாட்டத்தின் வடிவத்தை எடுத்துள்ளது. ஏறக்குறைய தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் ட்ரொட்ஸ்கியால் முன்கணிக்கப்பட்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் 'எரிமலை வெடிப்பு' இப்பொழுது நன்கு நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால், இராணுவவாத வெடிப்புகளின் தளமாக இருப்பது அமெரிக்க எரிமலை மட்டுமே அல்ல. சர்வதேச அளவில் இராணுவச் செலவினங்கள் பாரியளவில் அதிகரித்து வருகின்றன. போர்க் கடவுள்கள் மீண்டும் தாகத்தில் இருக்கிறார்கள். இரண்டாம் உலகப் போரில் தோற்கடிக்கப்பட்ட இரண்டு பிரதான பெரும் சக்திகள், தங்கள் போலியான அமைதிவாத பாசாங்குகளை கைவிட்டு வருகின்றன. உக்ரேன் போரினால் வழங்கப்பட்ட வாய்ப்பை சுரண்டிக்கொண்டு, ஜேர்மன் பாராளுமன்றம் நாட்டின் இராணுவ வரவுசெலவுத் திட்டத்தை மும்மடங்கு உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே ஆசியாவில் இரண்டாவது பெரிய இராணுவ சக்தியாக இருக்கும் ஜப்பான், 'பாதுகாப்பு' செலவினங்களில் 26.3 சதவீத அதிகரிப்பை அறிவித்துள்ளது. மூன்றாம் உலகப் போருக்குப் பின்னர் ஒரு உலகம் எஞ்சியிருந்தால், அதன் புதிய மறுபங்கீட்டில் இருந்து சூறையாடுபவற்றை விநியோகித்துக்கொள்வதில் தாம் விடுபட்டுவிடக் கூடாது என்பதில் அவை உறுதியாக உள்ளன.

உலகமானது ஒரு பூகோள இராணுவப் பேரழிவின் படுகுழியை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது இப்போது முதலாளித்துவ ஊடகங்களில் பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை ஒரு 'தூண்டுதலற்ற போர்' என்று இடைவிடாது சித்தரிக்கும் ஒரு வருட பிரச்சாரத்திற்குப் பின்னர், முதலாளித்துவ விமர்சகர்கள் இப்போது போரை மிகவும் யதார்த்தமான சர்வதேச உள்ளடக்கத்தில் வைத்துள்ளனர். பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையின் வெளியுறவுக் கொள்கை நிபுணரான கிதியோன் ரச்மன், சமீபத்தில் தற்போதைய நிலைமைக்கும் '1930கள் மற்றும் 1940களில் சர்வதேச பதட்டங்களின் அதிகரிப்புக்கும்' இடையிலான 'வரலாற்று சமாந்திரத்தைப்' பற்றிக் குறிப்பிட்டார்.


சீனாவின் ஜனாதிபதி ரஷ்யாவின் தலைநகரிற்கும் ஜப்பான் பிரதமர் உக்ரேனின் தலைநகரிற்கும் ஒரே நேரத்தில் போட்டியான விஜயங்களை மேற்கொண்டனர் என்பது உக்ரேன் போரின் உலகளாவிய முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. கிழக்கு ஆசியாவில் ஜப்பானும் சீனாவும் கடுமையான போட்டியாளர்களாக உள்ளனர். ஐரோப்பாவில் நடக்கும் மோதலின் விளைவால், தங்கள் போராட்டம் ஆழமாக பாதிக்கப்படும் என்பதை இரு நாடுகளும் புரிந்து கொண்டுள்ளன.

உக்ரேன் விவகாரத்தில் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இந்த நிழல் குத்துச்சண்டை ஒரு பரந்த போக்கின் பகுதியாகும். யூரோ-அட்லாண்டிக் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியங்களிலான மூலோபாய போட்டிகள் ஒன்றுக்கொன்று அதிகரித்து வருகின்றன. உருவாகிக் கொண்டிருப்பது என்றவென்றால், மேலும் மேலும் ஒரே பூகோள அரசியல் போராட்டம் போல தோற்றமளிக்கும் ஒன்றாகும்.[9]

ஒவ்வொரு வரலாற்று ஆளுமையும், நிச்சயமாக, அவனது அல்லது அவளது காலத்தின் விளைபொருளாகும். ஆனால், ட்ரொட்ஸ்கி, சமகால நிகழ்வுகளில் அவரது செயலூக்கமான செல்வாக்கானது அவரது வாழ்நாளைத் தாண்டியும் விரிவடைந்துள்ள, ஒரு வரலாற்று அடையாளமாவார். கடந்த நூற்றாண்டின் முதல் நான்கு தசாப்தங்களின் நிகழ்வுகளைக் குறித்த நுண்ணறிவுக்காக மட்டுமல்லாமல், தற்கால நிகழ்வுகளைப் புரிந்துகொள்வதற்கும் தலையிடுவதற்கும் அவசியமான பகுப்பாய்வுகளாகவும் அவரது எழுத்துக்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.

