முன்னோக்கு

25 ஆம் ஆண்டில் உலக சோசலிச வலைத்தளம்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர், பெப்ரவரி 14, 1998 இல், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) உலக சோசலிச வலைத்தளத்தை வெளியிடத் தொடங்கியது. அதன் முதலாம் ஆண்டு பிரசுரத்தின் போது, WSWS வாரத்தில் ஐந்து நாட்கள் கட்டுரைகளை வெளியிடப்பட்டது. மார்ச் 1999 இல் இருந்து, WSWS வாரத்திற்கு ஆறு நாட்கள் கட்டுரைகளை வெளியிடத் தொடங்கியது. அது ஸ்தாபிக்கப்பட்ட நாளில் இருந்து, திட்டமிட்ட பிரசுரிப்பில் அது ஒரு நாள் கூட தவறியதில்லை. இந்தத் தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை, ஆங்கிலத்தில் மட்டும், சுமார் 100,000 ஆகும். ஆனால் 29 மொழிகளில் WSWS வெளியிடப்படுகிறது. இந்த எல்லா மொழிகளிலும் உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கையை சேர்த்தால், அது பிரசுரிக்கப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கையை பல பத்தாயிரமாக அதிகரிக்கும்.

உலக சோசலிச வலைத்தளம், இதுவரை, உலகிலேயே மிகவும் பரவலாக வாசிக்கப்படும் மார்க்சிய-சோசலிச இணைய பிரசுரமாகும். WSWS ஐ அணுகுவதைத் தடுக்க கூகுள் மற்றும் பிற முக்கிய பெருநிறுவன தேடுபொறிகளின் தொடர்ச்சியான மற்றும் நன்கு-ஆவணப்படுத்தப்பட்ட முயற்சிகளுக்கு மத்தியிலும், உலக சோசலிச வலைத்தளத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் 70,000 பக்கங்கள் பார்க்கப்படுகின்றன. 2022 இல் பார்க்கப்பட்ட WSWS பக்கங்களின் மொத்த எண்ணிக்கை 25,995,248 ஆகும். இந்தப் புதிய ஆண்டின் முதல் மாதத்திலேயே, உலக சோசலிச வலைத்தளத்தின் 1,882,673 பக்கங்கள் வாசகர்களால்  பார்க்கப்பட்டுள்ளன.

WSWS சர்வதேச அளவில் பார்வையாளர்களைக் கொண்டுள்ளது. அதன் வாசகர்களில் சுமார் 40 சதவீதம் பேர் அமெரிக்காவுக்கு வெளியே வாழ்கிறார்கள். அனைத்து வயதுடைய பிரிவினரும் அதன் வாசகர்களாக உள்ளனர். WSWS வாசகர்களில் 17.36 சதவீதம் பேர் 18 இல் இருந்து 24 வயதுக்கு இடையில் இருக்கின்றார்கள். அதாவது, அவர்கள் WSWS நிறுவப்பட்டதற்குப் பின்னர் பிறந்தவர்கள். 26.66 சதவீதம் பேர் 25 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்கள். இந்த வயது பிரிவில் இருப்பவர்களைப் பொறுத்த வரை, அவர்களால் தங்களின் ஒட்டுமொத்த முதிர்ந்த வாழ்விலும் இதை அணுக முடியுமாக இருந்திருக்கும். 17.91 சதவீதம் பேர் 35 மற்றும் 44 வயதுக்கு இடையில் இருப்பவர்கள். 14.74 சதவீதம் பேர் 45 முதல் 54 வயதுக்கு இடைப்பட்டவர்கள். 12.97 சதவீதம் பேர் 55 முதல் 64 வயதுக்கு உட்பட்டவர்கள். இறுதியாக, WSWS வாசகர்களில் 10.36 சதவீதம் பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

