SEP (US) 2022 மாநாட்டு தீர்மானம்

அமெரிக்காவில் சர்வதேச தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழுக்களின் கூட்டணியை உருவாக்குங்கள்! தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய எதிர் தாக்குதலுக்காக!

ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 5, 2022 வரை நடைபெற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்காவின்) ஏழாவது தேசிய மாநாட்டில் இந்தத் தீர்மானம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. காங்கிரஸின் முழு அறிக்கையையும் மற்ற தீர்மானங்களையும் இங்கே படிக்கவும்.

1. சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா) 21 ஆம் நூற்றாண்டில் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேசப் போராட்டத்தின் ஜனநாயக அமைப்பான சர்வதேச தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழுக்களின் கூட்டணியை (IWA-RFC) தீவிரமாகவும் முறையாகவும் கட்டமைக்கத் தீர்மானித்துள்ளது.

2. IWA-RFC ஆனது 2021 மே தினத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) முன்முயற்சியில் ஸ்தாபிக்கப்பட்டது. பல தசாப்தகால சமூக எதிர்ப்புரட்சி, ஏகாதிபத்திய போர்கள், கட்டுப்படுத்தப்படாத கொரோனா வைரஸ் பரவல், பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்தின் அதிகரித்துவரும் அச்சுறுத்தலுக்கு விடையிறுக்கும் வகையில் IWA-RFC 'தொழிலாளர் வர்க்கத்தின் உலகளாவிய எதிர் தாக்குதலை' தொடக்குகிறது என அதன் ஸ்தாபக ஆவணம் கூறுகிறது. சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பன்முக அடுக்குகளையும் பிரிவுகளையும் ஐக்கியப்படுத்தி, உலகளவில் அதன் போராட்டங்களை ஒருங்கிணைத்து, நவீன உலகப் பாட்டாளி வர்க்கத்தின் மகத்தான சமூக சக்தியை பெருநிறுவனங்கள் மற்றும் முதலாளித்துவ அமைப்புக்கு எதிராக வழிநடத்தும் IWA-RFC இன் வரலாற்றுப் பணியை ஸ்தாபக ஆவணம் விவரிக்கிறது.

3. உலகம் முழுவதும், சமூக சமத்துவமின்மை மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு எதிராக ஒரு சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்தின் தோற்றம், IWA-RFC ஐ கட்டமைக்க வேண்டிய வரலாற்றுத் தேவையை உறுதிப்படுத்துகிறது. பல தசாப்தங்களாக வர்க்கப் போராட்டத்தினை செயற்கையாக ஒடுக்கியது முடிந்துவிட்டது. சோசலிசப் புரட்சியின் தசாப்தம் ஆரம்பமாகிவிட்டது.

4. உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க தலைமையிலான போரினால் அதிகரித்த வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பற்றாக்குறைகளால் தூண்டப்பட்டு, வளர்ந்து வரும் உலக இயக்கம், பல தசாப்தங்களாக சிக்கன நடவடிக்கை, வேலையின்மை மற்றும் ஊதியங்கள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீதான தாக்குதல்களுக்கு வரலாற்று பழிவாங்கலை நாடுகிறது. இதுவரை 20 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்ற கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு ஆளும் வர்க்கத்தின் பிரதிபலிப்பு ஏற்கனவே வெடிக்கும் மனநிலையிலுள்ள தொழிலாள வர்க்க உணர்வுக்கு ஆழ்ந்த சமூக கோபத்தை மேலும் ஊட்டுகின்றது. ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க/நேட்டோ போர் நீடிப்பதால், கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் மக்கள் பட்டினியின் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர், அதே சமயம் மிகவும் முன்னேறிய நாடுகளில் கூட தொழிலாளர்களுக்கும் உணவு, வாடகை மற்றும் எரிவாயுவிற்கு பணம் செலுத்துவது மிகவும் கடினமாகி வருகிறது.

5. உலக அரசியலில் உறங்கிக்கொண்டிருக்கும் சிங்கமான அமெரிக்க தொழிலாள வர்க்கம் விழித்தெழ தொடங்கியுள்ளது. உலக ஏகாதிபத்திய பிற்போக்குத்தனத்தின் மையத்தில், ஆளும் வர்க்கம் அணுசக்திகளுக்கு இடையே போரை நடத்தி, கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு ஒரு இனப்படுகொலைப் பதிலை வழங்குகின்றது, பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஆகியவை தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளை சமூகப் போராட்டத்திற்குத் தள்ளுகின்றன. மற்ற நாடுகளைப் போலவே, முக்கிய தொழில்களில் உள்ள தொழிலாளர்களிடையே உருவாகியுள்ள வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் தொழிற்சங்கங்களுக்கு எதிரான கிளர்ச்சிகளின் தன்மையை எடுக்கின்றன. தொழிற்சங்கங்கள் பெருநிறுவனங்களுக்கும் அரசுக்கும் ஒரு நிறுவனமயமாக்கப்பட்ட காவல்துறையாக செயல்படுகிறது.

6. சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா) பெருநிறுவன-தொழிற்சங்க கூட்டணிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக சுய-அமைப்பை ஊக்குவிப்பதற்காக இந்த போராட்டங்களில் தீவிரமாக தலையிட்டுள்ளது. கட்சி தனது தலையீடுகள் மூலம், பணியிடங்கள் மற்றும் தொழில்களுக்கு உள்ளேயும் மற்றும் இடையிலும் தொழிலாளர்களை ஒன்றாக இணைக்கும் நடவடிக்கைக் குழுக்களின் வலையமைப்பை நிறுவுவதற்கு உதவியுள்ளது. ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், வாகனத் தொழிலாளர்கள், எண்ணெய் மற்றும் எரிவாயுத் தொழிலாளர்கள், இரயில் தொழிலாளர்கள், அமசன் தொழிலாளர்கள், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பிற பிரிவுகள் நடவடிக்கை குழுக்களை அமைத்துள்ளனர். அமெரிக்க தொழிலாள வர்க்கத்தை ஒழுங்கமைப்பதிலும், அரசியல்ரீதியாக கல்வியூட்டுவதிலும் அவை ஒரு முக்கியமான காரணியாக உள்ளன.

சாமானிய தொழிலாளர் குழுக்களுக்கான போராட்டம்

7. IWA-RFC ஸ்தாபிப்பதை பிரகடனப்படுத்தும் தனது அறிக்கையில், ICFI பின்வருமாறு எழுதியது, “தொழிலாள வர்க்கம் எதிர்த்துப் போராடுவதற்கு, ஆளும் வர்க்கம் மற்றும் பெருநிறுவன சார்பு தொழிற்சங்கங்களுக்கு எதிராக வெவ்வேறு தொழிற்சாலைகள், தொழிற்துறைகள் மற்றும் நாடுகளில் அதன் போராட்டங்களை ஒருங்கிணைக்க ஒரு பாதை உருவாக்கப்பட வேண்டும்.” சோசலிச சமத்துவக் கட்சியின் பணி இந்த இயக்கத்தில் தீவிரமாகவும் திட்டமிட்டமுறையிலும் தலையிட வேண்டும். இந்தப் பாதையை பின்பற்றுவதற்கும், தொழிலாள வர்க்கத்தின் மீது AFL-CIO வின் அதிகாரத்துவ மேலாதிக்கத்தை முறித்துக் கொள்வதற்கும் பல நடவடிக்கைக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

8. நடவடிக்கை குழுக்கள் உண்மையான தொழிலாளர்களின் ஜனநாயகத்தின் வளர்ச்சிக்கான நிலைமைகளை உருவாக்கி, தொழிலாளர்களிடையே சுதந்திரமான விவாதத்தை எளிதாக்க வேண்டும். AFL-CIO ஆல் தணிக்கை செய்யப்பட்ட தகவல் பரிமாற்றத்தை ஒருங்கிணைக்க வேண்டியுள்ளதுடன், தொழிலாளர்களுக்கு தேவையானதை அடைய, நிறுவனங்கள் கோருவதை அல்ல, தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளின் கூட்டு நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணத்தில் லியோன் ட்ரொட்ஸ்கி எழுதியது போல், 'சாத்தியமான அனைத்து நிகழ்வுகளிலும் முதலாளித்துவ சமுதாயத்திற்கு எதிரான வெகுஜனப் போராட்டத்தின் பணிகளுடன் மிகவும் நெருக்கமாக தொடர்புடைய சுயாதீனமான போர்க்குணமிக்க அமைப்புகளை உருவாக்குவதே இதன் நோக்கம்; மேலும், தேவைப்பட்டால், தொழிற்சங்கங்களின் பழமைவாத அமைப்பில் இருந்து நேரடி முறிவு ஏற்பட்டாலும் கூட பின்னடிக்காது இருக்க வேண்டும்.”

9. IWA-RFC புரட்சிகரக் கட்சிக்கு மாற்று இல்லை என்றாலும், அது வெறுமனே வழக்கமான தொழிற்சங்கப் போராட்டங்களின் ஒரு கருவியாகவும் மட்டும் இல்லை அதன் நோக்கம் AFL-CIO இன் பெருநிறுவன எந்திரத்தின் கட்டுப்பாட்டிற்கு வெளியே ஒரு இயக்கத்தின் வளர்ச்சியை எளிதாக்குவது மற்றும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் மகத்தான சமூக சக்தியை கட்டவிழ்த்து விடுவது ஆகும். ஏகாதிபத்திய சிதைவின் சகாப்தத்தில் தொழிற்சங்கங்கள் என்பதில்ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதினார், கட்சி 'முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக மட்டுமல்லாமல், தொழிற்சங்கங்களுக்குள்ளேயே இருக்கும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகவும், இந்த அரசாங்கத்தை பாதுகாக்கும் தலைவர்களுக்கு எதிராகவும் மக்களை அணிதிரட்ட வேண்டும்.' AFL-CIO அமைப்பை அடித்து நொறுக்குவதற்கு தொழிலாளர்களின் கைகளுக்கு அதிகாரத்தை மாற்றும் ஒரு கிளர்ச்சியைத் தவிர வேறொன்றும் தேவைப்படாது.