சோவியத்  ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு சற்றே முன்னதான 1991ல் வெளியிடப்பட்ட சர்வதேச ட்ரொட்ஸ்கிசம் என்ற ஒரு பாரிய 1,124 பக்க ஆய்வில், மார்க்சிச-விரோத கல்வியாளரும் வெளிநாட்டு உறவுகள் சபையின் (Council of Foreign Relations) நீண்டகால உறுப்பினருமான, மறைந்த ரொபர்ட் ஜே. அலெக்சாண்டர், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது ஒரு வெகுஜன இயக்கமாக ட்ரொட்ஸ்கிசத்தின் மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று கவலை தெரிவித்து, பின்வருமாறு எழுதினார்:


1980களின் இறுதியில், ட்ரொட்ஸ்கிஸ்டுகள் எந்த நாட்டிலும் அதிகாரத்திற்கு ஒருபோதும் வரவில்லை. ஸ்ராலினிசத்தின் வாரிசுகளைப் போல, சர்வதேச ட்ரொட்ஸ்கிசமும் நன்கு ஸ்தாபிக்கப்பட்ட ஆட்சியின் ஆதரவைப் பெற்றிருக்கவில்லை என்றாலும், உலகின் பெரும்பாலான நாடுகளின் அரசியல் வாழ்க்கையின் ஸ்திரமின்மையுடன், பல்வேறு நாடுகளில் இந்த இயக்கத்தின் தொடர்ச்சியான இருப்பு, எதிர்காலத்தில் ஒரு ட்ரொட்ஸ்கிசக் கட்சி அதிகாரத்திற்கு வருவதற்கான சாத்தியத்தை முற்றிலுமாக நிராகரிக்க முடியாது என்பதை அர்த்தப்படுத்துகிறது.[10]

பேராசிரியர் அலெக்சாண்டரின் எச்சரிக்கையை ஆளும் உயரடுக்குகள் தீவிரமாக எடுத்துக் கொண்டன. ஸ்ராலினிச ஆட்சிகளின் வீழ்ச்சியால், இடதில் இருந்து எழுந்துள்ள அரசியல் அபாயத்திற்கு விடையிறுக்கும் வகையில், ட்ரொட்ஸ்கி தொடர்பாக தொடர்ச்சியான அவதூறான போலி சுயசரிதைகளை வெளியிட்டனர். ஆனால் பேராசிரியர்களான இயன் தாட்சர், ஜெப்ரி ஸ்வைன் மற்றும் ரொபர்ட் சேர்வீஸ் ஆகியோரின் படைப்புகள், முதலாளித்துவ பத்திரிகைகளில் ஆரம்பத்தில் உற்சாகமான விமர்சனங்கள் இருந்தபோதிலும், படுதோல்வியடைந்தன. அவர்களின் பொய்கள் அனைத்துலகக் குழுவால் பல்பூரணமான முறையில் அம்பலப்படுத்தப்பட்டன. The American Historical Review (அமெரிக்க வரலாற்று ஆய்வு), சேர்வீஸின் சுயசரிதையை 'தரக்குறைவான வேலை' என்ற எனது விமர்சனத்தை 'வலுவான வார்த்தைகள் ஆனாலும் நியாயமானது' என்று ஒப்புக்கொண்டமை, ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பேராசிரியர் ரொபர்ட் சேர்வீஸ் எழுதிய வாழ்க்கை வரலாறு, அதன் வெளியீட்டாளரான ஹார்வர்ட் யுனிவர்சிட்டி பிரஸ்ஸுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.[11]