இந்தத் தளத்தின் மொத்த பதிவுகளின் எண்ணிக்கையும் மற்றும் அதன் பார்வையாளர்களின் எண்ணிக்கை மற்றும் வீச்செல்லையும், ஓர் அசாதாரண சாதனையாகும். ஆனால் நாம் இன்று எதனை கொண்டாடி கொண்டிருக்கிறோமோ, இது அளவீடு செய்ய முடிந்த அம்சங்களை விட WSWS இன் இன்னும் அதிகமான விஷயங்களைக் குறித்ததாகும். உலக சோசலிச வலைத்தளம் சர்வதேச சோசலிச இயக்கத்தின் வரலாற்றில் மிக முக்கியமான வெளியீடுகளில் ஒன்றாக உள்ளது. அதன் இந்தக் கால் நூற்றாண்டு பிரசுரிப்பு காலம், இருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகள் மற்றும் இருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களது முக்கிய அரசியல், சமூக-பொருளாதார, கலாச்சார மற்றும் புத்திஜீவிய நிகழ்வுகளுக்கும், போக்குகளுக்கும் மற்றும் செயல்முறைகளுக்கும் சர்வதேச மார்க்சிச-சோசலிச-ட்ரொட்ஸ்கிச இயக்கம் காட்டிய விடையிறுப்பின் வரலாறாகும்.

உலக சோசலிச வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்ட போது வெளியிட்ட ஓர் அறிக்கையில், அதன் ஆசிரியர் குழு ஒரு புதிய தகவல்தொடர்பு ஊடகத்தில் வெளியாகும் இந்தப் பிரசுரத்தின் கோட்பாடுகளையும், நோக்கத்தையும் பின்வருமாறு வரையறுத்தது.

நிதி நெருக்கடிகளில் இருந்து இராணுவவாதம் மற்றும் போர் வெடிப்புகள் வரை, மாபெரும் நிகழ்வுகள் வர்க்க உறவுகளின் தற்போதைய நிலையை முறித்து வருவதால், அதிகரித்து வரும் இந்தப் போராட்டத்திற்குள் இழுக்கப்படும் உழைக்கும் மக்களின் பிரிவுகளுக்கு உலக சோசலிச வலைத்தளம் ஓர் அரசியல் நோக்குநிலை வழங்கும். வேலையின்மை, குறைந்த ஊதியம், சிக்கனக் கொள்கைகள் மற்றும் ஜனநாயக உரிமை மீறல்களுக்கு எதிராக ஒவ்வொரு நாட்டிலும் பாரியளவிலான போராட்டங்களை நாம் எதிர்நோக்குகிறோம். ஆனால் இந்தப் போராட்டங்களின் வெற்றியை, மார்க்சிச உலகக் கண்ணோட்டத்தால் வழிநடத்தப்படும் ஒரு சோசலிச அரசியல் இயக்கத்தின் செல்வாக்கு வளர்வதில் இருந்து பிரிக்க முடியாது என்று உலக சோசலிச வலைத்தளம் வலியுறுத்துகிறது.

ஆகவே வரலாற்று அறிவு, கலாச்சார விமர்சனம், விஞ்ஞானப்பூர்வ அறிவொளி மற்றும் புரட்சிகர மூலோபாயத்தின் ஒரு பரந்த புத்திஜீவிய களஞ்சியத்திற்காக WSWS போராடும். நவீன சோசலிச தொழிலாளர் இயக்கத்தின் மறுபிறப்புக்கு இன்றியமையாததாக விளங்கும் வகையில், அரசியல் மற்றும் கலாச்சார உரையாடல்களின் மட்டத்தை உயர்த்துவதே இதன் குறிக்கோளாகும்.

உலக சோசலிச வலைத்தளம், 25 ஆண்டுகளுக்கு முன்னர் அது முன்வைத்த முன்னோக்கிற்கு உண்மையாக இருந்துள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடூரமான 'என்றென்றும் போர்கள்', வோல் ஸ்ட்ரீட் பொருளாதார வீழ்ச்சிகள், உலகளவில் வர்க்கப் போராட்டத்தில் ஏற்பட்ட திருப்புமுனையான மாற்றங்கள், ஜனநாயகத்தின் முறிவு, பாசிச இயக்கங்களின் மீளெழுச்சி, புரட்சிகர எழுச்சிகள், எதிர்ப்புரட்சிகர வன்முறை, ஈவிரக்கமின்றி இலாப உந்துததாலும் மற்றும் சமூக உள்கட்டமைப்பை அலட்சியப்படுத்தியதாலும் ஏற்பட்ட இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பேரழிவுகள், பேரழிவுகரமான பெருந்தொற்று என கடந்த கால் நூற்றாண்டின் அனைத்து கொந்தளிப்பான நிகழ்வுகளும் WSWS இல் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதோடு, மார்க்சிச பகுப்பாய்வுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளன.