10. எமது கட்சியின் முன்முயற்சியில், IWA-RFC அத்தகைய இயக்கத்தை உருவாக்க தேவையான அமைப்புரீதியான வடிவத்தை வழங்குகிறது. தொழிலாள வர்க்கத்தை ஒன்றிணைக்க, நடவடிக்கைக் குழுக்களில் பல்வேறு அரசியல் பார்வைகளைக் கொண்ட தொழிலாளர்களை உள்ளடக்கியதாக வேண்டும், அவர்கள் ஒன்றாகப் போராடவும், வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கவும் தயாராக இருக்க வேண்டும். AFL-CIO க்கு எதிரான ஒரு கிளர்ச்சி இயக்கத்தின் வளர்ச்சி, வரலாற்று மற்றும் அரசியல் கேள்விகளை அவசியம் எழுப்பும். சோசலிச சமத்துவக் கட்சியானது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று அனுபவங்களில் இருந்து பெற்ற படிப்பினைகளை இந்தப் போராட்டங்களுக்குள் கொண்டு செல்ல வேண்டும். இதன் மூலம் வர்க்கத்தின் அரசியல் மற்றும் கலாச்சார மட்டத்தை ஒட்டுமொத்தமாக உயர்த்த வேண்டும். ஒரு சோசலிச நனவின் வளர்ச்சிக்கான நிலைமைகள் உருவாக்கப்பட வேண்டும்.

சோசலிசப் புரட்சியின் தசாப்தம் ஆரம்பமாகிவிட்டது

11. IWA-RFC ஐ கட்டமைப்பதற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் போராட்டம் தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய எழுச்சியின் மத்தியில் நடைபெறுகிறது. 2018-2019 ஆம் ஆண்டில், சமத்துவமின்மை மற்றும் பல தசாப்தங்களாக சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக உலகம் முழுவதும் தொடர்ச்சியான வெகுஜன எதிர்ப்புக்கள் வெடித்தன. 2011 அரபு வசந்த காலத்தில் நடந்த ஆர்ப்பாட்டங்களை விட பெரிய மற்றும் பரவலான போராட்டங்கள் ஈக்வடார், லெபனான், ஈராக், பிரான்ஸ், சூடான், சிலி மற்றும் டஜன் கணக்கான நாடுகளில் வெடித்தன. 2020 இன் ஆரம்பத்தில் தொற்றுநோய் வெடித்து இந்த இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தியது.

12. இப்போது, 2022 இன் முதல் பாதியில், வாழ்க்கைச் செலவு மற்றும் தொற்றுநோயின் பேரழிவு தாக்கத்தால் உந்தப்பட்ட புதிய எதிர்ப்புகள், இன்னும் பரந்த அளவிலும், நோக்கத்துடனும் வெடித்துள்ளன. 20 ஆண்டுகளாக வளர்ந்து வரும் தொழிலாள வர்க்கத்தின் அதிருப்தியானது, வளரும் நாடுகளிலும், உலக ஏகாதிபத்தியத்தின் மையங்களிலும் எண்ணற்ற மக்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டங்களில் வெளிப்பாட்டைக் காண்கிறது.

13. 'வரலாற்றில், பெரும் எண்ணிக்கையிலான மக்கள் விஷயங்கள் இருக்கும் விதத்தை எதிர்க்கும் மற்றும் மாற்றத்தை கோரும் காலங்கள் இருந்தன' என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட World Protests: A Study of Key Protest Issues in 21st Century ஆய்வின் ஆசிரியர்கள் எழுதுகின்றனர், 'அத்தகைய காலகட்டங்கள் 1830 மற்றும் 1848 க்கு இடையில், 1917 மற்றும் 1924 க்கு இடையில் மற்றும் 1960 களில் நடந்தன, அவை இன்று மீண்டும் நிகழ்கின்றன.' இந்த எதிர்ப்பு இயக்கம் பெருகிய முறையில் சர்வதேசமானது மற்றும் தீவிர அரசியல் மாற்றத்திற்கான விருப்பத்தால் இயக்கப்படுகிறது. உலகளாவிய எதிர்ப்புகளின் ஆசிரியர்களின் கூற்றுப்படி, '2006 ஆம் ஆண்டிலிருந்து போராட்டங்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்துள்ளது' என்பது மட்டுமல்லாமல், 'செயல்படாத ஜனநாயகங்கள் மீதான ஏமாற்றங்கள், அரசியல்வாதிகள் மீதான விரக்தி மற்றும் அரசாங்கங்கள் மீதான நம்பிக்கையின்மை ஆகியவற்றால் எதிர்ப்புகள் இன்னும் அரசியல்மயமாகியுள்ளன'.