பல தசாப்தங்களாக, எண்ணற்ற எதிரிகளால் இடைவிடாத துன்புறுத்தலுக்கு முகங்கொடுத்த சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நிலையான இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஒரு வரலாற்றுச் சடவாத விளக்கம் உள்ளது. முதலாளித்துவம் மற்றும் பாட்டாளி வர்க்கத்தின் உலகளாவிய வர்க்கப் போராட்டத்தை மையமாகக் கொண்ட ட்ரொட்ஸ்கியின் வாழ்நாளிலான அரசியல் நிகழ்வுகளின் பொதுவான போக்கைத் தீர்மானித்த, அடிப்படை புறநிலை பொருளாதார மற்றும் சமூக சக்திகள், வரலாற்றால் முறியடிக்கப்படவில்லை. ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி கோட்பாடானது முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் இன்றியமையாத வரலாற்று-மூலோபாய அடித்தளமாக உள்ளது. அவர் 1930ல் எழுதியதாவது:


தேசிய வரம்புகளுக்குள் சோசலிசப் புரட்சியை நிறைவு செய்வது நினைத்துப் பார்க்க முடியாததாகும். முதலாளித்துவ சமூகத்தின் நெருக்கடிக்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்று, அது உருவாக்கிய உற்பத்தி சக்திகளால் இனியும் தேசிய அரசின் கட்டமைப்புக்களோடு சமரசம் செய்து கொள்ள முடியாது என்பதே ஆகும். இதிலிருந்து ஒருபுறம் ஏகாதிபத்தியப் போர்கள், மறுபுறம் ஐரோப்பாவின் ஒரு முதலாளித்துவ ஐக்கிய அரசுகளின் கற்பனாவாதம் தலைதூக்குகின்றது. சோசலிசப் புரட்சியானது தேசிய அரங்கில் தொடங்கி, சர்வதேச அரங்கில் விரிவடைந்து, உலக அரங்கில் நிறைவடைகிறது. இவ்வாறாக, சோசலிசப் புரட்சியானது ஒரு புதிய மற்றும் பரந்த அர்த்தத்தில், ஒரு நிரந்தரப் புரட்சியாக மாறுகிறது; நமது முழுப் பூமியிலும் புதிய சமுதாயத்தின் இறுதி வெற்றியில் மட்டுமே அது முழுமை அடைகிறது.[12]

நிகழ்வுகளால் முறியடிக்கப்படுவதற்குப் பதிலாக, உற்பத்தி சக்திகளின் மிகப் பரந்தளவிலான பூகோள ரீதியில் ஒருங்கிணைக்கப்பட்ட அபிவிருத்தியும் தொழிலாள வர்க்கத்தின் பரந்த வளர்ச்சியும், சர்வதேச வர்க்கப் போராட்டத்தில் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் ஒரு நிகழ்வுப்போக்கு என சோசலிசப் புரட்சி குறித்த ட்ரொட்ஸ்கியின் கருத்தாக்கத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளன. வரலாற்றின் இயக்கமானது, இப்போது மாபெரும் மார்க்சிய தத்துவ மேதை மற்றும் புரட்சியாளரின் மூலோபாய நோக்குடன் தீர்க்கமாக சந்திக்கின்றது.

தற்போதைய உலக நிலைமையை அடையாளம் கண்டுகொள்வதிலும் பகுப்பாய்வு செய்வதிலும் ட்ரொட்ஸ்கிக்கு எந்த சிரமமும் இருந்திருக்காது. ஏகாதிபத்திய போர் மற்றும் சோசலிசப் புரட்சியின் அதே வரலாற்று சகாப்தத்தின் இறுதிக் கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குறிப்பாக 1923ல் லெனினுக்கு ஏற்பட்ட பக்கவாதத்தால் உண்டான இயலாமைக்கும், அரசியல் நடவடிக்கையிலிருந்து ட்ரொட்ஸ்கி அகற்றப்பட்டதற்கும் மற்றும் 1940ல் அவரின் படுகொலைக்கும் இடையிலான பதினாறு ஆண்டுகளில், ட்ரொட்ஸ்கி கையாண்ட வரலாற்றுப் பிரச்சினைகளானவை, தொழிலாள வர்க்கம் எதிர்கொண்ட தீர்க்கப்படாத தொடர்ந்து நிலவுகின்ற அரசியல் பிரச்சினைகளாக இன்னமும் உள்ளன: அவையாவன, ஏகாதிபத்தியப் போர், ஜனநாயகத்தின் வீழ்ச்சி மற்றும் பாசிசத்தின் மீளெழுச்சி, அதிகரித்து வரும் பணவீக்கம், வெகுஜன வேலையின்மை, வறுமை, தற்போதுள்ள வெகுஜன தொழிலாளர் அமைப்புகளின் துரோகம் மற்றும் இந்த தொழிலாளர் அமைப்புகள் முதலாளித்துவ அரச கட்டமைப்புகளில் ஒருங்கிணைந்துகொள்வது ஆகியவைகளாகும்.