உலக சோசலிச வலைத்தளம், தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகளை ஆராய்ந்து, மிகவும் முன்னேறிய மற்றும் குறைந்த வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் நிலவும் சமூக சமத்துவமின்மையின் கோரமான நிலையையும் பேரழிவுகரமான விளைவுகளையும் அம்பலப்படுத்தியுள்ளது.

உலக சோசலிச வலைத்தளத்தின் ஆவணக் காப்பகம் அது எவ்வளவு எழுதியுள்ளது என்பதற்கு மட்டுமல்ல, மாறாக அதன் ஆழமான உட்பார்வை மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கும் சாட்சியளிக்கிறது. அரசியல் முன்னோக்கின் ஒரு விஞ்ஞானமாக, மார்க்சிசம் முக்கிய பாத்திரம் வகிப்பதை அதன் பணி உறுதிப்படுத்துகிறது. கடந்த கால் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகளுக்கு WSWS இன் பிரதிபலிப்பு காலத்தின் பரிசோதனையிலும் நிலைத்து நிற்கிறது.

உலக சோசலிச வலைத்தளம் ஒவ்வொரு நாள் நிகழ்வுகளையும் சரியான நேரத்தில் ஆய்வுக்கு உட்படுத்தி வரும் அதேவேளையில், பல்கலைக்கழகங்களில், குறிப்பாக பிராங்பேர்ட் பயிலகத்துடன் தொடர்புடைய மோசடியான மார்க்சிச ஏளனங்கள் மற்றும் பின்நவீனத்துவவாதத்தின் பகுத்தறிவின்மை ஆகியவற்றால் பரப்பப்பட்ட முதலாளித்துவ சித்தாந்தத்தின் பல்வேறு வடிவங்களுக்கு எதிராக மார்க்சிசத்தைப் பாதுகாக்கவும் மற்றும் சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்க போராட்டத்தை எதிர்க்கும் நடுத்தர வர்க்க போலி-இடது எதிர்ப்பாளர்களின் பிற்போக்குத்தனமான சுயநல அடையாள அரசியலில் அவற்றின் வெளிப்பாடுகளையும் அம்பலப்படுத்துவதற்குமான அதன் பொறுப்பைப் புறக்கணிக்கவில்லை.

WSWS இனது தத்துவார்த்தப் பணியிலும் மற்றும் தொழிலாளர்களின் அரசியல் மற்றும் சமூக வர்க்க நனவை வளர்ப்பதற்கான அதன் அர்ப்பணிப்பிலும் ஓர் இன்றியமையாத அம்சமாக, கலாச்சார விமர்சனத்திற்கு அது கவனம் கொடுத்துள்ளது. இந்த பொறுப்பு, ஆயிரக் கணக்கான திரைப்பட விமர்சனங்கள் மற்றும் ஏனைய கலைத்துவ படைப்புக்கள் மீதான அதன் செயல்பாடுகளிலும், அத்துடன் தொடர்ச்சியாக வெளியாகும் சமூக விமர்சனங்களிலும் வெளிப்பாட்டைக் கண்டுள்ளது. கலாச்சாரத்தைச் சீரழிக்கவும், பிற்போக்குத்தன்மையை ஊக்குவித்து பெருமைப்படுத்தவும், அவ்விதத்தில் தொழிலாள வர்க்கத்தின் நுண்ணறிவைப் பரவலான வன்முறை, ஒடுக்குமுறை, சுரண்டல், மற்றும் முதலாளித்துவச் சமூக அநீதிக்குக் கீழ்படிய செய்யவும், ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறையில் ஆளும் வர்க்கமும் அவர்களுக்கு உடந்தையாய் இருப்பவர்களும் செய்யும் இடைவிடாத முயற்சிகளுக்கு எதிராக உலக சோசலிச வலைத்தளம் சமரசத்திற்கிடமற்ற ஒரு போராட்டத்தை நடத்தி உள்ளது.

முதலாளித்துவத்தின் கடந்தகால மாபெரும் ஜனநாயக மற்றும் சோசலிச புரட்சிகளை இழிவுபடுத்தவும், அவ்விதமாக, தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தைத் தூக்கியெறிந்து ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலின் அனைத்து வடிவங்களில் இருந்தும் மனிதகுலத்தை விடுவிப்பதற்காக, அது இந்த மனிதகுல இயக்க வரலாற்று போக்கில் அதன் தற்போதைய போராட்டங்களை அடையாளம் காணும் வழிவகைகளை இழக்கச் செய்யவும், ஆளும் வர்க்கம் வரலாற்று பொய்மைப்படுத்தலைச் சார்ந்துள்ளதால், அதற்கு எதிராகவும் உலக சோசலிச வலைத்தளம் போர் தொடுத்துள்ளது. 