14. இந்த இயக்கம் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர சக்தியை பிரதிபலிக்கிறது, அது முன்னெப்போதையும் விட எண்ணிக்கையில் வலிமையானது, ஒன்றுக்கொன்று தொடர்புடையது மற்றும் முன்னெப்போதையும் விட நகரம் சார்ந்ததாக இருக்கின்றது. 1980 முதல் 2020 க்கு இடையில், உலகின் உற்பத்தி சக்திகளின் விரிவாக்கத்தின் விளைவாக தொழிலாள வர்க்கம் இரண்டு பில்லியன் மக்களால் அதிகரித்துள்ளது. வரலாற்றில் முதன்முறையாக, உலக மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்கள் இப்போது நகரங்களில் வாழ்கின்றனர், மேலும் இந்த எண்ணிக்கை ஒவ்வொரு வாரமும் மில்லியன் கணக்கில் அதிகரிக்கிறது. அதிர்ச்சியூட்டும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பொருளாதாரத்தை மாற்றியமைத்து, அரசியல் நனவு மற்றும் மனித கலாச்சாரத்தின் வளர்ச்சிக்கான புதிய எல்லைகளைத் திறந்துவிட்டன. 2000 முதல் 2020 வரை, கிட்டத்தட்ட 5 பில்லியன் மக்கள் இணையத் தொடர்புகளை பெற்றுள்ளனர்.

15. இந்த எதிர்ப்புகள் அனைத்தும் தொழிற்சங்கங்களை புறக்கணித்துவிட்டன அல்லது அவர்களுக்கு எதிரான கிளர்ச்சியாக மாறியுள்ளன. பல தசாப்தங்களாக, தொழிலாள வர்க்கம் அபரிமிதமாக வளர்ந்து பொருளாதார முக்கியத்துவத்தைப் பெற்ற காலத்தில், தேசிய தொழிற்சங்கங்கள் அவர்களது குரல்களைக் கேட்கத் தவறியது மட்டுமல்லாமல், அவர்களின் உறுப்பினர்களும் எல்லா இடங்களிலும் வீழ்ச்சியடைந்து, அவர்களின் ஆதரவும் சரிந்துள்ளது. தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் சதவீதம் 1990 இல் 36 சதவீதத்திலிருந்து 2016 இல் வெறும் 18 சதவீதமாகக் குறைந்துள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2021 அறிக்கை, எல்லா இடங்களிலும் உள்ள தொழிற்சங்கங்கள் ஆளும் வர்க்கத்தின் கொடிய 'உயிர்களைவிட இலாபத்திற்கு முன்னுரிமை' என்ற கொள்கைகளை செயல்படுத்துகின்றன, மேலும் இப்போது பரவலான கோவிட் இறப்புகள் தொடர்பாக கீழிருந்து எதிர்ப்பை எதிர்கொள்கின்றன எனக் கூறுகிறது.

அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் அரசியல் விழிப்புணர்வு

16. அமெரிக்காவில், பல தசாப்தங்களில் மிகப் பெரிய தொழிலாள வர்க்க வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் அலை வேகமாக வளர்ந்து வருகிறது. ஜனவரி முதல் மே 2022 வரை, 73,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை உள்ளடக்கிய 153 வேலைநிறுத்தங்கள் நடந்துள்ளன, இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது மூன்று மடங்கு அதிகமாகும். உலக ஏகாதிபத்தியத்தின் மையமான அமெரிக்காவிற்குள் தொழிலாள வர்க்க எதிர்ப்பின் வளர்ச்சியானது உலகளவில் வர்க்கப் போராட்டத்திற்கு இன்றியமையாத மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது. இது சர்வதேச அளவில் தொழிலாளர் எதிர்ப்பை ஊக்குவித்துது, ஊக்கமளிக்கிறது மற்றும் அமெரிக்க தொழிலாள வர்க்கம் 'பிற்போக்கானது' என மத்தியதர வர்க்க தீவிர கூறுகளால் பரப்பப்படும் பொய்யை அம்பலப்படுத்துகிறது.