1927 இல் இடது எதிர்ப்பு அணியின் உறுப்பினர்கள். (முன்புறம் இடமிருந்து) லியோனிட் செரெப்ரியாகோவ், கார்ல் ராடெக், லியோன் ட்ரொட்ஸ்கி, மிக்கைல் போகஸ்லாவ்ஸ்கி, யெவ்ஜெனி பிரியோபிரசென்ஸ்கி; (பின்புறம்) கிறிஸ்டியன் ரகோவ்ஸ்கி, ஜேக்கப் டிரோப்னிஸ், அலெக்சாண்டர் பெலோபோரோடோவ், மற்றும் லெவ் சோஸ்னோவ்ஸ்கி

இந்த 2023 ஆம் ஆண்டானது சோவியத் ஒன்றியத்தில் இடது எதிர்ப்பு அணி நிறுவப்பட்ட நூற்றாண்டைக் குறிக்கிறது. 1923 இலையுதிர்காலத்தில், சோவியத் அரசு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டிலும் அதிகாரத்துவத்தின் வளர்ச்சி குறித்த ட்ரொட்ஸ்கியின் ஆரம்ப பொது விமர்சனமானது, இருபதாம் நூற்றாண்டின் மிகவும் அரசியல் ரீதியிலான விளைவுகளைக் கொண்ட போராட்டத்தின் தொடக்கத்தைக் குறித்தது. ஸ்ராலின் தலைமையிலான சோவியத் அதிகாரத்துவம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியமையானது, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தலைவிதிக்கும் சோசலிசத்திற்கான போராட்டத்திற்கும் பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்துவதாக இருந்தது. தொழிலாள வர்க்கத்தை அதிகாரத்துவத்திற்கு அடிபணியச் செய்வது, தொழிலாளர்களின் ஜனநாயகத்தின் அனைத்து வடிவங்களையும் அழிப்பது, இறுதியாக, சோவியத் ஒன்றியத்திற்குள் மார்க்சிஸ்டுகளை சரீர ரீதியாக அழிப்பது ஆகியவற்றை உள்ளடக்கிய, இந்த பலவந்தக் கைப்பற்றல், 'தனி ஒரு நாட்டில் சோசலிசம்' என்ற ஸ்ராலினிச கோட்பாட்டைக் கொண்டு அரசியல் ரீதியில் நியாயப்படுத்தப்பட்டது. முதலும் முக்கியமுமாக ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவத்திற்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட இந்தப் போலித்-தத்துவம், அக்டோபர் புரட்சி அடித்தளமாகக் கொண்டிருந்த சர்வதேச சோசலிச முன்னோக்கை மறுதலிப்பதற்கு ஒப்புதல் அளித்தது.

ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டம் குறித்த ஒரு ஆய்வுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு தொகுதி பின்வரும் வலியுறுத்தலுடன் தொடங்குகிறது: 'லியோன் ட்ரொட்ஸ்கி அவரது வாழ்க்கையின் கடைசி இரண்டு தசாப்தங்களில், வேறு எதையும் விட அதிகமாக அக்கறை கொண்ட அரசியல் மற்றும் தத்துவார்த்த பிரச்சினையாக சோவியத் அதிகாரத்துவத்தின் பிரச்சினை இருந்தது.'[13]