அனைத்துலகக் குழு, அதன் பகுதிகளை அச்சுப் பதிப்பில் இருந்து இணையத்திற்கு மாற்றுவதற்கான தயாரிப்புகளைப் பெப்ரவரி 1997 இல் தொடங்கியது. அந்நேரத்தில், இணையச் சேவை அதன் ஆரம்ப நிலையில் இருந்தது. அப்போது இந்தப் புதிய ஊடகத்தின் முக்கியத்துவத்தை உலகில் எந்தவொரு வெகுஜன அச்சு பத்திரிகையும் அங்கீகரித்திருக்கவில்லை. பிரதான முதலாளித்துவப் பத்திரிகை அங்கங்கள், அவற்றின் அச்சு பிரசுரங்களுக்கு இணையம் ஒரு சிறிய துணைப்பொருளாக மட்டுமே இருக்குமென நம்பின. குட்டி-முதலாளித்துவ தீவிரவாத அமைப்புகளும் போலி-இடது அமைப்புகளும் இந்தப் புதிய ஊடகத்தை ஏளனம் செய்தன அல்லது முற்றிலும் இதைக் கண்டு கொள்ளாமல் இருந்தன.

ஆனால் வரலாற்றுப் சடவாத பள்ளியில் நன்கு அடித்தளமிட்டிருந்த அனைத்துலகக் குழு, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சிக்கு இணைய தொழில்நுட்பம் வழங்கும் சாத்தியக்கூறையும் அரசியல் தாக்கங்களையும் அங்கீகரித்தது. இந்தப் புதிய தகவல்தொடர்பு தொழில்நுட்பத்தின் இரண்டு முக்கிய அம்சங்களை நான்காம் அகிலத்தின் அனைத்துலக்குழு  அடையாளம் கண்டது. ஒன்று, இணையத்தின் வளர்ச்சியானது ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் புரட்சிகர சோசலிச கருத்துக்கள் மற்றும் அரசியலுக்குப் பரந்தளவில் புதிய பார்வையாளர்களை உருவாக்கும். இரண்டாவது, இந்தப் புதிய தொழில்நுட்பம் தேசிய எல்லைகளைக் கடந்து பரவி, தகவல்தொடர்புகளைச் சர்வதேசமயமாக்கும். ஆகவே இது உலகளவில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஒருங்கிணைப்பதற்கும் வழிநடத்துவதற்கும் அசாதாரண வாய்ப்புகளை ஏற்படுத்தும். தொலைதொடர்பு புரட்சியானது உலக சோசலிசப் புரட்சியின் அபிவிருத்திக்கு முன்னெப்போதும் இல்லாதளவிலான பலத்தைக் கொண்டு வர ஒரு உடலியல்ரீதியான தூண்டுதலை வழங்கும் என்பதை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அங்கீகரித்தது.

பெப்ரவரி 1998 ஸ்தாபக அறிக்கையில், WSWS ஆசிரியர் குழு பின்வருமாறு எழுதியது:

அரசியல் கல்விக்கும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தவும் உலக சோசலிச வலைத்தளம் ஒரு முன்னோடியில்லா கருவியாக இருக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். நாடுகடந்த பெருநிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு எதிரான அவற்றின் போரைத் தேசிய எல்லைகளைக் கடந்து ஒழுங்கமைப்பதைப் போலவே, பல்வேறு நாடுகளின் உழைக்கும் மக்கள் மூலதனத்திற்கு எதிரான அவர்களின் போராட்டங்களை ஒருங்கிணைக்க இது உதவும். இது அனைத்து நாடுகளின் தொழிலாளர்களிடையே கலந்துரையாடலைச் சுலபமாக்கி, அவர்களின் அனுபவங்களை ஒப்பிட்டுபார்க்கவும், ஒரு பொதுவான மூலோபாயத்தை விரிவாக்கவும் அனுமதிக்கும். இணைய வசதி விரிவடைந்து வருவதால், உலக சோசலிச வலைத்தளத்திற்கான உலகெங்கிலுமான பார்வையாளர்கள் அதிகரிப்பார்கள் என்று ICFI எதிர்பார்க்கிறது. விரைவான மற்றும் உலகளாவிய தகவல்தொடர்பு வடிவமாக, இணைய தொழில்நுட்பம் அசாதாரண ஜனநாயக மற்றும் புரட்சிகர தாக்கங்களைக் கொண்டுள்ளது. நூலகங்கள் மற்றும் ஆவணக் காப்பகங்களில் இருந்து அருங்காட்சியகங்கள் வரை உலகின் புத்திஜீவிய வளங்களை வெகுஜன வாசகர்கள் அணுகுவதற்கு இது உதவ முடியும்.