17. இந்த இயக்கத்தின் தோற்றம் ஒரு புறநிலை நிகழ்ச்சிப்போக்கின் ஒரு பகுதியாகும். பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தியின் காரணமாக, வர்க்கப் போராட்டம் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் சர்வதேசமானது, மேலும் அமெரிக்கத் தொழிலாளர்கள் உலகளாவிய இயக்கத்தின் ஒரு அங்கமாக உள்ளனர். அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும், அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் உணவு, எரிவாயு மற்றும் வாடகை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளின் விலை அதிகரிப்பு, தொழிலாளர்களின் புதிய பிரிவுகளை சமூகப் போராட்டத்திற்குள் தள்ளியுள்ளது. தென் மாநிலங்கள் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், அதேபோல் அனைத்து வயது, இனம், ஊதியம் மற்றும் திறமையின் பல்வேறு நிலைகளை சேர்ந்த தொழிலாளர் கலந்துகொள்ளும் வேலைநிறுத்தங்கள் நடைபெற்று வருகின்றன. மில்லியன் கணக்கானவர்கள் கடனில் மூழ்கி, தங்களுடைய சொற்ப சேமிப்பையும் அதற்கு இழப்பதால், பொருளாதார மற்றும் சமூக விரக்தியின் குறியீடுகள் அதிகரித்து வருகின்றன. ஊதிய உயர்வைத் தடுப்பதற்காக வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கான பெடரல் ரிசர்வ் முடிவு, பணிநீக்கங்கள், அதிக கடன் வாங்கும் விகிதங்கள் மற்றும் வெடிக்கும் சமூகப் போராட்டங்கள் அடிவானத்தில் உள்ளன. அமெரிக்காவில் மட்டும், ஏற்கனவே 6 மில்லியன் வேலையில்லாதவர்கள் உள்ளனர். அவர்கள் வேகமாக மறைந்து வரும் சமூக பாதுகாப்பு வலையை சிறிதளவு அல்லது முற்றான அணுகல் இல்லாமல் உள்ளனர்.

18. தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்களும் வர்க்கப் போராட்டத்தில் முக்கியமான அனுபவங்களைக் கடந்துள்ளனர். ஒவ்வொரு கட்டத்திலும், சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கும், தொழிலாளர்கள் கடந்து செல்லும் அனுபவங்களின் படிப்பினைகளை உள்வாங்குவதற்கும், வர்க்கப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தில் அவர்களை இணைப்பதற்கும் போராடுவதில் தீவிரமான பங்கு வகித்துள்ளது. சோசலிச சமத்துவக் கட்சியின் பங்கு, இந்த போராட்டங்களைப் பற்றி தொலைதூரத்தில் இருந்து கருத்து தெரிவிக்கும் ஒரு செயலற்ற பார்வையாளரின் பங்கு அல்ல, ஆனால் AFL-CIO அதிகாரத்துவத்தால் தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்ட தனிமைப்படுத்தலை உடைக்க அவர்களுக்கு ஒரு பாதையை உருவாக்கப் போராடும் ஒரு செயலில் பங்குபற்றுபவர்களாவர். IWA-RFC கட்டமைப்பின் மூலம் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் உலக இயக்கத்துடன் ஐக்கியப்பட வேண்டும்.

19. தொற்றுநோய் வெடித்ததில் இருந்து, தொற்றுநோய்களின் போது முதலாளித்துவம் பின்பற்றிய இலாப நோக்குடைய கொள்கைகளுக்கு தொழிலாளர்களின் எதிர்ப்பை அணிதிரட்ட SEP போராடி வருகிறது. மார்ச் 2020 இல், SEP 'கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வாகனத் தொழிற்துறையை மூடு!' என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டது, அந்த அறிக்கை பல்லாயிரக்கணக்கான வாகனத் தொழிலாளர்களால் வாசிக்கப்பட்டது, அவர்கள் இந்தத் திட்டத்தை விரைவாக நடைமுறைக்குக் கொண்டுவந்தனர், தொழிற்சாலைகளை திறந்த நிலையில் பராமரிக்க UAW இன் முயற்சிகளுக்கு எதிராக தன்னியல்பான வேலைநிறுத்தங்கள் வடிவில் கிளர்ச்சியைத் தொடங்கினர். இந்த வேலைநிறுத்த அலையானது வாகனத் தொழிற்துறையை இரண்டு மாதங்களுக்கு மூடுவதற்கு கட்டாயப்படுத்தியதோடு, எண்ணற்ற உயிர்களையும் காப்பாற்றியது. அந்த ஆண்டு கோடையில் மூடல்கள் முடிவடைந்த நிலையில், சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்களுடன் இணைந்து பாதுகாப்புக் குழுக்களை நிறுவ போராடியது. புதிய அலைகள் மற்றும் கொடிய மாறுபாடுகளில் தொற்றுநோய் பரவுவதால், பல முக்கிய தொழில்களில் உள்ள தொழிலாளர்களுக்கு பாதுகாப்பற்ற பணி நிலைமைகளை எதிர்ப்பதற்கான வழிமுறைகளை வழங்குவதே இதன் நோக்கமாக இருந்தது.