இந்தக் கூற்று அடிப்படையில் தவறானது. ட்ரொட்ஸ்கியைப் பொறுத்தவரை, சோவியத் அதிகாரத்துவத்தின் பிரச்சினையானது, புரட்சிகர சர்வதேசியவாதப் பிரச்சினைக்கு முற்றிலும் இரண்டாம் பட்சமாகத்தான் இருந்தது. உண்மையில், ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் உண்மையான தன்மையை, சர்வதேச வர்க்கப் போராட்டத்துடனும் உலக சோசலிசத்தின் தலைவிதியுடனுமான சோவியத் ஒன்றியத்தின் உறவின் பின்னணியில் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் மத்திய மற்றும் மேற்கு ஐரோப்பாவில் தொழிலாள வர்க்கம் அனுபவித்த தோல்விகளின் நிலைமைகளின் கீழ், போல்ஷிவிக் கட்சிக்குள் தோன்றிய ஒரு போக்காக, ஸ்ராலினிசம் மார்க்சிச சர்வதேசியவாதத்திற்கு எதிரான ஒரு தேசியவாத பிற்போக்குத்தனத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது. ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்படுவதற்கு சற்றே ஒரு வருடத்திற்கு முன்பு எழுதியது போல், 'தத்துவார்த்த தளத்தில் எடுத்துக்கொண்டால், ஒட்டுமொத்த ஸ்ராலினிசமும், 1905ல் சூத்திரப்படுத்தப்பட்ட நிரந்தரப் புரட்சி தத்துவம் மீதான விமர்சனத்திலிருந்து வளர்ந்தது என்று கூறலாம்.'[14]

அதிகாரத்துவ சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டமானது சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டத்துடன் பிரிக்கவியலாத வகையில் பிணைந்திருந்தது. அதே மூலோபாயக் கொள்கையானது தற்போதைய உலகச் சூழ்நிலைமையில் அனைத்து அரசியல் பணிகளுக்கும் பொருந்தும். சமகால சகாப்தத்தின் பெரும் பிரச்சினைகளுக்கு தேசிய தீர்வுகள் எதுவும் கிடையாது.

ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி கோட்பாடானது, உலக சோசலிசப் புரட்சியின் மூலோபாயம் அடித்தளமாகக் கொண்டுள்ள சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் புறநிலை இயக்க ஆற்றல் குறித்த பகுப்பாய்வை வழங்கியது. ஆனால் சோசலிசத்தின் வெற்றியானது முதலாளித்துவ முரண்பாடுகளின் தானியங்கித் தீர்வின் மூலம் அடையப்படமுடியாது என்று ட்ரொட்ஸ்கி விளக்கினார். இந்த முரண்பாடுகள் தொழிலாள வர்க்கத்தால் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான புறநிலை நிலைமைகளையும் சாத்தியத்தையும் மட்டுமே உருவாக்குகின்றன. ஆனால் சாத்தியத்தை யதார்த்தமாக மாற்றுவது, புரட்சிகர கட்சியின் நனவான முடிவுகளையும் நடவடிக்கைகளையும் சார்ந்திருந்தது.

நான்காம் அகிலத்தின் 1938 ஸ்தாபக ஆவணத்தில், 'மனிதகுலத்தின் வரலாற்று நெருக்கடி புரட்சிகர தலைமையின் நெருக்கடியாக குறைக்கப்பட்டுவிட்டது' என்ற ட்ரொட்ஸ்கியின் பிரகடனம், ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளதும் தொழிற்சங்கங்களினதும் சந்தர்ப்பவாதம் மற்றும் துரோகத்தின் விளைவாக, தொழிலாள வர்க்கம் அனுபவித்த முந்தைய பதினைந்து ஆண்டுகால தோல்விகளின் மைய படிப்பினைகளின் சுருக்கமாகும்.

1926ல் பிரிட்டனில் பொது வேலைநிறுத்தம் தோற்கடிக்கப்பட்டமை, 1927ல் சியாங் கை ஷேக், ஷாங்காய் தொழிலாள வர்க்கத்தை நசுக்கியமை, 1933ல் ஜேர்மனியில் நாஸிக்களின் வெற்றி, 1936 வெகுஜன வேலைநிறுத்தங்களுக்குப் பின்னர் பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தை மக்கள் முன்னணியின் அரசியலால் விரக்திக்குள்ளாக்கியமை போன்ற நிகழ்வுகள், 1939ல் ஸ்பானியப் புரட்சியின் தோல்வி, மற்றும் இறுதியாக ஹிட்லருடனான ஸ்ராலினின் உடன்படிக்கை மற்றும் இரண்டாம் உலகப் போர் வெடித்தமையும் இடதுசாரி புத்திஜீவிகளின் பரந்த பிரிவுகள் மத்தியில், சோசலிசத்திற்கான வாய்ப்புகள் குறித்த அவநம்பிக்கையையும் ஏமாற்றத்தையும் தூண்டிவிட்டன. இந்தத் தோல்விகள் தொழிலாள வர்க்கத்தால் அதிகாரத்தை வென்று தக்கவைத்துக் கொள்ள இயலாது என்பதை நிரூபிக்கவில்லையா என்று அவர்கள் கேட்டார்கள்.