ஊடக பெருங்குழுமங்கள் மற்றும் அரசாங்கங்களால் இதுவரை இணையச் சேவை அணுகலைத் தடுக்க முடியவில்லை. ஆவணங்களைப் பிரசுரிப்பதற்கான செலவு ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாக உள்ளது. சமூகத்தின் பரந்த பிரிவுகளின் வீடுகள், பள்ளிகள் மற்றும் வேலையிடங்களில் கணினிகள் அதிகரித்திருப்பது, பத்து மில்லியன் கணக்கானவர்கள் மிகவும் மலிவாக தகவல்தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பைத் திறந்து விட்டுள்ளது.

இப்போது அரசியல் வாழ்க்கைக்கு வரும் ஒரு புதிய தலைமுறையினர், பெரும்பாலும் இணையத்தின் வாயிலாக கற்பிக்கப்படுவார்கள். ஏற்கனவே, 80-100 மில்லியன் கணக்கானவர்கள் இணையத்தை அணுகுகிறார்கள், இந்த எண்ணிக்கை அடுத்த இரண்டு ஆண்டுகளில் இன்னும் வேகமாக அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. நவீன பொருளாதார வாழ்க்கைக்கு இந்த தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, இது அதிகரித்தளவில் பரவலாகவும் பயன்படுத்த எளிதாகவும் மாறும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.

ஆசிரியர் குழுவின் இந்தக் கணிப்பு விரைவில் நிரூபிக்கப்பட்டது. WSWS தொடங்கப்பட்ட போது, 1998 இல் 80 முதல் 100 மில்லியனாக இருந்த இணையத்தை பயன்படுத்துபவர்கள் வேகமாக பில்லியன் கணக்கில் அதிகரித்தார்கள். இன்று, உலக சோசலிச வலைத்தளம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகளுக்குப் பின்னர், இடதுசாரிகள் என்று கூறிக்கொள்ளும் வேறு எந்த அமைப்புகளும் இந்த விதத்தில் ஏன் இந்தத் தொழில்நுட்பத்திற்கு தமது பிரதிபலிப்பை காட்டவில்லை என்று வாசகர்கள் ஆச்சரியப்படலாம். உலகளாவிய வர்க்க போராட்ட அபிவிருத்திக்கு இணைய வசதி வழங்கும் சாத்தியக்கூறு மீது அவர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை அல்லது அதை அவர்கள் விரும்பவில்லை என்பதால் தான் அத்தகைய ஒரு சாத்தியக்கூறை அவர்கள் காணவில்லை.

ஆனால் அனைத்துலகக் குழு இந்த புரட்சிகர சாத்தியக்கூறு மீது கூர்மையாக கவனம் செலுத்தியது. மீண்டும், பெப்ரவரி 1998 அறிக்கையிலிருந்து மேற்கோள் காட்டுவதானால்:

பதினைந்தாம் நூற்றாண்டில் கூட்டன்பேர்க்கின் அச்சு இயந்திர கண்டுபிடிப்பு, புத்திஜீவிய வாழ்வின் மீது தேவாலயங்கள் வகித்த கட்டுப்பாட்டை உடைப்பதில் ஒரு முக்கிய பங்கு வகித்ததுடன், நிலப்பிரபுத்துவ அமைப்புகளைக் இல்லாதொழித்து, மறுமலர்ச்சி காலத்துடன் தொடங்கிய மாபெரும் கலாச்சார புத்துயிரூட்டலை வளர்த்து, இறுதியில் அறிவொளி மற்றும் பிரெஞ்சு புரட்சியில் அதன் வெளிப்பாட்டைக் கண்டது. ஆகவே இன்றைய இந்த இணையச் சேவை புரட்சிகர சிந்தனைக்குப் புத்துயிரூட்ட உதவும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இந்த தொழில்நுட்பத்தை உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைக்கான ஒரு கருவியாகப் பயன்படுத்த உத்தேசிக்கிறது.