தொழிலாள வர்க்கம் AFL-CIO ஐ எதிர்கொள்கிறது

20. தொற்றுநோயின் ஆரம்ப மாதங்களில் எடுக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட பொது சுகாதார நடவடிக்கைகள் கைவிடப்பட்டமை தொழிலாளர்களிடையே ஆழமான மதிப்பற்றதாக இருந்தது, ஆனால் AFL-CIO, பெருநிறுவனங்கள் மற்றும் இரு கட்சிகளுடன் (ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி) இணைந்து தொழிலாளர்களை வேலைக்குத் திரும்பச் செய்தது. பல டிரில்லியன் டாலர்கள் பெறுமதியான கேர்ஸ் சட்ட (CARES Act) பிணை எடுப்பிற்கு ஆதரவாக காங்கிரஸ் பெருமளவில் வாக்களித்த பின்னர், அமெரிக்க ஆசிரியர் கூட்டமைப்பு (American Federation of Teachers) மற்றும் அதன் தலைவர் ராண்டி வைன்கார்டன், பொதுப் பள்ளிகளை மீண்டும் திறப்பதை கட்டாயமாக்குவதற்கான ஆசிரியர்களின் எதிர்ப்பை நசுக்கினார். இதனால் பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளையும் சேர்ந்த பெற்றோரையும் வேலைக்குத் திரும்பச் செய்தனர். சோசலிச சமத்துவக் கட்சி இந்தப் போராட்டத்தில் தீவிரமாக தலையிட்டு, சிகாகோ, ஓக்லாண்ட் மற்றும் பிற முக்கிய பள்ளி மாவட்டங்களில் பாதுகாப்பான கல்வி நடவடிக்கைக் குழுக்களை நிறுவியது.

21. 2021 இலும் 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியிலும், அமெரிக்காவில் IWA-RFC உடன் இணைந்த நடவடிக்கை குழுக்களின் அளவு மற்றும் அதிகாரத்தில் கணிசமான வளர்ச்சி ஏற்பட்டது. ஒன்றன்பின் ஒன்றாக வோல்வோ ட்ரக்ஸ், டேனா, ஜோன் டியர், மற்றும் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் செவிலியர்களின் வேலைநிறுத்தங்களில், நடவடிக்கை குழுக்கள் எதிர்ப்பின் அமைப்பு மையங்களாக விளங்கி, தொழிலாள வர்க்கத்தின் வர்க்க நனவுள்ள அடுக்குகளை அவற்றின் அணிகளுக்குள் இழுத்துக்கொண்டன.

22. AFL-CIO தன்னை மேலும் அம்பலப்படுத்தியதை தவிர வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவதில் அது வெற்றிபெறவில்லை, ஒவ்வொரு போராட்டத்திலும், தொழிலாளர்களுக்கும் பெருநிறுவன சார்பு தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான மோதல், மேலும் மேலும் வெளிப்படையாகவும் நேரடியாகவும் மாறியிருந்தது. தொழிலாளர்கள் தங்கள் நலன்களை காட்டிக்கொடுப்பதற்கு மட்டுமே வடிவமைக்கப்பட்ட ஒப்பந்தங்களை பலமுறை நிராகரித்துள்ளனர். AFL-CIO, பெருநிறுவன இலாபங்களைப் பாதுகாப்பதற்காகவும், ரஷ்யாவிற்கு எதிரான பைடென் நிர்வாகத்தின் போரை எளிதாக்குவதற்காகவும் ஊதிய உயர்வை நனவுடன் தடுக்க முயன்றது. இதன் விளைவாக, மார்ச் 2021 மற்றும் மார்ச் 2022 க்கு இடையில் தொழிற்சங்கத்தில் அங்கத்தவராக இல்லாத தொழிலாளர்களை விட குறைந்த விகிதத்தில், தொழிற்சங்கத்தில் உள்ள ஊழியர்களுக்கான ஊதியம் வெறும் 3:3 சதவீதம் அதிகரித்துள்ளது.

23. சமீபத்திய மாதங்களில், அமெரிக்கா மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளின் ஒரு பகுதியாக இருக்கும் மூலோபாய தொழில்களில் உள்ள தொழிலாளர்கள் போராட்டத்தில் இணைந்துள்ளனர். இதில் கப்பல்துறை தொழிலாளர்கள், இரயில்வே தொழிலாளர்கள் மற்றும் கனரக வாகன ஓட்டுநர்கள் உள்ளனர். சோசலிச சமத்துவக் கட்சி பாரிய ஊதிய உயர்வுகளுக்காகவும், அனைத்து ஊதியங்கள் மற்றும் நலன்களுக்கான வாழ்க்கைச் செலவு ஈடுசெய்தல்களுக்காகவும், போதுமான கோவிட் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உற்பத்தியில் தொழிலாளர் கட்டுப்பாட்டிற்காகவும் தொழிலாளர்களை அணிதிரட்ட தலையிடுகிறது. பைடென் நிர்வாகம் AFL-CIO இன் நிறுவன ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தவும், தொழிற்சங்கங்களை ஒரு வகையான நிறுவன காவல் படையாக அரசு கட்டமைப்புகளில் ஒருங்கிணைக்கவும் நேரடியாக தலையிடுகிறது. இது முக்கியமான தொழிற்துறைகளில் வேலைநிறுத்தங்களை தடுப்பதற்கும், உண்மையான ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளில் பாரிய சலுகைகளை வழங்குவதற்கு தொழிலாளர்களை கட்டாயப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. ஆனால் 'அமைதியை' செயல்படுத்தும் இந்த திட்டங்கள் தோல்வியடைந்து, தொழிலாளர் மத்தியில் பெரும் கோபத்தைத் தூண்டிவிட்டு, AFL-CIO-ஐ இயக்கும் மற்றும் பணிபுரியும் நிர்வாகிகளுடன் மட்டுமல்லாமல் முதலாளித்துவ அரசுடனும் மோதலுக்கு களம் அமைத்துக் கொள்கிறது.