இக்கேள்வியைத் தூண்டிவிட்ட விரக்தியை ட்ரொட்ஸ்கி ஆணித்தரமாக நிராகரித்தார். சோசலிசத்தை அடைவதற்கான தடையாக இருந்தது தொழிலாள வர்க்கத்தின் 'புரட்சிகரமற்ற' தன்மை அல்ல, மாறாக, தற்போதுள்ள வெகுஜனக் கட்சிகளின் அழுகிய தன்மையே ஆகும். எனினும் இது மேலும் ஒரு கேள்வியை எழுப்பியது: அதாவது புரட்சியின் கோரிக்கைகளுக்கு இணையான தலைவர்கள் என்பதை நிரூபிக்கும் ஒரு கட்சியைக் கட்டியெழுப்ப முடியுமா? இந்த சாத்தியத்தை மறுத்தவர்கள் மிகவும் அவநம்பிக்கையான அரசியல் முடிவுகளுக்குத் தள்ளப்பட்டனர், உதாரணமாக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டமானது ஒரு நம்பத்தகாத கற்பனாவாதத்தை வளர்த்தது என்றும், மனிதகுலத்தின் நிலையானது சாராம்சத்தில் நம்பிக்கையற்றது என்றும் கூறினர். 1939 இலையுதிர்காலத்தில் ட்ரொட்ஸ்கி எழுதியதாவது: 'எமது எதிரிகள் அனைவரும் இந்த சிந்தனையை தெளிவாக வெளிப்படுத்தவில்லை. என்றாலும், தீவிர இடதுகள், மத்தியவாதிகள் மற்றும் அராஜகவாதிகளுமாக -ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகளைக் குறிப்பிட வேண்டிய கட்டாயம் இல்லை- அவர்கள் அனைவரும், தோல்விகளுக்கான பொறுப்பை தங்களிடமிருந்து பாட்டாளி வர்க்கத்தின் தோள்களுக்கு மாற்றுகிறார்கள். அவர்களில் எவரும், பாட்டாளி வர்க்கமானது எந்த நிலைமைகளின் கீழ் சோசலிச வெற்றியை சாதிக்க முடியும் என்பதை துல்லியமாகக் குறிப்பிடவில்லை.'[15]

ட்ரொட்ஸ்கி இடது புத்திஜீவிகளின் அரசியல் விரக்தியின் மூலத்தை அடையாளம் கண்டுகொண்டிருந்தார். தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர ஆற்றலை நிராகரிப்பதுதான், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய குட்டி முதலாளித்துவ இடது கல்வியாளர்களின் மார்க்சிச-விரோதத்தின் இன்றியமையாத அடிப்படையாக இருந்தது. ட்ரொட்ஸ்கியின் வரலாற்று முன்னோக்கிற்கு எதிராக தங்கள் வாதங்களை திசை திருப்பிய (அவர்கள் இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாவிட்டாலும் கூட), பிராங்போர்ட் பள்ளியானது மார்க்சிசத்தை தொழிலாள வர்க்கத்திடமிருந்து துண்டிக்க முயன்றது. பின்நவீனத்துவவாதிகள், வரலாற்றை ஒரு புறநிலை விதிகளால் ஆளப்படும் நிகழ்முறையாக விளக்கிய மற்றும் தொழிலாள வர்க்கத்தை சமூகத்தின் மைய புரட்சிகர சக்தியாக அடையாளம் காட்டிய 'பெரும் கதையாடல்கள்' முடிவடைந்துவிட்டதாக அறிவித்தனர். மார்க்சிசத்தையும் தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகப் புரட்சியையும் முற்றிலுமாக நிராகரிப்பதே, சமூக சிந்தனையில் காணப்படும் பிற்போக்கின் தவிர்க்கவியலாத விளைவாக இருந்தது. இந்த பிற்போக்கின் இரண்டு முன்னணி பிரதிநிதிகளாக, எர்னஸ்டோ லாக்லாவ் மற்றும் சாண்டெல் மூப்வ், 1985 ஆண்டில் அப்பட்டமாக பின்வருமாறு அறிவித்தனர்:

இந்தப் புள்ளியில் நாம் இப்போது மார்க்சியத்திற்குப் பிந்தைய தளத்தில் இருக்கிறோம் என்பதைத் தெளிவாகக் கூற வேண்டும். மார்க்சியத்தால் விரிவுபடுத்தப்பட்ட அகநிலை மற்றும் வர்க்கங்கள் குறித்த கருத்தாக்கத்தையோ அல்லது முதலாளித்துவ வளர்ச்சியின் வரலாற்றுப் போக்குக் குறித்த அதன் பார்வையையோ இனியும் பேணுவது சாத்தியம் இல்லை...[16]

மார்க்சிய எதிர்ப்புத் தத்துவவாதிகள் நிகழ்வுகளால் மறுதலிக்கப்பட்டுள்ளனர். ட்ரொட்ஸ்கிச இயக்கம் மட்டுமே இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வர்க்கப் போராட்டத்தின் உலகளாவிய எழுச்சியை முன்கணித்துத் தயாரிப்புச் செய்துள்ளது. நிரந்தரப் புரட்சி முன்னோக்கை அடிப்படையாகக் கொண்டு, அனைத்துலகக் குழுவானது 1988 ஆண்டில் கூறியதாவது:


பாட்டாளி வர்க்கப் போராட்டங்களின் அடுத்த கட்டமானது, புறநிலைப் பொருளாதாரப் போக்குகளதும் மார்க்சிஸ்டுகளின் அகநிலை செல்வாக்கினதும் ஒருங்கிணைந்த அழுத்தத்தின் கீழ், ஒரு சர்வதேச பாதையில் தவிர்க்கவியலாமல் அபிவிருத்தியடையும் என்று நாங்கள் முன்கணிக்கின்றோம். பாட்டாளி வர்க்கம் நடைமுறையில் தன்னை ஒரு சர்வதேச வர்க்கமாக வரையறுத்துக் கொள்ள மேலும் மேலும் முனையும்; மார்க்சிச சர்வதேசியவாதிகளின் கொள்கைகள் இந்தக் கூட்டிணைந்த போக்கின் வெளிப்பாடாக இருப்பதுடன் அவர்கள் இந்த நிகழ்வுப் போக்கை அபிவிருத்தி செய்து அதற்கு நனவான வடிவம் கொடுப்பார்கள்.[17]

துரிதமடைந்து வரும் உலக முதலாளித்துவ நெருக்கடியும் உலகளாவிய வர்க்கப் போராட்டமும் சோசலிசப் புரட்சிக்கும் முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்குமான புறநிலை நிலைமைகளை வழங்கும். 'ஆனால்,' ட்ரொட்ஸ்கி எச்சரித்ததைப் போல், 'புரட்சிகரக் கட்சியானது பாட்டாளி வர்க்கத்தின் தலைமைப் பொறுப்பில் நிற்காத வரை, இந்த மாபெரும் வரலாற்றுப் பிரச்சினை எந்த வகையிலும் தீர்க்கப்படாது.'

நிகழ்ச்சி வேகங்கள் மற்றும் கால இடைவெளிகள் குறித்த கேள்வி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் அது பொதுவான வரலாற்று முன்னோக்கையோ அல்லது நமது கொள்கையின் திசையையோ மாற்றவில்லை. முடிவு எளிமையான ஒன்றாக இருக்கிறது: அதாவது பாட்டாளி வர்க்க முன்னணிப் படைக்கு பத்து மடங்கு ஆற்றலுடன் கல்வியூட்டும் மற்றும் ஒழுங்கமைக்கும் பணியை முன்னெடுக்க வேண்டியது அவசியம். இதிலேயே நான்காம் அகிலத்தின் பணி துல்லியமாக அடங்கியுள்ளது.[18]

கடந்த நூற்றாண்டின் வரலாற்று அனுபவங்கள், முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தை வழிநடத்துவதாகக் கூறிக்கொண்ட அனைத்து அரசியல் இயக்கங்கள், கட்சிகள் மற்றும் போக்குகளை முழுமையாகப் பரிசோதித்துள்ளன. ஆனால், இருபதாம் நூற்றாண்டின் எழுச்சிகள் அனைத்தும் ஸ்ராலினிஸ்டுகள், சமூக ஜனநாயகவாதிகள், மாவோயிஸ்டுகள், முதலாளித்துவ தேசியவாதிகள், அராஜகவாதிகள் மற்றும் பப்லோவாதிகளின் எதிர்ப்புரட்சிகர பாத்திரத்தை அம்பலப்படுத்தியுள்ளன. அனைத்துலகக் குழுவின் தலைமையிலான நான்காம் அகிலம் மட்டுமே வரலாற்றின் பரிசோதனையை எதிர்கொண்டு நிற்கிறது. ஒவ்வொரு கண்டத்திலும், தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச புரட்சிகர சோசலிச இயக்கமானது இருபத்தியோராம் நூற்றாண்டின் மார்க்சிசமான ட்ரொட்ஸ்கிசத்தின் தத்துவார்த்த மற்றும் அரசியல் அடித்தளத்தில் அபிவிருத்தியடையும்.