உலக சோசலிச வலைத்தளம் இன்று இந்த புரட்சிகரமான உலகளாவிய தகவல்தொடர்பு முன்னேற்றங்களைப் பயன்படுத்துகிறது. ஆனால் WSWS இன் சக்தி, பொறுப்பானதன்மை மற்றும் வெற்றியானது அது பயன்படுத்தும் தொழில்நுட்பத்தில் இருந்து அல்ல, மாறாக மார்க்சிச அணுகுமுறையில் இருந்து, சோசலிச வேலைத்திட்டம் மற்றும் அதற்கு அடிப்படையாக உள்ள வரலாற்று முன்னோக்கிலிருந்து பெறப்படுகிறது.

இந்த ஆண்டு WSWS நிறுவப்பட்ட 25 ஆம் ஆண்டு நிறைவை மட்டும் குறிக்கவில்லை. 1923 அக்டோபரில் லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையில் இடது எதிர்ப்பு ஸ்தாபிக்கப்பட்ட நூற்றாண்டையும் குறிக்கிறது. இது, சோவியத் அதிகாரத்துவத்தின் எதிர்புரட்சிகர தேசியவாத வேலைத்திட்டமான ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராட்டத்தின் தொடக்கத்தைக் குறித்தது. அது சோசலிசத்தை குற்றகரமாக காட்டிக்கொடுத்து, உலகெங்கிலும் தொழிலாள வர்க்கத்தின் எண்ணற்ற தோல்விகளுக்கு வழிவகுத்ததுடன், இறுதியில், 1991 இல், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு முதலாளித்துவம் மீட்டமைக்கப்படுவதற்கு இட்டுச் சென்றது.

1998 இல் உலக சோசலிச வலைத்தளத்தை ஸ்தாபித்த ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் சர்வதேச படை, ஒப்பீட்டளவில் எண்ணிக்கையில் சிறியதாக இருந்தாலும், 1923 இல் இடது எதிர்ப்பை நிறுவியதில் இருந்து, 1938 இல் நான்காம் அகிலம், 1953 இல் அனைத்துலகக் குழு நிறுவப்பட்டது வரை, முந்தைய 75 ஆண்டுகளில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தாலும், அதற்குப் பின்னர் மார்க்சிசம் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்தின் சந்தர்ப்பவாத திருத்தல்வாதத்தின் அனைத்து வடிவங்களுக்கு எதிரான போராட்டங்களில் இருந்தும் திரட்டப்பட்டிருந்த தத்துவார்த்த மற்றும் அரசியல் மூலதனத்தால் பயனடைந்திருந்தார்கள். உலக சோசலிச வலைத்தளத்தை நிறுவி அதன் வளர்ச்சிக்காகப் போராடிய தோழர்கள், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றில் முழுமையாகக் கல்வியூட்டப்பட்டிருந்தார்கள் என்பதோடு, நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்புவதற்காக ஏற்கனவே பல தசாப்தங்களாக தங்கள் வாழ்வை அர்ப்பணித்திருந்தார்கள்.

ஆனால் ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்னர் WSWS நிறுவப்பட்டதில் இருந்து, பழைய தலைமுறையினரின் அந்த முயற்சிகள் உலகெங்கிலுமான இளைய தோழர்களால் பலப்படுத்தப்பட்டு முன்னோக்கி கொண்டு செல்லப்பட்டுள்ளன, இவர்களில் பலர் இணையத்தில் தேடியே சோசலிசம், மார்க்சிசம் மற்றும் ட்ரொட்ஸ்கிசம் பற்றிய அவர்களின் முதல் அறிமுகத்தைப் பெற்றார்கள். சோசலிசத்திற்கான மற்றும் அரசியல் கல்வி செயல்முறைக்கான இதே பாதையைத் தான் மில்லியன் கணக்கான இளம் தொழிலாளர்களும் மாணவ இளைஞர்களும் எதிர்காலத்தில் பின்பற்ற இருக்கிறார்கள்.