24. அமெரிக்காவில் வேலைநிறுத்தம் மற்றும் எதிர்ப்பு இயக்கம் என்பது, பொருளாதார வீழ்ச்சிக்கு தொழிலாளர்களின் மீண்டும் உருவாகும் ஒரு பிரதிபலிப்பல்ல. மாறாக, இது பல தசாப்தகால சமூக எதிர்ப்புரட்சியால் ஏற்பட்ட ஒரு சமூக வெடிப்பு ஆகும். 1980ல் ரொனால்ட் ரீகன் தேர்ந்தெடுக்கப்பட்டதில் தொடங்கி, 1981ல் PATCO வேலைநிறுத்தம் நசுக்கப்பட்டதில் இருந்து, கடந்த நான்கு தசாப்த கால வர்க்கப் போராட்டத்தின் கொடூரமான ஒடுக்குமுறையில் உச்சக்கட்டத்தை அடைந்தது. ஆனால் அந்த நான்கு தசாப்தங்களில், அமெரிக்க முதலாளித்துவத்தின் நிலையும் ஒரு பரந்த மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. இன்று அமெரிக்க சமூகம் சீரழிந்து வருகிறது. போருக்குப் பிந்தைய 'அமெரிக்கக் கனவு' என்பதற்கான பொருளாதாய அடிப்படையானது அகற்றப்பட்டு, உலக மேலாதிக்க சக்தியாக அமெரிக்கா தனது நிலையை இழந்துவிட்டது.

25. AFL-CIO தொழிலாள வர்க்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதித்த புறநிலை நிலைமைகள் மறைந்துவிட்டன. மேலும் கம்யூனிச-எதிர்ப்பின் கருத்தியல் செல்வாக்கு கணிசமான அளவில் அரிக்கப்பட்டுவிட்டது என்பதே இதன் பொருளாகும். 'வரம்பற்ற வாய்ப்புகளின் நாடு' என்பதிலிருந்து 'வரம்பற்ற துன்பங்களின் நாடாக' மாற்றப்படுவது மார்க்சிசத்தின் வளர்ச்சிக்கான மகத்தான சாத்தியங்களை உருவாக்கத் தொடங்குகிறது. சோசலிச சமத்துவக் கட்சி அதன் 2010 வேலைத்திட்டத்தில் எழுதியது போல், 'புறநிலை நிலைமைகளில் ஏற்படும் மாற்றம் அமெரிக்க தொழிலாளர்கள் தங்கள் சிந்தனையை மாற்ற வழிவகுக்கும்.'

26. 2021 இல், வோல்வோ ட்ரக் சாமானிய தொழிலாளர்கள், நிறுவனத்திற்கும் UAW தொழிற்சங்கத்திற்கும் எதிராக கிளர்ச்சி செய்யத் தொடங்கியபோது, டேவிட் நோர்த் பின்வருமாறு எழுதினார்:

வரலாற்றில் பாவத்திற்கான தண்டனை என்ற ஒரு விடயம் இருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளின் காலத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக முதலாளித்துவத்தால் இழைக்கப்பட்ட குற்றங்கள் அத்தனையும் இருந்தாலும், தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல் நடத்தி பரந்தளவில் தன்னை செழுமைப்படுத்திக் கொள்கின்ற அதே நிகழ்ச்சிப்போக்கின் பகுதியாக, முதலாளித்துவ உற்பத்திமுறையின் ஒரு பரந்த விரிவாக்கத்தையும் அதன் ஒருங்கிணைப்பையும் அது கவனத்தில் எடுக்காது விட்டுவிட்டது. விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத்திலான மலைப்பூட்டும் முன்னேற்றங்களால் உந்தப்பட்ட இந்த நிகழ்ச்சிப்போக்கின் மிக முக்கியமானதும் புரட்சிகரமானதுமான விளைமுடிவாய் இருப்பது, உலகளாவிய தொழிலாள வர்க்கத்தின் பாரிய எண்ணிக்கையிலான அதிகரிப்பாகும்.