* * * *

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னணி உறுப்பினரும், முப்பத்தைந்து ஆண்டுகளாக அதன் இலங்கைப் பிரிவின் பொதுச் செயலாளராக இருந்தவருமான விஜே டயஸின் (27 ஆகஸ்ட் 1941 – 27 ஜூலை 2022) நினைவாக இத்தொகுப்பு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தோழர் விஜே தனது இளமைக் கால இலட்சியங்களை முதுமையிலும் நிலைநிறுத்தி, குறைவில்லாத ஆர்வத்துடன் போராட்டத்தின் நடுவே உயிர் துறந்தார். தைரியம், ட்ரொட்ஸ்கிச கொள்கைகளுக்கான அர்ப்பணிப்பு மற்றும் சோசலிசத்திற்கான பற்றுறுதியுடனான அவரது மரபுவழி, மனிதகுலத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் மாபெரும் வர்க்கப் போராட்டங்களில் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு உத்வேகமூட்டும் உதாரணத்தை வழங்கும்.

டேவிட் நோர்த்,
டெட்ரொயிட்
4 ஏப்ரல் 2023

[1] International Committee of the Fourth International, What Is Happening in the USSR: Gorbachev and the Crisis of Stalinism (Detroit: Labor Publications, 1987), p. 12.

[2] David North, Perestroika Versus Socialism: Stalinism and the Restoration of Capitalism in the USSR (Detroit: Labor Publications, 1989) p. 49.

[3] The National Interest, 19 (Summer 1989), p. 3.

[4] The Death Agony of Capitalism and the Tasks of the Fourth International (The Transitional Program), https://www.marxists.org/archive/trotsky/1938/tp/tp-text.htm#op

[5] The Third International After Lenin (Section 2: The United States and Europe), https://www.marxists.org/archive/trotsky/1928/3rd/ti01.htm#p1-02

[6] “War and the Fourth International,” June 10, 1934, https://www.marxists.org/archive/trotsky/1934/06/warfi.htm

[7] “Order Out of Chaos,” https://www.marxists.org/archive/trotsky/1919/xx/order.html

[8] “Nationalism and Economic Life,” https://www.marxists.org/archive/trotsky/1934/xx/nationalism.htm

[9] “China, Japan and the Ukraine war,” Financial Times, March 27, 2023.

[10] Robert J. Alexander, International Trotskyism 1929-1985: A Documented Analysis of the Movement (Durham and London: Duke University Press, 1991) p. 32.

[11] Review by Bertrand M. Patenaude in The American Historical Review, Vol. 116, No. 3 (June 2011), p. 902; also cited in In Defense of Leon Trotsky, by David North (Oak Park, MI: Mehring Books, 2013), pp. 243-48.

[12] Leon Trotsky, “What is the Permanent Revolution?,” The Permanent Revolution, https://www.marxists.org/archive/trotsky/1931/tpr/pr10.htm

[13] Thomas M. Twiss, Trotsky and the Problem of Soviet Bureaucracy (Chicago: Haymarket Books, 2014), p. 1.

[14] “Three Conceptions of the Russian Revolution,” (1939), https://www.marxists.org/archive/trotsky/1939/xx/3concepts.htm

[15] “The USSR in War,” In Defense of Marxism, https://www.marxists.org/archive/trotsky/1939/09/ussr-war.htm

[16] Ernesto Laclau and Chantelle Mouffe, Hegemony & Socialist Strategy: Toward a Radical Democratic Politics (London and New York: Verso) p. 4.

[17] David North, Report to the 13th National Congress of the Workers League, Fourth International, July-December 1988, p. 39.

[18] Manifesto of the Fourth International on Imperialist War (1940), https://www.marxists.org/history/etol/document/fi/1938-1949/emergconf/fi-emerg02.htm

Loading