உலக சோசலிச வலைத்தளத்தின் சாதனைகளைப் பற்றி பெருமைப்படுவதற்கும் கொண்டாடுவதற்கும் நமக்கு முழு உரிமை உள்ளது. ஆனால் நாம் இதை தலைவணங்கி ஏற்று, நம் சாதனைகளோடு ஓய்வெடுத்து கொண்டிருக்கவில்லை. மனிதகுல வரலாற்றின் மிகப்பெரிய நெருக்கடி இப்போது நம்மீது உள்ளது. உக்ரேனில் போர் வெடிப்பு, ஓர் எச்சரிக்கை என்பதை விட மேலதிகமானது. இருபதாம் நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்களின் பயங்கரத்தையும் கூட விஞ்சி விடும் அளவுக்கு, முன்னோடியில்லாதளவில் ஒரு பேரழிவு கட்டவிழ்ந்து வருவதுடன், மனிதகுல நாகரீகத்தின் உயிர்வாழ்வையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு பகுத்தறிவு மேலோங்கி, அவை தமது போக்கை மாற்றிக் கொண்டு, மோதலை தவிர்த்து, இலாபங்களுக்கும் மற்றும் பூகோள அரசியல் மேலாதிக்கத்திற்கான அவற்றின் முனைவைக் கைவிட்டு விடும் என்ற நம்பிக்கையின் மீது, மனிதகுலத்தின் உயிர்பிழப்பைப் பணயம் வைப்பதை விட மிகப்பெரிய தவறு வேறெதுவும் இருக்க முடியாது.

மனித வாழ்வின் மீது ஆளும் வர்க்கங்களது கொள்கைகள் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றிய அவர்களின் அலட்சியம், இந்தப் பெருந்தொற்றுக்கு அவர்கள் காட்டிய விடையிறுப்பால் ஏற்கனவே அம்பலமாகி உள்ளது. 'சடலங்கள் மலை போல் குவியட்டும்,” என்று முன்னாள் பிரிட்டிஷ் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சனின் வார்த்தைகளில் அது தொகுத்தளிக்கப்பட்டது. அவ்வாறே அவர்கள் செய்தார்கள். 2020 இல் இருந்து சுமார் 25 மில்லியன் பேர் கோவிட்-19 ஆல் இறந்துள்ளனர். இறப்பு மற்றும் உடல்நலிவு மூலமாக இந்தப் பெருந்தொற்றுக்குத் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வரும் விலை ஏறக்குறைய முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இன்றும் கூட, துருக்கியிலும் சிரியாவிலும் கட்டவிழ்ந்து கொண்டிருக்கும் கொடூரங்களை நாம் பார்க்கிறோம். மனித உயிர்களுக்குத் தேவையான அனைத்தையும் தனிநபர் செல்வ வளத்திற்கும் அதிகாரத்திற்கும் அடிபணிய செய்வது, அலட்சியம் மற்றும் கவனக்குறைவின் விளைவாக மற்றொரு 'இயற்கை பேரிடர்' நடந்துள்ளது.

போர், காலநிலை மாற்றம் அல்லது இன்னும் மோசமான மற்றொரு பெருந்தொற்று வெடிப்பு என எந்த வடிவத்தில் இருந்தாலும், பேரழிவை நோக்கி நகர்வதைத் தடுக்க ஒரேயொரு சக்தி மட்டுமே உள்ளது. மனிதகுலத்தின் முற்போக்கான முன்னேற்றத்தை ஒரே ஒரு சக்தியால் மட்டுமே புதுப்பிக்க முடியும். அது சர்வதேச தொழிலாள வர்க்கம் ஆகும். முன்னேற்றத்திற்கான இந்த அவசியமான மாற்று பாதை ஒரு கற்பனாவாதக் கனவு இல்லை. அதன் உண்மையான எழுச்சியும் வரலாற்றுரீதியிலான சாத்தியக்கூறும் இப்போது அபிவிருத்தி அடைந்து வரும் உலகளாவிய தொழிலாள வர்க்க போராட்டங்களில் கண்கூடாக எடுத்துக்காட்டப்படுகின்றன. ஆளும் வர்க்கங்களைப் பாசிசம் மற்றும் போரை நோக்கித் தள்ளும் அதே புறநிலை சமூக-பொருளாதார முரண்பாடுகள், உலகளாவிய தொழிலாள வர்க்கத்தைப் புரட்சி மற்றும் சோசலிசத்தை நோக்கி உந்துகின்றன.