27. உலகளவில் வளர்ந்து வரும் தொழிலாள வர்க்க இயக்கத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அரசியல் விழிப்புக்கான புறநிலை நிலைமைகள் கனிந்துள்ளன. அமெரிக்க அரசியல் அமைப்பின் வெடிக்கும் நெருக்கடி, ஜனவரி 6, 2021 அன்று ட்ரம்பின் பாசிச சதி முயற்சியிலும், ஜனநாயகக் கட்சியின் செயலற்ற பதிலிலும் வெளிப்பட்டது, இது முதலாளித்துவ ஜனநாயகத்தின் வரலாற்றுச் சரிவின் மற்றொரு வெளிப்பாடாகும். அதே நேரத்தில், அமெரிக்க சமூகத்தின் நெருக்கடிக்கான தீர்வு இரு கட்சி முறையின் ஊடாக வரப்போவதில்லை, மாறாக இந்த அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு வெகுஜன இயக்கத்தை கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே தீர்க்கப்படும் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. எவ்வாறாயினும், அந்த இயக்கம் அதன் புரட்சிகர ஆற்றலை நடைமுறைப்படுத்துமா என்பது சோசலிச சமத்துவக் கட்சியின் செயல்பாட்டை சார்ந்துள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகள்

28. தற்போதைய சூழ்நிலை, கட்சி மற்றும் அதன் காரியாளர்கள் மீது மகத்தான பொறுப்புகளை சுமத்துகிறது. தொழிலாள வர்க்கத்தில் ஒரு சக்திவாய்ந்த இயக்கம் நடந்து கொண்டிருக்கிறது. AFL-CIO அதிகாரத்துவத்தால் நசுக்கப்படுவதையும் காட்டிக் கொடுக்கப்படுவதையும் தவிர்க்க, இந்த இயக்கம் தன்னை ஒரு சுயாதீன சக்தியாகவும், உலகளாவிய வளர்ச்சியின் ஒரு பகுதியாகவும் நிலைநிறுத்துவதற்கான அமைப்பு ரீதியானதும், அரசியல்ரீதியானதுமான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே இந்த வழிவகைகளை வழங்க முடியும். IWA-RFC இன் வளர்ச்சியானது வரவிருக்கும் காலத்தில் SEP இன் மையப் பணியாகும்.

29. சர்வதேச சாமானிய தொழிலாளர் குழுக்களின் வலையமைப்பை ஊக்குவித்து பிரபலப்படுத்துவதன் மூலம் கட்சி இந்தப் பாதையை உருவாக்க வேண்டும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பரந்த அடுக்குகளை அதில் ஈர்க்க வேண்டும். கட்சி செல்வாக்கிற்காக போராடும் முக்கியமான பணியிடங்கள், குடியிருப்புக்கள், மற்றும் பள்ளிகளை அடையாளம் காண வேண்டும். அதன் கிளைகளும் உறுப்பினர்களும் முறையாகவும், நனவுபூர்வமாகவும், ஆக்கபூர்வமாகவும், ஜனநாயக விவாதம் மற்றும் கூட்டு நடவடிக்கைக்கான முன்னணி அமைப்புகளாக நடவடிக்கை குழுக்களைக் கட்டமைக்கப் போராட வேண்டும். அதேபோல் இந்தப் போராட்டங்களின் அனுபவங்கள் முழு தொழிலாள வர்க்கத்திற்கும் கிடைக்க செய்யும் பள்ளிகளாக அவை இருக்கவேண்டும். இனவாதம், அடையாள அரசியல் மற்றும் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு பேரினவாதம் ஆகியவற்றின் மூலம் தொழிலாளர்களை பிளவுபடுத்தும் அனைத்து முயற்சிகளையும் இரக்கமின்றி எதிர்த்து, அனைத்து இனங்கள், தேசிய பின்னணிகள், வயது மற்றும் வேறுபட்ட திறன் கொண்ட தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த கட்சி பாடுபட வேண்டும்.

30. இந்த ஆண்டு IWA-RFC இன் வேலையின் முக்கிய அங்கம், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளரின் கீழ் நடத்தப்படும் நவம்பர் தேர்தலில் UAW தலைவருக்கான மாக் ட்ரக் தொழிலாளி வில்லியம் லெஹ்மனின் பிரச்சாரம் ஆகும். சோசலிச சமத்துவக் கட்சி லெஹ்மனின் பிரச்சாரத்தை, UAW ஐ அதன் தலைமையை மாற்றுவதன் மூலம் 'சீர்திருத்தம்' செய்யும் முயற்சியாக அல்லாமல், மாறாக அதிகாரத்துவத்தை ஒழிப்பதற்கும், அதிகாரத்தை சாமனிய தொழிலாளர் குழுக்களுக்கு மாற்றுவதற்கும், அதன் வளங்களை தொழிலாளர்களுக்கே திருப்பித் தரவும் ஒரு வெகுஜன இயக்கத்தில் பரந்த அளவிலான வாகனத் தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கான ஒரு வழிமுறையாக காண்கிறது.

31. தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவிலும் அவர்களின் தலையீடுகள் மூலம், சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்கள் தொழிலாள வர்க்கத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் தலைமைத்துவத்திற்கான உரிமையை நிலைநாட்ட போராடுவார்கள், தொழிலாளர்களுடனான தொடர்புகளையும் அரசியல் உறவுகளையும் முறையாக வளர்த்து, முன்னேறிய மற்றும் தீவிரமான தொழிலாளர்களை சோசலிஸ்டுகளாக பயிற்றுவிப்பார்கள். மேலும் அவர்களை கட்சியில் சேர்த்துக் கொள்வார்கள்.

Loading