இந்த முன்னோக்கு தான் உலக சோசலிச வலைத்தளத்தின் பணியை வரையறுத்து, உந்துதலளிக்கின்றது.

இத்தளத்தின் பணியை முன்னெடுத்துச் செல்வதில் எங்களுடன் இணையுமாறு WSWS இன் அனைத்து வாசகர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

நிச்சயமாக, எங்களுக்கு உங்கள் நிதி உதவி தேவைப்படுகிறது. உலகளவில் விரிவடைந்து வரும் வர்க்கப் போராட்டத்திற்கு மத்தியில், இத்தளத்திற்கு அதிகரித்து வரும் வாசகர்கள், WSWS மீது இன்னும் அதிக கோரிக்கைகளை வைக்கின்றனர். இந்த நடைமுறை அரசியல் சவால்களுக்கு விடையிறுக்க எங்கள் பத்திரிகை பணியாளர் குழு விரிவாக்கப்பட வேண்டும். மில்லியன் கணக்கான வாசகர்கள் அணுகும் ஒரு சிக்கலான தளத்தைப் பராமரிக்க WSWS அதன் தொழில்நுட்ப மற்றும் கணனி நிரலாக்க பணியாளர்களையும் பலப்படுத்த வேண்டும்.

ஆகவே உலக சோசலிச வலைத்தளத்திற்கு சாத்தியமானளவு அதிகளவில் நிதியுதவிகளை வழங்குமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். நன்கொடைகள் வழங்க, wsws.org/donate என்ற பக்கத்திற்குச் செல்லவும். சாத்தியமானால், WSWS க்கு மாதாந்திர நன்கொடைகளை வழங்க உறுதியளிக்கவும்.

இத்தளத்தின் வாசகர்களை விரிவுபடுத்துவதிலும் நாங்கள் உங்கள் உதவியைக் கோருகிறோம். இத்தளத்தில் வெளியாகும் கட்டுரைகளைச் சக பணியாளர்கள், நண்பர்கள் மற்றும் சக மாணவர்களுக்கு  கொடுங்கள். அவர்களை இத்தளத்தின் வழமையான வாசகர்களாக, பங்களிப்பாளர்களாக ஆகுமாறு வலியுறுத்துங்கள். முக்கிய அரசியல் மற்றும் சமூக ,நிகழ்வுகளையும், நிச்சயமாக, உலகின் எந்த பாகத்தில் நடக்கும் வர்க்க போராட்டம் குறித்த அறிக்கைகளையும் வாசகர்களிடம் இருந்து வரவேற்கிறோம்.

மேலும், எல்லாவற்றிற்கும் மிக முக்கியமாக, நீங்கள் சோசலிசத்திற்கான போராட்டத்தில் இணைய முடிவெடுக்குமாறு உங்களை வலியுறுத்துகிறோம். ட்ரொட்ஸ்கிசத்தின் இந்த நூற்றாண்டு நினைவாண்டில், உங்கள் நாட்டில் உள்ள நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் இணைந்துள்ள சோசலிச சமத்துவக் கட்சியிலோ அல்லது சோசலிச சமத்துவக் குழுவுடனோ தொடர்பு கொண்டு இணையுங்கள். உங்கள் பிராந்தியத்தில் அல்லது நாட்டில் ஒரு சோசலிச சமத்துவக் குழுவை நிறுவுவதற்கான பணியை எவ்வாறு தொடங்கலாம் என்பது பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற அல்லது அதில் இணைய, wsws.org/join என்ற பக்கத்திற்குச் செல்லவும்.

2023 ஒரு முக்கிய ஆண்டாக இருக்கும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் குரலான உலக சோசலிச வலைத்தளத்தின் வீச்செல்லையையும் மற்றும் அரசியல் செல்வாக்கையும் விரிவுபடுத்துவதில் சிறிதும் நேரத்தை இழக்கமுடியாது. மில்லியன் கணக்கான வாசகர்களும் ஆதரவாளர்களும், சோசலிசத்திற்கான உலகளாவிய தொழிலாள வர்க்க போராட்டத்தில் மில்லியன் கணக்கான உறுப்பினர்களாகவும் செயலூக்கமான போராளிகளாகவும் மாற வேண்டும்.

Loading